ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்- 15.

என் கல்லூரியில் படித்த தோழியின் தோழி ஒருத்தியைச் சில வருடங்கள் முன் ஊரில் சந்தித்தேன். முன்பின் தெரியாத அவளிடம் முதல்முறை பேசிய போதும், என்னிடம் மிகவும் மனம் நொடிந்து பேசினாள். தீராத முதுகு வலியிலும் படுத்த படுக்கையாயிருந்த அம்மாவை கவனித்துக்கொண்டதால் தனது உடல் நலமும் மோசமானதாகச் சொன்னாள். இப்போது எழுந்து நடமாடுவதாகவும் சொல்லி என் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டாள். நான் திரும்பி பெங்களூரு வந்ததும் எனக்கு அழைத்தாள்.

எடுத்ததுமே, “எனக்குச் சரளமா ஆங்கிலம் பேச வராது. எனக்கு நன்றாக ஆங்கிலத்தில் பயிற்சி எடுக்க வேண்டுமென ஆசை. இனிமேல் நாமிருவரும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்ளலாமா?” என்று கேட்டாள். எனக்கு அது அசௌகரியமாக இருந்தாலும் அவளுடைய உத்வேகத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு ஒப்புக்கொண்டேன். ஒப்புக்கொண்ட மறு நொடியிலிருந்து என்னிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள்.

எனக்குச் செயற்கைதனமாக இருந்ததால் நான் மறுமுறையிலிருந்து ஆங்கிலத்தில் தொடரவில்லை. சில நாட்களில் தானும் சிறுகதை எழுத வேண்டும் என்ன செய்வது, எப்படி எழுதுவது என்று என்னைக் கேட்டுக்கொண்டேயிருந்தாள். அதுவரை சிறு வாக்கியம்கூட எழுத முயற்சிக்காத அவளுக்குத் திடீரென்று அப்படி ஓர் ஆசை வந்துவிட்டது. மேலும் எந்த மாதிரியான புத்தகங்கள், யாருடைய புத்தகம் படிக்கலாம் என்று அடிக்கடி கேட்டாள். நானும் சளைக்காமல் அவளுக்குப் பதிலளித்தேன். அப்போது என்னுடைய சிறுகதை ஒரு வார இதழில் வந்தபொழுது தானும் அந்த இதழுக்குச் சிறுகதை அனுப்ப வேண்டும் என அந்த இதழின் முகவரி கேட்டாள். ஒரு கதையைப் படித்து விட்டு இதை ஏன் இப்படி எழுதினாய், இங்கு நீ இப்படி மாற்றியிருக்க வேண்டும் என்று சொல்லி, ’அப்பப்போ எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை உனக்குச் சொல்கிறேன். அதை வைத்து கதைகள் எழுது. இப்போ உங்கிட்டெல்லாம் இப்படி ஐடியாவை ஷேர் பண்ணுகிறப்போதான் எனக்கிருக்கிற திறமை எனக்கே தெரியுது’ என்று பெருமையாகத் தன்னைப் பற்றி தானே புகழ்ந்தும் கொண்டாள். இதென்னடா பாவம் என்று பேசினால், பெரிய தொல்லையாக இருக்கிறாளே என நினைத்த போதுதான் எனக்கு இன்னொரு விஷயமும் வேறொரு தோழி மூலம் தெரியவந்தது.

என் இன்னொரு தோழி ஒருத்தி, தொழில் செய்து கொண்டிருக்கிறாள். சுய முதலீடு செய்து ஒற்றையாளாக எல்லாவற்றையும் நிர்வாகித்து வரும் அவளிடமும், இந்தப் புதிய தோழி என்னைத் தொடர்புகொண்டது போலவே அவளையும் தொடர்புகொண்டு, தன்னையும் அவளுடைய கம்பெனி பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளவும், தொழில் நுணுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும்படியும் நச்சரித்திருக்கிறாள். இருக்கும் டென்ஷனில் இவளுடைய அழைப்பு இன்னும் அதிகமாக டென்ஷன் தருவதாகச் சொன்னாள். இதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவளுக்கு மற்றவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அதையெல்லாம் தானும் செய்ய வேண்டும் என எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்ததே தவிர, அவளுக்குப் பிடித்தது எது என அவள் யோசிக்க இயலாமல் குழப்பத்தில் இருந்திருக்கிறாள். அதன் பின் அவள் மீதிருந்த எரிச்சல் விலகி பரிதாபம்தான் ஏற்பட்டது.

“இவ்ளோ வயசு வரைக்கும் அப்படி என்ன நீ சாதிச்சு கிழிச்சுட்ட?” என வீட்டில் உதிர்க்கப்படும் இந்த வார்த்தைகள் எத்தனையோ பெண்களுக்கு மனஉளைச்சலைக் கொடுத்திருக்கும். அதுதான் பார்ப்ப்தையெல்லாம் செய்துவிட வேண்டுமென தோன்ற வைக்கிறது. காலங்காலமாகப் பத்தாவது பன்னிரண்டாவது பொதுத் தேர்வு எத்தனை அதி முக்கியமானது என உணர்த்தாத பெற்றோர்கள் உண்டா? அவன் எத்தனை மார்க் வாங்குகிறான், இவன் எத்தனை வாங்குகிறான் எனப் பார்த்துப் பார்த்தே மற்றவர்களுக்காகப் பொதுத் தேர்வு எழுதி, அவற்றை நன்றாக எழுதாதவிட்டால் வாழ்வே இல்லை என்பது போலத்தானே இத்தனை காலம் நடந்தது? இவையெல்லாம் மாயை என நொடியில் தவிடுபொடியாக்கிவிட்டதல்லவா இந்த கரோனா! பொதுத் தேர்வாவது ஒண்ணாவது என நம்மையெல்லாம் மாற்றியது எது? உயிர் வாழ்வதே பெரிய சாதனை என்பதுதான்.

வாழ்வில் அங்கீகாரம் வெற்றி, பெருமை எல்லாமே வாழ்வின் ஒரு பகுதி என நினைத்து, அதற்காகப் பதட்டத்துடனேயே ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை ஒரு போலியான லட்சியம். வாழ்வெனப்படுவது அழகாக வாழ்ந்து போவது. லட்சியம் என்பது பிடித்ததைச் செய்வது. புகழ் அடைய வேண்டும் என்பதற்காகவே முயற்சி செய்தால் இறுதிவரை வெற்றி எட்டாக்கனியாகவே முடிந்துவிடும். ஒரு விஷயத்தை ரசித்து செய்பவர்களே வெற்றியைப் பெறுகிறரகள். ஏன் அவர் மட்டும் வெற்றி பெறுகிறார், ஏன் நம்மால் அதே வெற்றியைப் பெற முடியவில்லை எனச் சில விஷயங்களில் யோசித்தால் அது நமக்கான பாதையல்ல. எவரோ சென்ற பாதையில் பின் தொடர நினைக்கிறோம் என்பது புலப்படும்.

என் வீட்டுக்கு ஒரு பூக்காரம்மா வருவார். அவருடைய கணவர் குடிகாரர். வீட்டிற்குப் பணமே தருவதில்லை. இவர்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த அம்மா எப்பவும் வயிற்று வலியுடனே பூக்களை விற்க வருவார். இருப்பினும் எப்படியாவது தன் மகளைக் கல்லூரி வரை படிக்க வைக்க வேண்டும் என்பார். தன் பெண்ணைப் பற்றிப் பேசும் போதெல்லாம் கண்ணில் நீர் எட்டிப் பார்த்துவிடும் அந்த அம்மாவிற்கு. அவருடைய மகளின் மதிப்பெண்களை ஒவ்வொருமுறையும் என்னிடம் சொல்லி மகிழ்வார். அவருடைய கனவு லட்சியம் எல்லாம் அவரின் மகளைக் கல்லூரியில் படிக்க வைத்துவிட வேண்டும். இதற்காக என் அலைபேசி எண்ணை வாங்கி, அவர் மகளிடம் பேச வைப்பார். அவர் வகையில் அவருடைய லட்சியம் ஆகச் சிறந்ததுதானே. அடுத்தவருக்குத் தீங்கில்லாமல் நம் வாழ்க்கையை மகிழ்வாக வாழ்வதே ஒரு சாதனைதான்.

இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணின் கதையைப் பார்க்க நேரிட்டது. முதல் புற்றுநோய் வந்து, கீமோ தெரபி கொடுத்தது, அதன் பின் முழுமையாகப் புற்றுநோயிலிருந்து விடுபட்ட சமயத்தில் மீண்டும் இரண்டாவது புற்றுநோய் தாக்கியது, அதுவும் சிகிச்சையில் குணமான நேரத்தில் மூன்றாவது புற்றுநோய் ஆரம்பித்துவிட்டது என ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் எடுத்த படங்களைப் பதிவிட்டிருந்தார். 30 வயதிற்குள் மூன்றுமுறை புற்றுநோய் கண்டு, அதனை மிக பாஸிட்டிவாக எதிர்கொள்வதோடு, புற்றுநோய் பற்றி விழிப்புணர்வையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு சிரிப்புடன் அவர் எதிர்கொண்ட விதமும் அவர் தினமும் பகிரும் படங்களும் போதும் ஓராயிரம் பெண்களிடம் தன்னம்பிக்கையை விதைக்க. இவர்தான் மிகச் சிறந்த போராளியாக எனக்குத் தெரிகிறார். இவரைப் போன்று நேர்மறை எண்ணங்களோடு போராடுபவர்கள்தாம் சிறந்த சாதனையாளர்கள்.

ஊக்கம் ஒருவரை எந்த நிலையில் இருந்தாலும் ஒரு படி மேலே எடுத்துச் செல்லும். புறம் பேசுவதை விருப்பத்தோடு செய்யும் பெண்கள் ஏனோ இன்னொருவர் மேலே ஏறுவதை ஊக்கப்படுத்துவதில்லை. மாறாக அவர் எப்போது கீழே விழுவார் எனக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் பெண் முன்னேற்றம் தாமதமாகிறதோ என எனக்கு அடிக்கடி தோன்றும். ஒருவருக்கொருவர் கைகொடுத்து மேலே செல்வதுதான் உண்மையான பெண்ணியத்திற்கான பாதையாக அமையும்.

இங்கு இதுவரை நான் சொன்ன விஷயங்களில் சில ஏற்புடையதாக இருக்கலாம், மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். நான் பார்த்தவற்றை, கேட்டவற்றை, மனதில் தோன்றும் ஆதங்கத்தையே இங்கு பகிர நினைத்தேன். அதற்கான தளத்தைக் கொடுத்ததற்கும், நினைத்ததை எழுத ஊக்கமளித்ததற்கும் ஹெர்ஸ்டோரிஸிற்கு மிகப் பெரிய நன்றி. இன்னும் தொடர ஆசைதான். இன்னொரு சந்தர்ப்பத்தில் வேறு விஷயங்களைப் பேசலாம். நமக்குதான் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் கொட்டிக்கிடன்றனவே! மீண்டும் சந்திப்போம்!

படைப்பாளர்:

ஹேமி கிருஷ்

பெருந்துறையைச் சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார்.  நான்கு ஆண்டுகள்  டிஜிட்டல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.