நண்பர்கள் பரிந்துரைக்கும் படங்கள் தவிர, சில நேரம் எங்கேனும் பொக்கிஷம் போலொரு படம் கிடைக்குமென்ற எண்ணத்தில், நானாகவே சில படங்களை, அதன் சுருக்கம் படித்தோ அல்லது அதில் நடித்திருக்கும் நடிகர்களை வைத்தோ பார்ப்பேன். அப்படியொரு விசித்திர வழக்கமென்று வைத்துக் கொள்ளுங்களேன். நானே கண்டுபிடித்தது போலொரு பாவனை, அதிலொரு சந்தோஷம் எனக்கு. அப்படித்தான் ’நடன்ன சம்பவம்’ என்றொரு மலையாளப் படத்தைக் கண்டடைந்தேன். ஓடிடி தளங்கள் வந்தபிறகு மலையாளப் படங்களும் அயல்மொழிப் படங்களும் மிகுதியாகப் பார்க்கும் வழக்கம் எப்படியோ வந்துவிட்டது. அவ்வப்போது டாகுமெண்டரிகளும் பார்க்கப் பிடிக்கும். சீரிஸென்றால் காத தூரம் ஓடிவிடுவேன், பார்க்கத் தொடங்கிப் பிடித்துவிட்டால் வெறி பிடித்துப் பார்ப்பேன்; மலைபோலக் குவிந்திருக்கும் வேலைகளைப் பொருட்படுத்தாது ஒரே நாளில் ஒரு சீரிஸையே பார்த்து விடும் பைத்தியமென்பதால் அந்த ஆபத்தின் பக்கம் செல்லத் தயக்கம்.
நடன்ன சம்பவம், எனக்குப் ப்ரியப்பட்ட பிஜு மேனனும் சூரஜ் வெஞ்சரமூடுவும் நடித்தது. அவர்களைப் பார்த்ததுமே தீர்மானித்தேன், இந்தப் படத்தைப் பார்க்கலாமென்று. பத்திலொன்று பழுதில்லாமல் இருக்கும், அப்படி இந்தப் படம் அமைந்ததில் ஆனந்தம். எப்படி இப்படியெல்லாம் கதை தேடுகிறார்கள் என்று அவர்கள் மேல் சற்றுப் பொறாமையாகக்கூட இருந்தது.
ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் மதிக்கும், உதவி செய்யும் இயல்புடைய ஒருவனைச் சமூகம், சந்தர்ப்பவசத்தால் எப்படியெல்லாம் நினைக்கிறது? பெண்களை மதித்து, அவர்களிடம் இயல்பாகவும் இனிமையாகவும் பழகும் ஒருவனை, பிற ஆண்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்றொரு பார்வையை இத்திரைப்படம் முன்வைக்கிறது. ஆம்பளை என்கிற பாலினத்துக்கு, குடும்ப அமைப்பு வழங்கியிருக்கும் லட்சணத்தை அல்லது அப்படித் தங்களுக்கு வசதியாக மாற்றி வைத்திருக்கும் ஆண்களை இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது.
படத்திற்குள் ஒரு குறுங்கதை போலொரு திருடனின் கதை. அவனைப் பிடித்து வந்தபிறகு, காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பற்றி விசாரிக்கிறார்கள், அவன் மறுக்கிறான். அவனைச் சோதிக்கும்போது அவன் பாக்கெட்டில் ஒரு கத்தியைக் கண்டெடுக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு அவன் மீது அந்த வழக்கைப் பதியும்படி காவல் ஆய்வாளர் சொல்கையில், “இனி என் மீது பாலியல் வன்முறைப் புகாரையும் பதியுங்க ஐயா, அதற்குரிய ஆயுதமும்தான் என்கிட்ட இருக்கே” என்பான் அந்தத் திருடன். முடிந்தால் இந்தப் படத்தைப் பாருங்களேன்.
*
திருவண்ணாமலையில் ’தானிப்பாடி’ என்னும் ஊரில்தான் என் ஆசிரியர் பணி தொடங்கியது. அதனால் அந்த ஊரும் அதன் மாணவர்களும் எனக்கு மிக முக்கியமானவர்கள். என்னை, நல்லாசிரியராக மாற்றியவர்கள் அந்த ஊர் மாணவர்கள்தான். இப்போதும் கல்யாணம், குழந்தைக்குப் பெயர் வைக்க என்று ஏதாவது ஒரு விஷயத்திற்காகப் பேசுவார்கள். ஃபெங்கல் புயல் காரணமாகப் பெய்த மழை நம்மைப் பயமுறுத்தித் தீர்த்தது இல்லையா, அவர்களுக்குத் தொடக்கத்தில் ஒரே சந்தோஷம். அங்கு சுற்றிலும் வயல்வெளி இருப்பதால் அங்கு மழையின் தேவையோ மிக அதிகம்; ஆனால் எப்போதும் அங்கு மழை குறைவாகவே இருக்கும்.
மழை தொடங்கியபோதே ஒவ்வொருவராகத் தொலைபேசியில் அழைத்து, என்னை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் திருவண்ணாமலையில் அதிக மழையென்று செய்தி பார்த்தபோது நான் பயந்து போனேன். அதிலும் முகநூலில் சிலர் பகிர்ந்திருந்த படங்களையெல்லாம் பார்த்து அதிர்ந்து, நான் அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றால், என் மாணவர்களெல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தனர். மூன்று நாள்கள் கழித்து அங்கே, ஆசிரியராகப் பணிபுரியும் என் மாணவர் ஒருவர் என்னுடைய தவறிய அழைப்பைப் பார்த்து அழைத்தார். அவர் சொன்ன தகவல்களெல்லாம் எனக்குச் செம்பரம்பாக்கம் ஏரிக்காலத்தை நினைவூட்டின. தானிப்பாடி, சாத்தனூர் அணைக்கு அருகிலிருக்கும் பாலம். சாத்தனூர் அணையில், தகுந்த முன்னறிவிப்பின்றி 2 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியிருக்கிறார்கள். இதனால், அவர்களின் வீடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன. மாடுகளே அடித்துச் செல்லப்படும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு. மூன்று மாதத்துக்கு முன்னர் 16 கோடிச் செலவில் கட்டப்பட்ட ஆற்றுப் பாலமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. மாணவர்கள், நீரால் அரிக்கப்பட்ட தார் ரோடிலிருந்து விழுந்து கிடக்கும் மரங்கள், மிதக்கும் பாலத்தின் சிதறல்கள் என நிழற்படங்களாலும் துணுக்குப் படங்களாலும் என் அலைபேசியை நிறைத்து விட்டார்கள். நான் அங்கு பணிபுரிந்த காலத்தில், அவர்களில் பலரின் வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். பெரிய, சிறிய குடிசை வீடுகளும் சிறிய கல்வீடுகளும்தான் பெரும்பாலும் இருக்கும். அந்த இடங்களின் தற்போதைய நிலையைப் பார்த்தபோது உண்மையில் வருத்தமாக இருந்தது. மீள, காலம் பிடிக்கும்.
*
சமயத்தில் எதையாவது தேடி, எதையாவது படிப்பேன். அப்படி, ஸ்டீபன் கேரி ப்ளம்பெர்க் என்றொரு மனிதரைப் பற்றிப் படிக்கக் கிடைத்தது. உலக வரலாற்றில் கின்னஸ் உலக சாதனைச் சான்றளிக்கப்பட்ட மிகப் பெரிய புத்தகத் திருடர்(ன்) அவர். அமெரிக்கா, கனடா முழுவதும் உள்ள முன்னூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக நூலகங்களில் இருந்து 23,000 முதல் 26,000 வரைக்குமான அரிய புத்தகங்கள், ஆவணங்களைத் திருடியுள்ளார்.
1990ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் அயோவாவில் உள்ள ஒட்டும்வா நகரில் 41 வயதான ப்ளூம்பெர்க்கின் மூன்று மாடி, 17 அறைகள் கொண்ட வீட்டை, FBI (Federal Bureau of Investigation) அதிகாரிகள் சோதித்துள்ளனர். சோதனையில், பல அரிய புத்தகங்களும் கையெழுத்துப் பிரதிகளும் கிடைத்தன. சில புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் விலைமதிப்புடையவை. அங்கிள் டாம்ஸ் கேபினின் முதல் பதிப்பு நகல், 1480இல் கையால் அச்சிடப்பட்ட பைபிள், கொலம்பஸுக்கு முந்தைய 15ஆம் நூற்றாண்டு உலக வரலாறு, மில்டனின் பாரடைஸ் லாஸ்ட்டின் முதல் பதிப்பு எனப் பல புத்தகங்கள் நிரம்பிய அலமாரிகள், ஒவ்வோர் அறையிலும் சீரான முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குளியலறைகளிலும் கழிப்பறைகளிலும்கூடப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்ததோடு, அவை புவியியலின்படி நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப் பட்டிருந்தனவாம். உதாரணமாக, வீட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அறை, நியூயார்க்கையும் அதனுடன் தொடர்புடைய அனைத்துப் புத்தகங்களையும் கொண்டிருந்திருக்கிறது. மேற்கு நோக்கிச் சென்றால் அங்குள்ள அறையில், கலிபோர்னியா தொடர்பான நூல்களைக் காணலாம். இரண்டாவது மாடிக் குளியலறையானது மாநிலங்களுக்கு இடையேயான பட்டியல் இடமாம். ப்ளம்பெர்க் தன் வாசிப்பின் பெரும்பகுதியை இங்கே அமர்ந்துதான் படிப்பாராம். திருடர், சிறப்பாகவே பாதுகாத்திருக்கிறார்.
அதற்கு முந்தைய இருபது ஆண்டுகளில் ப்ளம்பெர்க் நாடு முழுவதும் சுற்றி, ஹார்வார்ட் பல்கலைக்கழகம், ஒரிகான் பல்கலைக்கழகம், ட்யூக் பல்கலைக்கழகம், அயோவா பல்கலைக்கழகம் இப்படிப் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் இருந்தும் அருங்காட்சியகங்கள், தனியார் சேகரிப்புகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான புத்தகங்களைத் திருடியுள்ளார். இவரைப் பிடித்த பிறகு, அவருடைய வீட்டிலிருந்து 19 டன்கள் எடையுள்ள நூல்களை 17 பேர் இரண்டு நாள்கள், 879 அட்டைப் பெட்டிகளில் வைத்து எடுத்து வந்தனர். இவற்றை எடுத்துச் செல்ல, இரண்டு 40 அடி டிராக்டர் ட்ரெய்லர்கள் பயன்படுத்தப்பட்டன. இவரைப் பிடிப்பதற்கான ஆபரேஷனுக்கு ‘ஓமாஹா திட்டம்’ என்று பெயரிட்டிருந்தனர்.
அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது வீட்டில் சுமார் 50,000 பழங்காலப் பித்தளைக் கதவுக் கைப்பிடிகள் இருந்தன. விக்டோரியன் கட்டிடக்கலையின் மீதான அவரது ஆர்வம், இத்தகைய பொருள்களைச் சேகரிப்பதாகத் தொடங்கி, பின்னர் புத்தகங்களில் நிலைத்திருக்கிறது. புத்தகங்கள் எங்கிருந்து திருடப்பட்டவை என்கிற ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்ததால், அவற்றைத் திரும்ப அதே இடங்களில் வைக்கப் பெரும்பாடு பட்டிருக்கின்றனர் அதிகாரிகள். பின்னர், தனிக் கோப்புகளில் நூல்களில் இருந்து பிரிக்கப்பட்ட அதன் அடையாளங்களை ப்ளும்பெர்க் சேகரித்து வைத்திருந்ததை FBI கண்டறிந்தது. 1993 வரையிலும் சுமார் 4000 புத்தகங்களின் உரிமை கோரப்படாமல் இருந்தபோது, அந்த வழக்கில் கிரைட்டன் நூலகர்களின் பல மணி நேர உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் FBI அந்தப் புத்தகங்களை ரெய்னெர்ட் நூலகத்திற்கு வழங்கியது.
ப்ளும்பெர்க், ஒரு பிப்லியோ க்லெப்டோமேனியா (Biblio cleptomania). இது புத்தகங்களைத் திருடுவதற்கான கட்டுப்பாடற்ற தூண்டுதலை வழங்கக்கூடிய ஒரு நோய். குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2,00,000 டாலர் அபராதத்துடன் 71 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டிசம்பர் 29, 1995 அன்று அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் பின்னரும் பலமுறை அவர், பழங்காலப் பொருள்கள், புத்தகங்களைத் திருடித் திருடி அகப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் சிறைச்சாலையில் அவருடைய மனநோய்க்கு மருத்துவ வசதி வழங்கப்பட்டிருந்தும் பலனளிக்கவில்லை. இங்கும், புத்தகக் கண்காட்சி தொடங்க இருக்கிறது. புத்தகத் திருட்டை ஆதரிக்கும் ஒரு சிலர் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ப்ளும்பெர்க்கைத் தெரியுமா என்று தெரியவில்லை.
(தொடரும்)
படைப்பாளர்
தி. பரமேசுவரி
‘எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், ‘ம.பொ.சி பார்வையில் பாரதி, சமூகம் – வலைத்தளம் – பெண், சொல்லால் அழியும் துயர் ‘ஆகிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள், மற்றும் ‘ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ஜோ.டி.குரூஸின் கொற்கை நாவலை முன்வைத்து ‘கலிகெழு கொற்கை’ என்னும் கட்டுரைத் தொகுப்புகளையும் ‘தமிழன் குரல்’ என்ற இதழை மூன்று தொகுதிகளாகவும் தொகுத்துள்ளார். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கின்றார்.