பட்டுச் சேலை அணிந்து தலைநிறைய முல்லைப்பூச் சூடி , கைநிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்து, காலில் அணிந்திருந்த கொலுசு ‘ஜல் ஜல்’லென்று ஒலிக்க, புதுமணப் பெண் போல் அலங்கரித்துக் கொண்டு அவன் அருகில் வந்து அமர்ந்தாள். இதுவரை அவன் கண்டிராத வெட்கம் கலந்த ஒரு புன்னகையுடன் அவனை மெல்ல எழுப்பினாள்.
“எந்திரிங்க, எந்திரிங்க” என்று கிரங்கவைக்கும் குரலில் அவள் எழுப்பிய போது மெல்ல கண் விழித்தவனுக்கு அவன் கண்ணையே நம்ப முடியவில்லை. உண்மையில் அது மல்லிகாதானா?
அவள் அண்ணன் கல்யாணத்தோடு மட்டுமே அவளைப் புடவையில் பார்த்திருக்கிறான். கோயில் கொடை ஊர் விசேஷங்களில்கூடப் பாவாடை தாவணிதான். மற்றபடி சுடிதார், டிசர்ட்டுகளைப் போட்டுக் கொண்டு அவள் அப்பாவின் புல்லட்டில் வலம்வரும் ராங்கிக்காரி.
“என்ன அப்படிப் பாக்குறீங்க?”
“ஏம்மா நடுராத்திரில இப்படி வெளக்க மூஞ்சிக்கு நேர காட்டிகிட்டு பேய் மாதிரி வந்து நிக்குதே…”
“ஏதோ பூவு பொட்டு வளையலு கொலுசுன்னு உளறிக்கிட்டு கிடந்தியே” என்ற அவன் அம்மாவிடம்,
“போய் படுத்து தூங்கும்மா. உனக்கு வேற வேல இல்ல” என்றவாறு மீண்டும் தலைமீது போர்வையை இழுத்துப் போர்த்தி, பாதியில் கலைந்த கனவு தொடராதா என்கிற ஏக்கத்தோடு குப்புற படுத்தான். ஆனால் அம்மா அவனை விடுவதாக இல்லை.
“ஏ முருகா, உங்க ஆச்சி வளவுக்கு எந்திரிச்சுப் போய் ரொம்ப நேரம் ஆயிருச்சு. ஒரு எட்டு போய்ப் பாத்துட்டு வாடா. கிழவி இருட்டுக்குள்ள வழுக்கி வுழுந்து கெடக்கப் போவுது. இந்தச் சம்முசுந்தரமும் அழகம்மையும் வேற ஒரு நாளும் இல்லாத திருநாளா கத்திக்கிட்டே கெடக்குதுக . அதுகளயும் பாத்துட்டு வந்துரு ராசா.”
“அதான் வீட்டுக்குள்ளயே பாத்துரூம் கட்டி வச்சிருக்கே. அப்புறம் ஏன் இந்த ஆச்சி இன்னும் நடுராத்திரில கொல்லைக்கு ஓடிக்கிட்டு கிடக்கு?” என்று அம்மாவின் கையிலிருந்த சிம்னி விளக்கை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.
மழை சற்று வெறித்திருந்தது. ஆனால் காற்று ஜில்லென்று அவன் மேனியைத் தீண்டி ஒருவித சிலிர்ப்பைத் தந்தது. அவனுக்கு உண்டான நடுக்கத்துக்கு குளிர்தான் காரணம் என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு வெளியே நடந்தான்.
“ஆச்சி… ஆச்சி…” என்று கூப்பிட்டுக் கொண்டே போனவன் பின்னாலிருந்த கழிவறையில் ஆள் அரவம் இல்லாமல் இருந்ததால் சற்றுப் பதற்றத்துடன் ஆடுகள் கட்டும் ஓலைக் கொட்டகைக்கு நடந்தான்.
அவன் ஆச்சியின் குரலும் அவர் வைத்திருந்த விளக்கின் வெளிச்சமும் ஆட்டுக் கொட்டகையில் அவர் இருப்பதைக் காட்டியது.
“சம்முசுந்தரம், இங்க வா ராசா. ஆத்தா கிட்ட வாடா. உன்னய பத்திரமா கூட்டிப் போறேன். ஏட்டி அழகம்ம இந்தா உனக்கு புடிச்ச உடமணி, வந்து சாப்பிடு” என்று குழந்தையைக் கொஞ்சும் குரலில் பேசிக் கொண்டிருந்ததும் , பதிலுக்கு அவை ‘ம்மேமே’ என்று கத்துவதும் காதில் விழுந்த போது அவனுக்குக் கோபம் வந்தது.
“பகல்லதான் ஆடே உலகம்ன்னு கெடக்குறா சரி. நடுராத்திரியில இந்த மழைக்குள்ள அதுவும் கரண்டு இல்லாத நேரம் ஆட்ட கட்டிக்கிட்டு அழலன்னு யாரு கேட்டா?”
அந்த இடத்தில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் ஓடியது. அவனுக்குள் ஏதோ ஓர் இனம் தெரியாத பயம் அந்தத் தண்ணீரின் அளவைப் போல் அதிகரித்தது.
தண்ணீரில் பயந்து நிலை கொள்ளாமல் ஓடிக் கொண்டே இருந்த ஆடுகளை அவிழ்க்க அவன் ஆச்சி முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தது தெரிந்தது.
“தாமிரவருணி அண ஒடப் பெடுத்துடுச்சு போலயேய்யா. இதுகள கொஞ்சம் அவுத்து வீட்டுக்குள்ள கட்டணும். பஞ்சவர்ணத்துக்குக் குரல் குடுத்தேன், கொஞ்சம் நீ சத்தம் குடுய்யா. “
“நீ முதல்ல இங்க வா ஆச்சி. இருட்டுல இப்படித் தனியா வந்துருக்கியே. ஒரு குரல் குடுத்துருக்க வேணாமா? “
“அழகம்ம பின்னாடி நிக்கா, அவளையும்” என்று அவர் தொடங்கவும், “முதல்ல நீ உள்ளுக்க போ ஆச்சி . நான் ஆட்ட அவுத்துக்கிட்டு வாரேன். நீ போய் அப்பாவுக்குக் கொரல் குடு.”
அவன் வீட்டுக்கு அருகில் இருந்த வாய்க்காலில் சாயந்திரமே கிட்டத்தட்ட முக்கால்வாசி தண்ணீர் ஓடியது. அணை உடையாமல் வெறும் மழைத் தண்ணீர் வீடு வரை வர வாய்ப்பு கம்மிதான். எனவே அவன் ஆச்சி கணிப்பு சரியாக இருக்கும் என்றுதான் அவனுக்கும் தோன்றியது.
அப்படி இருக்குமானால் ஊருக்குள் தண்ணீர் புக அதிக நேரம் ஆகாது. எத்தனை வேகமாக மற்றவர்களை எழுப்புகிறானோ அத்தனை சீக்கிரம் அவர்கள் சுதாரித்துக் கொள்வார்கள் . ஊர் கடைசியில் இருந்த தாழ்வான பகுதியில் இருந்த குடிசை வீடுகளை நினைத்து வருந்தினான்.
“ஏ பஞ்சவர்ணத்தே, எந்திரிங்க, ஊருக்குள்ள தண்ணி!”
“ம்மா ம்மோவ்…”
“என்னடா இப்படிக் கத்திக்கிட்டு வாரே?”
“ஆச்சில்லாம் நல்லாதான் இருக்கா. ஊருக்குள்ள தண்ணி வருது. அண உடஞ்சிட்டுப் போல. அப்பாவ எழுப்பும்மா. அப்படியே பக்கத்து வீட்டுக்கும் குரல் கொடுக்கச் சொல்லு.”
“என்னலே உளறுறே?”
“ஆட்ட பின்னாடி இருக்க சிமெண்டு சீட்டுக்குக் கீழே கெட்டீட்டேன் ஆச்சி. எப்பா, நீ அப்படியே கிழக்க நேரா குரல் குடுத்துகிட்டே போ. நான் பயலுவள எழுப்புறேன்.”
அவன் அப்பாவும் அவர்கள் வீட்டு முன் திண்ணையில் படுத்துக்கிடந்த அவர் தோஸ்து ராசாமணி பெரியப்பாவும் தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு வேகமாக அக்கம் பக்கத்து வீட்டுக் கதவுகளைத் தட்டி விஷயத்தைச் சொன்னார்கள்.
“ஊருக்குள்ள தண்ணீ எல்லாரும் எந்திரிங்க” என்கிற கூச்சலும் இணைந்து கொண்டது. ஆங்காங்கே வீடுகளில் ஆட்களின் பேச்சுக் குரல் கேட்கவும்தான் அவனுக்குச் சற்று ஆசுவாசமானது. எல்லாரும் எழுந்து விட்டால் எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
“மாப்ள, என்னலே வாய்க்கா உடஞ்சிட்டா? இல்ல அணையா? போய்ப் பாத்துட்டு வருவோமா ?”
“நேரமில்லடா. ராஜா வீட்டுக்கிட்ட எல்லாம் குடிச. நீ போய்க் குரல் குடு.”
“மாப்ள தண்ணி கணுக்காலுக்கு மேல ஓடுதுடா. வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணி. வெள்ளைச்சாமி தாத்தாக்கு வேற முடியாம இருக்கு. எல்லாரும் தட்டுமுட்டு சாமான பரணுல போட முடியுறத போட்டுட்டு கைல அள்ளுறத அள்ளிட்டு இருக்காங்கடா.”
“சரி மாப்ள, முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரம் இங்க கூட்டிட்டு வா.”
பத்மநாபன் வண்டியுடன் வந்து சேர்ந்தான்.
“மச்சான் , நீங்க ரெண்டு பேரும் வண்டில போய் வெள்ளைச்சாமி தாத்தாவ எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துருங்கடா. இங்க மேட்டுல தண்ணி எப்படியும் அவ்வளவு சீக்கிரம் வராது. மீதி பேர மல்லிகா வீட்டுத் திண்ணைல கொஞ்சம், பூசப்பழம் மாமா வீட்டுல கொஞ்சமா இருக்கச் சொல்லு.”
இன்னும் பாதி வீடுகளில் ஆட்களுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்த போது திடீரென யோசனை மின்னியது,
“மாப்ள, ஆரன் அடிச்சிக்கிட்டே போடா. அப்டின்னா எப்புடியும் கொஞ்சம் பேருக்காவது கேக்கும்.”
ஆனால் வண்டி வைத்திருந்த எல்லாரும் வண்டியைக் கிளப்பி ஆரன் அடித்து, வெளிச்சமும் காட்டினார்கள். ஓரளவுக்கு எல்லாரும் வீதியில் வந்தார்கள். மனிதர்களும் ஆடு மாடுகளும் ஆங்காங்கே மழைக்காக வீதியிலிருந்த திண்ணைகளில் ஒதுங்கினார்கள்.
“முருகா, மழ வெளுத்து வாங்குது. நாலஞ்சுதானே பெரிய வீடு. இப்ப என்ன பண்ண?” என்று கேட்டுக் கொண்டே மல்லிகா புல்லட்டில் அவன் நின்ற இடம் வந்து சேர்ந்தாள். அதற்குள் வடக்குத் தெருக்காரர்கள் அநேகம் பேர் அவள் வீட்டுக்கு முன் கூடிவிட்டார்கள். அவள் வீட்டுத் திண்ணையும் மற்ற பெரிய வீட்டுத் திண்ணைகள் போல் அதற்குள் நிறைந்துவிட்டது.
“ஐயோ, ஆத்தா இது என்ன சோதன ! இப்படி எல்லாத்தையும் நடுவீதியில நிக்கவுட்டுட்டியே”
என்று தன் வீட்டுக்குள் தண்ணி புகுந்த பதற்றத்தில் கத்திக் கொண்டே ஆங்காரமாகப் பூசாரி வீதிக்கு வரவும் மல்லிகாவும் முருகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
இருவருக்கும் ஒரே எண்ணம்தான் தோன்றியது என்று அந்த மழையிலும் கையறுநிலையிலும் இருவர் இதழிலும் விரிந்த புன்னகை சொல்லாமல் சொன்னது.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.