அன்னையர் தினத்திற்கு இந்நேரம் நம்மிடம் பேசிப் பல வருடங்கள் ஆனவர்கள்கூட வாழ்த்து அனுப்பியிருப்பார்கள். அதுகூடப் பரவாயில்லைங்க, என் தோழி ஒருத்திக்கு இன்னும் திருமணம்கூட ஆகவில்லை, அவளுக்கும் இந்த வாழ்த்து இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அட்வான்ஸ் வாழ்த்து என்று எல்லாம் வேற வந்திருக்கு.

சில பேர், அது என்ன பெண்கள் தினம், அன்னையர் தினம், மட்டும்தான் கொண்டாடுவீங்களா? இந்த ஆண்கள் தினம், அப்பாக்கள் தினம் எல்லாம் கொண்டாட மாட்டிங்களானு பழைய கவுண்டமணி காமெடி எல்லாம் ஸ்டேட்டஸ் வெச்சுருவாங்க.

அன்னையர் தினம் வேண்டுமா, வேண்டாமா என்பதெல்லாம் அடுத்து, 10 மாதம் என்னைக் கருவில் சுமந்து பிரசவ வலி தாங்கி பெற்றெடுத்த தாய் என்கிற உணர்வு இருக்கும் வரை நல்லதுதான், இந்தக் காரணத்திற்காக நிச்சயம் ஒவ்வொரு தாயும் கொண்டாடப்பட வேண்டியவர்களே…

ஆனால் ’தாய்’ என்றாலே அவள் ஒரு தியாகி என்று மெய்சிலிர்க்கப் பேசுவது, தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும், தியாகம் செய்வதே ’தாய்மை’ என்று அவளைக் குடும்பத்தை தவிர வேறெதுவும் நினைக்காதபடி செய்யத் தூண்டுவது எப்படி நியாயம் ஆகும்?

தியாகம் எல்லாம் தானாகச் செய்ய தோன்றணும், இப்படிச் செய்தால்தான் அவள் சிறந்த தாய் என்று ஸ்டாம்ப் குத்தி, குற்ற உணர்வில் தியாகம் செய்ய வைக்கத் தூண்டக் கூடாது.

இந்த உணர்வு ஒரு குழந்தைக்குத் தாயானதும் தானகவே சில பெண்களுக்கு வந்துவிடும். அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க கருத்தரித்தது முதல், பிரசவம் வரை அவள் அனுபவித்த வலியாலும், தன்னால்தான் இந்தக் குழந்தை இந்த உலகிற்கு வந்தது, எனவே நாம்தான் அதற்குப் பொறுப்பு என்று நினைப்பதாலும்கூட இருக்கலாம்.

ஆனால் அதற்காக அந்தக் குழந்தை வளர்ந்த பின்பும், அதற்கென ஒரு குடும்பம்-குழந்தை என்று ஆனபின்பும் கூட ’தாய்மையைப் புனிதப்படுத்தி’ சாகும்வரை அவளை அந்த குழந்தைகளுக்காகவே வாழ வேண்டும் என்று மறைமுகமாக அடிமைப்படுத்தி வைப்பது நம் ’தந்தைவழி சமூகத்தின் தந்திரம்’. இப்படிச் செய்வதால் தந்தைகளுக்கு எந்தத் தொல்லையும் இல்லை, தியாகி என்கிற பட்டத்தை மட்டும் கொடுத்துவிட்டால் போதும்.

இதைச் சொன்னதும் சில தாய்மார்களுக்கேகூடக் கோபம் வரும், ஆண்கள் எப்படி வீட்டுப் பொறுப்புகளைச் செய்ய முடியும்? அவர்கள்தானே வெளியே சென்று சம்பாதிக்கிறார்கள் என்று பழைய பாட்டையே பாடிக்கொண்டிருப்பார்கள்.

சும்மா ஒரு பேச்சுக்கு, “சரிங்க நீங்க வீட்டை பாத்துக்கங்க, நான் வேலைக்குப் போறேனு” சொல்லித்தான் பாருங்களேன்.

அம்மா வேலைக்குச் சென்றுவிட்டால் குழந்தை அம்மாவிற்காக ஏங்கிவிடும் என்கிற பதில் வரும், சரி சில பல வருடம் ஆனதும் அந்தக் குழந்தை வளர்ந்ததும் கேட்டுப் பாருங்கள், “வேணும்னா நாம ரெண்டு பெரும் வேலைக்குப் போவோம் குழந்தையை உன்னோட அம்மாவோ, இல்ல என்னோட அம்மாவோ பார்த்துக்கட்டும்” என்று சொல்வார்களே தவிர, அவர்கள் வீட்டில் இருந்து குழந்தையையும் குடும்பத்தையும் கவனிக்கவெல்லாம் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

அவர்கள் அப்படி இருக்க நினைத்தாலும் இந்தத் தந்தைவழி சமூகம் அவர்களை விடாது.

குடும்பச் சூழலுக்காக வேலைக்குப் போக அனுமதிக்கப்பட்டாலும், யாரு குழந்தையைப் பாத்துப்பாங்கனு யோசிக்கும்போது அதுக்குதானே நம்மள பெத்த அம்மாக்கள் இருக்காங்கனு அங்க போய் நிப்பாங்க நம்ம, ’அம்மான்னா சும்மா இல்லடா சங்கம்.’

ரெண்டு பேருமே வேலைக்குப் போனாலும் எத்தனை பேர் வீட்டில் ரெண்டு பேருமே வீட்டு வேலை செய்யத் தயாரா இருக்காங்க? அதுக்கும் ஒரு வழி இருக்கு, ஆபீஸ் வேலையும் பார்த்துக்கிட்டு, வீட்டுலயும் எல்லா வேலையும் செய்து, குடும்பத்திற்க்காக உழைக்கும் ’தியாகி’ என்று புனிதப்படுத்தினால் போதும். தன் கனவுகளை நோக்கிச் செல்ல வேண்டுமானாலும் ’வீட்ட முதல்ல கவனிச்சுட்டு அதுக்கப்பறம் எதுனாலும் பண்ணு’ என்கிற செக் இருக்கும்.

முன்பைப் போல இல்லை என்றாலும் மிகக் குறைந்த பெண்களுக்குதான் விழிப்புணர்வு வந்திருக்கிறது, அவர்கள் தனக்காகவும் சிந்திக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் பொழுது சில ஆண்களே இன்று வீட்டு வேளைகளிலும், குழந்தை வளரப்பிலும் பொறுப்புகளை ஏற்க ஆரம்பித்துள்ளனர்.

எங்கே குழந்தை வளர்ப்பிலும் வீட்டு வேளைகளிலும் ஆணின் பங்கும் எதிர்பார்க்கபடுகிறதோ, அங்கே சில ஆண்களேகூட குழந்தை வேண்டாம் என்றோ அல்லது ஒரு குழந்தை போதும் என்றோ கூறிவிடுகிறார்கள். இதுவே பெண்கள்தாம் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் என்று இருந்தால் குறைந்தது 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அம்மாவாக இருக்கும் பெண்களும்கூடத் தன் அம்மாவும் இப்படித்தானே நம்மை வளர்த்திருப்பாள் இப்போதாவது அவளுக்குப் பிடித்த மாதிரி இருந்துவிட்டுப் போகட்டும் என்றில்லாமல், “நீயெல்லாம் ஒரு அம்மாவா எனக்கு எந்த உதவியும் பண்ண மாட்டேன்ங்கறயே?” என்று அம்மாவைக் கடைசி வரை குறை சொல்லி வேலை வாங்குவார்களே தவிர தன் இணையரிடமோ இல்லை அவர் குடும்பத்திடமோ உதவி கேட்பதில்லை.

கேட்டாலும் என்ன பதில் வரும் என்று அவளுக்குத் தெரியும், “உனக்கென்ன இப்ப லட்சியம் வேண்டி கெடக்கு”னு தன்னை வெளிய அனுப்ப மாட்டாங்களோனு தன் அம்மாவை எமோஷனல் பிளாக்மைல் செய்து காரியம் சாதித்துக் கொள்கிறார்கள்.

உண்மையாகவே உங்கள் அம்மா உங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால் இப்போதாவது அவர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அவர்கள் உங்களுக்காக இழந்த கனவுகளைப் பற்றிக் கேளுங்கள். அவர்களுக்கு என்ன செய்ய விருப்பம் என்று கேட்டு அதைச் செய்ய உதவியாக இருக்க வேண்டும் என்று இல்லை, தடுக்காமல் இருந்தால் போதும்.

ஆண்களே, உங்கள் அம்மாவின் தியாக குணத்தை உங்கள் இணையரிடமும் எதிர்பார்ப்பதை விடுங்கள். பெண்களே, உங்கள் அம்மா மட்டுமே தியாகியாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பை விடுங்கள்.

தாய்மையைப் புனிதப்படுத்துதல் என்கிற ஆயுதம் ஏந்தி சுயநலமாக ஒரு பெண்ணின் கனவுகளைச்  சிதைக்காதீர்கள்.

இப்படி இருந்தால்தான் அவர் நல்ல அம்மா என்கிற வரைமுறைகளை வைத்து கனவுகளை நோக்கிப் பயணிக்க நினைக்கும் அம்மாக்களைக் குற்ற உணர்வில் தவிக்க வைக்காதீர்கள்.

என்ன தான் குற்றவுணர்வை உண்டாக்கச் சுற்றி இருப்பவர்கள் துடித்தாலும், இந்தப் புனிதப்படுத்துதலில் சிக்கிக்கொள்ளாமல், குடும்பம் என்பது நம் ஒருவரின் பொறுப்பு மட்டுமில்லை, அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் பொறுப்புமேதான் என்று தெளிந்து, பாலினச் சமத்துவம் தன் குடும்பத்தில் உருவாகப் போராடும் ஒவ்வோர் அம்மாவிற்கும் ’அன்னையர் தின வாழ்த்துகள்.’

படைப்பாளர்:

நித்யா

ஈரோட்டில் பிறந்து தற்போது சென்னையில் வசிக்கிறார். ‘புதியதோர்’ என்ற NGO- ல் ‘மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்’ ஆக இருக்கிறார்.
‘கருத்தூசி கண்ணம்மா’ மற்றும் ‘புத்தகம் பேசுதடி’ என்ற youtube Channel வைத்திருக்கிறார்.