ஆண்,பெண், திருநர், குழந்தைகள் – எல்லாருக்குமான பூமியில் ஆண் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செல்ல முடியும்; வாழ முடியும். பெண்ணுக்கு/மற்றவர்களுக்கு அப்படி அல்ல; அது யாரால்? எதனால்? ஏன்?
ஃ
வளர்ந்த பெண் நிர்பயா ஓடும் பஸ்ஸில் வல்லுறவு செய்யப்பட்டு வன்கொலை, எட்டு வயது ஆசிஃபா ஒரு போலீஸ் உள்பட ஏழெட்டு மத வெறியர்களால் வல்லுறவு செய்து வன்கொலை, மூன்று வயது ஹாசினி வல்லுறவு செய்யப்பட்டு வன்கொலை, எட்டு மாதக் குழந்தை உறவினரால் வல்லுறவு செய்யப்பட்டு கொலை, பனிரெண்டு வயது நந்தினி ஜாதிவெறியர்களால் வல்லுறவு செய்யப்பட்டு வன்கொலை, அயனாவரம் அபார்ட்மெண்ட்டில் 20க்கும் மேற்பட்டவர்களால், பனிரெண்டு வயது சிறுமி வல்லுறவு செய்யப்பட்ட வழக்கு, பொள்ளாச்சி வழக்குகள்…
மேலே சொன்ன அனைத்தும், பெண்களைத் தெய்வமாகப் போற்றுகிற, கலாச்சார, பாரம்பரியமிக்க நம் இந்தியத் திருநாட்டில் நடந்தவை; பெண்களுக்கு, சிறுமிகளுக்கு – ஆணால் / ஆண்களால் நடந்தவை; மீடியாவின் பெருங்கவனம் ஈர்த்தவை; மீடியாவின் கவனத்திற்கு வராமலும், குற்றங்களாகப் பதிவு செய்யப்படாமலும் நடந்து கொண்டிருப்பவை இன்னும் ஏராளம். 2012ல் நடந்த நிர்பயா வன்கொடுமை, கொலை வழக்கில், மீடியா வெளிச்சம் காரணமாக இப்போது ஓரிருவருடங்கள் முன்புதான் தீர்ப்பு வந்திருக்கிறது.
ஒரு குற்றத்திற்கான தண்டனை என்பது குற்றத்தைக் ஒழிக்கத்தானே? பிறகும் ஏன் இத்தனைக் குற்றங்கள்?
தவறு செய்தவர் யார், அவரை எப்படித் திருத்த வேண்டும் என்றுதானே நமது தீர்ப்புகள் இருக்க வேண்டும்? ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மட்டும், பாதிக்கப்பட்ட பெண்ணையோ, சிறுமியையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தையோ குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஆண்கள் நாட்டின் பண்பாட்டைப் புரிந்துகொள்ளாததையே இது காட்டுகிறது.
“அந்த பெண் ஏன் இரவில் தனியாகப் போனாள்?”, “ஏன் ஆண் நண்பருடன் போனாள்?”, “அவள் உடுத்திய உடை எப்படி நவ நாகரிகமாக இருந்தது?”, “அவள் ஏன் ஆங்கிலத்தில் பேசினாள்?”, “எதற்குச் சத்தமாகச் சிரித்தாள்?”, என்று தன் குற்றங்களை மறைக்க கேள்விகளை எழுப்புகிறார்கள்.
அவளுடைய மதம், இவர்களுடைய மதத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அந்த மதத்தினருக்குப் பாடம் புகட்ட அவளை வன்புணர்வு செய்தார்கள். (வன் புணர்வுகளுக்கு அப்புறம், இரண்டு மதத்தினரின் கொள்கைகளும் ஒன்று பட்டுவிட்டனவா?); அந்த ஜாதிக்காரர்களுக்கு புத்தி புகட்ட, அந்தப் பெண்ணை வல்லுறவு செய்தார்கள் (பிறகு அந்த ஜாதியும் இந்த ஜாதியும் திருந்திவிட்டதா?). மேற்சொன்னவைகளில் இருந்து தெரிவது ஒன்றுதான். இவர்களுக்கு யார் மேல், எதற்கு, எதனால் கோபம் அல்லது வன்மம் என்றாலும், கை வைப்பதும், வேட்டையாடிக் கொன்று தீர்ப்பதும் பெண்களைத்தான்.
மேனாள் நீதியரசர் சந்துரு எழுதிய ‘சட்டத்தால் யுத்தம் செய்’ புத்தகத்தில் ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்.
//மகிளா கோர்ட்டு என்று அழைக்கப்படும் பெண்களுக்கான தனி நீதிமன்றங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உண்டு. முகவை மாவட்டத்திற்கான நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பங்கேற்கிறார். நிர்பயாவிற்கு நடந்த கொடுமைகளுக்காக நாடே கொதித்தெழுந்திருந்த சமயம். விழா உரையில் நீதிபதி கூறுகிறார்: ‘பெண்கள் கண்ட நேரத்தில் கண்ட இடத்திற்கு செல்லாமலிருந்தால் அச்சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும்’. கேட்டவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. பேச்சின் சுருக்கம் அடுத்தநாள் ‘இந்து’ பத்திரிகையில் வெளிவருகிறது.
டெல்லியிலுள்ள மூத்த பெண் வழக்கறிஞரொருவர் அன்றைய தலைமை நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்.
அக்கடிதத்தில், மகாத்மா காந்தியின் உரையிலிருந்து ஒரு மேற்கோள் சுட்டிக்காட்டப்படுகிறது. ‘என்றைக்கு இந்தியாவில் ஒரு பெண் தங்க நகைகளுடன் நடுநிசியில் வீதியில் அச்சமின்றி உலாவர முடியுமோ, அன்றுதான் இந்தியா சுதந்திரம் பெற்றதாகக் கருத முடியும்’.
பெண்கள் என்ன செய்ய வேண்டும்; எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறும் அதிகாரம் அந்த நீதிபதிக்குக் கிடையாது. நீதிபதி கூறியது உண்மை என்றால், மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பார்களானால், மோட்டார் வாகன விபத்துகளே நடக்காது என்றுகூடக் கூறலாம்’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.//
ஒரு மெத்தப் படித்த நீதிபதியின் பார்வையே, பெண்கள் விசயத்தில், இத்தனை பிற்போக்கானதாக இருக்கும்போது, மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?
ஒரு தண்ணீர் டம்ளரைக் கீழ விட்டுவிட்டால் கூட என்ன சொல்கிறோம்? ‘பார்த்து எடுத்துப் போகக் கூடாதா’ என்று எடுத்துப் போகிறவருக்குத்தான் அறிவுரை சொல்கிறோம். தண்ணீர் டம்ளரைக் குற்றம் சொல்வதில்லை. ஏன், ஆண்கள் அனைவருமே 6 மணிக்கு கதவடைத்து வீட்டிலிருந்து விட்டால், பெண்களுக்கெதிரான குற்றங்களே இல்லாமலாகிவிடும்தானே? அதையேன் யாரும் சொல்வதில்லை?
இந்த சமூகம் குற்றவாளியின் பார்வையில் இருந்துதான் பெண்கள்/குழந்தைகளுக்கெதிரான குற்றங்களைப் பார்க்கும் என்றால், இந்த ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளிகள்தானே! குற்றம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்பதற்காக ஒட்டு மொத்த ஆண் சமுதாயமே, அவர்களை நேரடியாகவோ/மறைமுகமாகவோ காப்பாற்றுகிறது என்றால், குற்றத்திற்கு அதுவும் துணைபோகிறது என்றுதானே அர்த்தம்?
இதே விசயத்தை இன்னொரு வகையில் யோசித்துப் பார்க்கலாம்…
வெளியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. சரி. யாரால் பாதுகாப்பில்லை? குற்றம் புரியும் ஆண்களால். அந்த ஆண்கள் எங்கிருந்து வந்தவர்கள்? வீட்டிலிருந்துதானே? அப்போது வீட்டில் மட்டும் எங்கிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்?
இதிலிருந்து தெரிவது ஒன்றுதான். வீட்டில் பெண்களுக்கு என்ன நடந்தாலும், நடப்பது உடனே யாருக்கும் தெரிய வராது. அதுவே வெளியில் ஏதாவது நடக்கும்போது, ஆண்கள் செய்யும் அக்கிரமம் உடனடியாக உலகத்திற்கு தெரிய வருகிறது. அதனால்தான், தன் தவறுகள் உலகத்துக்குத் தெரிய வரவே கூடாது என்றுதான், ‘பெண்கள் வீட்டிலே இருப்பது பாதுகாப்பு’ என வேப்பிலை அடிக்கிறார்கள். நிர்பயாவோ, ஆசிஃபாவோ, பிரியங்கா டாக்டரோ, நந்தினியோ – வெளியே போனதால் பாதுகாப்பில்லாமல் இப்படி நடந்து விட்டதாகச் சொல்கிறார்கள் இல்லையா?!?
வெளியே எங்கும், பகலிலேயே பஜ்ஜி கடை, டீக்கடை, ஆட்டோ ஸ்டாண்டு, எல்லா இடத்திலயும் ஆண்கள் கும்பல்தான். ஒப்பிட்டுப் பார்த்தால், இருபது வீதப் பெண்கள் வெளியே பகலில் தென்படுகிறார்கள் என்று வைப்போம். பட்டப் பகலில் எண்பது வீதம் ஆண்களும் 20வீதம் பெண்களும் வெளியில் உலவுகிறார்கள். அதுவே இரவு ஒன்பது, பத்து, பதினோரு மணிக்கு வெளியில் போய்ப் பாருங்கள். 1-5 வீதம் பெண்கள்தான் நடமாடுவார்கள். அதுவும் தக்க துணையுடன். இல்லையா???
இதை அப்படியே மாற்றி இப்படி யோசித்துப் பாருங்கள்.
நிர்பயாவோ, ஆசிஃபாவோ, பிரியங்கா டாக்டரோ, நந்தினியோ – அந்தப் பெண்கள் வெளியே வரும்போது, சாலைகளில் எப்போதும் கூடவே நிறைய பெண்கள் இருக்கிறார்கள்; காலையிலும், மாலையிலும், இரவிலும், எப்போதும், எங்கும், எங்கெங்கும் பெண்கள் இருக்கிறார்கள். என்னவாகும்???
ஆண்கள் செய்யத் துணிவார்களா? இல்லை அல்லவா? குற்றம் புரியும் ஆண்களின் குற்ற மனப்பான்மையால்தான் குற்றங்கள் நடைபெறுகின்றன; பெண்கள் வெளியே வருவதால் அல்ல. அது வீடாக இருந்தாலும் சரி, வெளியாக இருந்தாலும் சரி!
பெண்கள் அதிகமும் வெளியே வர வரத்தான், பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறையும், வன்முறைகளும் குறைய ஆரம்பிக்கும். வெளியே வர பெண்கள் பயப்படுவது என்பது, குருவிக் கதை போலத்தான். ஒரு மரக்கிளையில் பத்து குருவிகள் அமர்ந்திருக்கின்றன. ஒரு குருவியைச் சுட்டால், மரக்கிளையில் மீதி எத்தனைக் குருவிகள் இருக்கும்? ஒன்பது குருவிகள் என்றால், பதில் தவறு. சுட்டவுடன் எல்லாக் குருவிகளும் பறந்திருக்கும். இதே சைக்காலஜிதான் பெண்களை வெளியே வரவிடாமல் செய்திருக்கிறது.
பெண்கள் வட்டம் பெரிதாகப் பெரிதாக, (குற்றவாளி) ஆண் அதற்குள் வரப் பயப்படுவான். குற்றம் செய்ய அஞ்சுவான். எனவே பெண்கள் வெளியே வர, வரத்தான் குற்றங்கள் குறையும். எதையாவது சாக்கு வைத்து அல்லது காரணமே இல்லாமல், எப்படி ஆண்கள் எல்லாரும் பொதுவாக, ‘நாய்க்கு வேலை இல்ல, நிக்க நேரமில்ல’ என்று வெளியிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்களோ அதே போல, பெண்கள் வெளியே வரவேண்டும்.
-எதையும் கேள்வி கேள்
தொடரும்…
தொடரின் முந்தைய கட்டுரை:
படைப்பு
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.
ஆம் பொதுவெளி பால் பேதமின்றி எல்லோருககும் பொதுவானதென்பதை பெண்கள் உணரனும்.
அதிகம் வெளியே வரனும்.