குட்டி – 1

“வீட்டோட கடைசி பொண்ணுதான் குட்டி. அதனால செல்லத்துக்கு குறைச்சலே இல்ல. தூங்குறதுக்கும் திங்கிறதுக்கும் மட்டும்தான் வீட்டு நினைப்பு வரும். மத்த நேரமெல்லாம் அவங்க அப்பன் வாங்கிப் போட்டு வளத்துற மாடுகள்ட்ட இருந்து ஏதாவது ஒரு கன்னுகுட்டிய ஓட்டி விளையாடிட்டு இருப்பா. வீட்டுக்குள்ள அவ என்னைக்கு இருக்காளோ அன்னிக்கு பொழுது மழை அடிச்சி ஓஞ்சுரும்”, தினமும் ஒரு முறையாவது குட்டியின் அம்மா ரதியாள் இந்த பாட்டைப் பாடி விடுவாள்.

ரதியாள் சொல்ற அளவுக்கு நிறைய செல்லமில்லை. ஊர் உறவு என்ன நினைக்கும் என்ற எண்ணத்துக்கு கட்டுப்பட்ட அளவுக்குதான் செல்லமெல்லாம். அவ்வப்போது உற்றாரை எதிர்த்து பேசும் அளவுக்கு அது வளர்ந்து திரும்ப சமநிலை அடையும். 

ஆனாலும் அந்த வீட்டில் குட்டி என்றால் எல்லாருக்கும் பிரியம். 2 அண்ணன்கள், 2 அக்காள்கள். அண்ணன்களுக்கு 21 நெருங்கிய போதே கல்யாணம் முடித்தாயிற்று. அக்காள்களுக்கும் அதே 21 முடிந்தவுடன் முடித்தாயிற்று. அக்காள்கள் இருவரும் பக்கத்து ஊர்களில்தான் இருக்கின்றனர். நினைத்தவுடன் நடந்தேகூட கிளம்பி வந்து விடுவார்கள்.

நம் குட்டிக்கும் இப்போது வயது 20. இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் முடித்துவிட வேண்டும் என்ற பேச்சு காதில் விழ ஆரம்பித்திருக்கிறது.
குட்டியின் அப்பா மலையப்பன். அம்மா ரதியாள். அண்ணன்கள் அன்பு, மாதவன், அக்காள்கள் சந்திரா, மைதிலி. 

மலையப்பன் தன் வீட்டின் ஒவ்வொரு வாரிசுக்கும் போன் அடித்துக் கொண்டிருந்தார். சாயங்காலமானால் எல்லோரையும் விசாரித்து ஓய்வது அவரது வழக்கம். செல்போன் இருப்பதால் உருவான அன்புத் தொந்தரவு இது. 
ஊரில் முக்கியஸ்தர் என்பதால் பணப்புழக்கம் கொஞ்சம் உண்டு. நிலபுலன்கள், கறவை மாடுகள் என்று பரம்பரை செழிப்பு. செல்போன் வந்த புதிதிலேயே வாங்கி வைத்திருந்தார். அப்போதெல்லாம் போன் வந்தாலே பெருமை தான். 

ரதியாளும் பயங்கர வசதியுள்ள வீட்டுப்பெண் தான். அப்போதே அவளுடைய அப்பா பெரிய டாக்டர். ஊருக்கு ஒரே டாக்டர் என்பதால் ரொம்பவும் பிரபலம். ரதியாளுக்கு பெரிதாய் படிப்பு வரவில்லை. சீக்கிரம் திருமணம் முடித்தாயிற்று. அவளுக்கும் அது ஒரு குறை தான். அதனால் தன்னுடைய பிள்ளைகள் எல்லோரும் ஒரு டிகிரியாவது முடிக்க வேண்டும் என்பதில் அதிக முனைப்பாயிருந்தவள். ஐந்து பிள்ளைகளையும் ஒரே மாதிரி கவனமாக படிக்க வைத்தாள்.

எல்லோரும் ஊருக்குள்ளேயே ஏதோவொரு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அண்ணன்களும் அண்ணிகளும் நிலபுலன்களை பார்த்து கொள்கின்றனர். பெரிய அக்கா தனியாய் தனக்கொரு கம்ப்யூட்டர் சென்டர் வைத்து, பில்கள் கட்டுவது, ஆன்லைன் வேலை என்று சம்பாதிக்கிறாள். சின்ன அக்கா பக்கத்தில் இருக்கும் சிறார் பள்ளியில் டீச்சர் வேலைக்கு போகிறாள். 

குட்டி இப்போதுதான் படித்து முடித்திருக்கிறாள். கனவுகள் எதுவும் இல்லை. படித்து பெரிய ஆள் ஆவது போன்ற விஷயங்களில் ஆர்வமில்லை. மலையப்பனுக்கு அடுத்த சிந்தனை குட்டிக்கு மணமுடிப்பது தான். முடித்தால் காடு, பிள்ளைகள், பேரக்குட்டிகள் என்று ஒரு கவலையும் இன்றி ஜம்மென்று இருந்து விடலாம் என்று நினைக்கிறார்.

அன்று சாயங்காலம் எல்லோரையும் வீட்டிற்கு அழைத்து பேசினார். பெரிய அக்காள் இருக்கும் ஊரில் இருக்கும் மளிகை கடை ஓனருக்கு பெண் தரலாம் என்பதுதான் பேசுபொருள். எல்லோருக்கும் சம்மதம். வரும் வெள்ளி அவர்களிடம் ஒரு வார்த்தை பேசிப்பார்த்துவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

தொடரும்…

படைப்பாளர்

சௌம்யா

எம்.பி.ஏ. பட்டதாரி மற்றும் தொழில்முனைவோரான இவர், சேலத்தில் பிறந்து சென்னையில் வசித்து வருகிறார். சிறுவர் இலக்கிய உலகத்தில் கதை சொல்லியாகவும், பத்திரிகை எழுத்தாளராகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.