ஹலோ தோழமைகளே, நலம். நலம் தானே ?

வெற்றி பெற்ற உடனே நேரே குருவின் பாதம் பற்றிய சிறுவன், அவருக்கே அவ்வெற்றியைச் சமர்ப்பித்தான். அத்தனை பெரிய ஜாம்பவான்கள் நிறைந்த போட்டியில் தான் எப்படி வெற்றி பெற முடிந்தது என்கிற சந்தேகத்தையும் கேட்டான்.

குரு சிரித்தவாறே, “அதற்கு இரண்டு காரணங்கள் மகனே, ஒன்று அந்தத் தாக்குதலில் நீ நன்றாகத் தேர்ச்சி பெற்றுவிட்டாய். மற்றவர்களுக்கு அது மற்றுமொரு வழிமுறை, ஆனால் உனக்கு அது மட்டுமே தெரிந்த கலை. அடுத்த காரணம், இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க எதிரி உனது வலது கையைத் தாக்க வேண்டும். ஆனால் வலது கை இல்லாத உன்னை அவ்வாறு தாக்க இயலாத காரணத்தால் அவர்களால் எதிர்தாக்குதல் நடத்த முடியாது. உன்னால் மாற்ற முடியாதது உன் உடல் அமைப்பு, மாற்றக்கூடியது / மேம்படுத்த கூடியது உன் இடது கையின் வலிமை மற்றும் பயிற்சி. அதைத்தான் நான் உனக்குச் செய்தேன்“ என்றார். ஆனந்த கண்ணீரோடு அவரது பாதங்களில் மறுபடியும் வீழ்ந்தான். அடுத்தடுத்து அவன் வாழ்வில் பல வெற்றிகளை ஈட்டினான்.

இங்கே நாம் கற்க வேண்டியது, நம்மை நம் நிறை குறைகளோடு அப்படியே ஏற்றுக்கொள்ளும் அறிவை. நம்மில் பலர் நான் மட்டும் கொஞ்சம் உயரமாக இருந்தால், இன்னும் நன்றாக ஆங்கிலம் பேச முடிந்தால், இன்னும் நிறைய படித்திருந்தால், இன்னும் கொஞ்சம் நிறமாக இருந்தால் என்று தன்னிடம் இல்லாதவற்றைப் பட்டியலிட்டுத் தோல்விக்கான காரணமாகக் கூறுவர். ஆனால் நம் நிறத்தையோ, உயரத்தையோ ஏன் உருவ அமைப்பையோ தேர்ந்தெடுக்கும் உரிமை நம் யாருக்கும் இல்லை. இது மாற்றவே முடியாத ஒன்று. ஆனால் நம் திறமையை, கல்வி அறிவை, மொழி புலமையை நாம் எந்த நிலையில் இருந்தாலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். உருவ அமைப்பை மாற்ற முடியாவிடினும் நேர்த்தியாகத் தன்னை முன்னிருத்திக்கொள்ள முடியும். ஆனால், பலர் எதை மாற்ற முடியாதோ அதைப் பற்றி மட்டுமே பேசிப் புலம்பி பொழுது கழிப்பர். இவர்களுக்குத் தேவை முன்னேற்றமல்ல, முன்னேறாமல் இருப்பதற்கான சாக்கு அவ்வளவே. தன் மீது நேசம் கொண்ட யாரும் காரணங்களைக் காட்டி அடுத்த அடி எடுக்காமல் காத்திருக்க மாட்டார்.

ஆமாம், இதுதான் நான். ஆனாலும் என்னை இன்னும் மெருகேற்ற நிறைய வாய்ப்புகள் உள்ளன, அதைக் கொண்டு நான் முன்னேறுவேன் என்கிற அழுத்தமான நம்பிக்கையை சுயநேசம் தரும். அதற்கான வழிகளையும் அவர்கள் தேடுவார்கள், வாய்ப்புகளை உருவாக்குவார்கள்.

நன்றாக யோசித்துப் பார்த்தால் எந்த மதிப்பும் இல்லாத பூஜ்யம்கூடச் சரியான எண்ணுடன் சரியான இடத்தில் சேர்ந்தால் அதனுடைய மதிப்பைக் கூட்டும். உபயோகமில்லாதது என்று உலகில் ஒன்றுமே இல்லை. எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது.

நமது பிரச்னையே, நாம் தனித்துவமானவர்கள்  என்பதை மறப்பதும், நமக்குப் பிடித்த மற்றவரைப் போல ஆக முயற்சிப்பதும்தான்.

இயற்கையில் எல்லாமே அதனதன் வழியில் வாழ்ந்து தனது கடமையாற்றி விட்டுச் செல்கின்றன். மனிதர்களுக்குத்தான் மல்லிகையும் ரோஜாவும் அழகு. ஒரு நாளும் எந்தக் காட்டுச்செடியும் மல்லிகை தானே அழகு நான் ஏன் பூக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. அதனதன் வழியில் மலர்ந்து மணம் பரப்பி, அழகால் நிறைத்து வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன.

ஆகவே தோழமைகளே, முதலில் உங்களை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். இயற்கையின் தனி சிறப்பான படைப்பு நீங்கள். உங்களைப் போன்ற ஒருவர் இதற்கு முன்னரும் இல்லை, இனி வரப்போவதும் இல்லை. பின் எதற்காக மற்றவரைப் போல ஆக வேண்டும்? நீங்கள் நீங்களாக இருப்பதுதான் அழகு, பேரழகு. உங்களிடம் மெருகேற்றக் கூடிய விஷயங்களைச் செய்து கொண்டே இருங்கள். மாற்ற முடியாத விஷயங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் போது உலகம் உங்களை எப்படி ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு உணர்வீர்கள். இந்த உலகம் உங்கள் மனதின் கண்ணாடிதான். நீங்கள் பிரதிபலிக்கும் உணர்வை அப்படியே உங்களுக்குத் திருப்பித்தரும்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ’உன்னை அறிந்தால்…’ ‘உணர்வு சூழ் உலகம்’ ஆகிய தொடர்கள், ஹெர் ஸ்டோரிஸில் புத்தகங்களாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளன.