நம் குழந்தைகளுக்கு அவரவர்க்கென ஒரு வாழ்வு அமையப் பெற்று அவ்வாழ்வில் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பதைக் கண்ணாறக் காணவேண்டும் என்பதே குடும்பமாக வாழும் நம் ஒவ்வொருவரின் இயல்பான விருப்பமாகும். இப்படி நம் குழந்தைகளின் வாழ்வை பேரன் பேத்திகள் சூழ நாம் ரசித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் நாம் அழையாத விருந்தாளியாக மற்றொன்றும் நம் வாழ்வில் மெது மெதுவாக நுழைந்துவிடுகிறது.

மெதுவாக நுழைந்து கொண்டிருக்கும்வரை நம்மால் பொருட்படுத்தப்படாமல் இருந்து, நன்றாக அமர்ந்து கொண்டவுடன் அதைத் தவிர்க்கவே இயலாமல் போய்விடும் முதுமைதானது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் 2023ஆம் ஆண்டின் அறிக்கை ஒன்று, 2050ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை முப்பத்து நான்கு கோடியே எழுபதுலட்சம் ஆகிவிடும் எனச் சொல்கிறது.

அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 36 சதவீதமான இந்த எண்ணிக்கை பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். இந்தப் புள்ளி விவரம் இப்போது நமக்கு வெறும் எண்களாகத் தெரியலாம்.

ஆனால் நம் பெற்றோர், நாம் நன்கறிந்த நம் நண்பர்களின் பெற்றோர், நாம் விரும்பி உறவாடிய நம் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா எல்லோருமே அவ்வெண்களில் அடங்குவர் என்பதையும் இன்னும் சில ஆண்டுகளில் நாமும் அதில் சேர்வோம் என்பதையும் எண்ணும்போது, வந்து இறங்கிவிட்டால் திரும்பிப் போகாத இம்முதுமை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

எந்த வயதிலும் கண்ணியமாக வாழ வேண்டும் என்பதே நம் எல்லோருடைய எளிய‌ விருப்பம். படித்து, பணிபுரிந்து, வருமானம் ஈட்டி, குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய பிறகு ஆசைப்பட்டவாறு அக்கடாவென்று அமர்ந்து முதுமையை கண்ணியமாகக் கழிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடுகிறதா எனில் இல்லையென்பதே வருத்தமான பதிலாக அமைகிறது. காலமெல்லாம் உழைத்து ஏதோ ஒருவழியாகப் பிள்ளைகளை ஆளாக்கிய பிறகு, உழைக்கவும் உடலில் தெம்பின்றி உட்கார்ந்து சாப்பிடும் வகையுமின்றி அவர்களுக்கென சொத்தோ வருமானமோ ஓய்வூதியமோ எதுவுமே அற்ற நிலையில் நம் நாட்டில் நாற்பது சதவீத முதியோர்கள் உள்ளனர் என்கிறது புள்ளி விவரம்.

இத்தகையவர்களின் பிள்ளைகளும் ஒண்டுக் குடித்தனத்தில் உழன்று கொண்டிருப்பவர்களேயன்றி ஓஹோவென்ற நிலையில் இருப்பவர்களில்லை. இப்படி மிக வறிய பொருளாதார நிலையிலிருப்பவர்களின் தலையாய பிரச்னை இடவசதிதான். புறாக் கூண்டு போன்ற அடைப்பிற்குள் குடும்பமாக ஒருவாய்க் கூழைக் குடித்துக்கொண்டுகூட வாழ்ந்துவிடலாம் என்றிருக்கையில், முதுமை தரும் தள்ளாமையோ, படுக்கையில் வீழ்தலோ சேர்ந்துகொள்ளும் எனில், அவர்களின் சிரமமும் பாடும் ஐயோவென்றாகிவிடும். இப்படி எல்லாருக்கும் பாரமாகிவிட்டோமே என்ற கழிவிரக்கமும் பிழைப்பைப் பார்ப்பதா பிழைத்துக் கிடக்கும் உயிரைப் பார்ப்பதா என்ற சலிப்பும் சேர்கையில், மனிதர் இயல்புகள் கந்தலாகிப் போகின்றன.

இவர்களின் நிலைமைக்குச் சற்றேனும் பரவாயில்லை எனக் கூறுமாறு அமைகிறார்கள் அடுத்த நிலையிலுள்ள முதியவர்கள். இவர்களைப் பற்றிச் சொல்லும்போது இன்னொன்றையும் சொல்லத் தோன்றுகிறது. அதாவது இன்றைய பெற்றோர் தம்முடைய முதுமைக்கென்றும் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் இப்படி முதுமைக் காலத்துக்கெனச் சேமிப்பது எல்லோருக்கும் சாத்தியமா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். நடுத்தரப் பொருளாதார நிலையில் இருப்பவர்கள் தங்களின் இன்றைய பொறுப்புகளையே பல்லைக் கடித்துக் கொண்டு நிறைவேற்றினாலே தவிர கடனாளியாகிப் போகும் வாய்ப்புதான் நிறைய உண்டு. குழந்தைகளின் கல்வி குடும்பத்தின் மருத்துவச் செலவுகள் மக்களின் திருமணம் போன்ற பெரும் பொறுப்புகள் எல்லாவற்றையும் கடனோ உடனோ பட்டு உருண்டு புரண்டு செய்து முடிக்கும் நிலையில்தான் நகர்கிறது விலைவாசியும் காலமும்.

இன்றைக்கு ஒரு பொழுதைத் தள்ளி விட்டாலே அப்பாடா என மூச்சு விடுபவர்கள் நாளைய முதுமையை எங்கேயென்று மனதில் கொள்வார்கள்? அவர்களின் தலைக்கு மேலிருந்த ஒரு சிறுகூரையைத் தவிர அவர்களிடம் சொத்தென வேறொன்றுமிருந்திருக்காது. மக்களின் கல்வி, மகளின் திருமணம் என்ற அடித்துப் பிடுங்கும் செலவுகளின் போதெல்லாம் தலைகீழாய் நின்று எப்பாடுபட்டோ அக் கூரையைத் தம் கைவிட்டுப் போய்விடாமல் காத்துக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய இறுதிக்காலத்தில் தம் பிள்ளைகளிடம் அதைப் பங்கிட்டுவிட்டு, அவர்களின் ஆதரவில் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க எண்ணியிருப்பவர்கள் இவர்கள். பிள்ளைகள் அவர்களுடைய வாய்க்கும் வயிற்றுக்குமான போராட்டங்களுக்கிடையிலும், பெற்றோரின் வீட்டைப் பெற்றிருப்பதால் அவர்களுக்கேயுரிய மனசாட்சியுடனோ அல்லது சமூகத்தின் சொல்லுக்காகவோ பெற்றோரைப் பராமரித்து வருகிறார்கள்.

இதில் இன்னொன்றுமுள்ளது. முதிய பெற்றோர் இருவரையும் வீட்டில் வைத்து கவனித்துக் கொள்ளும்போது குடும்பத்தினர் மீதான ஒருவரின் மனத்தாங்கலை மற்றொருவர் பேசிச் சரிசெய்து விடுவார். பிள்ளைகளும் மருமக்களும் பேரர்களும் அவரவர்க்கான ஆயிரம் அவசரங்களில் பறந்து கொண்டிருக்கும்போது, முதியவர் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்கான அவகாசங்களை அளித்துக் கொண்டு ஆறுதலடைந்து கொள்வார்கள். ஆனால் அவர்களை அப்படியே இருக்க விட்டுவிடும் இயல்பு காலத்துக்கில்லையே.

தன் போக்கில் கண்டிப்பான காலம், இருவரில் ஒருவரைத் தனியாக்கி விடும்போது அத் தனிமையை எதிர்கொள்வதில் முதிய தாய்க்கும் தந்தைக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. தன் நீண்ட காலத்துணையை இழந்திருக்கும் தாய்க்கு, பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடு ஒன்றிக் கொள்வதும் அவர்களுடைய அன்றாடங்களில் பங்குகொண்டு தன் தனிமையைச் சற்று மறந்திருப்பதும் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசிச் சுமையைத் தணித்துக் கொள்வதும் இயல்பான விஷயங்கள். அதனால் அத்தாயின் வாழ்வும் அழுத்தமின்றி நகர்கிறது. ஆனால் துணையை இழந்துவிட்ட தந்தையின் பாடு அப்படியல்ல. வாழ்வில் வந்து கவிந்த வெறுமையை விரட்டும் திறன் அவருக்கு இருப்பதில்லை. பிள்ளைகளிடமோ மருமக்களிடமோ ஓரளவுக்கு மேல் மனம் திறக்க இயல்வதில்லை. பேரப்பிள்ளைகளிடம் மட்டுமே நெருக்கமுண்டு. அப்போதும் இளையவர்களான அவர்கள் தம் இயல்புப்படி ஓடிக் கொண்டிருப்பதைத் தன் மேலுள்ள அக்கறையின்மையோ என எண்ணி மருகுதலும் உண்டு. இதன் விளைவு இன்னும் எத்தனை நாள் இப்படித் தலையில் எழுதியிருக்கிறதோ என்ற சலிப்பையும் இறுக்கத்தையும் கொண்டு சேர்த்து விடுகிறது அவரிடத்தில்.

வீட்டில் அவருடனிருந்து அத் திருப்தியின்மையை எதிர்கொள்பவர்களோ இதற்குமேல் என்ன செய்வது எப்படிக் கவனித்துக் கொள்வது என்று மலைக்கிறார்கள். இவை எல்லாவற்றோடும் பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பிலிருக்கும் மகளோ மருமகளோ பணிபுரிபவர்களாகவும் இருக்க நேர்கையில் களைப்பும் கைகோர்த்துக் கொள்கிறது. இப்படியாக நெருங்கியும் விலகியும் வளைந்து வளைந்து செல்கிறது அவர்களின் வாழ்வு .

இவை எல்லாமே வசதியாக வாழ்வதற்குரிய பொருளாதார நிலையை எட்டுவதின் முதற்படியில் உள்ளவர்களின் நிலைமை.‌ இதுபோக பொருளாதாரத்தில் சற்றேனும் உயரத்தை எட்டிவிட்டவர்கள், உச்சத்தில் ஏறியிருப்பவர்கள் அனைவரின் பெற்றோருக்கும் நிலவுவது ஒரு பொதுவான சூழல்தான். இவர்களின் பிள்ளைகள் நன்கு படித்து முன்னேறி வெளிநாடுகளிலோ இங்கோ கைநிறைய வருமானம் ஈட்டுகிறவர்களாக இருப்பார்கள். அல்லது இவர்களே ஓரளவு நல்ல வருமானம் பெற்றுப் பணி புரிந்து பின்னர் ஓய்வூதியம் பெறுகிறவர்களாகவோ தமக்கான செலவுகளுக்குப் பிள்ளைகளை எதிர்பார்த்திருக்க வேண்டிய தேவை இல்லாதவர்களாகவோ இருப்பார்கள் . பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பின், பெற்றோர் இங்கிருக்கும் பிள்ளைகளுடனோ தனியாகவோ வாழ்ந்து கொள்கிறார்கள். அன்றாடத் தேவைகளில் உதவி புரிவதற்கு பணியாளர்களை வைத்துக் கொள்வது, அவ்வப்போது பிள்ளைகளிருக்கும் வெளிநாட்டுக்குச் சென்று வருவது என அவர்களுடைய வாழ்வு சற்றுச் சிரமமில்லாமல் நகர்ந்துவிடுவதுபோலத் தோன்றினாலும், அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே.

இன்றைய நவீன மருத்துவ வசதிகளும் அவ்வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இன்று எளிதாகியிருப்பதும் பொருளாதார பலம் உடையவர்களின் வாழ்வை எழுபது எழுபத்தைந்து வயது வரை சிரமமின்றி நகர்த்திச் செல்லத் துணைபுரிந்துவிடுகின்றன. அதற்குமேல் வரும் ஆண்டுகள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள இயலாத் தள்ளாட்டத்தையும் இயலாமையையும் கொண்டு வரும்போது, வாழ்க்கைச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. சரியான வேளைகளில் உணவையும் மருந்தையும் எடுத்துக் கொள்ளச் செய்வது, குளிக்க, கழிவறைக்குச் செல்ல உதவுவது, மருத்துவப் பரிசோதனை முதலியவற்றுக்குத் துணையாகச் செல்வது என அவர்களின் கூடவே இருந்து கவனித்துக் கொள்வதற்கு உறவுகளோ நம்பிக்கைக்குரிய உதவியாளர்களோ தேவை என்ற கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

பணம் இருந்தால் வாழ்க்கையைச் சிக்கல்கள் இன்றி இலகுவாக நகர்த்திவிடமுடியும் என்பது பொதுவான எண்ணமாயினும் அடிப்படையான மனித உறவுகளின் தேவையைப் பற்றி உடலில் வலு இருக்கும்வரையில்தான் சிந்திக்காமல் இருந்துகொள்ள முடியும். ஆனால், உறவுகளின் உறுதுணை, அக்கம் பக்கத்தினரின் ஆதரவு, உதவியாளர்களின் நம்பிக்கை என்று எவ்விதத்திலேனும் மனிதர்களின் அக்கறை அத்தியாவசியமாகிவிடும் கட்டத்தில் என்னதான் பணம் இருந்தாலும் முதுமை சற்றுத் தடுமாறத்தான் செய்கிறது .

இப்போது இயலாமையிலிருக்கும் முதியவர்கள் ஒருகாலத்தில் குடும்பத் தலைவர்களாக தாம் நினைத்ததைச் செய்பவர்களாக இருந்திருப்பார்கள். அவரின் மனைவி அவரை முதன்மைப்படுத்தியே குடும்பத்தை நடத்தி வந்திருப்பார். முதுமையில் அவர்களின் இயக்கம்தான் குறைந்திருக்குமேயன்றி அவர்களின் முந்தைய உணர்வுகள் அல்ல. எனவே தங்களுடைய இயலாமை அவர்களிடம் ஒரு திருப்தியின்மையையும் அதன் விளைவாக ஒரு சலிப்பையோ அல்லது சிடுசிடுப்பையோ உண்டாக்கியிருக்கும். இன்னொரு புறம் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களைக் கவனித்துக் கொள்ளும் அவரின் மருமகளோ மகளோ ஐம்பது வயதுடையவர்களாக இருக்கக்கூடும். அந்த வயது அவர்களின் மாதாந்திர சுழற்சி நிற்கும் தறுவாயாக இருக்கும். மெனோபாஸ் என்கின்ற அந்தக் காலகட்டம் பொதுவாகப் பெண்களுக்குப் பலவித தொந்தரவுகளைத் தரக்கூடியது. அவற்றோடு அந்த மகள் மருமகளுக்கென வேறு பொறுப்புகளும் இருக்கும். மகனின் திருமணம் அல்லது மகளின் பேறுகாலம் அல்லது பேரக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுதல் எனப் பல பொறுப்புகள் அவர்களுக்கு இருக்கும். வெளியூர்களிலிருக்கும் தம் பிள்ளைகள் இடத்துக்குச் செல்ல வேண்டிய தேவைகள் எழலாம். ஆனால் முதியவர்களைத் தனியாக விட முடியாத பொறுப்பினால் அவர்களுக்கு அப்படிச் செல்ல இயல்வதில்லை.

இந்தச் சூழ்நிலையில் முதியோரைக் கவனித்துக் கொள்பவர்களிடத்தில் சமூகம் கொண்டிருக்கும் பார்வையோ ஏதாவது குறைகூறும் போக்கிலேயே இருக்கும். இயலாமையில் இருக்கும் முதியவர்களின்பால் பொதுவாகவே சமூகத்துக்கு ஒரு பரிதாபம் உண்டு. ஆனால் அப்பரிதாபம் சில சமயங்களில் முதியோரைக் கவனித்துக் கொள்பவர்களின் நியாயங்களைச் சட்டை செய்யாமல் விட்டுவிடும்போது, அது அவர்களிடம் சற்று களைப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதிகமான பொறுப்புகளைச் சுமப்பவர்கள் அதிகமான பொறுமையையும் கைக்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.

நடப்புகள் இப்படியாக இருக்கும்போது, நடமாட்டம் அறவே குறைந்து விடுவதும் அல்லது படுக்கையில் வீழ்ந்து விடுவதும் ஏற்படுத்தும் சுமை மிகக்கனமானது .

வயதானவர்களின் எலும்புகள் மிக வலுவற்றிருக்கும். கால் வழுக்கியோ தடுக்கியோ கீழே விழ நேரும்போது சட்டென எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இதனாலும் பலவகையான வாதங்கள் மூட்டுவலி போன்றவற்றாலும் கைகால் இயக்கங்கள் பாதிப்படைந்து விடுகின்றன. படுக்கையில் வீழ்ந்திருக்கும் ஒருவரைக் கவனிக்கும் பொறுப்பு எத்தனை கடினமானது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பவர்கள் துடைத்துத் தூய்மைப்படுத்த செவிலியரையோ உதவியாளரையோ நியமித்துக் கொண்டு சற்றேனும் தங்களை இலகுவாக்கிக் கொள்ள முயல்கிறார்கள். இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது…

படுக்கையில் வீழ்ந்து விட்டவர்களை என்னதான் கவனித்தாலும் அடிக்கடி டெட்டால் போன்றவை உபயோகித்து அறையை வாடையின்றி வைத்துக்கொள்ள முயன்றாலும் அந்த அறையில் சுற்றும் வாடையை அறவே நீக்குதல் சிரமமானது. அத்தி பூத்தது போல அருமையாக படுக்கையிலிருப்பவரைக் கவனிக்க வரும் உறவினரோ தானிருக்கும் அச்சிறு நேரத்துக்குள் முகத்தைச் சுளித்துக்கொண்டே தம்முடைய எடைபோடுதல், தீர்ப்பெழுதுதல், ஆலோசனை வழங்குதல் என்ற விரிவான ஆராய்ச்சிகளினால் படுத்திருப்பவர் பார்த்துக்கொள்பவர் இருவருக்கும் இடையில் இலகுத்தன்மையைக் குறைத்து இறுக்கத்தைக் கூட்டி விட்டுத்தான் திரும்புவார். (அவரால் இயன்ற நற்காரியம்!)

இயக்கம் பாதிப்படைந்து நடமாட்டம் இல்லாமல் போவது மட்டுமே வாழ்வைக் கடினமாக்கும் என்பதல்ல. முதுமையில் சிலருக்கு ஏற்படக் கூடிய (அல்சீமர் போன்ற) சில நோய்களால் படிப்படியாக நினைவுகளை இழக்கும் நிலையும் மிகத் துன்பமானது. நினைவுகளை இழந்து, தானாகச் சிந்தித்துச் செயல்படும் திறனைப் பெற்றிருக்காத பச்சைக்குழந்தை போல மாறிவிட்ட அவர்களை தாயைப்போல அரவணைத்துக் கவனித்துக் கொள்ளவேண்டும். தொண்ணூறு வயதுக் குழந்தையான தன் தந்தையை முடிவெட்டும் கடைக்கு அழைத்துச் சென்று உள்ளே அமரச் செய்துவிட்டு இருகடை தள்ளியிருந்த காய்கறிக்கடையில் நின்றிருக்கிறார் மகள். சற்றே நேரம்தான். கடையிலிருந்து வெளியேறி தந்தை எங்கோ நடந்துவிட்டார். விறுவிறென்று தேடிச்சென்று தந்தையைக் கண்டடைந்தார் மகள்.

“இதே ரெண்டு வயசுப் பிள்ளன்னா அதைக் கடையில உட்டுட்டு நான் நகந்திருப்பனா குழந்தை மாதிரி குழந்தை மாதிரின்னு சொல்றோம் குழந்தைதாங்கிறத அவங்க காட்டிட்டே இருக்காங்க” என்ற மகளின் வார்த்தைகளில் உணரமுடிகின்ற தாய் போன்ற பரிவுதான் அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு வேண்டும். இத்தகைய கவனிப்பு எத்தனை பேருக்கு வாய்க்கக்கூடும்?

பிள்ளைகளுடன் வசிப்பவர்கள் நிலை இவ்வாறெனில், பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிக்க, உணவு, மருத்துவம், கவனிப்பு அனைத்தும் அடங்கிய ஓரளவு வசதி மிக்க முதியோர் இல்லங்களில் தாய் தந்தை இருவருமாகவோ, துணையின்றி ஒருவராகவோ வசிப்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு பெற்றோரை முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகளை நம் சமூகம் தொடர்ந்து விமர்சனப் பார்வையுடன்தான் நோக்கி வருகிறது. எனினும் காலங்கள் மாறும்போது, நியாயங்களும் மாறுவது‌ நடப்பதுதானே. மாதந்தோறும் பணம் பெற்றுக்கொண்டு அப் பணத்திற்கேற்ப பல்வேறு வசதிகளை அளிக்கும் விதமாகப் பல முதியோர் இல்லங்கள் தற்போது இயங்குகின்றன. முதியவர்கள் சொந்தமாகவே அங்கு வீட்டினை வாங்கி வசிக்கலாம் என்பது போலவும் குடியிருப்புகள் இப்போது ஏற்பட்டுள்ளன. தனியாக அவரவர் வீடுகளில் வசிப்பதால் ஏற்படும் பல நடைமுறைச் சிரமங்களைப் பார்க்க இத்தகைய வசதிகளை அப் பெற்றோரே நாடிக் கொள்கிறார்கள். அங்கு அவர்களின் முதுமை ஓய்வாகவும் கண்ணியமாகவும் கழியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பும் பிள்ளைகளின் நம்பிக்கையும். எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நிறைவேறி நிம்மதியைத் தரட்டுமே.

ஒரு காலம்வரை, எங்கெங்கு சுற்றினாலும் என்னென்ன செய்தாலும் எழுதினாலும் பேசினாலும் பாடினாலும் ஆடினாலும் நடித்தாலும் கற்பித்தாலும் மக்களுக்காகப் போராடினாலும் திட்டங்கள் இயற்றி சட்டங்கள் செய்து அரசாண்டாலும், முதுமை அவற்றிலிருந்தெல்லாம் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி விடத்தானே செய்கிறது மாந்தரை?

பின் அவர்களும் முதுமையைமும் தனிமையையும் ஏற்றுப் பொருந்திக் கொண்டு தங்களின் அழியாத நினைவுகளைச் சுற்றி இருப்போரிடம் பகிர்ந்து கொண்டோ தனக்குள் அசை போட்டுக் கொண்டோ ஆண்டவன் விட்ட வழி அல்லது இயற்கை விதி என்று வாழ்கிறவர்களாகிறார்கள். அவர்களுக்கென ஒரு நண்பர்கள் குழு, கோயில்களில் பூங்காக்களில் அவர்களோடு கூடிப் பேசுதல், தொழில்நுட்ப வசதி தரும் வாய்ப்பினைப் பயன்படுத்திப் பொழுதுபோக்குதல், வாசிப்புப் பழக்கம் உடையவரெனில் புத்தகங்களின் துணை, இறைசிந்தனையில் நாட்டமுடையவர்கள் அதன்வழி தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளுதல் என அவர்களின் முதுமையை ஒரு ஒழுங்கிற்குள் அமைத்துக் கொள்கிறார்கள். கைகால் திடத்துடன் இருக்கும்போதே யாருக்கும் பாரமில்லாது போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் இறுதியில் அவர்களின் வேண்டுதல் ,அவா எல்லாமாக ஆகிவிடுகிறது. பார்க்கப் போனால் முதுமையை எட்டிப் பிடித்திருக்கும் எல்லோரது வேண்டுதலும் வேறுபாடின்றி இதுவாகத்தானே இருக்கிறது, இல்லையா?

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.