நானாக நான் பகுதி – 7 

குடிக்கத் தெரிந்த மனமே! அதை மறக்கத் தெரியாதா? 

பாலின பேதம் கடந்து குடிப்பழக்கம் இன்று பலரின் வாழ்விலும் ஒரு அங்கமாக மாறியிருக்கிறது. குடிப்பழக்கம் என்பது போதைக்கானது என்பதோடு மட்டுமே அதைப் பொருத்திப் பார்த்து விட முடிவதில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு போதை தேவைப்படத்தான் செய்கிறது. அது இசையாக, பாடலாக, ஓட்டமாக,  விளையாட்டாக, மண்ணாக, பெண்ணாக, பணமாக, எதுவெதுவாகவோ இருக்கத்தான் செய்கிறது. அது எதுவாக இருந்தாலும் நாம் அந்த போதைக்கு அடிமையாகும் போது அது நம்மை முழுமையாக ஆட்கொள்கிறது. 

பல பெண்களின் வாழ்விலும் பிரதானமானப் பிரச்சினையாக இருப்பது ஆண்களின் இக்குடிப்பழக்கம். திருமணமான ஒரு பெண்  தன் முதலிரவில் ஆணின் ஸ்பரிசத்தோடு சேர்த்து குடி வாசனையையும் உணர்வது எவ்வளவு வலி மிகுந்தது. ‘ஆண் என்பவன் அப்படித்தான் இருப்பான் நீதான் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்’ என்று அம்மாவின் குரலோ மாமியாரின் குரலோ, சமுதாயத்தின் குரலோ மனித குலத்திற்கான அபத்தங்களில் ஒன்றாக எனக்குத் தோன்றும். 

போதை என்பது போக, குடிப்பழக்கம் என்பது தோல்விக்கான தேவையாக மாறியிருக்கிறது. வெற்றிக்கான களிப்பிலும் மது இருக்கிறது. 

ஆனால் தோல்வி, அதிலும் பெரும்பாலான ஆண்களின் தோல்வியில் மது மருந்தாகி விடும் என்ற நம்பிக்கை எவ்வளவு அவலம். மது எல்லா துயர்களுக்கும் மருந்தாகி விடுமென்பது உண்மையாக இருந்தால் குடும்பங்களில் பிரச்சனைகள் முற்றிலுமாக சூறையாடப்பட்டிருக்க வேண்டுமே. அதற்கு பதிலாக குடிப்பழக்கம் என்பதே ஒரு பிரதானப் பிரச்சனையாக குடும்பங்களில் மாறி விடுவதற்கு காரணமென்ன?

மதுப்பழக்கம் என்பதே தவறு என்று கூறிவிட இயலாது. குறைந்தபட்சம் அப்பழக்கம் மற்றவர்களைப் பாதிக்காத வரை அது குற்றமில்லை.

அரசே அவ்விற்பனைக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறதுதானே. மது அருந்திவிட்டு தன் மனைவியை ஒரு ஆண் அடிக்கும்போது, பெற்ற குழந்தையைத் திட்டும்போது, போதை மயக்கத்தில் யாரென்று தெரியாத பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்யும் போது, போதையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்கள் புரியும்போது குடிப்பழக்கம் என்பது மாபெரும் குற்றமாக மாறுகிறது. 

Hand draw watercolor two mugs of Beer drink at a toast with a splash of beer foam design

நீண்ட நாட்களாக யாரிடமும் பேசாத என் பள்ளித் தோழி ஒரு நாள் வாய் திறந்து சொன்னது ‘ என் அப்பா போதையில் என்னிடம் தவறாக நடந்து கொள்கிறார். சித்தியிடம் சொன்னால் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிடுவார். நான் என்ன செய்வது?’ என்று அழுத அவள் கண்ணீர் இதை எழுதும்போதும் என் கைகளில் பிசுபிசுத்துக் கொண்டேயிருக்கிறது. மன்னிக்க முடியாத குற்றவாளியாக நான் இதுவரைப் பார்த்திராத அவள் அப்பாவின் முகம் மனதில் கசந்து தெரிகிறது. 

எவ்வளவு தகாத வார்த்தைகளையும்  குடித்து விட்டு பேசிவிடலாம் என்ற மனப்போக்கு பல ஆண்களிடம் இருக்கிறது. காலை விடிந்தவுடன் ‘இரவு என்னை தகாத வார்த்தையில் பேசினீர்கள்’ என்று மனைவி கேட்டால் ‘எனக்கு இரவில் நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லை. ஏதோ போதையில் பேசி இருப்பேன் என்கிற பதில் எப்படி ஏற்புடையதாக இருக்கும்? போதை என்பது எல்லா மோசமான வார்த்தைகளையும் பேசுவதற்கான உரிமமா? அதிலும் மனைவி மக்களிடம் மட்டும்? குடித்து விட்டு போதையில் தெரியாமல் கொலை செய்து விட்டேன் என்றால் நீதிமன்றத்தில் தண்டனை கிடையாதா? இருக்கறதல்லவா? அப்படியிருக்க போதையில் மனைவியைக் கெட்ட வார்த்தையில் வசைபாடுவது மட்டும் எப்படி குற்றமற்றதாகும்? 

சொற்களால் ஒருவரைச் சூறையாடுவதைக்காட்டிலும் பெரிய தண்டனை யாருக்கும் தர இயலாது என்பது என் கருத்து. குடிபோதை இல்லை என்றால் ‘காலால் செய்யும் வேலையைக்கூட கையால் செய்வான் என் மகன்’ என்று மார்தட்டும் சின்னம்மாவின் மகன் குடித்து விட்டால் அவனருகில் யாரும் நிற்கமுடியாது. அதிவண்ண சொற்களின் கிடங்காக அவன் மாறிவிடுவான். தூரத்து சொந்தமான பெரியப்பா ஒருவர், நல்ல மனிதர். கடைசி காலத்தில் அதிகப்படியான குடியால் விக்கி விக்கியே இறந்து போனார். இப்படி பல வீடுகளிலும் ஏதாவது ஒரு தூரத்து பெரியப்பாவும் சித்தப்பாவும் குடியால் பாதிக்கப்பட்டவராக  இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

போதையில்தான் பெரும்பாலான ஆண்கள் உண்மைத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றும். போதையில் உளறும் வசைபாடும் சொற்கள் எல்லாம் அவர்களின் மனதிலிருந்து பிறந்ததா? அத்தனை கெட்ட வார்த்தைகளும், பெண்களுக்கு எதிரான அத்தனை வசைகளும்தான் ஆண்களின் உள்மன வாசகங்களா?

எழுத்தாளர் ஆதவன் தன் காகித மலர்களில் எழுதியிருப்பார், வாழ்வின் எல்லா நேரங்களிலும் பொய்யானவனாகவும், தன்னை கௌரவமானவனாகவும் காட்டிக் கொள்ளும் மனிதர்கள் போதையில் மட்டுமே உண்மையானவர்களாக, முகமூடியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று. 

கொரோனா காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் பெருகியுள்ளது. அதிலும் குறிப்பாக குடிப்பழக்கம் உள்ள ஆண்களின் வீட்டில் பெண்கள் படும் பாடுகள் சொல்லி மாளாதவை. குடித்துவிட்டு பெண்களை அடித்து துன்புறுத்தும் ஆண்கள், குடித்துவிட்டு பிள்ளைகளிடம் தகாத வார்த்தைகளை பேசும் ஆண்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் ஆண்களும் பெண்களும், குடித்துவிட்டு ஒரு மிருகம் போல தன் மனைவியை இரை எனக் கொள்ளும் சில ஆண்கள், குடித்துவிட்டு சில ஆண்கள் பெண்களின் மீது புரியும் பாலியல் குற்றங்கள், குடித்துவிட்டு ஆடை விலகி சாலையில் படுத்துறங்கும் சில ஆண்கள், சாராயம் காய்ச்சும் சில பெண்களும் ஆண்களும், குடித்துவிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் இப்படி எத்தனையோ மனிதர்களை நாம் நம் தினசரி கடந்து தானே வருகிறோம்.

வீட்டில் நடக்கும் முக்கியமான சில விஷயங்களில் அல்லது விழாக்களில் உறவினர்கள் முன்னிலையில் தன் வீட்டு ஆண் குடித்துவிட்டு செய்யும் கலாட்டாக்களால், மோசமான நடவடிக்கைகளால் துயரங்களுக்கு ஆளாகும் எத்தனை பெண்களையும் குழந்தைகளையும் நாம் கண்டிருக்கிறோம். 

 சாராய வாசனையைப் பிடிக்காத தன் மனைவிக்கு அவ்வாசனையை ஒரு ஆண் தாம்பத்தியம் என்ற பெயரில் கடத்துவது அதிகார மீறலின் உச்சமில்லையா? தாம்பத்யம் என்பதே இருபாலரின் ஒப்புதலோடே நடக்க வேண்டும் ஒவ்வொரு முறையும் அது கணவன் மனைவியே ஆனாலும். அப்படி இருக்க போதையின் வாசனையை ஏற்காத ஒரு மனைவிக்கு குடிபோதையில் ஆண் தரும் முத்தம் விஷ முத்தம் அல்லவா? 

குடிப்பதற்கு எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்கலாம். அவரவர் நியாயம் என்பது எப்போதுமே அவரவர்களுக்கு உண்டு. ஆனால் அடுத்தவரை சித்ரவதைக்கு உள்ளாக்கும் போது, அடுத்தவரை மன உளைச்சலுக்கும் உடல் சார்ந்த துன்பங்களுக்கும் ஆளாக்கும் போது அது பெருங்குற்றமே. 

Christmas vector created by pch.vector – www.freepik.com

பெரிய செல்வந்தர்களுக்கு குடிப்பதென்பது அந்தஸ்து சார்ந்த விஷயமாக இருக்கலாம். சில ஏழைத் தொழிலாளிகளுக்கு அவர்கள் உடல் வலி தீர்வதற்கான மருந்தாகக்கூட இருக்கலாம். விடலைகளுக்கு புதிதாக ஒரு போதைப்பொருளைக் கற்றுக் கொள்வதற்காக இருக்கலாம். கிராமப்புறத்தில் சில பாட்டிமார்கள் குடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இட்டு நிரப்ப முடியாத ஏதோ ஒன்றை குடிப்பழக்கத்தை கொண்டு நிரப்பிடத் துடிக்கிறார்களோ என்றுத் தோன்றும். ஆனால் குடிப்பழக்கம் தன் குடும்பத்திற்கோ, உற்றார், உறவினர், சமூகத்திற்கோ, ஏன் தனி மனிதனுக்கோ கேடாய் முடியும் போது அது பெருங்குற்றமாகத்தானே ஆகிறது. 

அடிப்படைத் தேவைகளுக்காக போராட வேண்டிய சமூகம் எப்படி கேளிக்கைகளில் நிரப்பித் தளும்புகிறதோ அப்படி குடி என்னும் போதையிலும் நிரம்பித் திரள்கிறது.  ஆண்கள் குடித்துவிட்டு பெண்களுக்கு செய்யும் அநீதிகளைப் போல பெண்கள் குடிப்பவர்களாக இருக்கும்போது நான் மேற்சொன்ன அத்தனை  குற்றங்களும் பெண்களுக்கும் பொருந்தும். பெண்கள் குடிப்பது சம உரிமை என்பதை விட பேதைத்தனம் ஏதுமில்லை. குற்றம் எவர் செய்யினும் குற்றம் தானே. 

குடிக்கத் தெரிந்த மனமே! 

அதை மறக்கத் தெரியாதா?

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பு:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.