- ’அம்மா’ என்றாலே பிரத்யேகமாகச் சில குணங்கள் இருக்கும். அவற்றைப் பற்றி இங்கே சொல்லப் போவதில்லை.
வசதியான குடும்பத்தில் பிறந்த பதினோரு குழந்தைகளில் எஞ்சிய நால்வரில் ஒருவர் அம்மா. பத்து வயதிலேயே தாயை இழந்ததால், பள்ளிப் படிப்போடு வீட்டைக் கவனிக்க வேண்டிய சூழல். அப்பாவிடம் நெருக்கம் இல்லை. மிகத் தயக்கத்துடன் தான் அப்பாவிடம் பேசுவார். அவருக்குச் சரியாகக் கேட்காமல், என்ன என்று கேட்டால் அவ்வளவுதான். பயத்தில் பேச்சு வராது. இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் கண்டிப்பானவர் அல்ல. படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எப்போதும் இருப்பதால், வகுப்பறையில் இருப்பதுபோல இப்போதும் கனவு வரும் என்பார் அம்மா.
பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்களுக்குப் பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாது. அவர்களின் கணவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்துவந்தனர். கணவர்கள் எழுதும் கடிதங்களைப் படித்துக் காட்டுவதும் மனைவிகளின் பதில் கடிதங்களை எழுவதும் அம்மாவின் பொறுப்பு.
சிலர் அம்மாவிடம் வந்து, ‘அவ புருஷன் என்ன எழுதியிருக்கார்? இவ என்ன பதில் அனுப்பியிருக்கா?’ என்றெல்லாம் கேட்பார்களாம்.
‘படித்தேன், எழுதினேன். எதையும் நினைவில் வச்சுக்கல. வேணும்னா உங்களுக்கு வந்த கடிதத்தையும் நீங்க எழுதிய பதிலையும் யாராவது கேட்டால் சொல்லிடவா?’ என்று கேட்பார் அம்மா. அதற்குப் பிறகு யாரும் அடுத்தவர்களைப் பற்றி வாய் திறப்பார்களா என்ன!
19 வயதில் திருமணம். உறவினரான அப்பாவுக்கு ஏற்கெனவே ஒரு காதல் இருந்து, அது கைகூடவில்லை என்பதெல்லாம் அம்மாவுக்கும் தெரியும். சிறிய நகரத்திலிருந்து கிராமத்துக்குச் சென்றார். மின்சாரம் கிடையாது. கழிவறை கிடையாது. தண்ணீர் எடுப்பதற்கு கம்மாய், ஊருணிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனாலும் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டார் அம்மா.
திருமணத்துக்கு முன்பு அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள், ‘எப்பதான் ஒண்ணாந்தேதி வருமோ?’ என்று சம்பள நாளுக்காகப் புலம்பும்போது, ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று யோசிப்பாராம். கோவையில் தனிக்குடித்தனம் செய்யும்போது தான் தனக்கும், ‘ஒண்ணாந்தேதி’ பற்றிப் புலம்பும் சூழல் வந்ததாகச் சொல்வார்.
கிராமத்தில் கோயில் திருவிழா. ஊரே கோலாகலமாக இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிடம் அம்பாள் ஆச்சி (அப்பாவின் அத்தை), ”அந்தப் பெண்ணைத் தொடாதே’’ என்று சொன்னார்.
அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் கேட்டார்.
“கீழ்சாதி. அவளைத் தொட்டுட்டு என்னைத் தொட்டுடாதே” என்றார் ஆச்சி.
உடனே அம்மா இடது கையால் அந்தப் பெண்ணைத் தொட்டுவிட்டு, வலது கையால் ஆச்சியைத் தொட்டுவிட்டார். அவ்வளவுதான். ஆடித் தீர்த்துவிட்டார் ஆச்சி.
“’எல்லோரும் மனிதர்கள்தானே?” என்று கேட்ட அம்மாவின் குரல் அங்கு எடுபடவேயில்லை.
அன்று முதல் அம்பா ஆச்சிக்கும் அம்மாவுக்குமான அம்மா-மகள் உறவு முறிந்துவிட்டது. தாய் இல்லாததால் 3 பிரசவங்களை எங்கள் அப்பத்தா தான் பார்த்தார். கடைசிப் பிரசவத்துக்கு அப்பத்தா இல்லை. ஊரில் இருந்த அம்பா ஆச்சியை உதவிக்கு வரச் சொன்னபோது உறுதியாக மறுத்துவிட்டார்.
சில ஆண்டுகளில் தாத்தாவும் இறந்து போக, வேறு வழியின்றி எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் அம்பா ஆச்சி. பிரசவத்துக்குக்கூட உதவவில்லையே என்ற குற்றவுணர்வுடன் இருந்தவரை, பழைய விஷயங்களைப் பேசாமல் இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார் அம்மா. மீண்டும் இருவருக்கும் அன்பு துளிர்த்துவிட்டது. ‘மகளே விஜயலட்சுமி’ என்று முழுப் பெயர் சொல்லித்தான் அழைப்பார். அம்பா ஆச்சி படுக்கையில் கிடந்தபோது எல்லாவற்றையும் பொறுமையாகச் செய்தார் அம்மா.
இதே போல் இன்னொரு சம்பவம் மானாமதுரையில் நடந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் துப்புரவு தொழிலாளர் முருகன் வருவார். அவரைக் குழந்தை முதல் பெரியவர் வரை ‘வா முருகா, போ முருகா’ என்றுதான் அழைப்பார்கள். அவர்களைப் பார்த்து ’முருகா’ என்று அக்கா சொல்லிவிட்டாள். அடுத்த நொடி அவள் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. காரணம் புரியாமல் அக்கா அழுதாள்.
“உன் வயசு என்ன, முருகன் வயசு என்ன? பெரியவங்களை இப்படித்தான் கூப்பிடணும்னு சொல்லிக் கொடுத்திருக்கேனா?” என்றார் அம்மா கோபமாக.
அக்கா அழுதுகொண்டே, “எல்லோரும் அப்படித்தான் கூப்பிடறாங்க. என்னை மட்டும் ஏன் அடிக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“எல்லோரும் கூப்பிட்டாலும் என் பிள்ளைகள் கூப்பிடக் கூடாது” என்றார் அம்மா.
’’என்னக்கா, பிள்ளைகள் கூப்பிடத்தானே பேர் இருக்கு?” என்றார் முருகன்.
”எல்லோரும் மனுசங்கதானே?” என்றார் அம்மா.
அன்று முதல் அவரை நாங்கள் நால்வர் மட்டும் ’மாமா’ என்றுதான் அழைப்போம். இப்படித்தான் மனிதர்களைப் பாகுபாடின்றிப் பார்க்கக் கற்றுக்கொண்டோம்.
எங்கள் வீட்டில் ஒரு பழைய ஆல்பம் உண்டு. அதில் முதல் பக்கத்தில் அழகாக ஒரு பெண் சிரித்துக்கொண்டிருப்பார். அவரை நாங்கள் பார்த்ததில்லை. சின்ன வயதில் கேட்டபோது, ’பெரியம்மா’ என்று சொல்லிவிட்டார் அம்மா.
நாங்களும் அந்த ஆல்பத்தைப் பார்ப்பவர்கள் யார் என்று கேட்டாலும் அவர் பெயர் சொல்லி, பெரியம்மா என்போம். விவரம் தெரிந்த பிறகு, “இந்தப் பெரியம்மாவைப் பார்த்ததே இல்லையே, எங்கே இருக்கிறார்?” என்று கேட்டபோது, “உங்க அப்பாவோட கேர்ள் பிரெண்ட். கல்யாணம் பண்ண முடியாமல் போயிருச்சு” என்றும் எங்கோ இருந்த அந்தப் போட்டோவை எடுத்து, தான்தான் முதல் பக்கத்தில் வைத்ததாகவும் சொன்னார் அம்மா. எங்களில் ஒருவருக்கு அந்தப் பெரியம்மாவின் பெயரையும் சூட்டியிருப்பதும் அப்போதுதான் புரிந்தது. அம்மாவை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
அந்தக் காலத்தில் 4, 5 குழந்தைகள் பெற்றுக்கொள்வது ஃபேஷனாக இருந்தது. எங்கள் உறவினர்கள் பலர் வீடுகளில் தாராளமாகக் குழந்தைகள் இருந்தார்கள். ஆனால், எங்கள் வீட்டில் மட்டும்தான் நால்வரும் பெண் குழந்தைகள். வீட்டுக்கு வருபவர்கள் எங்களிடமே, “நாலும் பொண்ணா? எப்படித்தான் கரை சேர்க்கப் போறாங்களோ?” என்று வருத்தப்படுவார்கள். அம்மாவும் அப்பாவும் ‘எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம்’ என்று சொன்னதே கிடையாது.
அப்பாவிடம் ஆண் குழந்தைகள்மீது ஆர்வமும் தங்களுக்கு இல்லாதது குறித்த ஏக்கமும் சில தருணங்களில் வெளிப்பட்டதுண்டு. ஆனால், அம்மா ஒரு நாளும் தங்களுக்கு ஒரு மகன் இல்லையே என்று சொல்லியோ வருத்தப்பட்டோ பார்த்ததில்லை.
அம்மாவுக்குக் கழுத்துவலி, தலை சுற்றல் அடிக்கடி வரும். அதனால் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வோம். ஆனால், பெண் குழந்தை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்தக் கருத்தையும் எங்கள் மீது அவர் திணித்ததில்லை. அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், எங்களிடம் பக்தியை வளர்த்துவிட்டதில்லை. பிற்காலத்தில் எங்களில் சிலர் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக மாறியபோதும் அதற்காக வருத்தப்பட்டதில்லை.
நாங்கள் கல்லூரிக்குச் செல்லும் வரை அம்மாதான் தலை பின்னிவிடுவார். தினமும் காலை டிபன், மதிய உணவு தயார் செய்துவிட்டு, 8 ஜடைகளையும் பின்னி, வீட்டில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்களையும் தலையில் சூட்டிதான் அனுப்பி வைப்பார்.
ஒரு முறை பள்ளியில் கட்டணம் செலுத்திவிட்டு, 75 ரூபாய் வைத்திருந்தேன். மாலையில் அந்தப் பணத்தைக் காணவில்லை. அழுகை வந்துவிட்டது. அதைப் பார்த்து ஆசிரியர், ஒவ்வொரு மாணவியிடமும் 2 ரூபாயை வாங்கி, 75 ரூபாயைக் கொடுத்துவிட்டார். வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னபோது, அடுத்தவர் பணம் வேண்டாம் என்று திருப்பிக் கொடுக்கச் சொல்லிவிட்டார். மறுநாள் ஆசிரியர் அம்மாவை வெகுவாகப் பாராட்டினார்.
படிக்கும் காலத்தில் நாங்கள் நால்வரும் அறிவியல் இயக்கம், மாணவர் இயக்கம் போன்றவற்றில் தீவிரமாகச் செயல்பட்டோம். கூட்டம், மாநாடு, உண்டியல் குலுக்கல் என்று ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு அலைந்தபோது ஒருநாளும் தடுத்ததில்லை. இயக்கத் தேவைகளுக்காகப் பணம் கேட்டாலும் கொடுத்துவிடுவார்.
பெண் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்கள், தங்கள் சகோதரர் மகன்களுக்குக் கல்யாணம் செய்ய நினைப்பார்கள். 4 பெண்களைப் பெற்றும் அம்மா ஒருநாளும் அப்படிச் சொன்னதில்லை. திருமணம் மகள்களின் விருப்பம் என்ற புரிதலுடன் இருந்தார்.
பெரும்பாலும் அம்மாக்கள் எல்லாம் அடுத்தவர் வீட்டுக் காதலை ஆதரிப்பார்கள், தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காதல் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு அம்மாவும் அவர் தோழிகளும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
“பொண்ணுங்களை வச்சிட்டு காதலை சப்போர்ட் பண்ணாதே விஜயா. அப்புறம் நம்ம வீட்டிலும் காதல்னு வந்து நிக்குங்க” என்பார்கள் தோழிகள்.
“படத்துல காதலை ஆதரிக்கிற நீங்க, வாழ்க்கையில காதலை எதிர்க்கிறது நியாயமா?” என்று கேட்பார் அம்மா.
வெறும் பேச்சோடு அல்லாமல், அதை வாழ்க்கையிலும் செயல்படுத்திக் காட்டினார். எங்கள் அக்கா அறிவியல் இயக்கத்தில் முழு நேர ஊழியராக இருந்த ஒருவரைக் காதலித்தாள். அம்மாவிடம் சொன்ன போது, ”நாங்க வாழ்க்கை ஆரம்பிச்சப்ப வறுமையால் கஷ்டப்பட்டோம். ‘இளமையில் வறுமை கொடுமை’. சமாளிக்க முடியுமென்றால் பண்ணிக்க” என்று மட்டுமே சொன்னார் அம்மா.
மானாமதுரையில் பூக்காரம்மா, தஞ்சாவூரில் பழம் விற்கும் மயிலம்மா போன்றவர்களிடம் அன்பாக இருப்பார். தினமும் மயிலம்மாவுக்காக மோர், எலுமிச்சை ஜூஸ் ஏதாவது வைத்திருப்பார். வெயிலில் களைப்போடு வரும் மயிலம்மா, திண்ணையில் அமர்ந்து மோரைக் குடிப்பார். கதை பேசிக்கொண்டே வெற்றிலை போடுவார். நாங்கள் பழம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இது தினமும் நடக்கும்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கும். ஆனால், எங்களுக்குத் தெரிந்து இதுவரை அவர்கள் சண்டை போட்டோ, கோபமாகப் பேசியோ பார்த்ததே இல்லை. ‘என் வீட்டு ஆட்கள், உன் வீட்டு ஆட்கள்’ என்று சொல்லியும் கேள்விப்பட்டதில்லை. அம்மா பக்கத்து உறவினர்களாக இருந்தாலும் அப்பா பக்கத்து உறவினர்களாக இருந்தாலும் எல்லோரையும் சமமாக நடத்துவார். விதவிதமாகச் சமைப்பார். ஜாலியாகப் பேசுவார். அதனால் எங்கள் வீட்டுக்கு வந்து தங்குவதற்குப் பெரியவர்களும் சிறியவர்களும் ஆர்வமாக இருப்பார்கள்.
‘அடாது மழை பெய்தாலும் விஜயா வீட்டுக்கு விடாது விருந்தாளி’ என்பார் ஞானம்பாள் பாட்டி. மானாமதுரையில் தினமும் யாராவது வந்துகொண்டேயிருப்பார்கள், சமைத்துப் போட்டுக்கொண்டேயிருப்பார்.
தஞ்சாவூர் வந்ததும் விருந்தினருக்குப் பதில் தோழர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். நேரத்துக்கு ஏற்ப காபி, டீ, ஜூஸ், டிபன், ஸ்நாக்ஸ் என்று சளைக்காமல் கொடுத்துக்கொண்டே இருப்பார். மாணவர் சங்கத்தைச் சேர்ந்த தோழர்கள் சாப்பிட பணம் இல்லையென்றால் எங்கள் வீட்டுக்குதான் வருவார்கள். அவர்களுக்குக் காபி போடப் போனால், ‘பசியோட இருப்பாங்க போலருக்கு, சாப்பிடறீங்களான்னு கேட்டுட்டு, டிபன் கொடுங்க’ என்பார் அம்மா.
நிருபன் சக்கரவர்த்தி, ஈ.கே. நாயனார் உட்பட பல பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் அம்மாவின் சமையலை ருசித்திருக்கிறார்கள். அது குறித்தெல்லாம் அம்மாவுக்கு எந்தவிதப் பெருமிதமும் இருந்ததில்லை.
பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் முக்கியம் என்று கருதும் அம்மாவுக்குத் தன்னால் சம்பாதிக்க முடியவில்லையே என்று வருத்தம் இருந்தது. “அஞ்சு பைசா என்னால சம்பாதிக்க முடியாது’ என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருந்தார்.
60 வயதில் சமையல் புத்தகங்கள் எழுதும் வாய்ப்பு அம்மாவுக்குக் கிடைத்தது. ஒரே நேரத்தில் 4 புத்தகங்கள் வெளிவந்தன. மூன்று இலக்கங்களில் முதல் ராயல்டிக்கான செக் அம்மா கைக்கு வந்தபோது, அவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கலந்த உணர்ச்சிகளை விவரிக்க முடியவில்லை. மேலும் சில புத்தகங்கள் எழுதினார். சில வருடங்களுக்கு ராயல்டியும் பெற்றுக்கொண்டார்.
பணம் சேர்த்து வைப்பது, நகை வாங்குவது, புடவை வாங்குவது போன்ற பழக்கங்கள் எல்லாம் அம்மாவிடம் கிடையாது. அதனால் எங்களுக்கும் அந்தப் பழக்கம் கிடையாது.
அம்மாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அரசியல் உட்பட நிறையப் படிப்பார். ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பார்.
நீங்களும் உங்கள் அம்மாவைப் பற்றி ‘என் அம்மா’ பகுதிக்கு எழுதலாம். அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்: herstories.xyz@gmail.com
வணக்கம். அப்பாவின் காதலியும், என் அம்மாவும், சுவையாக , சூப்பராக மகிழ்வாக அமைந்த பதிவு. வாழ்த்துகள் மகள்களே.. அம்மாவின் அன்பை, பண்பைப் பதிவிட இடம் ஏற்படுத்திக் கொடுத்த Her Stories க்கு ஏராளமான நன்றிகள் தனியாக போடாமல் கூட்டுப்பதிவாக காட்டுகிறீர்கள். நானும் அம்மாவின் சமையல் சுவையையும், எங்கள் மீது காட்டும் அன்பையும் பரிபூரணமாக சுவைத்து இருக்கிறேன். வாழ்த்துகளும், அன்பும், நன்றியும். தொடரட்டும், உங்களின் எழுத்துப் பணி.
இவர் நிச்சயமாக ஒரு வியக்க வைக்கும் முன்மாதிரி. இந்த பதிவும் கூட. வாழ்த்துக்கள்.
அம்மாவின் அன்பும், அரவணைப்பும், முற்போக்கு சிந்தனையும் வியக்கவைக்கிறது.அம்மா பற்றி கூட்டாக எழுதிய மூவருக்கும் வாழ்த்துகள்.