என் அன்பு செல்வங்களே ப்ரகாஷ், அம்மு,

நலமாக இருக்கிறீங்களா? அங்கே அமெரிக்காவில் இரண்டாம் அலை ஓய்ந்துவிட்டதா? நல்லவேளையாக இரண்டு பேரும் இரண்டு ஊசிகள் போட்டுக்கொண்டீர்கள் என்பதில் மகிழ்ச்சி. பத்திரமாக இருங்கள்.

நீங்கள் இருவரும் இங்கே இந்தியாவில் இல்லாத இந்த இரண்டு மாதங்களும், உங்களுடைய சிறுவயதில் நடந்த நிகழ்வுகளின் நினைவுகளை இந்த மனம் மீண்டும் மீண்டும் என்னிடம் எடுத்துக் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டே இருந்தது.

கடல் அலையில் விசிறி எறியப்பட்ட பந்து அலையுடன் கரைக்கு வந்து, மீண்டும் கடலுக்குப் போய், மீண்டும் கரைப்பக்கம் வந்து, மீண்டும் கடலுக்குள் அலையுடனேயே திரும்பிப் போவதுபோல, முன்பு உங்களை வளர்த்த நாளில் உங்களுடன் சேர்ந்து நான் வளர்ந்ததும், இப்போது நீங்கள் என்னைச் சிறுகுழந்தையாகப் பார்த்துக்கொள்ளும் காலக்கட்டத்துக்கு நீங்கள் வளர்ந்திருப்பதும் மீண்டும் மீண்டும் மனதில் நினைவலைகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன.

முதல் முறையாக இரண்டு பேருமே அங்கிருந்து தினமும் தொலைபேசியில், உடல்நலம் குறித்து ஒருமுறையாவது பேசினீங்க. அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி ஐந்து நிமிடங்கள் நீங்கள் பேசுவது வரப்பிரசாதமாக இருக்கிறது. அவ்வளவு மகிழ்ச்சி. ப்ரகாஷ் நீ இங்கே இருந்த நான்கு மாதங்களும் ப்ளாஷ்பேக் போல நினைவுக்கு வருகிறது.

எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய, ‘மெள்ள மெள்ள’ என்னும் நாவலில் வரும் ஒரு காட்சியைப் போல, என்னைக் காக்க அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாய் என்றே எனக்குத் தோன்றியது. கால்வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, மனதளவிலும் குணமடைந்து வந்துகொண்டிருந்தேன்.

கம்ப்யூட்டரில் டைப் சென்று கொண்டிருந்த அன்றொரு நாள், ”ஏன் இப்படி நீங்க சிரமப்படணும் அம்மா? அப்படியாச்சும் எழுதின புத்தகங்களைத் தேடி எடுத்து அமேசானில் குடுக்கணுமா?” என்று கேட்டாய். அம்மாவின் உடல்நலத்தின் மீதான உன் அக்கறை எனக்குத் தெரிந்தே இருந்தது. “நான் இல்லாமல் போகும் நாளில் இந்தப் புத்தகங்கள் யாருக்கேனும் கிடைக்கணும் என்றால், இல்லை இவள் எழுதியவை எல்லாம் என்னென்ன என்பதன் இலக்கிய வரலாறு கால வெள்ளத்தில், அழிக்கப்பட்டு, இல்லாமல் மறைந்து போய்விடக் கூடாது என்பதற்காகவும், அதற்கான ஒரு வாய்ப்பாக இது இருக்கட்டும் என்று தேடி எடுத்து அமேசானில் சேர்த்து வைக்கிறேன்” என்றேன்.

நாமே இல்லாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது எனக்கு நிச்சயமாக தெரிந்தே இருக்கிறது. நாமே இல்லாமல் போகும்போது, இந்த படைப்புகள் இருந்தே ஆகணுமா என்ற எண்ணம் எழுந்தாலும், அவற்றைப் புறம் தள்ளிவிட்டு, அதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கும் என் நினைவுகளையும் கூர்மைப்படுத்தி எழுதி சேகரித்து வைக்க விரும்புகிறேன் ப்ரகாஷ்.

இங்கே இருக்கும்போது அம்மு ஒருமுறை, இல்லை ஐந்தாறு தடவை சொல்லி இருந்தாள், “அம்மா, நீங்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்க. யூட்யூபில் வீடியோ அப்லோட் செய்யுங்க. உங்களுக்கான காலம்னு ஒண்ணு இருக்குதும்மா. நீங்க செய்யும் எந்த விஷயத்துக்கும் அதற்கான பலன் நிச்சயம் வரும்.” “என்ன செல்லம் நான் உங்களுக்குச் சொல்லறதை நீ எனக்குத் திருப்பிச் சொல்லறயா?” என்றேன்.

எந்தப் பலனையும் எதிர்பார்த்து இதுவரை எதுவும் செய்ததில்லை என்றாலும், இப்போது எடுக்கும் வீடியோ பதிவுகள் அப்படி இல்லை. உடல், மனம் என என்னைச் சரி செய்துகொள்வதற்காகவும் தான். அதே நன்மை அதைப் பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் என்னும் நம்பிக்கை ஒரு காரணம். இவள் இப்படி இருந்திருக்கிறாள் என்பது இவள் மறைந்த பிறகும் அன்பின் ஆவணமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் மனதின் ஆழத்தில் எப்படியோ விதையாகப் பதிந்திருக்கலாம். அது இப்போது முளை விட்டு எழுவதை அப்படியே காண்கிறேன். அந்தத் தரிசனம் இவளுக்குள் இருக்கும் இவளின் ஆன்ம சக்தியை கண் முன்னே நிதர்சனமாகக் காட்சியாக உயிர்த்தெழும்போது, யாரோ ஒருவரைப் பார்ப்பது போல அன்புடன் பார்க்க அமைந்திருப்பது புதிதாக இருக்கிறது.

இப்படி எழுதுவதும், என்றோ ஒருநாள் அம்மாவின் வாழ்வின் உங்களுக்குத் தெரியாத அவளுடைய ஆழ்மனதின் பக்கங்களை நீங்களும் இந்த உலகும் அறிந்துகொள்வதற்காக இங்கே விட்டுச்செல்லும் எண்ணம் காரணமாக இருக்கலாம். அப்படித் தெரியத்தான் வேண்டுமா என்னும் கேள்வியும் எழாமலில்லை.

இருந்தாலும், நீங்கள் இருவரும் சொல்லியபடி எங்கேயும் வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேதான் இருக்கிறேன். ஆறு மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போக வேண்டாம். யூட்யூபில் அப்லோட் செய்யுங்கள்னு சொல்லிவிட்டு இரண்டு பேரும் ஊருக்குப் போயிட்டீங்க. அதையே செய்கிறேன். இன்றைக்கு தன்னம்பிக்கை உரை 75 நாள்கள் முடிந்தது.

25, 50ஆம் நாள்கள் முடிந்தபோது சில விஷயங்கள் நடந்தது போல, இன்றைக்குத் தோழி கேத்ரின் காலையில் போனில் பேசியும், மாலையில் ஒரு வீடியோவில் வாழ்த்து அனுப்பியும் இந்த நாளில் மகிழ்ச்சியை நிரம்பச் செய்தாள்.

இன்றைக்குக் காலையில் சௌந்தர்யலஹரி வகுப்பில், தேவியின் கருணை வெள்ளம் உலகம் முழுக்க நிறைவதைப் போல, கேத்திம்மாவின் அன்பு மனதை நிறைத்தது. வாரத்தின், செவ்வாய், வெள்ளி இரண்டு நாட்களும், 9.45 மணியிலிருந்து 10.30 மணி வரை சௌந்தர்யலஹரி வகுப்பு. இரண்டு ஸ்லோகங்கள் உரையுடன் மூன்று பேருக்கு மட்டும், தொலைபேசியிலேயே சொல்லித் தருகிறேன்.

இன்று ஒரு ஸ்லோகத்தின் மூன்றாம் வரியில் ஒரு பொருளை மாற்றிச் சொன்னதால், மறுபடியும் அதை விளக்க வேண்டியதாக இருந்தது. வகுப்பு முடிந்ததும், உங்கள் சித்தி மித்ரா கேட்கிறாள், “என்ன இன்னிக்கு சொல்லித்தர சரியாக ப்ரிபேர் பண்ணலையா?” என்று. “இல்லம்மா இது வரைக்கும் சொல்லித்தந்த 20 ஸ்லோகங்களும் ஒவ்வொரு தடவையும் சரியாக வாசிச்சு தயார் செஞ்சுக்கிட்டுதான் வந்து சொல்லித்தரேன்” என்றேன். “அப்புறம் ஏன் இன்னிக்குச் சரியா சொல்லல. அதனால தான் மறுபடியும் நிர்மலா விளக்கம் கேட்டாள்” என்றாள். “பிறகு அர்த்தம் சரியா சொன்னேனா?” என்றேன். “ஆமா அது ஒண்ணுதான். மத்ததெல்லாம் சரியாகச் சொல்லி இருக்கிறே” என்றாள்.

“தயார் செய்யறது மட்டும் தான் எனக்குத் தெரியும். போனில் வகுப்பு ஆரம்பிச்சதும், என்ன சொல்லறேன்னு நிஜமாவே எனக்குத் தெரியல. ஏதோ ஒரு மயக்கத்தில் இருக்கிறது போல இருக்கு” என்று சொன்னேன்.

மத்தவங்களுக்கு இப்படி இருக்குமானு தெரியல. தன்னம்பிக்கை உரை பேசும்போதும் அப்படிதான் இருக்கு. யாரோ என்னைப் பேச வைக்கிறாங்கன்னு தோணும். அப்படிப் பேச வைக்கிறவங்க நீங்க ரெண்டு பேரும் தான்.

இதோ இப்போது எழுதறதும் என் வசத்தில் இல்லை. யாரோ உள்ளே புகுந்து எழுத வைப்பதைப்போல இருக்கு. மதியம் மூன்று மணியிலிருந்து நான்கு மணி வரை தினமும் ஓர் அத்தியாயம் என்று பகவத் கீதை வகுப்பில் சொல்லித் தர்றாங்க. இன்றைக்கு 12 ஆம் நாள். இன்னும் ஆறு நாட்களில் முடியும். இஸ்கானில் இருந்து சொல்லித் தராங்க. ஒரு நாளில் ஓர் அத்தியாயம் என்று வகுப்பு முடிந்ததும் ஒவ்வொரு நாளும் வாசிக்கும்போது, ஜான்ஸி அத்தை, சுப்பிரமணியம் மாமா மகள்கள், என் அன்புத் தோழிகளான சுஜா, லதா நான் மூவரும் 25 வருடங்களுக்கு முன்பு பகவத்கீதை படித்து மனப்பாடம் செய்து பகிர்ந்து கொண்ட விஷயங்கள் நினைவுக்கு வருது.

சுஜா நம்மை விட்டுப் பிரிந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இப்போது பகவத்கீதை மூலம் இன்னும் கூடவே இருப்பது போல் இருக்கு. நம்ம லதா, இப்போ துறவறத்தில் இருக்கிறாங்களே பூமாவித்ய பாரதின்னு, அவங்க எடுக்கிற வகுப்பில் மதியம் இணைய முடியல. அதனால இரவு எட்டு மணியிலிருந்து எட்டே முக்கால் மணி வரைக்கும் மூக கவி எழுதின 500 பாடல்களை வாசிக்கிறோம்.

ஒரே பக்திப்பாடலா இருக்குதேன்னு பாக்கறீங்களா… தினமும் என்ன செய்கிறேன்னு போனில் கேக்கறீங்களே? நல்லா இருக்கிறேன். உடலுக்குப் பிரச்னை இல்லைன்னு மட்டும் சொல்வேன். விரிவாக இப்போ இதைச் சொல்றேன்.

அம்மு, நீ சொன்ன மாறா படமும் பார்த்தேன். உங்களுக்குப் பிடிக்கும் பாருங்கம்மா என்று இரண்டு மூன்று முறை சொன்னாய். எனக்குப் பிடிச்சிருந்தது. பார்வதியாக வந்த அந்தக் கதாநாயகியின் தேடல் பிடித்தது. அலெக்சாண்டர் திருடனாக வந்ததும், மௌலியின் நடிப்பும்…

தோழி தாமரை எழுதிய அந்தப் பாடல் என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது. சித் ஸ்ரீராமின் குரலில்… இந்தப் பாடல் ஏதோ செய்கிறது. யார் அழைப்பது? யார் அழைப்பது? யார் குரலிது? காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது? போ என அதைத்தான் துரத்திட வாய் மறுக்குது? குரலின் விரலைப் பிடித்துத் தொடரத்தான் துடிக்குது இந்தப் பாடல் ஏன் பெண்குரலில் இல்லை? தன் குரலை உருக்கி இழைத்து இந்தப் பாடலை அவளே பாடினால் எப்படி இருந்திருக்கும்! ஆனால், அவள் தேடும் குரல் ஆண் குரலாக இருப்பதால் அந்தப் பாடல் குரலுக்குப் பின்னாலேயே அவள் தேடி அலைவதைப் பார்க்கையில், அம்மாவின் இந்தத் தேடலை உங்களிடம் அதே உயிர்ப்புடன் சொல்லிவிட முடியுமா என்று எழுத முடியாமல் திகைத்துப் போகிறேன்.

ஆமாம். ‘ Her Stories’ இல் போன பதிவில் எழுதின கதை நம் கதைதான். உங்க அம்மாவின் கதையே தான். அதில் நீங்க கேட்ட, நம்ம குடும்பத்து பெயராகவே இருக்குன்னு கேட்டீங்களே, அதேதான். நம் குடும்பத்தினரின் பெயர்கள்தான். அதே தென்காசிப் பாட்டி வீடுதான். தொடர்ந்து உங்க ரெண்டு பேருக்கும், நினைவில் அங்கங்கே மறைந்து இருந்த விஷயங்களை, திடீரென முன்னே ஒளிர்ந்து வரும் நினைவுகளை இப்படி எழுதறேன்.

என் காலம் முடியறதுக்கு முன்பு சில விஷயங்களை உங்களுக்கு சொல்லிவிட நினைத்து எழுதறேன். எல்லாவற்றையும் சொல்லிட முடியுமா என்ன?

ஆமா, போன அத்தியாய முடிவில் பேய்னு நாங்க நினைச்சு பயந்தது, ஜன்னலுக்குப் பின்னால் இருந்து கதவைத் திறங்கன்னு, வெளியில் தனியா இருக்க பயந்து கத்தினது நம்ம கேசவா சித்தப்பாதான்.
பத்மாக்கா, ராதாக்கா சித்தி கல்யாண விஷயங்களை இனிமே சொல்லப்போறேன். பாட்டியும் நானும் மட்டும் இருந்த காலங்களை இத்தனை வருடங்கள் கழித்து இப்போ நினைச்சுப் பார்க்கும்போது, அந்த மனதிடம், சுதந்திர உணர்வை நான் எப்போ எப்படி விட்டுவிட்டு, எப்படி மறுபடியும் மீட்டெடுக்கிறேன்னு நினைச்சுப் பார்க்கும் அவகாசம் இப்போ கிடைச்சிருக்கு.

மனதின் எந்தெந்த அறைகளில் என்னென்ன விஷயங்கள் இருந்தனவோ, எதையெல்லாம் கடந்து இந்த இடத்தில் இப்போ இருக்கிறேன் என்பதை ஒரு பார்வையாளரைப் போலப் பார்க்கும் அதிசய தருணம் வாய்த்திருக்கிறது.

முடிந்த வரையில் சொல்லப் பார்க்கிறேன். இது வாசிக்க சுவாரஸ்யமாக இருக்காதுதான். புனைவுகள் தானே சுவாரஸ்யமாக இருக்க முடியும். ஆனால், இந்த உண்மைகளை, எப்படி இருந்தவள் எப்படியெல்லாம் மாறி எந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறாள் என்பதைப் பதிவு செய்வது சுவாரஸ்யமாக இல்லாவிட்டால்தான் என்ன? சத்தியமான மெய்யான வாழ்க்கை அல்லவா? அன்பின் ஊற்றினைப்போல நினைவின் ஊற்று வற்றாமல் பெருக்கெடுக்கிறது. எப்படி அணை கட்டி நிறுத்துவேன்? ஆகையினால் தொடர்வேன்…
அன்புடன்,
அம்மா
02.10.2021

படைப்பாளர்

மதுமிதா

மதுமிதா

மதுமிதா என்னும் பெயரில் எழுதிவரும் கவிதாயினி மதுமிதா ராஜபாளையத்தில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி.

எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். தமிழில் பல நூல்கள் படைத்துள்ள இவரின் தாய்மொழி, தெலுங்கு. ஹிந்தி பிரவீன்உத்தரார்த் வரையும், சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் படித்துள்ளார். முப்பதுக்கும் அதிக நூல்களை உருவாக்கியுள்ளார். இருபதுக்கும் அதிக விருதுகளை வென்றிருக்கிறார்.