திரும்பிப்பார், 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். 

எழுத்து இவ்வாறு போடுகிறார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸின் டி.ஆர். சுந்தரம் 

கதை வசனம் – மு கருணாநிதி. கதையில் வரும் பாத்திரங்களெல்லாம் முற்றிலும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல. 

பாடல்கள் – கண்ணதாசன்.  

பாரதிதாசன் – ‘பாண்டியன் என் சொல்லை’

பின்னணி பாடியவர்கள் – டி.எஸ்.பகவதி, பி. லீலா, ஜிக்கி, ராணி, ஸ்வர்ணலதா, கஜாலக்ஷ்மி, திருச்சி லோகநாதன், A. M. ராஜா, எஸ்.சி.கிருஷ்ணன், திருச்சி லோகநாதன், ராமச்சந்திரன் 

சங்கீதம் – ஜி ராமநாதன் 

நடிகர்கள்

சிவாஜி கணேசன்

பண்டரி பாய்

நரசிம்மபாரதி

துரைராஜ்

தங்கவேலு

கருணாநிதி

கிருஷ்ணன்

திருப்பதிசாமி

சவுந்தர்

கணபதி

சீனிவாசகோபாலன்

சிங்கம் கிருஷ்ணமூர்த்தி

கிரிஜா

கிருஷ்ண குமாரி

தனலட்சுமி 

முத்துலட்சுமி

சரஸ்வதி

டைரக்ஷன் TR சுந்தரம் 

எடுத்த உடன் நீதிமன்றக் காட்சிதான். பாண்டியன் (நரசிம்மபாரதி), குற்றவாளிக் கூண்டில். பரந்தாமனைக் (சிவாஜி கணேசன்) கொன்றதாகக் குற்றச்சாட்டு. அப்போது பூமாலை (பண்டரி பாய்) வந்து நான்தான் என் தம்பியைக் கொன்றேன் எனச் சொல்லித் தனது பழைய கதையைச் சொல்கிறார். இவ்வாறு முழுக்க முழுக்க ஃப்ளாஷ்பேக் கதை.

பூமாலையும் பரந்தாமனும் அக்கா தம்பி. பெற்றோரை இழந்தவர்கள். இவர்களின் அக்கா மகள் குமுதா ஒரு கல்லூரி மாணவி. 

பாண்டியன் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய ‘இல்லற ஜோதி’ என்னும் நூலைப் பரந்தாமன் தன் பெயரில் வெளியிட்டதால் இருவருக்கும் பகை ஏற்படுகிறது.

பரந்தாமனும் பாமாவும் காதலிக்கிறார்கள். இருவருக்கும் தான் திருமணம் ஏற்பாடாகிறது. ஆனால் பரந்தாமன் மணமேடைக்கு வராமல் வேறு பெண்ணுடன் ‘கன்னியர்கள் வெள்ளை மனம் போல்’ (A. M. ராஜா, ஸ்வர்ணலதா பாடிய பாடல்) எனப் பாடிக்கொண்டு இருக்கிறார். பாடலும் மிக இனிமையாக இருக்கிறது. திருமண நேரத்தில் ஏன் வரவில்லை எனக் கேட்ட அக்காவிடம், ‘பாமா நல்லவளில்லை’ என பாமா மீதே பழியைப் போடுகிறான். 

பின், பாமா குடும்பத்தினர், பாண்டியனுக்கும், பாமாவிற்கும் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். பாண்டியன் மீது ஏற்கனவே இருந்த வெறுப்பால், அந்த திருமணத்தைத் தடுக்க, பாமாவைத் தன்னுடன் சென்னை அழைத்து வருகிறான் பரந்தாமன். தம்பி சென்னை சென்ற செய்தி கேட்ட பூமாலை, தானும் புறப்படுகிறார். 

அதே ரயில் பெட்டியில் பாண்டியனும் போகிறார். பூமாலை அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பூமாலைக்கு அவர் மீது சிறு காதல் எண்ணம் வருகிறது. ஆனால் பாண்டியனும் குமுதாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.

பரந்தாமன், தொழிலாளர் வேலை நிறுத்தம் போன்றவற்றால் தலையீடு செய்கிறான். மில் தொழிலாளி, முதலாளி என இருபக்கமும் சார்பு எடுத்துப் பணம் பார்க்கிறான். மேலும் பாண்டியனை, மில் முதலாளி மனைவியின் நெக்லெசைத் திருடியதாகப் பொய்க் குற்றம் சாட்டிச்  சிறைக்கு வேறு அனுப்புகிறான். இது தொடர்பாகச் சித்தியுடன் கோபம் கொண்ட குமுதா, வீட்டை விட்டு வெளியில் செல்கிறார். இப்படி பூமாலைக்கு உளவருத்தம் மேல் உளவருத்தம்.

பரந்தாமனால் மில் தொழிலாளிகள் பலருக்கு வேலை போகிறது. அதனால் பூமாலை முதலாளியின் காலைப் பிடிக்கிறார். அவர் உதைத்ததில் காயம் ஏற்படுகிறது. மில் முதலாளியின் மனைவி மருத்துவர்/ அவர் கட்டுப் போடுகிறார். அங்குத் தவறான நோக்கத்துடன் பரந்தாமன் வருகிறான். படுக்கையில் இருப்பது அக்கா பூமாலை. 

அக்கா, திட்டுகிறார். ‘உன் வாழ்வைத் திரும்பிப் பார்’ எனப் புத்தி சொல்கிறார். பரந்தாமனும் திருந்துகிறார். பாமாவிடம் மன்னிப்பு கேட்கப் போகிறார். ஆனால் தவறாக நினைத்த பாமா துப்பாக்கியைத் தூக்குகிறார். அந்த கைகலப்பில் பாமா இறந்து விட, தம்பிதான், அவரைக் கொன்றதாக நினைத்த அக்கா, தம்பியைக் கொல்கிறார். 

இப்படி ஃப்ளாஷ்பேக் முடிகிறது. பூமாலை சிறை செல்கிறார். இவ்வாறு முழுக்க முழுக்க ஃப்ளாஷ்பேக்தான் படமே!

பாண்டியன், சுதந்திரம் கிடைத்ததால் சிறையிலிருந்து விடுதலை பெறுவதாக வருகிறது. அதனால்,சுதந்திரத்திற்கு முன் நடப்பதான கதை என எடுத்துக் கொள்ளலாம். 

அமைதியான நடிப்பில் பண்டரிபாய் திரைப்படத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார். சிவாஜியின் முதல் பட நாயகி, இதிலேயே அக்காவாகி விட்டார். முகத்தில் அக்காவிற்கான முதிர்ச்சியைக் காட்டி இருக்கிறார். 

சிவாஜி மிகவும் நாகரீகமாக வருகிறார். ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு விதமான உடை. ஆடை அலங்கார நிபுணர்கள் இதை மாதிரியாக வைத்து வடிவமைக்கலாம். அந்த அளவிற்கு நேர்த்தியான ஆடை வடிவமைப்பு. அவருக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது.

சிவாஜி, ஒவ்வொரு காட்சியிலும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டு வருபவர்தான் என்றாலும், இந்தப் படத்தில் புருவ அசைப்பு என்பது அற்புதமாக இருக்கிறது.

நட்சத்திர நாயகனாக உருவெடுத்த பின்பும் இப்படி முழுக்க முழுக்க எதிர் மறையான பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அவரது துணிவைப் பாராட்டத் தோன்றுகிறது. அதை மிகவும் நேர்த்தியாகவும் நிறைவாகவும் செய்தும் இருக்கிறார்.

பாமாவாக நடிகை கிருஷ்ணகுமாரி நடித்து இருக்கிறார். இவர் நடிகை சௌகார் ஜானகி அவர்களின் அக்கா. பார்ப்பதற்கு நடிகை வைஷ்ணவி சாயலில் இருக்கிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார்.

அதே போல் குமுதாவாக வரும் கிரிஜாவுக்கு மிகவும் நன்றாகச் செய்து இருக்கிறார்.

ஒரு பாடல் மட்டும் பாவேந்தர் பாரதிதாசனார் எழுதி இருக்கிறார். மற்ற அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் தான் எழுதியுள்ளார். ‘கலப்படம் இது கலப்படம்’ பாடல் மிகவும் பிரபலமானது. 

‘கலப்படம் இது கலப்படம் 

எங்கும் எதிலும் கலப்படம்

அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்

கஷ்டப்படும் தொழிலாளரோடு கருங்காலிக் கூட்டம் கலப்படம் முதலைக்கண்ணீர் வடிக்கும் தலைவன் முதலாளியிடம் கலப்படம்

ஆழாக்கு பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம் 

அரிசியிலே மூட்டைக்கு அரைமூட்டை கல்லு கலப்படம் 

அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டா கலப்படம் 

காபி கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்

நல்ல தமிழ் படத்தினிலே நாலு பாஷை கலப்படம் 

அந்த படத்தில் நடிக்கும் ஸ்டார்களுக்கு 

பாடும் குரல் பிளேபாக் கலப்படம்

மின்னும் அழகிகள் கூட்டத்திலே 

பவுடர் மேக்கப் அழகிகள் கலப்படம்

உண்மை வீரர்கள் வாழும் நாட்டினிலே 

சில வெத்து வேட்டுக்கள் கலப்படம்’

என்ற இந்தத் திரைப்படத்தின் பாடல் மிகவும் பிரபலம்.  பாடியவர் S.C. கிருஷ்ணன். நகைச்சுவை நடிகர்களுக்குப் பின்னணி பாடல்கள் பல பாடியவர். 

சிவகங்கை.C.கிருஷ்ணன் என்னும் S.C.கிருஷ்ணன் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமியின் நாடகக்குழுவில் நடித்துக் கொண்டு இருந்து இருக்கிறார். அமுதவல்லி  திரைப்படத்தில் டி.ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து ‘இயல் இசை நாடகக் கலையிலே’ எனும்  பாடல் பாடியிருந்தாலும் காளி N.ரத்தினத்திற்காக அவர் பாடிய இந்தக் ‘கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்’ பாடல்தான் அவரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்று இருக்கிறது. 

அந்த காலகட்ட அரசியல் பொடிகள் திரைப்படம் முழுவதும், ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன.  குறிப்பாகத் தொழிலாளர் சிக்கல் குறித்து வரும் பகுதி முழுவதும் அப்படியும் இப்படியும் சிவாஜி பேசுவது எல்லாம் கலைஞரின் கைவண்ணம். சிவாஜியின் பலதரப்பட்ட நடிப்பிற்காகவே படத்தைப் பார்க்கலாம். 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.