’அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்’ எனும் பாடல் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது. மனம் ஒருமுறை நிதானித்து சிந்திக்கத் தொடங்குகிறது. நம் உறவுகளில் நட்புகளில் எத்தனை பேருடன் இவ்வார்த்தைகள் சாத்தியமாகுமென்று. அன்பிலே தொடங்குகிறோம்.

அன்பில்தான் முடிக்கிறோமா? அன்புக்கு அன்பை மட்டும் தான் திரும்ப பரிசு அளிக்கிறோமா? அன்பின் மொழி அதிகாரம் எனும் லிபி கொண்டே பெரும்பாலும் எழுதப்படுகிறது. கடைசி உருண்டையை விழுங்கச் சொல்லி குழந்தையின் முதுகில் அடிக்கும் தாய்மார்களைப் பார்த்திருக்கிறோம் தானே! அந்தக் கடைசி வாயை உண்பதனால் அத்தனை சத்தும் வந்துவிடப் போகிறதா? அது, நான் அம்மா என்ற அதிகாரம். ’எனக்கு நீ உரிமையானவன்’ என்று அன்பு அதிகாரமாக மாறும் தருணம்.

ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால் வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள் எத்தனை பேர். பெற்றோர்களேயானாலும் அதிகாரத்தின் கைகள் அன்பைவிட ஓங்கும்போது குழந்தைகள் திசை தெரியாத பக்கம் ஓடிவிடத்தானே துடிக்கிறார்கள்.

பதின்வயது காதலைத் தன் பெற்றோரிடம் சொல்ல முடிகிற பிள்ளைகள் எத்தனை பேர்? அப்படியான சூழல் எத்தனை வீடுகளில் இருக்கிறது? எத்தனைப் பேர், தன் காதலை வீட்டில் சொல்ல பயந்து அல்லது பெற்றோர்கள் சம்மதிக்காததால் பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்? அதிகாரத்தின் பிடியில் அன்பில் குரல்வளை நெறிப்படத்தானே செய்கிறது.

’அம்மா, கணவர் சரியில்லை சண்டையிடுகிறார், குடிக்கிறார்’ என்று முறையிட்டால், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ’கொஞ்சம் பொறுமையாக இருந்து, சமாதானமாகப் போ’ என்று சொல்லும் பெற்றோர்கள்தானே அதிகம்!

அதிகாரத்தின் கை பெரும்பாலும் ஆணின் கைகளாகவே இருப்பது பேருண்மை. சில பெண்களும் அதற்கு விதிவிலக்கல்ல. கணவன் மனைவிக்கு ஏற்புடையவனாக இல்லாவிட்டாலும் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருப்பதே போதுமானது என்று வாழும் பெண்கள் எத்தனையோ பேர்.

தன் சுயத் தேவைகளை மற்றவர்கள் தீர்க்கும் வரைதான், அல்லது அதை ஏற்கும் வரைதான் குடும்பம் என்ற ஸ்தாபனம் செழிப்பானதாயிருக்கிறது. முப்பது வருடங்களாகச் சமைத்து, வீட்டு வேலையைப் பார்க்கும் அம்மா பத்து நாட்கள் உடல் நலமில்லாமல் படுத்துக்கொண்டால், முதல் ஐந்து நாட்களுக்கு கிடைக்கும் கவனிப்பும் மரியாதையும் அடுத்த ஐந்து நாட்களுக்கு கிடைப்பதில்லை.

அன்பு என்பது பெரும்பாலும் வெறும் சுயநலமாகவே இருக்கிறது. ஓர் ஆண் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு பெண் ஓர் ஆணையோ காதலிக்கிறாரென்றால் அல்லது மணந்து கொள்கிறாரென்றால் அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இன்னொரு பாலினம் அவ்வளவே. கேட்பதற்குக் கொஞ்சம் அபத்தமாகத் தெரிந்தாலும்கூட எழுத்தாளர் ஆப்ரஹாம் டிவெர்ஸ்கி சொல்வதுபோல ஒரு மனிதனுக்கு மீன் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு, எப்படி மீனை ருசித்து ரசித்து உண்ண இயலும்? மீனைப் பிடிக்குமென்றால் மீனைப் பாதுகாப்புடன் வளர்க்கத்தானே வேண்டும்? அவனுக்கு இங்கே மீனைப் பிடிக்கவில்லை. அதன் சுவையைப் பிடித்திருக்கிறது. இந்த வித்தியாசத்தைப் போலத்தான் நம் வாழ்வும்.

நம் துணையை நம் தேவைகளுக்காக மட்டுமே நேசிக்கிறோமோ அல்லது அதையும் தாண்டி நேசிக்கிறோமோ என்பது. அவள் பெயர் தாமரை. என் அன்புத் தோழி. பெண்களே பொறாமை கொள்ளும் அழகு. மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது எங்கள் தோழமை. ஏறத்தாழ ஒன்பது வருடங்களுக்குப் பிறகு எனக்குத் திருமணமாகி என் மகளை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தேன். அவளுக்கு நிச்சயதார்த்தம் என்று தொலைபேசியில் சொன்னாள். நிச்சயதார்த்தம் ஆந்திராவில் நடைபெறவிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக அவள் பெற்றோருடன் ஊர் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். வீடேறி வந்த ஒருவன் வெறும் ஒருதலைக் காதலை வைத்துக்கொண்டு அவள் அம்மா முன்னிலையிலேயே அவள் முகத்தில் வீசிய ஆசிட் அவள் வாழ்வை புரட்டிப்போட்டது.

பல அறுவை சிகிச்சைகள். முகம், கழுத்து, கைகள், மார்பு எனப் பல உறுப்புகளிலும் நன்றாகயிருந்த ஓரிடம் தொடை மட்டும்தான். அதிலிருந்தும் சதையைப் பிய்த்து எடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்கள். எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் பிள்ளைத்தாச்சியாக இருந்த என்னை என் அன்புத் தோழியைப் அப்போது பார்க்க அனுமதிக்கவில்லை. சில மாதங்கள் கழித்துப் பார்த்தேன். அழுவதா? ஆறுதல் சொல்லுவதா? ஆறுதல் சொல்வதென்றால் என்னவென்று சொல்வது என்று ஒன்றும் தெரியாமல் அவளை அணைத்து நின்றேன்.

இதில் மிகப்பெரிய கொடுமை மரியாதைக்குரிய சட்டம், உயர்ந்த நீதி, ஒருநாள் கடுங்காவல்கூட இல்லாமல் அந்தக் குற்றவாளியை விட்டுவிட்டது என்பதுதான். தன் காயங்கள்கூட வலிக்கவில்லை. ஆனால், என் வாழ்வைப் பறித்துவிட்டு இன்னுமவன் சாதாரணமாக இவ்வுலகில் உலவிக்கொண்டிருக்கிறான் என்பதைத்தான் தாங்க இயலவில்லை என்ற தாமரையின் குரல் காதுகளின் தாழ்வாரத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஒருதலைக் காதலோ இருதலைக் காதலோ? காதல் என்றால் அன்புதானே. தன்னை மணக்கவில்லை என்ற ஒற்றைக் காரணம் ஒரு பெண்ணின் முகத்தை, வாழ்வைப் பறிக்கச் சொல்லுமா? அன்பில் தொடங்கி ஆணவமாகக் கொலைவெறியாக மாறிய எத்தனை செய்திகளை நாம் நாள்தோறும் கடந்து வருகிறோம்.

அன்பை, அன்பாக மட்டுமே பார்க்கும் ஒரு சமூகம் பிறக்கப் போவது எப்போது? அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற வரிகள் அதிகாரத்தையும் அன்பையும் இணைக்கும் சங்கிலியை நமக்கு உணர்த்துகிறது. காலம் எவ்வளவு கொடியது. அன்பாக ஆரம்பித்த எத்தனை உறவுகள் நிர்மூலமாகியிருக்கிறது! எதிர்பார்ப்புகள் உடையும் போது அன்பு பலவீனமாகிறது. அன்பு அதிகாரமாக உருமாறுகிறது. அதிகாரமாக மாறிவிட்ட அன்பு பிற உறவுகளை மட்டுமல்ல உயிரையும்கூட பறிக்கிறது.

ன்பு என்னும் வார்த்தை உச்சரிக்க மிக அழகானது. பரிமாறிக்கொள்ளவும் அதி அற்புதமானது. ஆனால், அந்த அன்பே மிகுதியாகும்போது அச்சத்தைக் கொடுக்கிறது. அன்பின் மிகுதி வெறித்தனமாக மாறுகிறது. ஒரு பொருளை உரிமைக் கொண்டாடுவது போல ஓர் உறவைத் தனக்கேயானதாகக் கொண்டாடப்படும் உரிமைகளில் பல அத்துமீறல்களும் நடக்கத்தான் செய்கின்றன. அன்பு கிடைக்காத ஆற்றாமை எப்படி வெறித்தனமாக மாறுகிறதோ அதைப் போலவே மிகைப்படுத்தப்பட்ட அதீத அன்பும் அதிகாரமாக மாறுகிறது.

அப்பா எனும் அன்பான உறவு பல வீடுகளில் அதிகாரத்தின் சின்னமாகவே இருக்கிறது. எம்டன் திரைப்படத்தில், எம்டன் வர்றார் என்றதும் வீடு அமைதியாக மாறிவிடுவது போல இன்னமும்கூடச் சில வீடுகளில் மாலையில் அப்பாக்களின் வருகைக்குப் பிறகு வீடு நிசப்தமாகவே மாறிவிடுகிறது.

காதலிக்கும் போது இருந்த அன்பு கல்யாணத்திற்குப் பிறகு அதிகாரமாக மாறிவிடுகிறது. இது இருபாலருக்கும் பொருந்தும். அன்பான நாய்க்குட்டி அன்பாகவே நடத்தப்படும், அது எஜமானனின் சொல் கேட்டு நடக்கும்வரை. அன்பான தொண்டன் அன்பாகவே நடத்தப்படுவான், தலைவனின் கட்டளையைக் கேட்டு நடக்கும் வரை. சில வீடுகளில் அன்பான மனைவி அன்பாகவே நடத்தப்படுவாள் கணவனுக்கும் கணவனைச் சார்ந்தோருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் வரை. பல வீடுகளிலும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் அடிப்பதேயில்லை, அவர்கள் போட்ட கோட்டைப் பிள்ளைகள் தாண்டாதவரை.

அன்பு மிகும் போது சில நேரத்தில் அது சுயநலமாக மாறிவிடுகிறது. விரும்பி காதலித்து மணந்த பெண்ணைத் துன்புறுத்துத்தும்போது அதுவரை அங்கிருந்து அன்பு காணாமல்தானே போகிறது. மனிதன் விடுதலையை வேண்டுகிறான் என்பது உண்மையல்ல என்றுதான் தோன்றுகிறது. மனிதன் விடுதலையை வேண்டியவனாக இருந்தால் வீடு என்று ஒன்றைக் கட்டிக்கொண்டிருப்பானா? மனிதன் என்றுமே விடுதலையை நாடுவதாகச் சொல்ல முடியாது. ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்குத் தப்ப விரும்புகிறான் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். எழுத்தாளர் க.நா.சு அவர்களின் கூற்று இது. மனிதனின் அன்புச் சிறை கடுங்காவல் சிறையாக மாறும் போது வேறொரு சிறைக்குச் செல்ல ஆசைப்படுகிறானோ என்னவோ? ’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ இல்லைதான். அன்பிற்கு அன்பையே பதிலளிக்க வேண்டும். அன்பிற்கு அன்பையே பரிசளிக்க வேண்டும். அன்பில் தொடங்கி அன்பிலே முடிக்கும் உறவுகளாக எல்லா உறவுகளும் உருமாற வேண்டும். அளவிற்கு மீறினால் அமுதம் மட்டுமல்ல அன்பும் நஞ்சாகித்தான் போகிறது. தொடர்ந்து உரையாடுவோம் அன்புகொண்ட மனத்தோடு. கதைப்போமா?

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.