மலையாள எழுத்தாளர் முகமது பஷீரின் பால்யகால சகி நாவலின் மஜீத் என்னும் சிறுவனுக்குக் கணக்குப் பாடமே வராது. தினமும் ஆசிரியரிடம் அடி வாங்குவான். ஒருநாள் ஆசிரியர் மஜீத்திடம், ‘ஒன்னும் ஒன்னும் எத்தனை?’ என்று கேள்வி கேட்க, மஜீத் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்து விடுவான். ‘இங்கிருந்து ஒரு நதி வருகிறது. அங்கிருந்து ஒரு நதி வருகிறது. இரண்டு நதியும் சேர்ந்தால் ஒரு பெரிய நதிதானே உருவாகும்’ என்று சிந்தித்தபடி, ‘ஒன்னும் ஒன்னும் பெரிய ஒன்னு’ என்று பதில் கூறுவான். சுற்றி இருந்த மாணவர்கள் அத்தனை பேரும் சிரிப்பார்கள். ஆனால், அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள், தான் சொன்னது சரிதானே என்ற எண்ணமே அவனுக்கு வரும். அவன் சிந்தித்தபடி அவனுக்கு அவன் விடைதான் சரி.

வாழ்வில் சரி, தவறுகள் குறித்த பிம்பம் முற்றிலும் வேறுபட்டவை. ஒரு தேசத்துக்கு சரியாகப் படுவது மற்ற தேசங்களில் தவறாகலாம். ஒரு தேசத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று, வேறு தேசத்தில் தடை செய்யப்படலாம். ஒரு மதத்தில் சரியெனக் கொள்வது வேறு ஒரு மதத்தில் பிழையாகலாம். ஒரு காலகட்டத்தில் சரி என்பது மற்றொரு காலகட்டத்தில் தவறாகலாம். ஒரு மனிதனுக்குச் சரி எனப்படுவது, ஒரு சமுதாயத்திற்குச் சரி எனப்படுவது வேறு எவருக்கோ தவறாகப்படலாம்.

இந்தச் சரி, தவறுகளைத் தீர்மானித்தது யார்? மனிதர்கள்தானே! இயேசுவை சிலுவையில் அறைந்த மரத்தை, சாத்தான் என்றும் பூதம் என்றும் தூற்றி வந்த காலங்கள் வரலாற்றில் இருக்கிறது. பின்னர் அம்மரம் புனிதமாக மக்களால் வழிபடும் முக்கியப் பொருளாக மாறிவிட்டது எதைக் காட்டுகிறது? தத்துவ ஞானியான ப்ரூனோ தன் கருத்துகளுக்காகவும் விஞ்ஞானி நிக்கோலஸுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தார் என்பதற்காகவும் கி.பி.1600இல் உயிரோடு எரிக்கப்பட்டார் என்ற செய்தி நாம் அறிந்ததே. அறிவியல் கருத்துகளை மதத்தோடும் கடவுளோடும் இணைத்து மதத்தையும் கடவுளையும் தூற்றிவிட்டார் என்ற காரணத்திற்காக அவர் மிக மோசமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டார். அன்று அவர் கொலை செய்யப்பட்டதைச் சரி எனக் கூறினார்கள் அரசும் மக்களும். கிட்டத்தட்ட நானூறு வருடங்களுக்குப் பிறகு அவரை எரித்தது தவறு என்றும் அதற்கு வருந்துவதாகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறது அரசு. ஆக நானூறு வருடங்களுக்கு முன்பு சரியாகக் கருதப்பட்ட ஒரு செயல் பின்னாளில் தவறாகக் கருதப்படுகிறது. தவறுக்கு மன்னிப்பும் கேட்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் பெரியம்மாவோடு உடலுறவு கொண்ட பின்னர், அந்த ஆண் இல்லறத்திற்குத் தகுதியானவனா என்பது சோதிக்கப்பட்ட பின்னரே திருமணம் நடைபெறுகிறது. இப்படி உலகெங்கிலும் பல்வேறு வகையான வித்தியாசமான நிகழ்வுகள் அவ்விடங்களுக்குத் தகுந்தாற்போன்று சரி தவறுகளைத் தீர்மானித்துக் கொள்கிறது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்படுவதில்லையா? அரிஸ்டாட்டில் சொன்ன கூற்று: ’உலகம் ஒரு வெங்காயத்தைப் போன்றது. அதில் சூரியன் நடுவில் இருக்கிறான். வெங்காயத் தோல்கள் போல கோள்கள் சூரியனைச் சுற்றி இருக்கின்றன. மேலடுக்கில் பூமி இருக்கிறது. பூமியில் அமர்ந்து கொண்டுதான் இறைவன் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறான்.’ இதைக் கேட்பதற்கு நமக்கு நகைப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால், இந்தப் பொய்யைத்தான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு இவ்வுலகம் நம்பிக்கொண்டிருந்தது. பின்னர் வந்த அறிவியல் ஆராய்ச்சிகளால் இந்தச் செய்தி பொய்யென்று தகர்க்கப்பட்டது. அப்படி ஒவ்வோர் ஆராய்ச்சியும் புதுப்புது செய்திகளை நாளொன்றும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

சென்ற வாரம் ஒரு இந்தி திரைப்படம் பார்த்தேன். மூன்று நண்பர்கள் பேச்சுலர் சுற்றுப்பயணம் செல்வார்கள். அதில் ஒரு நண்பன் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகத் தன்னைக் காட்டிக்கொள்வான். ஆனால், மனதுக்குள் ஒரு பிரச்னையோடு அல்லாடிக்கொண்டிருப்பான். தன்னை வெளிப் பார்வைக்கு மிக மகிழ்ச்சியாகக் காட்டிக்கொள்ளும் பலரும் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்ற கேள்வி முக்கியமானது. இவ்வுலகில் அவன் பிறப்பதற்கு முன்பே அவனுடைய தந்தை அவன் தாயை விட்டுப் பிரிந்து விடுவார். ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாகத் தன் தந்தையை அவனுக்கு சந்திக்க நேரிடுகிறது. கண்களும் மனதும் கலங்க அவன் தன் தந்தையைப் பார்த்துக் கேட்கிறான், ‘உண்மை என்ன? ஏன் எங்களை விட்டுச் சென்றீர்கள்?’. அதற்கு அவன் தந்தை, ’எல்லோருக்கும் அவரவர்களுக்கான சொந்த உண்மை என்று ஒன்று இருக்கிறது’ என்று கூறுகிறார். சிந்தித்துப் பார்த்தால் ஓர் உண்மைத் தன்மையோடு நம் சுய நிலைமையையும் ஏற்று தானே நாம் ஒவ்வொருவருமே உண்மை பேசுகிறோம்.

‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும்’ என்ற வள்ளுவரின் வாக்கு பொய்மையையும் வாய்மை ஆக்கிவிடுகிறதே! போன தலைமுறையில் சரி, தவறுகளின் மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறோம். நம் சரி, தவறுகளை இந்த மில்லினியல் தலைமுறை அவ்வப்போது நகைப்புக்கு உள்ளாக்குகிறது. ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற கருத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை அடிப்பது தவறல்ல என்றது போன தலைமுறை. இன்று அப்படி அடிக்கும் பெற்றோர், ஆசிரியர் மீதும் குற்றவழக்கு சட்டம் பாயும். இது இன்றைய தலைமுறை. தலைமுறைகளுக்கு ஏற்ப சரி, தவறுகள் மாற்றப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன! சரி, தவறுகளால் நிரம்பிய இவ்வுலகில் பிறரை நோக்கியே எந்த நேரமும் கையைச் சுட்டிக்காட்டும் நாம் நம்மை யாரேனும் சுட்டிக் காட்டிவிட்டால் பரிதவிக்கிறோமே, ஏன்?

தன் வாழ்க்கை முழுவதும் மனதளவில்கூட அல்லது எண்ணங்களில்கூட தவறுகளே செய்யாத யோக்கியர்கள் யாரேனும் உண்டா? கொள்ளையராக இருந்த வால்மீகி முனிவர் தானே பின்னாளில் ராமாயணத்தை எழுதினார்!

திருடனாக இருந்த மணியன்பிள்ளை தானே பின்னாளில் நல்லதோர் எழுத்தாளரானார்! இந்த மாற்றத்திற்கு உரிய இடத்தை நாம் பிறருக்குத் தருகிறோமா? சிறைச்சாலைக்குச் சென்று சில மாதங்களோ வருடங்களோ கழித்து வெளிவந்த ஒருவரை நாம் இயல்பாக நடத்துகிறோமோ? குற்றவாளிகளின் சட்டப்படியான தண்டனை காலம் முடிந்த பிறகும் இச்சமூகம் அவர்களைக் குற்றவாளிகளாக மட்டும்தானே பார்க்கிறது! வாழ்நாள் முழுக்கக் குற்ற உணர்வையும் தண்டனையையும் நம் சொல்லாலும் செயலாலும் அவர்களுக்குத் தந்துகொண்டுதானே இருக்கிறோம்! பெரும்பாலும் முன் முடிவுகளோடு தானே மனிதர்களை நெருங்குகிறோம்.

கருத்தியலில் மாறுபட்டவர்களும் நம் நண்பர்களாக இருக்கக்கூடுமே. மற்றவர்களின் எதிர்க் கருத்தையும் மதிக்கத் தெரிந்தவர்கள்தானே உண்மையான நண்பர்கள்! ‘நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதைச் சொல்லும் உன் உரிமையை மரணம் வரை பாதுகாப்பேன்’ என்று மெய்யியலாளர் வால்டேரின் கருத்துகளை நாம் இங்கே நினைவுகூர்தல் நலம்.

அம்மா, அப்பா, ஆசிரியர் என யார் சொல்லையும் தாண்டி நடக்காத, எதையுமே புதிதாக முயற்சிக்காத, எப்போதும் முழுமையாக அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் பிள்ளைகளின் முன்னேற்றத்தைப் பற்றிய பயம் எனக்குள் இருக்கும். ஒன்றை முறியடித்தால்தானே வேறொன்றைக் குறித்துச் சிந்திக்க இயலும். கீழ்படிதல் என்பது நல்ல விஷயம் தான். ஆனால், புதிதாக எதையும் சிந்திக்காத, செயல்படுத்தாத, செயல்படுத்த எண்ணாத மனநிலையை எப்படி முழுமையாகச் சரி என்று சொல்லிவிட முடியும்?

திட்டு வாங்கியே வளரும் சில தம்பிமார்கள் கடைசிக் காலங்களில் தன் அப்பா, அம்மாவைப் பாதுகாக்கும் வீடுகளும் இருக்கத்தானே செய்கின்றன. முழுக்க முழுக்க நல்லவர்கள் என்று இவ்வுலகில் யாரும் இருக்கிறார்களா? சந்தர்ப்பமும் சூழ்நிலையும்கூடச் சில நேரங்களில் மனிதர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். ஒரு வழிப்பறி திருடனுக்கு இருக்கும் நல்ல மனம்கூட சாதாரணமானவர்களுக்கு இருப்பதில்லை என்று கூறும் பல கதைகளும் நம்மிடம் இருக்கின்றன.

சரி, தவறுகளைப் பாலினத்திற்கு ஏற்றபடி மாற்றுவது இன்னும் கொடுமையான ஒன்று. ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் போற்றும் சமமற்ற சமூகத்தில்தானே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்! பெண்ணை வேசி என்ற இச்சமமற்ற சமூகம் ஆணுக்கான பெயரை இன்னமும் உத்தேசிக்கவே இல்லையே. மாற்றம் வராதவரை பழைய சங்கதிகளைப் பேசிப் பேசித்தானே தீர்வு காண வேண்டும்! இச்சமூகத்தின் ஆகச் சிறந்த வசைகள் பெண்களை மையப்படுத்திதானே இன்னமும் பேசப்படுகின்றன? ஆண், பெண்களை விடவும் மூன்றாம் பாலினத்தவர்களின் நிலை மோசமானது. அவர்கள் கல்வி பெறுவதும் வேலைகளில் அமர்த்தும் தற்காலங்களில்தானே. அவர்களைப் பாலியல் குற்றவாளிகளாக, பாலியல் பொம்மைகளாக, இழிவானவர்களாக, எந்த வேலைக்கும் தகுதியற்றவர்களாக பார்த்த சமூகம் சரியான சமூகமா?

மாற்றம் ஒன்றுதான் நிலையானது. சரி, தவறுகள்கூட நிலையானவை அல்ல. சரி, தவறுகளைப் பரிசீலிக்கும், வேறு கோணங்களில் பார்க்கும் மனம் அவசியமானது. எதையும் கேள்விக்குட்படுத்தலாம். சரி, தவறு என்று இச்சமூகத்தில் கோடிட்டவற்றையும் மறுபரிசீலனைச் செய்யலாம். பேசாப் பொருளையும் பேசலாம். கதைப்போமா?

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.