“பெண்கள் பங்கேற்கும் இரவு உலா, முப்பத்தைந்து பெண்கள் செல்ல ஒரு ஏசி பேருந்து வேண்டும்” என்றவுடன் ஏன், எதற்கு, உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று ட்ராவல் ஏஜென்சிகள் மறுத்துவிட, கடைசியில் ஒருவர் மட்டும் கைகொடுக்க, ‘ஆரம்பமே களைகட்டுகிறதே’ என்று தொடங்கிய பயணம்.

பெசன்ட் நகர் தலப்பாக்கட்டியின் முன் அமர்ந்திருந்த போது, பால் புதுமையினர் தோழர்கள் இருவர், எங்கள் அருகில் வந்து அமர்ந்தனர். ‘உண்ண ஏதாவது தாருங்கள்’ என்றவுடன், தோழர் ஒருவர் கொண்டுவந்த பொறி உருண்டையை அவர்களுக்கு கொடுக்க, ‘எங்கே செல்கிறீர்கள்?’ என்று அவர்கள் எங்களை கேட்டார்கள்.

‘பெண்கள் மட்டும் செல்லும் இரவு உலா’ என்று தோழர் கீதா சொல்ல, ‘உங்களுக்கு பயமா இல்லையா?’ என்று அவர்கள் வினவினர். ‘எதற்கு பயம்?’ என்று தோழர் பதிலளிக்க, ‘நைஸ்’ என்று மகிழ்ச்சியில் எங்களை வாழ்த்தி இரவு உலாவைத் தொடங்கி வைத்தார்கள்.

பேருந்தில் ‘நிலா அது வானத்து மேல’ பாட்டுக்கு ஆடி களைத்து தண்ணீர் குடிக்கும்போது இரவு 11.30 மணி. நொச்சிக்குப்பம் லூப் சாலையை வந்தடைந்தோம். நிலாவும் இருந்தது, ஓடமும் இருந்தது…

சாலையில் வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லை. சாலையோரத்தில் முழுக்க முழுக்க பெண்கள் நடத்தும் சிற்றுண்டிக் கடைகள். மசாலா பொரி, வாழைக்காய் பஜ்ஜி, சுக்கு டீயின் கமகம வாசனை பின்னி எடுத்தது. கடற்கரையில் வட்டமாக நின்று ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு, ‘ரிங்கா ரிங்கா ரோஸெஸ்’ விளையாடினோம். எங்கள் அருகில் உலகத்தையே மறந்து குடிபோதையில் இருந்த ஆறு தோழர்களின் மகிழ்ச்சியை கெடுத்தது மட்டுமில்லாமல், எங்கள் குழுவை ஒரு புகைப்படம் எடுத்து தர கேட்டது சிறப்பு!

இரவு 12.00 மணி, அரை மணிநேரத்திற்கு அரசியல் பேசினோம். எல்லோருக்குமான இரவு ஏன் பெண்களுக்கு எட்டாக்கனியாக இன்றும் இருக்கிறது என்று சுட சுட சுக்குக்காபியுடன் விவாதித்தோம். புதிதாக கட்டப்பட்ட நொச்சிக்குப்பம் குடியிருப்பில் வெக்கை தாங்கமுடியாமல் கடற்கரை மணலின் மீது பாயை போட்டு படுத்துறங்கிக் கொண்டிருந்த மீனவ தோழர் தோழியரை கண்டு மனம் கொஞ்சம் ஏங்கிற்று.

சரியாக இரவு 1.15 மணிக்கு கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்துக்கு (urban square) வந்து நின்றது பேருந்து. ஒரு பாதுகாப்புக்காக, கை வளையலை வீட்டிலேயே கழற்றிவைத்துவிட்டு வந்திருக்கலாமோ என்று ஒரு பதைபதைப்புடன் பேருந்திலிருந்து இறங்கிய எனக்கு, கிட்டத்தட்ட இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. குடும்பம் குடும்பமாக வரிசையில் நின்றுகொண்டு (நான்கு வயது சிறுவர் சிறுமியிலிருந்து எழுபது வயது தாத்தா பாட்டி வரை) உணவு வாங்கி கொண்டு, ஒரு கட்டுக்கட்டிக்கொண்டிருந்தனர். பிரியாணி, பர்கர், பேல்பூரி, ஐஸ் கிரீம் என்று சரமாரியான உணவுகள். உட்காரக்கூட இடமில்லாமல், நின்றுகொண்டே சுண்டல் மசாலாவை தின்றுவிட்டு அடுத்த இலக்கிற்குத் தயாரானோம்.

இரவு 2.00 மணிக்கு மௌண்ட்ரோடு புஹாரி முன் கலவரம் போல் இருந்தது. எட்டிப்பார்த்தால் பன் பட்டர் ஜாமுக்கு அடித்து கொண்டிருந்த மக்கள் கூட்டம்… அடுத்து கேசினோ திரையரங்கிலிருந்து வெளியே வந்த திரளான கூட்டம். இந்த ஊரில்தான் நாமும் இருக்கிறோமா என்று அசந்து தான் போனேன்!

வைகறை 2.45 மணி, பேருந்திலிருந்து இறங்கியதும் உப்புக் காற்றில் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தின் உழைப்பின் மணத்தை நுகர முடிந்தது. காசிமேடு மீன் சந்தை. நாமெல்லாம் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும்போது, நமக்கான தேவைகளுக்காக ஒரு சமூகம் அயராது உழைத்துக்கொண்டிருப்பதை என் கண்களால் கண்டது நெகிழ்ச்சியடையச் செய்தது. அதிசயித்து அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். கணீர் குரலுடன் நூற்றுக்கணக்கில் ‘தைரியலட்சுமிகளை’ சந்தித்ததில் அத்தனை மகிழ்ச்சி. ஒரு கிலோ கடம்பா மீனை குறைந்த விலைக்கு வாங்கியது கூடுதல் மகிழ்வு.

விடியற்காலை 4.00 மணி, இரவு உலா முடியும் இடம். பூக்களாக, தியாக தீபங்களாக இருக்கும் பெண்களை நினைவுப்படுத்த கோயம்பேடு பூ சந்தைக்கு சென்றோம் (உங்கள் மைண்ட்வாய்ஸ் எனக்கு நன்றாக கேட்கிறது!). ஒரு பெரிய பாத்திரம் நிறைய இனிப்பு, கார குழிப்பணியாரங்களுடன் உட்கார்ந்திருந்த அறுபது வயது அம்மா ஒருவர் எங்களைக் கவர்ந்துவிட்டார். நடுநிசி ஒரு மணிக்கு எழுந்து, சுடச்சுட குழிப்பணியாரங்களை ஊற்றி, வண்டியில் ஏற்றிக்கொண்டு கோயம்பேடு பூ சந்தைக்கு வந்து, அங்கு வேலை செய்பவர்களின் பசிக்கு உணவளிக்கும் அந்த மனம், எவ்வளவு பாராட்டுதலுக்கும் தகும்.

இந்த இரவு ஒரு அறியப்படாத, அறிந்தும் சுயநல மனங்களால் எளிதில் புறக்கணிக்கப்படுகின்ற உழைக்கும் வர்க்கத்தைக் கொண்டாடும் இரவாக அமைந்தது. இந்த கொண்டாட்ட இரவை என் வாழ்வில் மறக்க முடியாது.

இந்த ஒட்டுமொத்த பட்டாளத்தை மேய்த்து, பேருந்தில் எங்கள் தூக்க கலக்கத்தையும் பொருட்படுத்தாது, நாங்கள் இரவு உலா சென்ற அத்தனை இடங்களின் வரலாறையும் எங்களுக்கு பொறுமையாக விளக்கிய நிவேதிதா லூயிஸ் அவர்களுக்கும், ஹெர் ஸ்டோரிஸுக்கும் கோடான கோடி நன்றிகள்!

படங்கள்: கோகிலா, கீதா

படைப்பாளர்

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய தொடர், தற்போது ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் நூலாக வந்திருக்கிறது.