மின் வசதி இல்லாத ஒரு கிராமத்தில், இரவு பத்து மணிக்கு மேல் ஒரு பெண் 5 பெண்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிந்தார். அவரைச் சந்திப்பதற்காக என்னை அழைத்துச் சென்றவர் நீலா.

பேராவூரணிக்கு அருகில் வீரையங்கோட்டைதான் நீலாவின் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். 19 வயதில் சத்துணவில் பணியாற்றும் ரெங்கசாமியுடன் திருமணம். 1991இல் புதுக்கோட்டையில் அறிவொளி இயக்கம் ஆரம்பித்தபோது, தன்னை அதில் இணைத்துக்கொண்டார் நீலா.

அறிவொளியின் மூலம் முத்தம்மா என்பவர் கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டார். அஞ்சல் துறையிலிருந்து அவருக்குப் பணம் வந்தபோது, கைநாட்டு வைக்கச் சொன்னார் போஸ்ட்மேன். எனக்குப் படிக்கத் தெரியும், கையெழுத்துப் போடுவேன் என்றார் முத்தம்மா. ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விஷயம் நீலாவைப் பாதித்தது. ’ஊர் கூடி’ பத்திரிகையில் ஒரு கவிதை எழுதினார். அது பரபரப்பாகப் பேசப்பட்டது.

அன்றைய புதுக்கோட்டை மாவாட்ட ஆட்சியர் ஷீலாராணி சுங்கத், நீலாவைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். தான் செல்லும் இடங்களில் எல்லாம், ‘நீலா இருக்கிறாரா?’ என்று கேட்டார். நேரில் சந்தித்தபோது நீலாவை வெகுவாகப் பாராட்டினார்.

கவிஞர் முத்துநிலவன் மூலம் ஆலங்குடி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிமுகம் நீலாவுக்குக் கிடைத்தது. அங்கு இருந்த 150 பேரில் 75 பேர் பெண்கள். பெரும்பாலும் பாடகர்கள். கலைநிகழ்ச்சிகள் எல்லாம் நடத்துவார்கள். நீலாவும் நன்றாகப் பாடுவார். 12 ஆண்டுகள் செயலர், தலைவர் எனப் பலப் பொறுப்புகளில் திறமையாகச் செயல்பட்டார் நீலா.

தீக்கதிர், இளைஞர் முழக்கம், ஆனந்த விகடனில் கதைகளையும் கவிதைகளையும் எழுதினர். விகடனில் 15 கவிதைகள் வெளிவந்தன. அவற்றில் 2 முத்திரைக் கவிதைகளாக வெளிவந்தன. இதன் மூலம் வெளியுலகுக்கு அறிமுகமானார் நீலா.

அறிவியல் இயக்கத்தின் சமம் உபகுழு புதுக்கோட்டையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் மாவட்டம் முழுவதும் பயணித்தார் நீலா. பாடல் மூலம் நீலா புதுக்கோட்டையில் பிரபலமானார். நீலாவின் எழுத்தில் ’பாமா தரிசனம்’ என்ற முதல் புத்தகம் வெளிவந்தது.

அன்னவாசலில் சாதிக் கொடுமை அதிகமாக இருந்தது. சாதி விட்டு சாதி திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடுவார்கள். மார்க்சிஸ்ட் கட்சி மூலம் இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்தியதில் பெரும்பங்கு நீலாவுக்கு உண்டு.

“புதுக்கோட்டையில் கலைக்குழுவோடு செல்லும்போது ஒரு கிராமத்தில் தங்கியிருந்தோம். மழை பெய்தது. அங்கு நடந்த ‘பொட்டல் பிரசவம்’ பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தார். அவரைப் பொட்டலில் விட்டுவிட்டார்கள். பெண்கள் தூரத்தில் நின்று, பார்த்துக்கொண்டிருந்தார்கள். யாரும் அவர் அருகில் நெருங்கவில்லை. வயதான பெண் ஒருவர் தொரட்டியில் கத்தியைக் கட்டிக்கொண்டு நின்றார். பிரசவ வலியில் துடிக்கும் பெண் நிற்கக் கூடாது. படுக்கக் கூடாது. குத்த வச்சுதான் உட்கார வேண்டும். குழந்தை பிறந்தது. தொப்புள்கொடியை தொரட்டியால் அறுத்துவிட்டார் அந்த அம்மா.”

” இந்தக் கொடுமையை நான் வெளியுலகத்துக்குக் கொண்டு வந்தேன். நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியத்தைச் சொன்னேன். ஊர்க்காரர்கள் என் மீது கோபமாகிவிட்டார்கள். சில மாதங்களுக்குப் பிறகு அருட்செல்வி என்பவருக்குப் பிரசவ வலி வந்தபோது என்னை அழைத்தார்கள். மருத்துவமனையில் பிரசவம் பார்த்தோம். அந்தக் குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துவிட்டார்கள். பத்திரிகைகளில் எழுதினேன். கலெக்டர் இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்தினார்” என்று நினைவுகூர்கிறார் நீலா.

விராலிமலையில் தேவதாசிகள் அதிகம். எயிட்ஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்றார் நீலா. தேவதாசிப் பெண்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு ஜெம் கட்டிங் தொழிலை ஏற்பாடு செய்துகொடுத்தார் கலெக்டர்.

அறிவியல் இயக்கத்தில் செயலர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார் நீலா. இப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார். கவிஞர், போராட்டக்காரராக இருந்த நீலா, இப்போது சென்னையில் சிறுதானிய உணவகம் ஒன்றை மகனுடன் சேர்ந்து நடத்திவருகிறார்.

“வாழ்க்கை முழுவதுமே பொருளாதாரத்துக்கான போராட்டம் இருந்துகொண்டேதானிருக்கிறது. அதையும் மீறி, சமுதாயத்துக்கும் என்னால் ஏதாவது செய்ய முடிந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது மனநிறைவாக இருக்கிறது” என்கிறார் நீலா.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.