கல்வி எல்லோருக்கும் அவசியமானது. குழந்தைகள் நல்ல ஒழுக்கத்தையும், வாழ்வியல் நெறிமுறைகளையும், பொது அறிவையும் பெற்று இந்த உலகத்தில் தன்னம்பிக்கை மிளிர வாழ்ந்திட கல்விதான் பெரும் துணை புரிகிறது. கல்வியைப் போற்றியவர்கள் நம்முடைய முன்னோர்கள். அதனால்தான் கல்விக்கென்று ஒரு கடவுளை ஏற்படுத்தி அதன் சிறப்பை உணர்த்தினார்கள். ஒருவர் தான் பெற்ற அனுபவங்களையும், ஆளுமைத்திறனையும் இளைய தலைமுறைக்குக் கடத்துவதே கல்வி.     

பண்டைய காலத்தில் கல்வி எல்லோரையும் சமமாக நடத்தியது. அரசனின் மகனும், அடிமையின் மகனும் சமமாக நடத்தப்பட்டனர். தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர் வணங்கப்பட்டார். அதன்பின்னான நாள்களில் சாதி, வர்ணப்பிரிவு, குலம், வர்க்க பேதம் என்றெல்லாம் பிரிவுகள் தோன்றி சில குறிப்பிட்ட சாதியினர் என்று பிரிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட அவலமும் நடந்தேறியது.             

ஆனால் இன்றைய சூழலில் கல்வி ஒரு மாபெரும் வியாபாரம் ஆகி இருக்கிறது என்பது யாராலும் மறுக்க இயலாத ஒன்று. எப்போது கல்வியும் மருத்துவமும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் வசம் சென்றதோ அன்றிலிருந்து இவை ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட கனியாகவே இருக்கின்றன.     

அரசுப் பள்ளிகள் என்றாலே ஒழுங்கற்றவை என்று ஒரு போலிக் கற்பிதம் இன்றைய சமுதாயத்தினரிடையே ஊடுருவி இருக்கிறது. ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள், படிக்காத, அடாவடித்தனம் செய்யும், அத்துமீறும் குழந்தைகள் அங்கே படிப்பவர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சமுதாயத்தில் புரையோடி இருக்கிறது. ஆனால் இந்த நாள்பட்ட புண்களுக்கு மருந்து தடவும் சில அரசுப் பள்ளிகளும் இருக்கின்றன என்பது ஆறுதலான விஷயம்.              

ஒரு குழந்தையின் அடிப்படைக் கல்வி என்பது ஒரு கட்டிடத்தின் அடித்தளம் போன்றது. அடித்தளம் மட்டும் உறுதியாக அமைந்துவிட்டால் போதும். கட்டிடத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றிக் கட்டிக் கொள்ளலாம். ஆரம்பக் கல்வி என்று அலட்சியமாக இருக்காமல் கவனத்தோடு கற்பித்தால், கல்வியின் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் பிறக்கும்.                 

தனியார் பள்ளிகள் அதிகளவு கட்டணம் வாங்குகின்றன. அதற்கு முக்கியமான காரணமாக அவர்கள் பள்ளியின் தரத்தை முன்வைக்கின்றனர். அரசுப் பள்ளிகளால் ஏன் அந்தத் தரத்தைக் காட்ட முடியவில்லை என்று பார்த்தோமானால், தனியார் பள்ளிகளுக்கு உள்ளது போன்று ஆசிரியர்களுக்கான கெடுபிடிகள் ஏதும் இல்லை. வேலை செய்தாலும் இல்லை என்றாலும் மாதம் பிறந்தால் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ளச் சங்கடமாக இருந்தாலும் இதுதான் கசப்பான நிஜம்.             

நிறைய கிராமப்புற அரசுப்பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. குழந்தைகள் அமர்வதற்கான பெஞ்ச், நாற்காலிகள் போன்றவை இல்லாமல் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை இருக்கிறது. சுகாதாரமான மதிய உணவு, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அத்தியாவசியமான வசதிகள் இல்லாமல் வளரிளம் பருவ மாணவிகளின் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு, குழந்தைத் திருமணங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெஃப் கூறுகிறது. தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் 4 பேரில் ஒருவருக்குக் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கான கற்பித்தல் உபகரணங்கள்கூட இல்லாமல் நிறைய அரசுப்பள்ளிகள் பெயரளவிலேயே இயங்கி வருகின்றன.             

இன்று ஒரு அரசு நடுநிலைப் பள்ளியின் விழாவுக்குச் செல்ல நேர்ந்தது. அந்தப் பள்ளியில் நான் கண்ட சில விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. பள்ளியின் முன்புறம் மைதானம் நன்கு பெருக்கப்பட்டு சுத்தமாக நீர் தெளித்து வைக்கப்பட்டிருந்தது. வகுப்பறைக்கு வெளியே குழந்தைகளின் காலணிகள் வரிசையாக இடப்பட்டிருந்தன. பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், “கடந்த 10 நாட்களாக ஒரு புதிய திட்டத்தை இங்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு கண்ணாடிக் குவளை கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எல்லோருடைய பெயர்களும் தனித்தனி தாள்களில் எழுதி சுருட்டி போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாள் காலையிலும் பிரேயர் முடிந்ததும் ஏதாவது ஒரு வகுப்பின் குவளை கொண்டு வந்து வைக்கப்பட்டு அதிலிருந்து ஒரு பெயர் மட்டும் எடுத்து வாசிக்கப்படும். அந்த பெயருக்குரிய குழந்தை மேடையில் வந்து நின்று ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி இரண்டு நிமிடங்கள் பேசவேண்டும், அல்லது பாடத்தில் மனப்பாடப் பகுதியில் இருந்து ஏதாவது ஒரு சிறு பகுதியைச் சொல்ல வேண்டும். இதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். அதை அவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்ததும் அவர்களுக்கு பேனா, பென்சில், ஜாமெட்ரி பாக்ஸ் போன்ற சிறு பரிசுகள் அளித்து உற்சாகப்படுத்துகிறோம்”, என்றவர் ஒரு குறும்புக்கார குழந்தையைப் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.           

“அந்தப் பையன் ரொம்பச் சுட்டிங்க. சரியாகப் படிக்க மாட்டான்… ஆனா இப்பல்லாம் குறும்பைக் குறைச்சிட்டு படிக்க ஆரம்பிச்சிட்டான். ஏன் இந்த மாற்றம்னு கேட்டதுக்கு, ‘மிஸ்… திடீர்னு ப்ரேயர்ல என் பெயரைக் கூப்பிட்டிங்கன்னா என்ன பண்றது? ஒண்ணும் தெரியாமல் முழிச்சிட்டிருந்தா அது எனக்கு அவமானம்ல? அதான் ப்ரிப்பேர் பண்ணிக்குறேன். நீங்க எப்ப வேணாலும் கூப்பிடுங்க. தயாராயிட்டேன்ல’ அப்படிங்குறான்”, என்றார் பெருமிதம் பொங்க. கேட்க நிறைவாக இருந்தது. இவரைப் போல ஆசிரியர் பதவியை வெறும் பணியாக எண்ணாமல் சேவையாகச் செய்பவர்கள் வெகு சிலரே.               

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் தனியார் பள்ளிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.       

பள்ளிகளில் மிக முக்கியமான அடிப்படைத் தேவை கழிப்பறைகள். அவை சுத்தமாக முறைப்படி பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். நிறையக் குழந்தைகள் கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைகளை அடக்கி வைத்து நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், தமிழகத்தில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அரசாணைப்படி, 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிவறையும், 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிவறையும் இருக்க வேண்டும். ஆனால் எந்த அரசுப் பள்ளியில் இப்படி அமைந்திருக்கின்றன? இந்தியாவின் வருங்காலத் தூண்கள் வலுவானதாக அமையப் பள்ளிகளில் இந்த வசதியும் தேவைதானே?       

PC: The News Minute

நீதிபோதனை வகுப்புகள் என்று ஒரு காலத்தில் நியாயம், ஒழுக்கம், நீதி போன்ற நல்ல குணங்களைக் கதைகளின் வழியாக சுவாரசியமாகக் கற்பித்து வந்த வகுப்புகள் இன்று அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன என்பது வேதனையான விஷயம். கணக்கு, அறிவியல் என்ற இரு பூதாகரமான விஷயங்கள் நீதிபோதனை வகுப்புகளோடு விளையாட்டு வகுப்புகளையும் சேர்த்து விழுங்கிவிட்டன என்பது சகிக்க முடியாத ஒன்று. ‘காலை எழுந்த உடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு…’ என்ற வரிகள் பாரதி காலத்தோடு வழக்கொழிந்து போய் விட்டன. உடல் பற்றிய விழிப்புணர்வு இன்று பெற்றோர்களுக்கு இல்லை. அதனால் குழந்தைகளுக்கு அறவே இல்லை. ஜங்க் ஃபுட் என்ற பெயரில் குப்பை உணவுகளையும், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் கொறிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் கவலைக்குரியதாக மாறி விட்டது.          

நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதன் மூலம் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, உதவும் தன்மை, கூடி விளையாடுதல், ஒற்றுமை போன்ற பல நல்ல குணங்கள் வளரப்பெறும். இன்றைய வாழ்க்கைமுறை அதற்கும் வழியில்லாமல் செய்துவிட்டது. தெருவில் சேர்ந்து விளையாடும் குழந்தைகளை பார்ப்பது அரிதாகி விட்ட காலம் இது.

பள்ளியிலாவது விளையாட்டு வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று பார்த்தால், அந்த பாடப்பிரிவேளைகளையும் கணக்கு, அறிவியல் ஆசிரியர்களே கபளீகரம் செய்கின்றனர். குழந்தைப் பருவத்தில் விளையாட்டுத் திறமையுள்ள குழந்தைகளைக் கண்டுபிடித்து ஊக்குவித்து அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பணியைச் செய்யாமல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்லவில்லை என்று புலம்புவதில் என்ன பயன்?  சிலம்பம், சுருள்வாள் போன்ற பாரம்பரியத் தற்காப்புக் கலைகளைப் பள்ளியில் கற்றுத் தர வேண்டும். வாரத்தில் மூன்று நாட்களாவது விளையாட்டு பிரிவேளை வைத்து ஊக்குவிப்பதன் மூலம் நிறைய விளையாட்டு வீரர்களை நாம் உருவாக்கலாம். இதுகுறித்த விழிப்புணர்வு அரசுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கட்டாயம் வரவேண்டும்.   

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”என நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்திருக்கிறார். இது வெறும் காகித அறிவிப்பாக மட்டுமே அமைந்து விடாமல் செயல்படுத்தப்படவும் வேண்டும். 

பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான கழிவறை, குடிநீர், காற்றோட்டமான அறைகளை ஏற்படுத்துவது மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பதுதான் தற்போது உள்ள அவசியமான மற்றும் அத்தியவசியமான தேவை. தமிழகத்தில் உள்ள 37,579 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வருடந்தோறும் ஒரு பள்ளிக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.3,758 கோடி ஒதுக்கினாலே போதும், 5 வருடத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். 

அரசுப்பள்ளியில் பயில்வது அவமானகரமான விஷயம் அல்ல என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நமது நாட்டின் பெரும் தலைவர்கள் பலரும் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள்தான். ஆங்கிலம் என்பது உலகம் முழுமைக்கும் உள்ள ஒரு பொதுவான தொடர்பு மொழி. அவ்வளவே. அது ஒரு அறிவு அல்ல என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில வழிக்கல்வியில் பயின்றவர்களை உயர்வாக எண்ணுவதும், தமிழ் அல்லது தாய்மொழி வழியில் பயின்றவர்களை ஏளனமாகப் பார்ப்பதும் இந்தச் சமூகத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதன் மூலம் தனியார் வசம் இருக்கும் கல்வியை மீண்டும் அரசு கைக்கொள்ள ஏதுவாக இருக்கும்.              அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் மாணவர்களை அணுகும்போது அவர்களிடமும் பெற்றோர்களிடமும் நிச்சயம் மாற்றம் ஏற்படும். விளிம்புநிலை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள்தான் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அவர்களுக்குத் தரமான கல்வி நிச்சயம் அளிக்கப்படவேண்டும். உள்ளூர் மக்களும், அரசியல்வாதிகளும், பொது நல அமைப்புகளும் அரசுப் பள்ளியின் தரம் மேம்பட உதவ வேண்டும்.           

ஒரு ஆண் குழந்தை கல்வி பயின்றால் அவனுக்கு நல்லது. ஒரு பெண் குழந்தை கல்வி பயின்றால் ஒரு தலைமுறைக்கே நல்லது. 

படைப்பாளரின் மற்ற கட்டுரை:

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.