நாமும் சமீபத்தில் வெளியான இந்த லவ்வர் திரைப்படத்தைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்த போதே என் தங்கை, “லவ்வரா, வேணாம்க்கா. டாக்சிக் லவ் பத்திய படம்” என்றாள். அவள் சொல்வதைக் கேட்காமல் படம் பார்க்க ஆரம்பித்தேன்.
கடலில் நண்பர்கள் அலைச் சறுக்கு விளையாடி மகிழ்ந்துவிட்டு, பிறகு அனைவரும் ஒன்றாக அமந்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கல். ஒரு பெண்ணின் காதலைப் பற்றி பேச்சு எழ அலைபேசியும் அடிக்கிறது. பட்டாசு போன்று கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிக்கிறான் காதலன்.
உடனே என் தங்கையிடம் திரும்பி, “இரண்டு பேரும் சேர மாட்டாங்கதான?” எனக் கேட்டேன். நிச்சயம் இது டாக்சிக் காதல் வகையறாதான் எனத் தெரிந்துவிட்டது.
வேலையில்லாமல் இருக்கும் காதலன், வேலையில் இருக்கும் பெண்ணைக் காதலிக்கிறான். அவளும் உண்மையாகக் காதலிக்கிறாள். இருவருக்கும் காதலின் அர்த்தம் மிக நன்றாக வேறுபடுகிறது. அவள் இவன் எவ்வளவு திட்டினாலும், பிறகு மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுகிறாள். சண்டை போடுவது எல்லாம் எந்த உறவிலும் இயல்பாக நடப்பது. ஆனால் சண்டையும், சந்தேகமுமாக இருந்தால் அங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.
காதலி எந்த ஓர் ஆணுடன் பழகினாலும் பிடிப்பதில்லை. அந்த ஆண்களுடன் அடிதடியில் இறங்கிவிடுகிறான், அதே உடைமைவாத மனப்பான்மை. என் பொருளை யாராவது அபகரித்துக் கொண்டால் என்ன செய்வது?
கழுத்தை நெறிக்கும் இந்தக் காதலில் விடுபட நண்பர்களுடன் பழகுகிறாள். அது மட்டுமல்லாமல் பணி இடங்களில் இது நடப்பதுதான். ஆண், பெண் அனைவரும் அவள் நட்பு வட்டாரத்தில் இருக்கின்றனர். காதலினிடம் கூறினால் வீணாகச் சண்டை கட்டுவான் என்பதால் நண்பர்களுடன் வெளியில் செல்வது போன்றவற்றை மறைக்கிறாள். ஒரு கட்டத்தில் அவன் சந்தேகப் புத்தி பொறுக்க முடியாதவள் காதலை முறித்துக் கொள்ள, காதலன் விட்டுவிடுவானா? இருவரும் சேர்ந்தார்களா? மீதத்தை நான் கூறப் போவதில்லை.
கதையில் நமக்குத் தேவையான விஷயத்திற்கு மட்டும் வருவோம். எந்த ஓர் உறவாக இருந்தாலும் சரி, அதில் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள பயப்பட்டால் அது ஆரோக்கியமான உறவு கிடையாது. இப்படிப்பட்ட உறவில் பொய் கூறுவதும், மறைத்து அவர்களுக்குத் தெரியாமல் நமக்குப் பிடித்தவற்றைச் செய்வதும் இருக்கும். இரட்டை வாழ்க்கைதான். இது போன்ற மற்றோர் உறவு நிலையை, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படத்தில் காணலாம்.
இந்தப் படத்தில் காதலன், காதலியுடைய நண்பனிடம், “ஏன் புரோ… இவ்வளவு ஃப்ரீடம் கொடுத்துருக்கேன்” என்பான்.
நண்பன், “அவளுக்கு ஃப்ரீடம் தர நீ யாரு?” என்பான்.
சுதந்திரத்தை யாரும் கொடுக்கவோ பெறவோ முடியாது. சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படை உரிமை. இதில் தன் காதலிக்கு இவன் சுதந்திரம் கொடுத்தானாம். அந்தப் பெண்ணை நிம்மதியாக மூச்சு விடவே அவன் விடவில்லை என்பதுதான் உண்மை. தன் குடும்பத்தைக் காட்டி கில்ட் டிரிப்பிங்க், செத்துப் போய் விடுவேன் என மேனிபுலேஷன் அனைத்தும் சிறப்பாக நடந்தேறியது.
’நீ என்னை விட்டுச் சென்றால், உயிரை விடுவேன்; என மிரட்டும் நபர்களைக் காதலிக்காதீர்கள். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் சரி. மிரட்டியே உங்களுக்கு விருப்பமற்ற அனைத்தையும் செய்ய வைப்பார்கள். நஞ்சாக மாறிய உறவு மெதுவாக உங்கள் மனதைக் கொல்ல ஆரம்பிக்கும். அதுவும் இந்த மாதிரி ஆட்களுடன் திருமணத்தில் மாட்டிக் கொண்டால், அதை நான் கூற வேண்டியது இல்லை. வசைகளும் அடிகளும் பிறகு மன்னிப்பும் சகஜமாகிவிடும். ஆன்ட்டி ஹீரோ வகையறாக்கள்தாம்.
கொஞ்ச நாள் சென்றால், இது தான் இயல்பான உறவு என உங்கள் மனமும் பழகிக்கொள்ளும். இந்த மாதிரி ஒரு டாக்சிக் ரிலேஷசன் ஷிப்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
TOXIC RELATIONSHIPS ARE VICIOUS CYCLE THAT WILL NEVER STOP.
இந்தப் படத்தில் வரும் பெண்ணும் படித்திருப்பாள், நல்ல இடத்தில் வேலை செய்வாள். ஆனால், அந்தக் காதலில் இருந்து வெளியே வருவதைப் பற்றி அவள் யோசித்திருக்கவே மாட்டாள். அது நல்ல உறவில்லை என அவளுக்கும் தோன்றி இருக்காது. ஒரு தோழி மட்டும் அறிவுரை கூறுவாள். “நீங்கள் தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் தன்மை மாறிவிடப் போவதில்லை.”
படைப்பாளர்:
மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.