ஹலோ தோழமைகளே , நலம். நலம்தானே?
கடந்த அத்தியாயங்களில் நாம் சில எளிமையான சுய நேசிப்பு வழிகளைப் பார்த்தோம். சொல்வதற்கும் செய்வதற்கும் மிக எளிமையாகத் தோன்றினாலும் அதன் பலன்கள் அளப்பரியது. இந்த அத்தியாயம் முதல் சுய நேசிப்பின் பன்முகங்களை ஆழமாகப் பார்க்கப் போகிறோம்.
சுய நேசம் என்பது சொல்வதற்கு மிக எளிதான ஆனால், கடைப்பிடிக்க மிகக் கடினமான விஷயம். பல நேரம் சுயநேசம் சுயநலமாக, தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. அல்லது சுயநலமென மற்றவர்கள் புரிந்துகொள்வார்களென்ற பயத்தில் நாம் அதைக் காற்றில் பறக்கவிடுவதும் உண்டு.
சுய நேசத்தை எப்படி அறிவியல்பூர்வமாகப் புரிந்து கொள்வது, அதை எப்படிச் செயலுக்குக் கொண்டு வருவதென்பதை இனி வரும் அத்தியாயங்களில் காண்போம்.
சுய நேசத்தை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- நம்மை ஏற்றுக்கொள்ளுதல் ( Self Acceptance )
- எல்லைக்கோட்டை வகுத்தல் ( Setting boundaries )
- சுயப் பராமரிப்பு ( Self Care )
- சுயப் பிரகடனம் ( Self Talk )
- தன்னை அறிதல் ( Self Discovery )
- மனநலப் பராமரிப்பு ( Mental health )
எப்போதெல்லாம் நம் சுயநேசம் சரியான திசையில் செல்கிறதா என்கிற சந்தேகம் வந்தாலும், இந்த ஆறு வகையினில் பொருந்துகிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
சரி இனி விரிவாக விவாதிப்போம்.
- நம்மை நாமே ஏற்றுக்கொள்ளுதல்
ஒரு பழமையான பொன்மொழி உண்டு. ’மாற்ற முடிந்ததை மாற்றும் வல்லமையும், மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தேவை’ என்று.
இது நமக்கு அப்படியே பொருந்தும். நம்மால் மாற்றக்கூடியவற்றை மாற்றவும், இன்னும் மெருகேற்றவும் நாம் உழைக்கும் அதே நேரம் எதை மாற்ற முடியாதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனத்திடமும் வேண்டும். ஆனால், பல நேரம் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளாமல் அதை மாற்ற வீண் முயற்சி செய்து நம் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறோம். நம் நேரத்தையும் ஆற்றலையும் மதித்துச் சரியாகச் செலவிடுவதும் சுய நேசம்தான்.
ஒரு பழங்காலக் கதையைப் பார்ப்போம்.
மல்யுத்தக் கலையில் தீராத ஆர்வமுள்ள ஒரு சிறுவன் இருந்தான். ஆனால், அவனுக்குப் பிறவியிலேயே வலது கை இல்லை. அவனுடைய உடற்சவாலைக் காரணம் காட்டி, அவனுக்குக் கற்றுத்தர நாட்டில் எந்தக் குருவும் தயாராக இல்லை. ஆனாலும் மனம் தளராமல் அவன் தேடிக்கொண்டே இருந்தான். ஒருநாள் மிகவும் வயதான குருவைச் சந்தித்தான், தனது ஆசையையும் கூறினான். அவரும் அவனுக்குக் கற்றுத்தர ஒப்புக்கொண்டார், ஒரு நிபந்தனையோடு. நான் கற்றுக்கொடுப்பதை எந்தக் கேள்வியும் கேட்காமல் கற்க வேண்டும் என்று. அவனும் அதற்கு உடன்பட்டு கற்கத் தொடங்கினான். குரு அவனுக்கு ஒரே ஒரு சண்டை உத்தி மட்டும்தான் சொல்லிக் கொடுத்தார். அதையே தினமும் பயிற்சி செய்ய வைத்து மெருகேற்றினார். அவனுக்கோ இந்த ஒன்றை மட்டும் கற்று, தான் எப்போது சிறந்த மல்யுத்த கலைஞனாவது என்கிற சந்தேகம். ஆனாலும் ஒப்புக்கொண்ட நிபந்தனைப்படி அவர் சொல்வதை இம்மியும் பிசகாது பயிற்சி செய்தான். நான்கைந்து வருடங்கள் கழிந்தன. அவன் இன்னும் அந்த ஒரு வித்தையை மட்டும்தான் பயிற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் குரு அவனை அழைத்து, “உன் பயிற்சிக் காலம் முடிந்தது. அடுத்து நடக்கப் போகும் மல்யுத்த போட்டியில் நீ கலந்துகொள்“ எனக் கூறினார்.
அவனுக்கோ மனக் கலக்கம். தெரிந்தது ஒரே ஒரு வித்தை, அதை வைத்து எப்படிப் போட்டியிடுவது? வெற்றி பெறுவது? ஆனாலும் குருவின் மேலுள்ள மரியாதையின் காரணமாகப் போட்டியில் கலந்து கொண்டான். போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வியப்பு கலந்த பரிதாபம். நாடெங்கிலும் இருந்து தலைசிறந்த மல்யுத்த கலைஞர்கள் பங்கேற்க வந்திருக்கும்போது, ஒரு கலையுடன் இந்தச் சிறுவன் என்ன செய்வான் என்கிற பரிதாபம்தான்.
ஆனாலும், அந்தப் போட்டியில் சிறுவன்தான் வென்றான். அவன் எப்படி வென்றான் என அவனுக்கே புரியவில்லை.
அவனுக்கே புரியாத அந்த வெற்றியின் ரகசியம் என்ன? அதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
(தொடரும்)
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.
ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ’உன்னை அறிந்தால்…’ ‘உணர்வு சூழ் உலகம்’ ஆகிய தொடர்கள், ஹெர் ஸ்டோரிஸில் புத்தகங்களாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளன.