பிள்ளைகளைப் பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு அரக்கப் பறக்க வீட்டிற்குள் நுழைந்தாள் சுப்ரியா. சாப்பிட்டு முடித்துக் கைகழுவ வாஷ்பேசின் நோக்கி ஆனந்த் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அவனுக்குப் பின்னாலேயே ஓடி வந்தாள். வேறெந்த சிந்தனையும் இல்லாமல் அடுத்த நொடியே அவன் பாட்டுக்கு அலுவலகம் கிளம்பிப் போய்விடுவான்.  சற்று யோசித்து நின்றாலும், கேட்க வேண்டியதைக் கேட்க முடியாமல் போய்விடும் என்பதால்  அவசர அவசரமாக அவனிடம் கேட்டாள். 

“எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்” 

இப்படிக் கையேந்தி நிற்கவே அசிங்கமாக இருந்தது. ஆனாலும் வேறு வழி இல்லை, இதுபோல அசிங்கப்பட்டு அசிங்கப்பட்டேதான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.

“பணமா, எவ்ளோ ரூபா?”

“ம்… ஒரு நாலாயிரம்.”

“எதே நாலாயிரமா?  உனக்கு எதுக்கு  இவ்வளவு பெரிய அமௌன்ட்?”

“அதாங்க அன்னைக்கே சொன்னேனே, என் ஃப்ரெண்ட் பவித்ராவுக்குக் கல்யாணம். போன வாரம் பத்திரிகைக்கூட வந்துச்சே?”

“எது, மதுரைல நடக்குதுன்னு சொன்னியே அந்தக் கல்யாணத்துக்கா?”

“ஆமாங்க.”

“என்ன விளையாடுறீயா? அன்னிக்கு ஏதோ ஒரு ஆர்வத்துல சொல்ற,  இதெல்லாம் வேலைக்கே ஆகாதுன்னு நீயே விட்டுடுவன்னு நினைச்சேன். நீ என்னடான்னா பணம் கேட்கற?”

“அப்படி இல்லைங்க. மத்தவங்க யாராவதுனாகூட வேணாம்னு விட்ருப்பேன். சென்னைலயே நடந்த என் பிரண்ட்ஸ் கல்யாணத்துக்கெல்லாம்கூடப் போகாம இருந்திருக்கேன்ல. ஆனா, பவித்ரா அப்படி இல்லைங்க. என்னோட பெஸ்ட் பிரெண்டு. போகாம இருந்தா நல்லா இருக்காது.”

“என்னடி, நான் என்னமோ உன் பிரண்ட்ஸ் கல்யாணத்துக்கெல்லாம் போக வேணாம்னு உன்ன தடுத்து கட்டிப் போட்டு வெச்ச மாதிரி பேசற?”

எப்பொழுது வார்த்தையை விடுவாள், எங்கே சாக்குக் கிடைக்கும் இவள் மேல் பாயலாம் எனக் காத்திருந்தவன் போல வேகமாகப் பாய்ந்தான் ஆனந்த்.

“ஐயோ, நான் அப்படிச் சொல்லலைங்க. இந்தக் கல்யாணம் எவ்வளவு முக்கியம்னு சொல்ல வந்தேன்.”

“உன் பிரெண்டுன்னு சொல்ற, அவளுக்கும் ஒரு  இருபத்தொன்பது – முப்பது வயசு இருக்கும் இல்ல?  இவ்வளவு லேட்டாவா கல்யாணம் செஞ்சுக்கறா அவ?”

“எனக்கு பி.எஸ்.சி பைனல் இயர் படிக்கும் போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.  எல்லாமே பொருந்தி வந்ததால டிகிரி முடிச்ச உடனே நம்ம கல்யாணத்தை முடிச்சிட்டாங்க .  ஆனா, அவ எம்.எஸ்.சி படிச்சிட்டு,  பிஹெச்டி முடிச்சா. அப்புறம் போஸ்ட் பி.எச்.டி படிக்க வெளிநாட்டுக்குப் போனா. இப்ப ஒரு பெரிய லேப்ல வேலைல இருக்கா. அதான்.”

“ஆமா,  ஊர் உலகமெல்லாம் சுத்தி, பார்க்க வேண்டியதெல்லாத்தையும் பார்த்து முடிச்சிருப்பா. இவளுங்களுக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம்? எவனாவது ஒரு இளிச்சவாயனா பார்த்துக் கட்டிக்கிட்டு அவன் உயிரை எடுக்க வேண்டியது.”

அவன் இவ்வளவு கேவலமாகத் தன் தோழியை விமர்சித்த பிறகு அந்தத் திருமணத்திற்குப் போகும் ஆர்வமே சுத்தமாக வடிந்துபோனது சுப்ரியாவுக்கு. தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.  அதற்கு மேல் எதையும் பேச முடியாமல் கண்களில் நீர் திரளக் கல்லென நின்றாள்.

“ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு. என்னால வீட்ல இருந்து பிள்ளைங்கள பார்த்துக்க முடியாது. அதுக்காக, அவங்களத்  தனியா உன்கூட அனுப்பி வைக்கிற ரிஸ்கையும் எடுக்க முடியாது. அப்படி அவசியம் போயே ஆகணும்னு சொன்னா, உங்க அம்மாவை வரச் சொல்லி அவங்களப் பார்த்துக்கச் சொல்லு”  என்று, எது எதார்த்தத்துக்குப் பொருந்தாதோ அதைச் சொல்லி அவளுக்கு ‘செக்’ வைத்தான்.

அதன் பிறகு ஒரு நொடிகூட நிற்காமல் கிளம்பிப் போய்க் கொண்டே  இருந்தவனை ஓர் இயலாமையுடன் பார்த்துக் கொண்டே நின்றாள். 

தன்னால் திருமணத்துக்கு வர இயலாது என்று சொன்னால் அவரவர் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லி மாளாது.  குறிப்பாக பவித்ரா கோபித்துக் கொள்வாள். நிச்சயம் வருத்தப்படுவாள்.  பேசாமல் தோழிகள் அனைவரும் இருக்கும் வாட்ஸ்ஆப் குரூப்பை விட்டு வெளியேறிவிடலாமா என்றுகூட யோசித்தாள். 

அன்றைய நாள் முழுவதும் இந்தச் சங்கடமே அவளுடைய மனதை அறுத்துக் கொண்டிருந்தது. கைப்பேசியைத்  தீண்டக்கூடத் தோன்றவில்லை. அதுபாட்டுக்கு சோபாவின் மூலையில் நாதியற்று கிடந்தது.

மாலை பிள்ளைகள்  பள்ளியிலிருந்து திரும்பியதும், வீட்டில் குடிகொண்டிருந்த அமானுஷ்யமான அமைதி விலகிப்போக, அவர்களுடனேயே  அதன் பிறகான நேரம்  இறக்கை கட்டிப் பறந்தது.

உணவைத் தயார் செய்துவிட்டு, பள்ளியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளுக்கான வீட்டுப்பாடம் சம்பந்தமான தகவல்களைப் பார்க்கலாம் எனக் கையில் எடுத்தாள். அவனுடைய தோழிகள் இருக்கும் குழுவிலிருந்து நூற்றுக்கணக்கான தகவல்கள் வந்து குவிந்திருந்தன. அதன் உள்ளே சென்று பார்க்கவே சங்கடமாக இருந்தது. 

பிள்ளைகள் இருவரையும் இழுத்து உட்கார வைத்து அவர்களின் வீட்டுப் பாடங்களைச் செய்ய வைத்துக் கொண்டிருந்தாள்.

அழைப்பு மணி ஒலிக்க, “அப்பா வந்துட்டாங்க” என அவளுடைய மகள் கதவைத் திறந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக அவளின் முகம் பார்த்த நொடி, அவன் கேட்ட கேள்வியே, “என்ன உங்க அம்மாவுக்கு போன் பண்ணி கேட்டியா?  வரேன்னு  சொல்லிட்டாங்களா?” என்பதுதான்.

கோபமோ எகத்தாளமோ எதுவுமே தொனிக்காமல் வெகு இயல்பாகக் கேட்பது போல அவன் கேட்டபோது அடிவயிற்றிலிருந்து பற்றிக் கொண்டுதான் வந்தது. ஆனாலும் இத்தகைய  கோபதாபங்களை இயல்பாக வெளிக் காண்பித்துவிட முடியாது. பிள்ளைகளின் எதிரில் கொஞ்சநஞ்சம் இருக்கும் நிம்மதியும் குலைந்து போகும்.

“இல்ல, நான் அவங்க கிட்ட கேக்கவே இல்ல?” என்றாள்.

கூப்பிட்டால் அவளுடைய அம்மா வரமாட்டார் என்பது சர்வ நிச்சயமாக அவனுக்குத் தெரியும். அவருக்கு இங்கு வந்து இருப்பதெல்லாம் சரிப்பட்டு வராது.

அதை நேரடியாகச் சொல்லாமல், ‘ புள்ளகுட்டிகளை விட்டுட்டு அவ்வளவு தூரத்துல நடக்குற கல்யாணத்துக்கு போகணும்னு என்ன அவசியம் வந்துச்சு. மாப்பிள்ளை சரியாத்தான் சொல்லி இருக்காரு’  என்று குதர்க்கமாகத்தான் பேசுவார்.

தப்பித் தவறி, போனால் போகிறது என்று இங்கே வந்து தங்கி பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டாலும், இவள் திருமணம் முடிந்து திரும்பி வந்த பிறகு எதை எதையோ சொல்லி இவளிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குக் கிளம்புவார்.  

“ஏன்  கேட்டுப் பார்த்திருக்கலாமே?”  என்றான் விடாப்பிடியாக.

“இல்ல,  நான் பவித்ரா கல்யாணத்துக்குப் போக வேண்டாம்னு முடிவு செஞ்சுட்டேன். அதனால கேட்கல” என்றாள்.

“ம்க்கும்.. கேட்டா அங்க இருந்து என்ன மாதிரி பதில் வரும்னு உனக்கே நல்லா தெரியும். அதான் கேட்கணும்னு உனக்கே தோணல”  என்றான் இளக்காரத்துடன். 

அவன் சொன்னது காதிலேயே விழாத பாவத்தில், நேராகப் போய் காபி கலந்து எடுத்து வந்து அவனுக்குக்  கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனாள். 

சென்னையிலிருந்து பேருந்து ஏற்பாடு செய்து, அவளுடைய தோழிகள் அனைவரும் பவித்ராவின் திருமணத்திற்குச் சென்று வந்தார்கள். ஒவ்வொரு நிகழ்வும், போட்டோக்களும் வீடியோக்களுமாக எடுத்துத் தள்ளப்பட்டு குழுவில் பகிரப்பட்டன.  அந்தக் குழு ஒரு மோன நிலைக்குத் திரும்ப, அந்தத் திருமணம்  முடிந்து சில நாட்கள் ஆனது. 

ஓடவும் முடியாமல்  ஒளியவும் முடியாமல் அனைத்தையும் பார்த்து மனம் வெதும்பியது. போதும் போதாததற்கு இவள் அந்தத் திருமணத்துக்குப் போகாதது வேறு பல விதமான விமர்சனங்களுக்கு உள்ளானது.  இதெல்லாம் கடந்து மனம் அமைதி அடைந்து இவள் இயல்பு நிலைக்குத் திரும்பவே ஒரு மாதம் ஆகிவிட்டது. 

தொடர்ந்த நாட்களில் பிள்ளையார் சதுர்த்தி வந்தது, சரஸ்வதி பூஜை வந்தது, தீபாவளி, கார்த்திகை தீபப் பண்டிகைகள் வந்து போயின. எங்கேயாவது டூர் அழைத்துப் போவான் என  டிசம்பர் மாதத்துக்காக அவள் காத்திருக்க, அவன்பாட்டுக்கு நண்பர்களுடன் கோவா கிளம்பிப்  போனான், ‘ பேமிலியோட போக கோவா எல்லாம் செட் ஆகாது. பிள்ளைகளுக்கு ஆனுவல் லீவ்  விடட்டும் வேற எங்கயாவது போகலாம்’ என்று சமாதானம் சொல்லிவிட்டு.

உண்மையில் அவள் சமாதானம் அடைந்தாளா என்பதெல்லாம் வேறு கதை.  போனவன் சும்மா போயிருந்தால்கூடப் பரவாயில்லை.  அவனுடைய அம்மா, அப்பாவை வரவழைத்து இங்கே விட்டுவிட்டுப் போனான். இவள்  பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாக இருக்கக் கூடாதாம். பரீட்சை எழுதும் பொழுது அருகில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியரைப்போல,  மாமியார் இவளைக் கண்காணித்துக் கொண்டிருக்க, வீட்டிற்குள்ளேயே இருக்க முடியாமல் மூச்சு முட்டியது.

உண்மையில் தான் இந்தப் பிள்ளைகளுக்கு அம்மாவா, இல்லை இவனுடைய பிள்ளைகளுக்கு வாடகைத் தாயா என்கிற சந்தேகம்கூட அவளுக்கு வந்தது.  குறைந்தபட்சம் வாடகைத் தாயாக இருந்தால்கூட ஊதியமாவது கிடைத்திருக்கும். இவளுக்கு அதுகூட இல்லை. கிட்டத்தட்ட ஒற்றைப் பெற்றோர் நிலைதான். 

யாரிடமும் காண்பிக்க முடியாத  கோபத்தை எல்லாம் பிள்ளைகளின் மேல் காண்பித்திருக்க, அவர்கள் பார்வையிலும் கீழிறங்கிப் போனதாக உணர்ந்தாள்.

டூர் போனவன் திரும்ப வந்தான். அடுத்து, மகர ஜோதி தரிசனம் செய்ய, மாலை போட்டு சபரி மலைக்குப் போனான்.

அய்யப்ப பூஜை, அது முடிந்ததும் பொங்கல் பண்டிகை வேலைகள் அனைத்தும் அவளைப் போட்டு அடித்துத் துவைத்தன. இதற்கிடையில் பிள்ளைகளின் அரைப்பரீட்சை வேறு.

அவன் திரும்ப வந்ததும் வராததுமாக, உள்ளுக்குள்ளே அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம்  வெடித்துச் சிதறி சண்டை… சண்டை… சண்டைதான். 

பெரும் புயலும் மழையும் வெள்ளமுமாக அடித்து வெளுத்து ஊரே சேரும் சகதியும் குப்பையும் கூளமுமாக ஆகிப் போனாலும்கூட எல்லாம் ஓய்ந்து ஓரிரு தினங்களுக்குள் பழைய நிலைக்குத் திரும்பி விடுவதைப்போல சில தினங்களில் வாழ்க்கை ஒரே நேர்கோட்டில் நகரத் தொடங்கியது. 

வழக்கம்போல காலை எழுந்து எல்லா வேலைகளையும் செய்து முடித்து கணவனையும் பிள்ளைகளையும்  நல்லபடியாக அனுப்பிவிட்டு, ஒரு கோப்பைத் தேநீரும் கைப்பேசியுமாக பால்கனியில் வந்து அமர்ந்தாள். 

அவளுடைய தோழியர் இருக்கும் குரூப்பில் கடைசியாக யாரோ ஃபார்வேர்ட் செய்திருந்த  ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. 

பகுதி நேர வேலை…  முதலீடு தேவையில்லை… கல்வித் தகுதி இல்லை… வயது வரம்பு இல்லை… ஹவுஸ் வைஃப்ஸ், ரிட்டையர்ட் பர்சன்ஸ் போன்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்…  குறைந்தபட்ச வருமானம் பத்தாயிரம்… மொபைல் இருந்தால் போதும் வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டலாம்…. என்கிற தகவல்களுடன் ஒரு கைப்பேசி எண்ணும் பகிரப்பட்டிருந்தது. 

பவித்ராவின் திருமணத்துக்கு  அன்பளிப்பு வாங்க ஆயிரம் ரூபாய் பங்கு கொடுக்கக்கூட இயலாமல் மனதை அறுத்துக் கொண்டே இருக்க, தனக்கென்று ஒரு தனிப்பட்ட வருமானம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,  அதுவும் அது வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் இருந்தால்  மிகவும் சிறப்பாக இருக்குமே என்று அடிக்கடி இவளுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது. 

அதற்கேற்றாற்போல இப்படி ஒரு விளம்பரம் கண்ணில்படவும்,  அது அவளுக்குள் ஒரு நப்பாசையை உண்டு பண்ணியது. 

கைப்பேசியை எடுத்து அந்த எண்ணுக்கு அழைத்தாள். 

(தொடரும்)

படைப்பாளர்



எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.