“நான் இந்த வீட்டுப் பெண்” . “நான் இந்த வீட்டில் பிறந்து வளர்ந்த பெண்”. இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது .

என் அம்மா எப்பொழுதும் நான் செய்யும் செயல்களில் உள்ள தவறை சுட்டிக் காண்பித்துக் கொண்டே இருப்பார். “போகிற வீட்டில் அடுத்தவர்கள் உன்னை  குறை சொல்லி விடக்கூடாது”. இது அவரது பயம். எனக்குத் திருமணம் ஆகி, மாமியார் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஆனால் மாதம் ஐந்து நாள் தாய் வீட்டுக்கு வந்து தங்கி, வேலைக்குச் செல்கிறேன்.

என் அண்ணனுக்கு கடந்த மாதம் திருமணம் ஆகிவிட்டது. இந்த முறை அம்மா வீட்டுக்கு வருவது என்றால், என் வேலைகளை நானே செய்ய வேண்டும்; அண்ணி இருப்பதால் நான் இன்னும் அதிக கவனம் எடுத்து நடந்துகொள்ள வேண்டும்; அதிக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கண்டிப்பாக அண்ணன் சொல்லி விட்டார்.

ஒவ்வொரு முறை என் மாமியார் வீட்டில் இருந்து கிளம்பும்போதும், கடைசி நொடி வரை என்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு வருவேன். அம்மா வீட்டிலும் காலை எழுகிறேன், குளிக்க நேரமில்லாமல் சமைக்க உதவி செய்கிறேன், வேலைக்குச் செல்கிறேன். மீண்டும் வீட்டுக்கு வருகிறேன், இரவு சமைக்க உதவி செய்கிறேன். துணி காயப் போடுகிறேன். மடிக்கிறேன். பாத்திரம் துலக்க உதவி செய்கிறேன். ஐந்து நாள்களின் முடிவில் திரும்பி மாமியார் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனும் நிலை வரும்போதெல்லாம், எனக்கு ‘எங்காவது தொலைந்து விடலாமா?’ என்று இருக்கிறது. இது என் மனநிலை.

ஆனால், என் அம்மா சொல்கிறார், “இந்த முறை தான் எனக்கு பிடித்தது போல, நான் எதிர்பார்ப்பது போல நடந்து கொண்டாய். எனக்கு இது ரொம்பவும் பிடித்திருக்கிறது. உன்னை எனக்கு இப்பொழுதுதான் பிடிக்கிறது”. எத்தனையோ நாட்கள் ஏங்கிக் கிடைக்காத ஒரு அரவணைப்பு, ஒரு சில வினாடி என்னை அவர் கட்டிப் பிடித்தபோது எனக்குக் கிடைத்தது. ஆனால் அன்று என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை

அண்ணன் சொன்ன வார்த்தைகளின் பொருள் என்ன? அம்மா சொன்ன வார்த்தைகளுக்குள் இன்னும் என்னென்ன  எதிர்பார்ப்புகள் இருக்கின்றன? யோசிக்கவே தேவையில்லை. அவர்கள் கூற வருவது ஒன்றைத்தான் – ‘உழைக்க வேண்டும்’ என்பதைத்தான். நான் இன்னும் உழைக்க வேண்டும். இன்னும்… இன்னும் அதிகமாக. ஏன்? புரியவில்லை. இவர்கள் யார் எனக்கு கட்டளை இட? தெரியவில்லை. ஒரு வேளை நான் சீக்கிரம் எழவில்லை என்றாலோ, சமைக்க உதவுவது போதவில்லை என்றாலோ, துணி மடிக்க நேரம் ஆனாலோ, வீட்டுக்கு வரத் தாமதம் ஆனாலோ, இவர்கள் என்னை திட்டுவார்களோ? இனி இங்கு வரக்கூடாது என சொல்லி விடுவார்களோ?

இந்த அச்ச உணர்வு ஒரு பெண்ணுக்குள் ஏன் வருகிறது?  மாமியார் வீட்டில் இந்த உணர்வு இருக்கும் என கூறுவதை நாம் ஏன் சகஜமாக்குகிறோம்?இப்பொழுது  நான் அம்மா வீட்டிலும் அல்லவா அந்த அச்சத்தை நான் உணர்கிறேன்? ஒரு பெண் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறாள்?

தனக்குப் பிடித்தவற்றை செய்ய முடியாமல், தனக்கு பிடித்தவர்களைப் பார்த்துப் பேச நேரமில்லாமல், ‘அடுத்தவர்கள் என்ன சொல்லி விடுவார்களோ!’ என பயந்து பயந்து, ஒரு பெண் வாழ வேண்டும் என்பதுதான் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் உள்ள எதிர்பார்ப்பு. இது நியாயமா? இல்லை என்றால், ஏன் நாம் மறுத்து பேசவில்லை? இதற்கு விடை ஒன்றுதான். ‘நான் ஒரு பெண்’. ஆம். இது ஒன்றுதான் காரணம். எப்படி? உங்களுக்குத் தெரியும். சற்று சிந்தித்துப் பாருங்கள். ‘சொல்வதைக் கேள். இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே செல்’ என்பதை நீங்கள் அதிகம் கேட்டு இருக்கிறீர்கள்.

அப்படி இந்த வாக்கியம் உங்களை பயமுறுத்தவில்லை என்றால், வெளியில் தங்கி இருக்கும் இடத்திலோ, வேலை பார்க்கும் இடத்திலோ, பொது இடத்திலோ நீங்கள் தனியாக இருந்த ஒரே காரணத்துக்காக உங்களை தண்டிக்கவோ, மனம் வருந்த வைக்கவோ, ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கும், யாராவது ஒரு மனிதர் அதற்குக் காத்திருப்பார். நம்புங்கள்:

1. நீங்கள் தங்கி இருக்கும் பெண்கள் விடுதியில் ஒரு கைம்பெண்ணோ, விவாகரத்து ஆன பெண்ணோ, குழந்தையோடு கைவிடப் பட்ட பெண்ணோ, மணம் புரியாமல் பிள்ளையை தூக்கிக் கொண்டு வளர்க்க கஷ்டப்படும் பெண்ணோ, தங்கள் அனுபவத்தை உங்களுடன் பகிர்வர்.

2. ஒவ்வொரு முறை உங்களிடம் பேசும் போதும் கழுத்துக்குக் கீழே பார்க்காமல் பேசத் தெரியாத ஒரு ஆண், உங்களுக்கு வேலை தரும் உயர்ந்த நிலையில் இருப்பார்.

3. பேருந்தில் உங்களையோ வேறு ஒரு பெண்ணையோ ஏதாவது ஒரு இடத்தில் தொட தினம் ஒருவர் காத்திருப்பார்.

இவையெல்லாம் அன்றாடம் நிகழும் இயல்பான நிகழ்வுகள். இது போன்ற பல நிகழ்வுகள் காலங்காலமாக ஒரு பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண்ணுக்கு கடத்தப்படுகின்றன. எப்படி தெரியுமா? “உனக்கான ஒரு துணையை அமைத்துக் கொள், குடும்பத்திற்குள் உன்னை பொருத்திக் கொள், இல்லை என்றால் இத்தனையையும் நீ சந்திக்க வேண்டி வரும்…” இப்படித்தான், அல்லது இன்னும் மோசமாக. ஒரு நாள்கூட, ஒரு பெண்கூட, “இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதை எதிர்த்து நிற்பதற்கு நான் உனக்கு சொல்லித் தருகிறேன்” என்று சொல்வதே இல்லை. “அமைதியாக இரு. அடங்கிப்போ, பொறுமை காத்துப் பழகு, மன்னிக்கப் பழகு, மறந்துவிட்டு நகர்ந்து செல்…” இன்னும் என்னவெல்லாமோ.

விளைவு? ஒவ்வொரு பெண்ணும் தன்னை தற்காத்துக்கொள்ள எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பது அவர் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான், பெண், குடும்பம் எனும் சூழலை விட்டுச் செல்ல அச்சம் கொள்கிறாள். இதனால் கணவன், தந்தை, அண்ணன் என ஆண்களிடம் அடங்கி, பின் ஒடுங்கி, இறுதியில் இல்லாமலே மறைந்து போகிறாள். அவளது அச்சம், அவளை விழுங்கி விடுகிறது. ஆனால், அவள் நினைத்தால், அவளால் இந்த அச்சத்தை உடைக்க முடியும். நான் இருப்பது கூட்டுக் குடும்பம். வீட்டு வாசல் படியைத் தாண்டிச் செல்ல எனக்கு இங்கு அனுமதி இல்லை. ஆனால், இதோ, இந்த நொடியில் உங்களோடு இணையும் இந்த தருணத்தில், நான் இன்று வெளியே வந்துவிட்டேன்.

என் கூட்டுக் குடும்பமோ, ஆணாதிக்க மனநிலையோடு வீட்டில் அமர்ந்து கொண்டு, “நாளை எனக்கு ஒரு பதவி கிடைத்தால் பெண்களை கல்லூரிக்கு அனுப்புவதை நிறுத்த கட்டளையிட்டு விடுவேன். படித்தால் திமிர் வந்துவிடும். சம்பாதித்தால் ஆணவத்தில் ஆடுவாள் ஒரு பெண்,” என அறைகூவல் விடுத்துவிட்டு, வீட்டை ஆட்சி செய்யும் எங்கள் குடும்பத்தின் மூத்த தலைவரோ, அவர் எனக்கிட்ட கட்டளைகளோ, எதுவுமே என்னைத் தடுக்கவில்லை.

இது புரட்சி இல்லை. போராட இது போர்க்களம் இல்லை. இது நம் வாழ்க்கை. நாம் நம்மை தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். நமக்காக, நம் குரலுக்காக, என்றும் எப்பொழுதும் ஒரு உலகம் காத்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த உலகம், நாம் நாமாகவே இருக்க ஒரு இடம் தருகிறது. தோழிகளே, எழுந்து வாருங்கள். வாழ்க்கை நமக்காகக் காத்திருக்கிறது.

படைப்பாளர்

புவி