4.   தமிழக – கம்போடியக் கலாச்சாரத் தொடர்புகள்  

                                   

 ‘எங்களுடையதுதான்… எங்களுடையதுதான்… எங்களுடையதுதான் மன்னா’ எனக் கம்போடியாவைக் குறிப்பாக அங்கோர் கோயிலை உரிமையோடு சொந்தம் கொண்டாடுகிறார்கள் தமிழ்ப் பற்றாளர்கள். அதை உறுதிப்படுத்துவதற்காக இரு நிலங்களுக்குமான பண்பாட்டுத் தொடர்புகளைப் பட்டியலிட வரிசை கட்டி நிற்கிறார்கள் கலாச்சார ஆர்வலர்கள். அதை மெய்ப்பிக்க ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் வரலாற்றையும் கதைகளையும் கேட்டு முடிக்கும் போது, ‘ஆங்… இப்ப நா…. எங்க இருக்கேன்?’ என மூளை கொஞ்சம் ப்ளாக் ஆகிவிடுகிறது. நான் பார்த்ததையும் கேட்டதையும் படித்ததையுமாக யான் பெற்ற இன்பத்தை(!) அப்படியே கடத்தினால் உடனடியாகப் புத்தகத்தை மூடி வைத்துவிட அதிக வாய்ப்புள்ளது என்பதால், வரலாற்று யூகங்களையும் பெருமைபேசும் கற்பனைகளையும் ஆழ்மன ஆசைகளையும் விடுத்து, தமிழகத்துக்கும் கம்போடியாக்குவுமான கலாசாரத் தொடர்புகளை மட்டும்  தெளிவுபடுத்த விழைகிறேன்.

 இந்தியாவிலிருந்து 2500 கி.மீ. தொலைவில் உள்ள நாடாக இருந்தாலும் கம்போடியாவில் நம் கலாசாரத்தின் சாயலைப் பெரிதும் பார்க்க முடிகிறது. கம்போடியாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவின் வயது இரண்டாயிரத்து நூறு என்கிறார்கள். பல்லவர், சேர, சோழர், பாண்டியர்கள் பயணம் செய்ததற்கு  முன்னரே தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் தென் கிழக்காசிய நாடுகளுக்குக் கடல்வழி பயணம் செய்துள்ளனர். அங்கிருந்துதான் இரு நாடுகளுக்குமான உறவு தொடங்கியிருக்க வேண்டும்.  இன்றைக்கும் கம்போடியப் பழங்குடியின மக்களின் வாழ்வியலில் தமிழர்களின் உணவு, உழவு முறைகள், பஞ்சாங்க முறை, தாய்மாமன் உறவு, மூதாதையர் வழிபாடு போன்றவை நடைமுறையில் உள்ளதை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். உயிரிழந்தவர்கள் மீண்டும் வருவார்கள் என்கிற நம்பிக்கையில் வைக்கப்படும் தாழிகளும் சூரிய வழிபாடும் நெடுகல் முறையும் கம்போடியாவின் குலன் மலைத்தொடரில் தமிழர் நம்பிக்கைகளின் ‘தொட்டுத் தொடரும் ஒரு நெடும் பாரம்பரியமாக’ இன்றும் தொடர்கிறது.

          கி.பி. ஒன்றாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் தென் கிழக்கு ஆசியா மிகப்பெரிய வணிகத் தளமாக விளங்கியது. சீனாவில் இருந்து பட்டுத் துணிகள் வந்தன. பாரசீகத்தில் இருந்து பலசரக்குகள் வந்தன. இந்தியாவில் இருந்து நறுமணப் பொருள்களுடன் இந்து, புத்த மதச் சித்தாந்தங்களும் வந்தன. பன்னாட்டுப் பொருள்கள் மட்டுமல்ல, பன்னாட்டுக் கலாச்சாரங்களும் அங்கு பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.  அப்படி வந்தவர்களுள் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகத் தென்கிழக்கு ஆசியாவிற்குள்  வந்தனர். அப்படி வியாபாரம் செய்ய வந்தவர்கள் தங்களுடைய கலைகளையும் கலாச்சாரங்களையும் தங்களுடனே கொண்டு வந்தனர். இந்தியர்களின் கலை, சமயம், சட்ட ஒழுங்குமுறைகள், அரசியல் சாணக்கியம், எழுத்து, இலக்கியம் போன்றவை இம்மண்ணின் பூர்வீகக் குடிகளால் ஈர்க்கப்பட்டன. காதலும் திருமணமும் அவர்களைச் சேர்த்து வைக்க, புதிய கலப்பினம் உருவாகியது. இந்தியாவிலிருந்து சென்ற மன்னன்தான் ஜயவர்மன் என்கிற கருத்து ஒருபுறமிருக்க,    வணிகர்களின் வழி நுழைந்த இந்தியக் கலாச்சாரத்தின் மேல் கொண்ட காதலால் கம்போடிய மன்னன் தனது பெயரை ஜயவர்மன் எனச் சூட்டிக்கொள்ள, இவனுக்குப் பின் வந்த மற்ற மன்னர்களும் இதையே பின்பற்றினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.            

கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்து மதமே செல்வாக்குடன் விளங்கியது. கம்போடியாவின் ஃபுனான் மற்றும் சம்பா ராஜ்ஜிய மக்கள் இந்தியக் கலாச்சாரத்தின் பல அம்சங்களை உள்வாங்கியிருந்தனர். இந்த மன்னர்கள் இந்து மதத்தின் பிரிவுகளான சைவ மற்றும் வைணவத்தைப் பின்பற்றியுள்ளனர். ஆனால், இந்தியாவைப் போன்ற  சாதிய ஒடுக்குமுறைகள் இங்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.   கம்போடியக் கோயில் சுவர்களில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை முறைகளும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பதால், அது அனைத்து மக்களுக்குமான அரங்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி, கம்போடிய மக்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்றுவரை அசைவ உணவுப் பழக்கம் உடையவர்கள். எனவே உணவுப் பழக்கத்தை வைத்தும் மக்கள் பிரிவுகளிடையே வேறுபாடுகள் இருந்திருக்காது.  சுருக்கமாகக் கூறினால் கம்போடியாவில் இருந்த இந்து மதம், இந்தியாவிலிருந்த இந்து மதமாக இருந்திருக்கக் கொஞ்சமும் வாய்ப்பில்லை. (இதே கருத்துதான் வியட்நாமிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.)           

 இந்து மதத்தைப் போலவே பௌத்தமும் இங்கிருந்துதான் அங்கு சென்றது.  இரண்டு மதங்களுக்குமிடையே அவ்வப்போது பிரச்னைகள் எழுந்தாலும், கொண்டும் கொடுத்துமான ஓர் ஆழ்ந்த உறவு அங்கு நிலவி வந்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இடையில் ஆட்சி செய்த கெமர் பேரரசர்களில் சிலர் பௌத்த மதத்திற்கு மாற, 13ஆம் நூற்றாண்டில் கம்போடியர்கள் மொத்தமாக தேரவாத பௌத்தத்திற்கு மாறினர். 1296ஆம் ஆண்டு கம்போடியா வந்த சீனத்தூதுவர் Zhou da guan  என்பவர், தனது பயணக்குறிப்பில், ‘அரசால் வழங்கப்பட்ட இந்து மதமும் அந்த மதத்தால் ஈர்க்கப்பட்ட கோயில்களும் அதற்குப் பிறகு முக்கியத்துவத்தை இழந்தன’ எனக் குறிப்பிடுகிறார்.

             தமிழர்களின் வாழ்வியலோடு ஒத்துப்போகக் கூடிய சிற்பங்களால் நிறைந்திருக்கிறது கம்போடியா.              சோழர்கால கட்டட மரபுகள் கம்போடியாவில் பின்பற்றப்பட்டுள்ளன. கோயில்களில் ராமாயணக் காட்சிகளைச் சிற்பங்களாகக் காண முடிகிறது. வால்மீகி ராமாயணம் ‘ராம் கீர்த்தி’ எனப் போற்றப்படுகிறது. காரைக்கால் அம்மையாரை வழிபடும் பழக்கம் தமிழகம், இலங்கை தவிர கம்போடியாவில்தான் உள்ளது. திருமணவிழாவில் பரிசம் போடுதல், குழந்தை பிறந்த 9ஆம் நாள் சடங்கு செய்தல், இறப்பு நிகழுமாயின் 15 நாட்கள் துக்கம் காத்து, 16ஆம் நாள் தலை மழித்தல்  போன்ற சடங்குகள் தமிழ்நாட்டோடு நெருக்கமான தொடர்புடையவை. உணவு முறையில் அப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை கெமர் மக்கள் விரும்பிச் சமைத்து சுவைக்கின்றனர். இங்குள்ள 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.  அரசர்களின் பெயர்கள் ராஜேந்திரவர்மன், ஜெயவர்மன், நரேந்திரவர்மன் என நம் இந்தியப் பெயர்களைத் தழுவியே உள்ளது. நாம் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் போது கம்போடியாவில் சங்க்ராந்தா என்று கெமர் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இவ்வாறு, நம் நாட்டோடு தொடர்புடைய பண்பாடு, கலாச்சார, புராணக் கதைகளின் நீட்சியைத் தமக்குள்ளேக் கொண்டுள்ளது கம்போடியா.

 காஞ்சிபுரத்தில் இருக்கும் வைகுண்ட பெருமாள் கோயில் கட்டப்பட்டு 300 ஆண்டுகளுக்குப் பிறகே அங்கோர்வாட் கட்டப்பட்டது. ஆனால், இரு கோயில்களுக்குமிடையே பல ஒற்றுமைகள் உள்ளன. பொதுவாக இந்துக் கோயில்கள் கிழக்கு நோக்கிக் கட்டப்படும் வழக்கத்திற்கு மாறாக, காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் மேற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டிருக்க, அங்கோர்வாட் கோயிலும் மேற்கு நோக்கியே இருக்கிறது. வைகுண்ட பெருமாள் கோயிலுக்குப் ‘பரமேசுவர விண்ணகரம்’ அதாவது ‘விஷ்ணுவின் நகரம்’ என்கிற பெயரும் உண்டு, அங்கோர்வாட்  கோயிலின் ஆதி காலப்பெயர் விஷ்ணுவின் உலகம் எனப் பொருள்படும் ‘விஷ்ணுலோக்’ என்பதாகும். இரண்டு கோயில்களிலும் பாற்கடல் கடையப்படும் காட்சி தொடர் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. வைகுண்ட பெருமாள் கோயிலில் பல்லவ குலத்தின் வரலாறு சுமார் 160 அடி நீளத்துக்குச் சுவரில் தொடர் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அங்கோர்வாட் பிரகார சுவர் முழுவதும் சூரிய வர்மன் நடத்திய போர்க்காட்சிகள் வரலாற்று ஆவணமாக, புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. இரு கோயிலையும் பார்வையிட்ட வெளிநாட்டு ஆய்வாளர்கள், இந்த இரு கோயில்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்கள்.

 கம்போடியாவில் ஆட்சி செய்த 30 மன்னர்களின் பெயர்களில் ‘வர்மன்’ என்கிற பெயர் தொட்டுக்கொண்டிருப்பது, தமிழின வழித் தோன்றலான நந்திவர்மனைக் குறிப்பிடும் பெயர் என்கிற கருத்தும் உள்ளது. பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழர்கள் காலத்திலும் இரு நாடுகளுக்குமிடையே தொடர்பு நீடித்தது. தமிழகத்தில் சிதம்பரம் நகரில் சிவனுக்குப் பெரிய கோயில் கட்டியபோது, அந்தக் கோயில் சுவரில் வைப்பதற்காக கம்போடியாவில் இருந்து அழகிய பெரிய கல் ஒன்றை நினைவுச் சின்னமாக அந்த நாட்டு மன்னர் சிதம்பரம் கோயிலுக்கு அனுப்பி வைத்த அரிய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.           

Ancient stone faces of Bayon temple, Angkor Wat, Siam Reap, Cambodia.

 கம்போடியா, கோயிலுக்கும் பனைக்கும் மட்டுமல்ல அங்குள்ள ஏரிகளுக்காகவும் புகழ்பெற்றது.  அங்கோர் நகரில் 10 லட்சம் மக்கள் வசித்திருக்கிறார்கள் என்கிறது தரவுகள். அந்த மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நகரத்துக்குத் தேவையான குடிநீரும் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. கோடை காலத்தில்கூட வறட்சி ஏற்படாத அளவுக்கு இருந்த அவர்களது நீர் மேலாண்மை வியக்க வைக்கிறது.  பல்லவ மன்னர்களுடன் தொடர்பு வைத்திருந்த கம்போடிய மன்னர்கள் தமிழகத்தில் உள்ள ஏரிகளைப் போலவே தங்கள் நாட்டிலும் உருவாக்கி, பல்லவ மன்னர்களைப் போலவே ஏரிகளுக்குத் தடாகா (தமிழகத்தில் – தடாகம்) என்று பெயரிட்டனர். அங்கோர் நகரில் நான்கு ஏரிகள் உருவாக்கப்பட்டன. இந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இந்திர தடாகா, யசோக வர்மன் கட்டிய யசோதர தடாகா, மேற்கு பேறே (பேரேரி), ஜெய தடாகா  என நான்கு தடாகங்களும் பத்து லட்சம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தன. அவர்களுடைய நீர் மேலாண்மைக்கு முன்னோடிகள் பல்லவ மன்னர்கள்தாம் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருப்பதால் நாம் பெரூமையுடன் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

 பத்தாம் நூற்றாண்டில் கம்பு தேசத்து பேரரசன் முதலாம் சூர்யவர்மன், தாம்பரலிங்கா (மலாய்) நாட்டின் மீது போர்த் தொடுக்க நினைத்தான். அப்போது, தாம்பரலிங்கா அரசனுக்கு உதவியாக கடாரத்து மன்னன் சங்கரம விஜயதுங்கவர்மன் வந்தான். அந்தச் சூழலில்தான் தன் நண்பனும் சோழப் பேரரசருமான ராஜேந்திர சோழனை உதவிக்கு அழைத்தான் முதலாம் சூரியவர்மன். நண்பனின் கோரிக்கையை ஏற்று, ஏறத்தாழ ஆயிரம் கப்பல்களில்(!) ஒரு லட்சம் போர்வீரர்களை கடாரத்தின்மீது ஏவி போர் நடத்தினான் ராஜேந்திரன். ஒரே நாளில் ஏழு துறைமுகத்தை அடித்துக் காலி செய்து போரில் கடாரத்தையும் அதன் கடைசி மன்னனான சங்கரம விஜயதுங்கவர்மனையும் அடிமைப்படுத்தினான் என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள். அத்தோடு கம்பு தேசத்துக்குத் தலைவலியாக இருந்த கடாரம் முற்றாக அழிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைச் சீனப்பயணி ஒருவர் படமாக வரைந்திருக்கிறார். போரில் வெற்றி பெற உதவி செய்ததற்கு நினைவுப் பரிசாக இராஜேந்திரச் சோழனுக்கு தங்கத்தேர் பரிசாக வழங்குகிறான் முதலாம் சூரியவர்மன்.

 இப்படியாகக் கம்போடியர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே மிக நீண்ட உறவும் நட்பும் கலாசாரத் தொடர்பும் இருந்திருக்கலாம். ஆனால், ‘கம்போடியா தமிழர்கள் உருவாக்கிய நாடு, அங்கோர் கோயில் தமிழர்களால் கட்டப்பட்டது’ என்பதெல்லாம் நமது ஆழ்மனது ஆசை. ஏனெனில் கெமர் என்பது தனி நாகரிகம் என்பதே உண்மை.

 (தொடரும்)

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘கவின்மிகு கம்போடியா- தொல்நகரில் ஓர் உலா’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.