தன் சிறு கால்களால் தாங்கிப் பிடிப்பதால்தான் அந்தப் பெருங்கூரையே வீழாமல் நிற்கிறது என ஏமாறுமாம் பல்லி! அதுபோலவே, ‘யாம் இல்லை எனில் இந்த இல்லமே இல்லை’என்று எண்ணித் தங்களை இளைப்பாறா உழைப்பில் பிணைத்துக் கொள்ளும் இல்லத்தரசிகளின் பிம்பத்தை, இத்தலைப்பு எவ்வளவு எழிலுறப் படம் பிடித்துக்காட்டுகிறது! இஃது அறியாமையின் சுவடா அல்லது அர்ப்பணிப்பின் உச்சமா என்கிற வியப்பு நெஞ்சில் எழுகிறது.

கூட்டுக்குடும்பக் கோலத்தின் மையப்புள்ளியாய் கவிதா. அவளது காலைப் பொழுது, அமைதியான விடியலாக அன்றி, அடுக்களைப் போர்க்களமாகவே தொடங்குகிறது. ஈரடுப்புச் சுடராய் எரியும் அவசரம் ஒருபுறம்; உறங்குவோரை எழுப்பும் கடமை மறுபுறம்; மாமனார்க்குக் காபி புகட்டும் கனிவு வேறொருபுறம் என, அவளது பாதங்கள் பறவைக் சிறகுகளாய் மாறுகின்றன.

காலப் பேயோடு கவிதா நடத்தும் இந்த ஓட்டப்பந்தயத்தில், ஒரு கணம் சித்தம் சிதற, சமைத்த பொரியல் தீய்ந்து கருகி ‘அம்பேல்’ ஆகிறது! ஆயினும், அவளுக்குக் களைப்படைய நேரமில்லை. அண்டத்துப் பெருவெளிக்குள் அகப்படா அவசரத்தோடு, அடுத்த காய்கறியை அள்ளுகிறாள். அவசரத்தின் விளிம்பில் கத்தி அவள் விரலைப் பதம் பார்க்கிறது; அங்கு நெற்றி வியர்வை நிலத்தில் சிந்துவதற்குக் முன்பாகவே, அவளது செங்குருதியால் கை சிவக்கிறது. ஆனாலும் காய் வெட்டவேண்டும்!

கவிதா அடுக்களையில் அனலாய் உருகிக்கொண்டிருக்க, குடும்பத்து மனிதர்களோ தத்தமது சுயநலக் கூடுகளுக்குள் நிதானமாய் உலா வருகிறார்கள். அவர்களுக்கு விடியல் என்பது கடமைகளின் தொடக்கம்; ஆனால் கவிதாவுக்கோ அது வாழ்நாள் சாபம். ‘இல்லத்துப் பணிகள் யாவும் அவளுக்கே நேர்ந்துவிடப்பட்ட பலிக்கடன்கள்’ என்கிற எழுதப்படாத விதியை அக்குடும்பம் மௌனமாய் அங்கீகரித்திருக்கிறது.

மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்குச் செல்ல வேண்டிய தந்தை, தன் பொறுப்பிலிருந்து நழுவி அப்புறப்படுகிறார். கடமையிலிருந்து நழுவிய அதே கணவன் தான், தேர்வில் மகள் தோற்றபோது ‘பொறுப்பற்றவள்’ என்ற பழியைக் கவிதாவின் மீது மிக எளிதாக வீசி எறிகிறான். பெற்றவளின் உதிரமும் வியர்வையும் அக்குடும்பத்தின் அஸ்திவாரமாய் இருப்பதை எவரும் காண்பதில்லை. பெற்ற மகளோ, ‘மகனுக்கு என்றால் செய்வாய், எனக்குச் செய்ய மாட்டாய்’ என்று தாயின் பாசத்திலும் பாரபட்சக் கறையைப் பூசுகிறாள்.

தோழி வந்தாலும், அடுக்களை வேலைகளே அவளை இறுக்கிப் பிணிக்கின்றன. மதுரையில் நடக்கும் தோழமையின் மறுசந்திப்பு (Reunion) திருவிழா அவளுக்கு வெறும் எட்டாக்கனவு! தான் இல்லாவிடில் இந்த இல்லத்துத் தேர் நகரவே நகராது எனத் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் ‘கூரைப்பல்லியாகவே’ அவளை வாழப் பழக்கியிருக்கிறது இந்தச் சமூகம்.

ஒரே கணத்தில் நாலாபுறமிருந்தும் எழும் தேவைகளின் ஓலம் கவிதாவை நிலைகுலையச் செய்கிறது. கணவன் நண்பனுக்காகக் கேட்கும் ‘பன்னீர் பட்டர் மசாலா’ ஒருபுறம்; மாமியாரின் தண்ணீர் தாகம், மாமனாரின் உத்தரவு என ‘அடுக்களை தேவதையை’ நோக்கி ஏவப்படும் அம்புகள் அவை. ஒரு முழுநீளத் திரைப்படமாய் விரிந்திருக்க வேண்டிய கவிதாவின் ஆயுட்காலக்கதை, காலச் சுருக்கத்தால் இங்கே அடர்த்தியான காட்சிகளாய் நம் நெஞ்சில் வந்து மோதுகிறது.

‘நம் குடும்பத்திற்குத்தானே சமைக்கிறோம், இதில் என்ன சலிப்பு?’ என்று பழம்பெரும் திரைப்படத்து ‘பைரவி’யைப் போலத் தியாகத்தின் இலக்கணமாய் வாழத் தலைப்பட்டவள் கவிதா. தன் உதிரத்தையும் ஆன்மாவையும் இல்லத்தின் அடுப்பில் நெய்யாக வார்த்துக்கொண்டிருந்தவள், சட்டென ‘கோமா’ என்னும் பெருமௌனத்திற்குள் மூழ்கும்போதுதான் கதையின் சக்கரம் திசை மாறுகிறது. அவளது அசையா நிலையும், மூடிய விழிகளும் அக்குடும்பத்தின் சுயநல முகத்தில் அறையும் கேள்விகளாக மாறுகின்றன. ‘நாம் இல்லாவிடில் இந்த இல்லம் இயங்காது’ என்கிற கவிதாவின் எண்ணம் ஒரு மாயை என்பதை அது உணர்த்துகிறது.

இதை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்துத்தான் வந்திருக்கிறோம். நாம் இல்லாமல் இயங்க முடியாத வீடு, மசக்கை எனவோ, குழந்தை பிறப்பு எனவோ அம்மா வீட்டிற்குப் போய்விட்டால், சீரும் சிறப்புமாக இயங்கும்; இது நமக்கும் தெரியும். ஆனாலும் எதோ ஒரு போர்வை நம்மை அழுத்தி வைக்கிறது. ஒரு போர்வைக்குச் சமூகம் என்று பெயர்; இன்னொரு போர்வைக்கு குடும்பம் என்று பெயர். இவ்வளவு ஏன்? பெற்ற அம்மா, உடன்பிறந்த சகோதரி என்று கூட பெயர்கள் உண்டு.

இதை நான் பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். எதோ விபத்து, இரண்டு மாதம் படுக்கையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர் சொன்னால், உடனே அம்மா வீட்டிற்கு மனைவியை அனுப்பும் கணவர்கள் வாழும் ஊர்தான் இது. அல்லது அம்மா இங்கு வந்து பணிவிடை செய்யவேண்டும். கணவனை இழந்த அத்தை, சித்தி என இல்லத்தரசிக்கு யாராவது இருந்தால், அவர்கள் வருவார்கள். இங்கு தோழி வருகிறார். அப்போது கணவர் எல்லா உதவியும் செய்ய ஆயத்தமாகிறார். ஆனால் மனைவி நன்றாக இருந்தால், இவ்வளவு அனுசரணை கிடைக்குமா என்றால் பெரும்பாலான வீடுகளில் இல்லைதான்!

பிள்ளைகளின் அனுசரணை என்பது தாயின் பாசத்தில் மட்டுமல்ல, அவள் அவர்களை எப்படிக் கையாள்கிறாள் என்பதிலும் அடங்கியிருக்கிறது. ‘அளவுக்கு மிஞ்சிய செல்லம்’ கொடுத்து, அவர்கள் கேட்பதையெல்லாம் தட்டாமல் செய்து பழகினால், அந்தப் பிள்ளைகளும் மற்ற சுயநல உறவுகளைப்போலவே தாயின் உழைப்பைச் சுரண்டத் தொடங்கிவிடுவார்கள். கடமைகளையும் சுயசார்பையும் கற்றுத் தராத வளர்ப்பு, பிள்ளைகளையும் ஒரு நாள் அந்த இல்லத்தரசிக்கு எதிரானவர்களாகவே மாற்றிவிடுகிறது.

எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி, எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் பெண்களுக்கு, இந்த உலகம் தரும் பரிசு அலட்சியம் மட்டுமே! அவளது தியாகம் அங்கே ‘கடமை’ என்ற பெயரால் எளிதாகக் கடந்து போகப்படுகிறது; அவளது உழைப்பு ‘அவளது கடமை’ (Taken for granted) என்று கட்டமைக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாகத் தன்னை உருக்கிக் கொள்பவர்களுக்கு, இறுதிவரை எவ்வித உதவியும் பாராட்டும் கிடைப்பதே இல்லை என்கிற சமூக யதார்த்தத்தை, இயக்குநர் கீதா இளங்கோவன் இக்குறும்படத்தில் மிக ஆழமாக, நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார்.

இப்படத்தில் நடித்தவர்கள் எவரும் நடித்ததாகத் தெரியவில்லை; மாறாக நம் பக்கத்து வீட்டு மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எதையுமே நடிப்பு என்று பிரித்தறிய முடியாதபடி, வாழ்வியலை அப்படியே திரையில் வடித்தெடுத்ததே இயக்குநர் கீதா இளங்கோவனின் ஆகச்சிறந்த வெற்றியாகும். அத்தோடு, கவிதாவின் அகக்குமுறலை அப்படியே நமக்குள் கடத்திய ‘நான்தானே’ என்கிற பாடலும், அதன் பின்னணி இசையும் இக்குறும்படத்தின் இதயத்துடிப்பாக மாறி, இசையமைப்பாளரின் திறமைக்கு மகுடம் சூட்டுகின்றன.

வாழ்வில் இத்தனை வலிகளையும் அலட்சியங்களையும் அனுபவித்து, காயம்பட்ட பிறகும், ஒரு பெண் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் அதே சுழலில் உழன்றால், அந்தத் தவறு அவளுடையதேயன்றி அவளைச் சுற்றியுள்ள குடும்பத்தின் மீதல்ல.

ஆயினும், சமுதாயமும் குடும்பமும் அன்பெனும் பெயரால் அவள்மீது போர்த்தியிருக்கும் அந்தப் பாரப் போர்வைகளிலிருந்து, அவளால் அத்தனை எளிதில் சட்டென வெளிவந்துவிட முடிவதில்லை என்பதே கசப்பான உண்மை. இந்தத் தளைகளை உடைத்துக்கொண்டு, தங்களை உணர்ந்து வெளிவரத் துடிக்கும் ‘கவிதா’க்கள் யாவருக்கும் நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

பெரிய திரையில் பெரும் படைப்புகளைக் கையாள்வதற்கும், சமூகத்தின் ஆழமான விவாதங்களை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வதற்கும் உரிய அசாத்தியத் திறன் இயக்குநர் கீதா இளங்கோவனிடம் இருப்பதை இப்படம் பறைசாற்றுகிறது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கும் பெரும் வாய்ப்புகளும் உயரங்களும் அவரைத் தேடி வரட்டும் என்கிற உங்களின் அன்பான வாழ்த்துகளோடு நாமும் கைகோக்கிறோம்.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.