ஹாய் தோழமைகளே நலம், நலம்தானே?
சுய பராமரிப்பில் இன்னும் சில விஷயங்களைக் காண்போம்.
• தேவையான ஓய்வெடுத்துக்கொள்வது
நம்மில் பலருக்கு ஓய்வு என்பதே எட்டிக்காய். இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று பறப்பர். மனம் ஓர் இடத்தில் அமைதியாக நிற்காது. ஆனால், இவர்களால் ஒரு வேலையையும் சரியாகச் செய்ய முடியாது. மறுபடியும் சரியாக வராத வேலைக்காக மீண்டும் மெனக்கெடுவர். இது ஒரு தொடர் பயணம் போல போகும். வேலையும் நடக்காது, ஓய்வும் இருக்காது. ஒரு கட்டத்தில் உடலும் மனமும் சோர்ந்து போய் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர். இதில் ஊர் உலகம் வேறு, பாவம் கடின உழைப்பாளி. ஆனால், வெற்றி பெற முடியவில்லை என்று பாவம் பார்ப்பர். உண்மையில் கடின உழைப்பாளியாக இருப்பது மட்டுமல்ல கொஞ்சம் புத்திசாலியாகவும் இருந்து இருந்தால், அவரால் சுலபமாக வெற்றி பெற்றிருக்க இயலும். எப்படி உடலுக்குச் சத்தான உணவு, உடற்பயிற்சி அவசியமோ அதே அளவு ஓய்வும் தேவை, இது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் தேவை. அப்போதுதான் ஓய்வுக்குப் பின் புத்துணர்ச்சியோடு வேலையைச் செய்து முடிக்க முடியும்.
நான் ஒரு ட்ரெயினிங் கம்பெனியில் பயிற்சியாளராக வேலை செய்து கொண்டிருக்கும் போது, அந்த கம்பெனியில் ஒரு சிறிய டெக்னிகல் பிரச்னை. அனைவரும் இரவு பகல் பாராது ஒரு நான்கு நாளைக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயம். எல்லாம் வெற்றிகரமாக முடிந்தவுடன் எங்களைப் பாராட்டும் விதமாக எங்களின் மேனேஜர் ஒரு மாலை காட்சி திரைப்படத்திற்கும், அப்படியே ஒரு நட்சத்திர ஓட்டலில் இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்தார். அதற்கு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே, புதியதாக ஒரு டெக்னிகல் பிரச்னை தலைதூக்கியது. கம்பெனியின் டைரக்டர் அனைவரையும் அழைத்து இன்னும் இரண்டு நாளைக்கு இதே போல் வேலை உள்ளதால் எங்களின் திரைப்பட மற்றும் நட்சத்திர ஹோட்டல் விருந்தைப் பிறிதொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார். எங்களுக்கு ஏமாற்றம் + அயற்சி. ஆனாலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை.
ஆனால் எங்கள் மேனேஜர், அதை அழுத்தமாக மறுத்தார். இந்தப் புதுப் பிரச்னை ஓர் இரவு தள்ளி சரிசெய்வதால் பெரிய நஷ்டமில்லை. ஆனால் நான்கு நாட்கள் வேலை செய்தவர்களுக்கு நிச்சயம் ஒரு நாள் ஓய்வு தேவை, இல்லாவிடில் அடுத்த வேலை நிச்சயம் சரியாக நடக்காது என்று வாதாடினார். டைரக்டரை ஒத்துக் கொள்ளவும் வைத்தார். இதுதான் உங்கள் உடல் மற்றும் மனதின் தேவையை அங்கீகரிப்பது. இல்லாவிடில் உடலும் மனமும் உங்களுக்கு எதிர் திசையில்தான் வேலை செய்யும். ஓய்வு என்பது எப்போதுமே சினிமாவோ, நட்சத்திர ஹோட்டலோ இல்லை. செய்யும் வேலையில் இருந்து சிறிது விலகி உங்களைத் தளர்வுபடுத்திக் கொள்வது. அது பிடித்த இசையைக் கேட்பதோ, சிறிது காலார நடப்பதாகவோகூட இருக்கலாம். ஆனால், செய்யும் கடின வேலையில் இருந்து மனமும் உடலும் சிறிது தளர்வாக வேண்டும் அவ்வளவே.
• ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது / ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடுவது.
ஆரோக்கியப் பழக்கங்களைப் பற்றி நாம் அனைவருமே அறிவோம். சத்தான சரிவிகித உணவு, சரியான உடற்பயிற்சி, உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வு. இவற்றை உறுதிப்படுத்தும் அத்தனை பழக்கங்களும் ஆரோக்கியப் பழக்கங்களே. ஆனால், நம்மையும் அறியாமல் நம்மிடம் ஆரோக்கியத்தைச் சீரழிக்கும் சில பழக்கங்கள் இருக்கும். ஏதோ புகைபிடிப்பதோ, மது அருந்துவதோ, போதைப் பொருள் உட்கொள்வதோ மட்டும் ஆரோக்கிய சீர் கேடல்ல. ஒரு சிலர் நள்ளிரவு வரை உறக்கத்தைத் தள்ளிப் போடுவர், கேளிக்கை, வேலை என்று எந்தக் காரணமானாலும் இது நிச்சயம் ஆரோக்கியக் கேடுதான். இழந்த தூக்கத்தைப் பகலில் தூங்கிச் சரிகட்டுவது ஆரோக்கியம் ஆகாது. சிலருக்குத் துரித உணவு வகைகள் உண்பது. நாள் முழுக்கக் காய்கறிகள், பழங்கள், வீட்டில் சமைத்த உணவுகள் என்று ஆரோக்கியம் காத்துவிட்டு, மாலை வேளையில் சாப்பிடும் பஜ்ஜியும் போண்டாவும் போதும் வயிற்றைப் பதம்பார்க்க. வீட்டிலிருக்கும் பெண் தோழிகளுக்கு, தொலைகாட்சித் தொடர்கள் மேலுள்ள மோகம். அனைவரையும் பொதுவாகக் குற்றம்சாட்டவில்லை என்றாலும், நான் சந்திக்கும் நிறைய தோழிகளுக்கு இது ஒரு விட முடியாத வியாதியாக உள்ளது.
முதலில் வேலை இல்லா நேரத்தில் என்று ஆரம்பித்து, இப்போது தொடர்களுக்கு இடையே வேலை செய்யும் நிலை. ஒரு நாளைக்கு ஏழு, எட்டு மணிநேரம் தொலைக்காட்சியில் செலவிடுபவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். நம்மை மேம்படுத்திக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கையில் நம் நேரத்தை இப்படிச் செலவழிப்பது எத்தனை பெரிய ஆரோக்கியக் கேடு? உட்கார்ந்து இருப்பதால் உடலுக்குக் கேடு. பல விதமான தொடர்களில் பல வித பிரச்னைகள், எதிர்மறையான விஷயங்களை நம் தலைக்குள் ஏற்றுவதால் மனதிற்குக் கேடு. பெண்களே சற்று யோசியுங்கள். இப்போதெல்லாம் கைபேசிக்கு அடிமையாவதும் நிறைய பார்க்கிறோம். அதற்கான ஆரோக்கியச் சீர்கேட்டை மருத்துவர்கள் கூறும் போதே மனம் நடுங்குகிறது. இது போன்று எத்தனையோ சிறு சிறு பழக்கங்கள் நம்மிடம் இருக்கலாம். நீங்கள் மிகவும் விரும்பும் ஒருவர் இது போன்ற பழக்கங்களால் உடலை, மனதைக் கெடுத்துக்கொண்டால் நீங்கள் எத்தனை வருந்துவீர்கள்? அவர்கள் மாற வேண்டும் என்று எவ்வளவு மெனக்கெடுவீர்கள்? பின் நீங்கள் மிகவும் நேசிக்க வேண்டிய உங்களிடமே இதெல்லாம் இருந்தால் எப்படி?
உங்கள் வாழ்க்கைத் துணையோ, பிள்ளைகளோ, பெற்றோர்களோ, தோழமைகளோ எத்தனை பிரியமானவர்களாக இருந்தாலும், உங்கள் வாழ்வு முழுக்க அவர்கள் உடனிருக்க இயலாது. ஒவ்வொருவரின் பாதையும், பயணமும் தனித்தனிதான். அவர்களுக்காக எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கும் நீங்கள் உங்கள் வாழ்வு இருக்கும் வரை கூடவே இருக்கப்போகும் உடலுக்காகவும், மனதிற்காகவும் எத்தனை வேண்டுமானாலும் மெனக்கெடலாமே! மெனக்கெடுங்களேன்.
(தொடரும்)
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.