கணவன் – மனைவி திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனமாகப் போக முடிவெடுத்தால் இந்தச் சமூகம் முதலில் வசைபாடுவது அந்தப் பெண்ணையே! “குடும்பத்த பிரிச்சுப் பையன கூட்டிட்டுப் போய்ட்டா”,
“வீட்டு வேலை செய்யத் துப்பில்லாம தனிக்குடித்தனம் போறா” என்று என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்லி ஏதோ மிகப்பெரிய துரோகம் செய்த மாதிரி ஊரு உறவு என்று எல்லோரும் கேவலமாக அந்தப் பெண்ணை நடத்துவதைப் பார்த்திருப்போம்.
அந்தப் பெண்ணும் தான் பிறந்து வளர்ந்த வீட்டைவிட்டு, அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று இருக்கிற எல்லா உறவையும் ஊரையும் விட்டு, தோழி, தோழர்களை எல்லாம் விட்டுட்டுதான் வந்திருப்பாள் என்று எத்தனை பேர் யோசிக்கிறோம்?
என்ன அர்த்தம் என்றே தெரியாமல் சில பேர் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று உளறிக்கொண்டு, அறிவுரை சொல்றேன் பேர்வழி என்று வந்துவிடுகிறார்கள். கூட்டுக்குடும்பத்தால் கிடைக்கும் நன்மைகள் என்று வாட்ஸ் அப் ஃபார்வேர்ட் மெசேஜ், ஸ்டேட்டஸ் நான்கைந்து எடுத்து அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.
ஓர் ஆண், அவனது மனைவி குடும்பத்தோடு ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் அவனுக்குப் பெயர் ‘வீட்டோட மாப்பிள்ளை’. ஏன் இங்கும் கூட்டுக்குடும்பமாகத் தானே இருக்கிறார்கள்? இதை மட்டும் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் சொல்கிற மாதிரி கூடி தானே இங்கேயும் வாழப் போகிறார்கள்?
ஏன் என்றால் கூட்டுக்குடும்பம் இங்கே தந்தைவழிக் குடும்ப அமைப்பாகவே இருக்கிறது. காலம் காலமாக ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கி வைத்த அமைப்பு தான் தந்தைவழிக் கூட்டுக்குடும்பம். பெண் தான் எல்லாவற்றையும் விட்டுட்டு வரவேண்டும் என்பது ஓர் ஆணாதிக்கக் கட்டமைப்பு.
எதற்காக இந்த மாதிரி தந்தைவழிக் கூட்டுக்குடும்பம் இருந்திருக்கும்?
பெண் வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருந்தால் அவளை அடிமையாக வேலை வாங்க முடியாது, அவளுக்கு நடக்கிற எந்த வன்கொடுமைகளுக்கும் கேள்வி கேட்க ஆள் இருக்கக் கூடாது, உன் பெண்ணுக்குக் கடைசி வரைக்கும் சோறு போட வேண்டும் என்று சொல்லி வரதட்சணை வாங்க முடியாது. மிக முக்கியமாக ஓர் ஆணோடு எந்த ஒரு வழக்கமான நடைமுறையும் மாறிவிடக் கூடாது.
புகுந்த வீட்டுக்குப் பெருமை சேர்ப்பது தான் ஒரு பெண்ணின் வாழ்நாள் இலக்கு என்று அவளை அடக்கி வைக்க முடியாமல் போய்விடுமே என்று தான் யாரோ ஒருவர் மனம் மாறத் தயாராகும்போதுகூட, வீட்டோடு மாப்பிள்ளை என்று கேலி செய்து, மற்றவர்களை இந்த முடிவெடுக்க விடாமல் மறைமுகமாக எதிர்மறை எண்ணங்களை விதைக்கிறது இந்த ஆண்வழிச் சமூகம்.
இதெல்லாம் கிடையாது என்று வேறு ஏதாவது கதை சொல்லிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.
கூட்டுக்குடும்பம் தான் நல்லது என்று சொல்கிறார்களா, சரி வாருங்கள் எங்கள் குடும்பத்தோடு இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள். நவீன அடிமைத்தனம் என்னவென்றால், தனியாகக்கூடப் போய் இரு. ஆனால், என் கண் முன்னாடியே இரு என்று தனிக்குடித்தனம் போவதற்கு ஒத்துக்கொள்கிறவர்கள்கூட, அதைப் பெண் ஊரில் போய்த் தனிக்குடித்தனம் இருக்கவோ இல்லை, வேறு ஊருக்குப் போய்த் தனிக்குடித்தனம் இருக்கவோ ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
மகனைப் பிரிந்து இருக்க முடியாது என்று ஒரு காரணம் வேறு. பெண்ணைப் பெற்றவர்கள் எல்லாம் என்ன கல்லா? அவர்களுக்கெல்லாம் பாசம் இருக்காதா?
பெண்ணுக்கு ஏதாவது ஒரு வேலை செய்யத் தெரியவில்லை என்றாலோ இல்லை, அவள் ஏதாவது தப்பு செய்துவிட்டாலோ இவளைச் சொல்லித் தப்பில்லை. “நீங்க வளர்த்த விதம் அப்படி” என்று சொல்லி முடிக்கும்போது, இத்தனை காலம் எவ்வளவோ கஷ்டங்களையும் தாண்டி வளர்த்த நம்மை இப்படிச் சொல்ல என்ன உரிமை இருக்கிறது என்று அந்த அம்மாவுக்கு வருகிற கோவத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், அழுதுகொண்டு நிற்பார்கள் பாருங்கள், அந்தக் கொடுமையைப் பார்க்கிறது எல்லாம் நரக வேதனை.
இது அப்படியே தலைகீழாக, என் பையனுக்கு ஒன்றுமே தெரியாது, அவனை எப்படித் தனிக்குடித்தனம் வைக்கிறது என்று வசனம் எல்லாம் பொங்கும். அப்போது இத்தனை காலம் தன்னத்தானே பார்த்துக்க முடியாத இன்னொரு Adultகூடச் சேர்ந்து வாழ்க்கையைத் திட்டமிடத் தெரியாத மனிதனாகத் தான் வளர்த்தீர்களா என்று எந்த மகளைப் பெற்ற அம்மாவும் கேட்பதில்லை.
என் அம்மாவுக்கு நான் அடிக்கடிச் சொல்லும் அறிவுரை, இதை எல்லா அம்மாக்களுக்கும் சொல்கிறேன், உங்கள் மகள் மீது திணிக்கும் அடிமைத்தனத்தை நீங்கள் எதிர்த்து கேள்வி கேட்காதவரை இந்தச் சமூகம் உங்களை எப்படி அடக்கி ஆள நினைத்ததோ அதே தான் உங்கள் மகளுக்கும்.
அடங்க மறு!
படைப்பாளர்:
நித்யா
ஈரோட்டில் பிறந்து தற்போது சென்னையில் வசிக்கிறார். ‘புதியதோர்’ என்ற NGO- ல் ‘மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்’ ஆக இருக்கிறார்.
‘கருத்தூசி கண்ணம்மா’ மற்றும் ‘புத்தகம் பேசுதடி’ என்ற youtube Channel வைத்திருக்கிறார்.