“மாப்ள, நீங்க யாராவது ஒருத்தர்கூட வந்து பேசுனா கொஞ்சம் நல்லா இருக்குமுடா. ஏற்கெனவே எல்லாரும் கொந்தளிச்சுப் போய்க் கிடக்குறாய்ங்க. என்ன கிழி கிழிக்கிறாயிங்க தெரியுமா? பதில் சொல்ல முடியாம திணறிட்டோம்டா” என்று அவன் நண்பன் சூர்யா வருத்தத்துடன் சொன்ன வார்த்தைகளைக் கேட்க சிவாவுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. ஆனால் நிலைமை அப்படி. மேலும் இஸ்மாயில் சாரின் உத்தரவை மீறி அவனால் என்ன செய்ய முடியும்?
ரயில் நிலையத்தில் ஒருவித நிசப்தம் குடியிருந்தது. ஆனால், அது கலைய இன்னும் அதிக நேரம் எடுக்காது.
அதைக் கலைக்கத் தேவையான உதவியை நாடித்தான் தன் நண்பனை எழுப்பி தனியே அழைத்து வந்திருக்கிறான். ஆனால் அதைக் கேட்க அவனுக்கு தயக்கமாக இருந்ததால் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுக் கொண்டிருந்தான்.
“சாரிடா மாப்ள, நிலம அப்படிடா. நீ செஞ்ச உதவிய என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டேன்டா . நீங்கல்லாம் இல்லன்னா எங்களால எதுவும் முடிஞ்சிருக்காதுடா. எனக்குப் பாராட்டு பத்திரம் வாசிக்க நடுச்சாமத்துல எழுப்பி , எல்லாப் பெட்டிலயும் இருக்குற ஸ்லீப்பர் செல்சயும் அவசரமா கூப்பிடவும் சொல்ல மாட்டேன்னு எனக்குத் தெரியும். நேரா விஷயத்துக்கு வாடா.”
“இந்தப் பெரிய பதவில இருக்கவங்கெல்லாம் இப்படித்தான் கீழ இருக்கவங்கள வச்சி செய்றதுல?” என்று சிவாவைப் பார்த்தான்.
“வயசானவங்க, பிரகனன்ட் லேடீஸ், குழந்தைங்க எல்லாரையும் பக்கதுல இருக்க ஸ்கூலுக்கு ஷிஃப்ட் பண்ணணும். அதுக்கு உங்க உதவி வேணும்.”
“என்னடா விளையாடுறீயா? மணி என்ன ஆச்சு தெரியுமா? கடைசியா பிரச்னை பண்ணிட்டுப் போனவங்கள சமாளிச்சு திருப்பி அனுப்பவே எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு பாத்துகிட்டு தானடா இருந்தே?”
பதில் சொல்ல முடியாமல் நின்றிருந்தவன் பார்வை ஒவ்வொரு பெட்டியிலும் இருந்து கண்களைத் தேய்த்தவாறு தூக்கக் கலக்கத்துடன் இறங்கி வந்து கொண்டிருந்தவர்களிடம் சென்றது .
இந்த இக்கட்டான சூழலில் உதவி செய்யவென்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி தானாகவே கூடிய கூட்டம்.
இன்னும் சிலரை மற்றவர்கள் எழுப்பிக் கொண்டிருந்ததும் தெரிந்தது.
மங்கலான ரயிலின் மஞ்சள் வெளிச்சத்தில், ஜன்னலோரமாகச் சாய்ந்து கையில் புத்தகத்தைப் பிடித்தவாறு, குளிருக்கு ஒரு துப்பட்டாவை இழுத்துப் போர்த்தியபடி முன்னால் கலைந்து விழுந்திருந்த ஒன்றிரண்டு முடிக்கற்றைகள் காற்றில் அசைய , வானத்திலிருந்து தப்பி விழுந்து தேவதை போல் அழகோவியமாக உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன் இதயம் படபடத்தது.
அவளை எப்படி எழுப்புவது? ஆனால் அது எதிலும், நின்று போன ரயிலில் நள்ளிரவு ஒரு மணிக்கு அவளை எழுப்புவதாக அவன் நினைத்திருக்கவில்லை. அதுவும் அவனை அவள் நிராகரித்த பின்பு. எப்படி அழைப்பது அவளை? கண்விழித்தவள், இவன் தான் பார்க்கக்கூடப் பிரியப்படாமல் மறுத்துவிட்டு வந்த மாப்பிள்ளை என்பதைக் கண்டுகொண்டால்?
எப்படி இந்த தர்ம சங்கடமான சூழலில் மாட்டிக் கொண்டோம் என்று பதற்றம் ஒருபுறமும், அவளுடன் முதல் முதலாகப் பேசப் போகும் படபடப்பு மறுபுறமும் ஒன்று சேர்ந்து புயலில் சிக்கிய இளங்கொடியாக அவனை அலைக்கழித்தது.
கிட்டத்தட்ட எல்லாப் பெட்டிகளிலும் இருந்து ஸ்லீப்பர் செல்கள் எழுந்து விட்டார்கள் குறும்புத்தனமாக அந்தப் பேரை வைத்தவளைத் தவிர.
குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் பெட்டியில் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து, இருக்கைக்கு நேர் இருக்கும் விளக்கை மட்டும் எரிய விட்டுவிட்டு மற்றவற்றை அணைத்துவிட வேண்டும்.
குளிருக்கு மற்றவர்கள் ஜன்னல் அடைத்துவிடுவார்கள், நாங்கள் திறந்து வைத்திருப்பதன் மூலம் ஏதேனும் அவசர சூழலில் அவர்களை எழுப்ப வசதியாக இருக்கும் .
இங்கு பரவிய வதந்தியா, உண்மையா என்று தெரியாமல் பரவிய எஞ்சினில் கரண்ட் இல்லை அடுத்து பெட்டிகளிலும் போய்விடலாம் என்கிற சூழலுக்கும் சேர்த்தல்லவா தன் திறமையால் விடை கண்டிருக்கிறாள் என்று நினைத்தவனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்கப் பெருமையுடன் சேர்த்து அன்பும் பொங்கியது,
அவளுக்கு மட்டும் அவனைப் பிடித்திருந்தால் இந்நேரத்துக்கு அவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும். ஆனால் அவனுக்கு அந்தக் குடுப்பினை இல்லையே! தன் துருதிஷ்டத்தை நினைத்துப் புலம்பும் நேரம் இதுவல்ல என்கிற முடிவுக்கு வந்தவன் வாய் வரை வந்த ‘அம்மு’வை நாக்கைக் கடித்து நிறுத்திவிட்டு, “தோழர் எந்திரிங்க” என்று மெல்லிய குரலில் எழுப்பினான். அவன் குரல் கேட்டு உறக்கத்தில் அவள் தலை மெல்ல அசைந்தது .
மெல்ல விழிப்படையும் அவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அழகி ஒருத்தி பேரழகியாகத் தோன்றுவது உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் போதுதான் என்றெல்லாம் அவன் மனம் கவிதையாகக் கூப்பாடு போட்டது.
உறக்கம் கலைந்து நிமிர்ந்தவளின் கூரிய விழிகள் அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்தன.
அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டால் தேவலை என்று தோன்றியது, ஆனால் கால்கள் நெடுங்காலமாக பூமிக்குள் வேரூன்றி நின்ற மரத்தை எவ்வளவு முயன்றும் வெளியே எடுக்க முடியாததைப் போல் நகர முடியாமல் அந்த இடத்திலே நின்றன.
”நீங்க?”
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.