பதின் பருவத்திற்கு முந்தைய பருவம் (Pre-Teen)

பெற்றோர்களாகிய நாம், நமது பிள்ளைகளிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? அந்த எதிர்பார்ப்பு சரியா, தவறா? அந்த எதிர்பார்ப்பை எப்படியாக வெளிப்படுத்துகிறோம்? அது அவர்களுக்கும் நமக்கும் மகிழ்வைத் தருவதாக அமைந்திருக்கிறதா?

படிப்பு, உழைப்பு, குண நலன்கள், செயல்பாடுகள், செல்வம் ஈட்டுதல் ஆகியவற்றில் மிகச் சிறந்த இடத்தில் அவர்கள் வர வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு, தின வாழ்வில் நாம் என்னென்ன செய்கிறோம்? அவர்களுக்கென்று ஒரு கனவிற்கான இடத்தைத் தருகிறோமா? பதற்றமின்றி இவ்வுலகை, நம்முறவை, இவ்வாழ்வைக் கொண்டாடக் கற்றுத் தருகிறோமா?

அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? வெறும் பொருட்களா? நமது அன்பா? பிள்ளைகள் திசை மாறினால், மடை மாற்றுவது யார் பொறுப்பு?

இது யாருடைய வாழ்க்கை? பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் நம் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்த்தல் சரியா? அதே போல், பிள்ளைகளும் பெற்றவர்களை மற்ற பெற்றோர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்தானே? அது சரிதானா?

நாம் ஏன் அவர்களது ஹீரோ அல்லது ஹீரோயினாகவே எப்போதும் இருக்க விரும்புகிறோம்? அது சரிதானா? ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து விட்டதாலேயே நமக்கு அந்தக் குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்யும் உரிமையைப் பெற்று விடுகிறோமா? நமக்கு ஒரு குழந்தையை அதன் வாழ்க்கை முழுவதும் வழிநடத்தத் தேவையான தலைமைப் பண்பு உள்ளதா?

இவை அனைத்தும் பெற்றோர்கள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். விடை ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

இப்போதைய நம் வாழ்க்கையில், கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம், உதிரிக்குடும்பம் எனப் பலவிதமான குடும்பங்கள் உள்ளன. பல குழந்தைகள் உள்ள குடும்பம், இரு குழந்தைகள் உள்ள குடும்பம், ஒரு குழந்தை உள்ள குடும்பம், குழந்தைகளே இல்லாத குடும்பம், தத்தெடுத்த குழந்தைகள் உள்ள குடும்பம் என அதிலும் கிளைவாரியாக உள்ளன.

ஒவ்வொரு வகை குடும்பத்திலுமே ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறைகள் உள்ளன. இவை தவிர, ஏற்பாட்டுத் திருமண முறையில் உள்ள குடும்பம், சேர்ந்து வாழ்தல் அடிப்படையில் அமைந்த குடும்பங்கள், காதல் திருமண குடும்பங்கள், எல்லா வகைத் திருமணங்களிலும் பிரிந்து வாழும் குடும்பங்கள், விவாகரத்தான குடும்பங்கள், யாராவது ஒருவர் மரணித்து தனித்து வாழும் குடும்பங்கள், மறுதிருமணம் செய்த குடும்பங்கள் என உள்ளன. இவை தவிரவும் பால் புதுமையினர் தொடர்பான குடும்பங்கள் உள்ளன.

அனைத்து வகை குடும்பங்களிலும் சரி தவறு எதுவுமில்லை ; இது அவரவருக்கு வாய்த்தது அவ்வளவுதான். அவரவருக்கு வாழக் கிடைத்ததில் எந்தளவு சிறப்பாக வாழ்கிறார்கள் என்கிற பார்வைதான் முக்கியம்; இந்தக் குடும்பத்தில் இது கிடைக்கிறது அதனால் இதுவே சிறந்தது; அந்தக் குடும்பத்தில் அது கிடைக்கவில்லை எனவே, அது தவறானது, குறைபாடானது, ஆரோக்கியமற்றது என ஒப்பிட, எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை கிடைக்கவில்லை என்பதை உணர வேண்டும். பாதிக்கப்பட்டவர் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கும் சிந்தனை முறை வேண்டும். அப்போது, பாதிக்கப்பட்டவரை எதற்கும் காரணமாக ஆக்கும் போக்குக் குறையும்.

எத்தகைய குடும்ப அமைப்பாக இருந்தாலும், குழந்தைகள் வளர்ப்பில் அன்பும் ஆதரவும் கொண்டு அமைய வேண்டும் என்பதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும்.

குழந்தைகளை, பெற்றோர் சொல்வதைக் கேட்டு வளர்பவர் அல்லது பெற்றோர் சொல்வதற்கு எதிராக வளர்பவர் எனக் குறைந்தபட்சம் இருவகையாகக் கொள்ளலாம். பெற்றோர் சொன்னதற்காக, தவறானதைக்கூடக் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் பிள்ளைகள் உண்டு; பெற்றோர் சொன்னதற்காகவே, அதற்கு எதிரானதைச் செய்யும் குழந்தைகளுண்டு; இரண்டு வகையான பிள்ளைகளும் இவற்றிற்கு விலையாக வாழ்வையே தருவார்கள்; அல்லது வாழ்வையே பெறுவார்கள். இரண்டிலுமே தனது வாழ்வை தான் வாழ்ந்ததாக இருப்பதில்லை. மேலும், இருவருமே பெற்றோரையே காரணம் காட்டுவார்கள்.

யார் எது சொன்னாலும் தீர ஆலோசித்து, தனது விருப்பம், தன்னால் செய்ய முடிந்தது, தனது கனவு என்று யோசிக்கிற குழந்தைகள் தனக்கான வாழ்வை வாழ்வார்கள்.

இவ்வாறாக, குழந்தைகளைத் தாமே சிந்திப்பவர்களாக உருவாக்குகையில், அவர்கள் நம்மை விடவும் நல்லது கெட்டது தெரிந்தவர்களாக, தமது பிரச்னைகளைச் சரியாகக் கையாள்பவர்களாக உருவாவார்கள்.

எந்த ஒரு நிகழ்விலும் செயல், விளைவு என இரண்டும் உண்டு. பெற்றோர் குழந்தை வளர்ப்பிலும், குழந்தைகளது செயலுக்குப் பெற்றோரின் எதிர்செயல்; பெற்றோரின் செயல்களுக்குப் பிள்ளைகளின் எதிர்வினை என இரண்டு பேரும் சேர்ந்தே உருவாகிறார்கள்.

நாம் வேறான விளைவுகளை எதிர்பார்க்கிறோம் என்றால், வேறான செயல்களைச் செய்ய வேண்டும். ஒரே வித செயல்முறையில் வேறு வேறு விளைவுகளை எதிர்பார்க்க முடியாது; சில செயல் முறைகள் விளைவுகளைத் தரக் காலமெடுக்கும். அவற்றைப் பொறுமையாகச் செய்ய வேண்டும்.

பத்து வயது வரை அடிமை, தோளிற்கு மேல் வளர்ந்தால் தோழர், 5இல் வளையாதது 50இல் வளையுமா என்பார்கள். முதல் பத்தில், முதல் சுற்று வாழ்வில் கற்கும் பழக்கங்கள் இன்றியமையாதவை.

உடல் பயிற்சிகளோ ஓட்டப் பயிற்சியோ தற்காப்புக் கலைகளோ உடல் உறுதிக்கு ஒன்று; பாடல், இசைப் பயிற்சி, ஓவியம் மற்ற கலைத்திறன்கள் பயிற்சியோ மனதிற்கு ஒன்று என வாழ்க்கை என்பதைக் கற்றலாக, குழந்தைக்குத் தருவது நல்லது.

சில பெற்றோர், கீழே தெரியாமல் விழுந்த குழந்தையைக்கூட ‘விழுவியா, விழுவியா’ என்று போட்டடிப்பார்கள்.

தனக்கு இஞ்சினியர் துறை பெரிதாகத் தெரிந்தால், பிள்ளைகளைப் போட்டுத் திணிப்பது; தனக்குத் தொலை நோக்கு அறிவு இல்லாமல், அக்கம் பக்கத்தினர் செய்தால் தானும் அதில் போய் விழுவது; தன் அரைகுறை அறிவுடன் பிள்ளைகளின் எதிர்காலத்தின் ஒவ்வொரு முடிவையும் தீர்மானிப்பது; அப்புறம் குற்றவுணர்ச்சி கொள்வது, அதற்கும் பிள்ளைகளையே பொறுப்பாக்கித் திட்டுவது; இப்படிச் சில பெற்றோர் இருப்பார்கள்.

சிலர் தனக்கு நல்ல பெற்றோர் அமையவில்லை என்பதையே, தான் பெற்றோர் ஆன பின்னும் புலம்பித் திரிவார்கள். யாருக்கு நாம் பிள்ளைகளாக அமைந்தாலும், நாம் நல்ல பெற்றோராக இருக்கிறோமா என்பதுதான் கவனிக்க வேண்டியது.

இன்னும் சிலர் தன் பிள்ளைகள் இப்படி இல்லையே அப்படி இல்லையே, அப்படி இருந்தால் வானத்தை வில்லாக வளைத்து இருப்பேன் என்பது போலச் சொல்வார்கள்; முதலில், கிடைத்த இந்தப் பிள்ளையைச் சரியாகப் வளர்ப்போம், இல்லாத குழந்தை பற்றி அப்புறம் பேசலாம். எந்தப் பிள்ளை கிடைத்திருந்தாலும், எப்படி வளர்க்கிறோம் என்பதுதானே முக்கியம்.

சிலர் தனக்குக் கிடைக்காததெல்லாம் பிள்ளைகளுக்குக் கிடைக்கச் செய்வதே நல்ல ‘பேரண்டிங்’ என்று நினைப்பார்கள்.

சிலர், பிள்ளைகளுக்குத் தன் சக்திக்கு மீறிய கேட்கவே கேட்காத எதையெதையோ வாங்கிக் குவிப்பார்கள்; ஆனால், பிள்ளைகள் கேட்டதைத் தந்தார்களா என்று பார்த்தால், இருக்காது.

சிலர், முழுக்க முழுக்கப் பிள்ளைகளை ஏதோ சோதனை எலி மாதிரி கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். ‘இப்படி நடக்கறே, இப்படி உட்கார்றே, இப்படிச் சாப்பிடறே, இப்படி பேசறே’ என்று கருத்துச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அப்புறம் எப்படிப் பிள்ளைகள் இயல்பாக வளர்வார்கள்? எப்போதும் தன்னைக் குறையானவர்களாகத்தான் உணர்வார்கள்.

அவரவருக்கான ‘வெளி’ எப்போதும் வேண்டும். ஒரே வீட்டில் இருப்பதால், இருவருக்கும் இருவரைப் பற்றியும் தெரியும். அவரவரை அவரவராக ஏற்காமல், நடை உடை பாவனை எல்லாவற்றிலும் தலையிட்டுக்கொண்டே இருப்பது, பிள்ளைகளைச் சரி செய்துகொண்டே இருப்பது, வெகு நிச்சயம் அவர்களைக் குறையாக நினைக்க வைக்கும். தவறே செய்யாமல், ஒருவிதக் குற்றவுணர்வைத் தரும்.

பிள்ளைகளிடம் அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வுகளை, வழிகளை அவர்களிடமே கேட்டறிவது நல்லது; அவர்களின் பக்கமிருந்து பிரச்னைகளை ஆராய்ந்து தீர்க்க இது உதவும். உதாரணமாக, சிறு பிள்ளைகள் ஏதாவது பொருளைக் கவனக் குறைவாக எங்காவது வைத்துவிட்டார்கள் எனில், நம் உயரத்திலிருந்து தேடினால் கிடைக்காது; அவர்கள் உயரத்திற்கு நாம் இறங்கி தேடுகையில் அகப்படும். அதைப் போல.

பிள்ளைகள் தினம் வளர்கிறார்கள்; தவறுகளில் மட்டுமே அவர்கள் இல்லை; அதிலேயே அவர்களைப் பொருத்திப் பார்ப்பது சரியில்லை. அவர்கள் தவறை, அவர்கள் மறக்கும் வேகத்தில் நாமும் மறப்பது நல்லது. அல்லது உறுத்தாமல் சுட்டிக்காட்டிய வேகத்தில், அதிலிருந்து கடந்துவிட வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைப் பருவத்தை நினைவு கொண்டிருந்தாலே, பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், கூடாது என்பது தெரிந்துவிடும்.

வாழ்க்கை என்பதே முயல்வதும் தவறுவதுமான செயல்முறைதான் (Trial & Error Process). அப்படித்தான் குழந்தை வளர்ப்பும். உண்மையில் குழந்தைகளோடு நாமும் வளர்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.