புதுவை திரும்பிய பிறகு தனியார் மருத்துவமனையில் ஏ.வி.கிராஃப்ட் மூலம் டயலிசிஸ் செய்வது ஆரம்பமானது. அதற்கு முன் முன்னெச்சரிக்கை காரணமாக கிராஃப்ட் மூலம் டயலிசிஸ் செய்வதில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை அங்கே எங்களிடம் விலாவாரியாக விளக்கினார்கள்.

“டயலிசிஸ் செய்ய கிராஃப்டில் ஊசி குத்தும் இடத்தில் ரத்தக் கசிவு ஏற்படலாம். ஃபிஸ்டுலாவுடன் ஒப்பிடும்போது கிராஃப்டுக்கு ரத்தக்குழாய் விரிவாக்கச் சிகிச்சை (angioplasty), ரத்த உறைவு அகற்றும் சிகிச்சை (thrombectomy) அதிகமாகத் தேவைப்படலாம். கிராஃப்ட் இணைக்கப்பட்ட இடத்தில் ரத்தக்குழாய் சுருங்கி, டயலிசிஸ் செய்வதற்குத் தேவையான ரத்தம் இயந்திரத்துக்கு வரும் அளவு (Blood flow) குறையலாம். கிராஃப்ட் குழாய்க்குள் ரத்தம் கட்டியாக உறையக்கூடிய ஆபத்துண்டு. உடலுக்குள் செயற்கைக் குழாய் இருப்பதால் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். கடுமையான தொற்று ஏற்பட்டால் கிராஃப்டை அகற்ற வேண்டிய  நிலை ஏற்படலாம்.”

எல்லாவற்றையும் கேட்டு முடித்த பிறகு, ‘அந்த ஃபிஸ்டுலா இன்னும் சில ஆண்டுகள் நன்றாக வேலை செய்திருக்கக் கூடாதா? இத்தனை பிரச்னை உள்ள இந்த கிராஃப்ட் எத்தனை நாள் தாங்குமோ?’ என்பதை நினைத்துக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.   

நாங்கள் பயந்த மாதிரியே டயலிசிஸ் ஆரம்பித்த நான்காவது மாதத்தில் ஒருநாள் இவருக்கு விட்டுவிட்டு ஜூரம் வர ஆரம்பித்தது. டயலிசிஸ் செய்த மருத்துவமனையிலேயே மருத்துவரைப் பார்த்தோம். சளி ஜுரம் என்று சொல்லி ஒரு வாரத்துக்கு மாத்திரை எழுதிக் கொடுத்தார்.

மாத்திரை முடிந்த பின்னும் ஜுரம் வருவது நிற்கவில்லை. ‘ஏவி கிராஃப்டில் ஏற்பட்ட தொற்று காரணமாக இருக்குமோ?’ என்கிற பயம் அதிகரித்தது. ‘கடுமையான தொற்று ஏற்பட்டால் கிராஃப்டை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்’ என்று ஏற்கெனவே சொல்லியிருந்தது, பயத்தை இன்னும் அதிகப்படுத்தியது. மீண்டும் அதே மருத்துவரிடம் சென்றோம்.

“ஒரு வாரம் மாத்திரைச் சாப்பிட்டு முடித்துவிட்டார். ஆனால், இவருக்குச் சளியோ இருமலோ இல்லை டாக்டர். இப்போதும் விட்டு விட்டு ஜுரம் வருகிறது” என்றேன்.

நான் சொன்ன எதையுமே காதில் வாங்காமல், மிகவும் அலட்சியத்துடன் மீண்டும் ஒரு வாரம் அதே மாத்திரைகளைச் சாப்பிடச் சொல்லி, சீட்டை எழுதி நீட்டினார். அவர் முன்னாலேயே அதைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசி எறிய வேண்டும் என்கிற அளவுக்கு எனக்கு ஆத்திரம் வந்தது. ஆனால் டயலிசிஸிக்கு அந்தத் தனியார் மருத்துவமனைக்குத்தான் மீண்டும் சென்றாக வேண்டுமென்பதால், கஷ்டப்பட்டுக் கோபத்தை அடக்கிக் கொண்டேன்.

மறுநாள் கிளம்பி வழக்கமாக நாங்கள் பார்த்த சென்னை மருத்துவரிடம் சென்றோம். அவர் சோதனை செய்தபோது ஜு இல்லை. ஆனாலும் நான் சொன்னதற்கு மதிப்புக் கொடுத்து இவரை மருத்துவமனையில் சேர்த்தார். அதற்குப் பிறகு இரண்டு நாள் இவருக்கு ஜுரமே வரவில்லை.

“ஜீபூம்பாவா? மருத்துவமனையில் சேர்ந்தவுடன் ஜுரம் பயந்து கொண்டு ஓடிவிட்டதா?” என்று மருத்துவர் சிரித்தார். ஆனாலும் டிஸ்சார்ஜ் செய்யாமல் “இன்னும் ஒரு நாள் பார்க்கலாம்” என்றார்.

மூன்றாம் நாள் மாலை இவருக்குத் திடீரெனக் கடுமையான ஜுரம் வந்தது. அதற்குப் பிறகு மளமளவென்று இவருக்குப் பல்வேறு ரத்தச் சோதனைகள் செய்யப்பட்டன. டயலிசிஸ் இயந்திரம் சுத்தமாகப் பராமரிக்கப்படவில்லை என்றால், மற்ற டயலிசிஸ் நோயாளிகளிடமிருந்து மஞ்சள் காமாலை (Hepatitis B, Hepatitis C) போன்ற ரத்தம் மூலம் பரவக்கூடிய நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகம். எனவே அதற்கான சோதனைகளையும் செய்தார்கள். ஆனால் எல்லாச் சோதனை முடிவுகளும் ‘நார்மல்’ என்றே வந்தன.

மார்பு எக்ஸ்ரே, MRI, CT ஸ்கேன் என ஒவ்வொரு சோதனையாகச் செய்து முடித்தபோதுதான், தண்டுவடப் பக்கத்தில் இவருக்குக் காசநோய் (TB) பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆறு மாதங்களுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை எடுக்க வேண்டுமென்று சொல்லி அதற்கான மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார் மருத்துவர். புதுவை மருத்துவமனையில் டயலிசிஸ் செய்த போது அங்கே இருந்த காசநோயாளியிடமிருந்து காற்றின் மூலம் இவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு என்றார். ஒரு வாரத்துக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு புதுவை திரும்பினோம்.

நல்லவேளையாக கிராஃப்டில் தொற்று இல்லை என்றறிந்து நிம்மதி. ஆனால் காசநோய் இருந்தால் மாற்றுச் சிறுநீரகம் பொருத்த முடியாதாம். எனவே Cadaver சிறுநீரகக் காத்திருப்புப் பட்டியலில் பெயர் இருந்தாலும் ஆறு மாதம் இவர் பெயர் inactive statusஇல் வைக்கப்படும்; ஆறு மாதம் சிகிச்சை முடிந்து மீண்டும் எல்லா மருத்துவச் சோதனைகளும் செய்து உடல் தகுதி பெற்றால் மட்டுமே பட்டியலில் பெயர் ஆக்டிவ்வாக மாறும் என்றார்கள். பட்டியலிலிருந்து பெயரை நீக்கிவிட்டுச் சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் புதிதாகப் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே என்பதை நினைத்துக் கொஞ்சம் ஆறுதலடைந்தோம்.

மாற்றுச் சிறுநீரகம் கிடைக்க இரண்டாண்டு ஆகுமென்று ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள். இப்போது மேலும் ஆறு மாதம் நீண்டது.

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.