யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே வரலாறு பதிவாகிறதல்லவா? வாசிக்கும் பழக்கம் உடையவர் எனில் நிச்சயம் ஆன் ஃபிராங்கின் நாட்குறிப்பைப் படித்திருப்போம். குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்போம். நாஜி கொடுமைகளுக்கு ஆளான பதின்ம வயது யூதப் பெண்ணின் டைரிக் குறிப்புகள் அவை. மறைவிடத்தில் வசித்து முடிவில் நாஜிகளிடம் சிக்கி வதை முகாமுக்குச் சென்று, நோய் கண்டு இறந்தும் போனாள் ஆன்.

அவள் இறந்த சில மாதங்களில் பிரிட்டிஷ் வெற்றி பெற்று ஹிட்லரிடம் இருந்து யூதர்களை மீட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அன்னியின் நாட்குறிப்பு சில திருத்தங்களுடன் பதிப்பிக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு முதல் பல பதிப்புகள் கண்டு, எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பல கோடி மக்களைச் சென்றடைந்தது அந்த நூல். யூதர்கள் அனுபவித்த கொடுமைகளின் சான்றாக இன்றும் இருக்கிறது.

அந்த நூல் வெளியான சில மாதங்களில், ஃபர்ஹா என்ற சிறுமியும் அவளுடைய உற்றார் உறவினர்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அந்தக் கிராமம் மட்டுமின்றி, பாலஸ்தீனம் முழுக்கப் பல லட்சம் பேர் இப்படித் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1948ஆம் ஆண்டு நடந்த இப்பேரழிவு நிகழ்வினை நக்பா என்கிறார்கள் பாலஸ்தீனியர்கள். விரட்டியது யார்? யூதர்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து யூதர்கள் துரத்தப்பட்டபோது அடைக்கலம் கொடுத்தது பாலஸ்தீனம். ஓடிக் களைத்த யூதர்கள் தங்களுக்கென்று ஓரிடத்தைக் கட்டமைக்க விரும்பினர். இறைவன் வாக்களித்த நிலத்தை இறைவனே வந்து கொடுக்கும்வரை காத்திருக்கவேண்டாம், நாமே எடுத்துக்கொள்வோம் என முடிவு செய்தனர். யூதர்களின் ஜியோனிச இயக்கம் வலுப்பெற்றது. பிரிவினைக் கோடுகளைப் போடுவதில் வல்லவர்களான பிரிட்டிஷார், பாலஸ்தீனத்திலும் தங்கள் வேலையைக் காட்டினர். மேலை நாடுகளின் ஆதரவால் இஸ்ரேல் உருவாகிவிட்டது. வீடு? ஏற்கெனவே அங்கிருக்கும் பாலஸ்தீனியர்களை அடித்துத் துரத்தினால் முடிந்தது வேலை.

தப்பியோடியவர்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். போக முடியாதெனப் பிடிவாதம் பிடித்தவர்களை, காஸா நிலத் துண்டில் அடைத்து உலகின் மிகப் பெரிய திறந்தவெளிச் சிறையாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் கொன்று குவிப்பதும் பதிலுக்கு இவர்கள் குண்டு வைப்பதும் தினசரி நடக்கும் சகஜமான விஷயங்களாகிவிட்டன. சிரியா, ஜோர்டன், எகிப்து என அண்டை நாடுகளில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனியர்கள் என்றேனும் ஒரு நாள் தங்கள் நிலத்துக்குத் திரும்பமுடியும் என்ற நம்பிக்கையைவிடத் தயாராக இல்லை. தாங்கள் விரட்டப்பட்ட கதையைத் தங்கள் சந்ததிகளிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்படித் தான் கேட்ட கதை ஒன்றைத்தான் ஃபர்ஹா படமாக இயக்கியிருக்கிறார் டரின் ஸலம் (Darryn J Sallam). எளிமையான கதை. பதிநான்கு வயதாகும் ஃபர்ஹாவுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார் அவள் அப்பா. அச்சிறுமிக்கோ, நகரத்தில் வசிக்கும் தன் தோழியைப் போலத் தானும் படிக்க வேண்டும் என்று ஆசை. தன் மகளின் எதிர்கால நலன் கருதி அவள் விருப்பப்படியே படிக்கவைக்கச் சம்மதிக்கிறார் அப்பா. அதைக் கொண்டாடும் நேரத்தில்தான் ஜியோனிச ஹகனாஹ் படையினரால் அந்த கிராமம் சூறையாடப்படுகிறது. தப்பிக்க முடியாத நிலையில் தன் மகளைக் காப்பாற்ற வீட்டுக்கு வெளியே இருக்கும் கிடங்கின் உள்ளே அனுப்பி மறைத்து வைத்து வெளியே மரப்பலகைகளைக் கொண்டு ஆணிகளை அடித்து மூடிவிடுகிறார் அப்பா. யாராவது அதைப் பார்த்தாலும் உபயோகமில்லாத அறை என்று நினைத்து உள்ளே செல்லமாட்டார்கள். தான் நிச்சயம் திரும்பிவருவேன் எனச் சொன்னவரை, அதன்பிறகு ஃபர்ஹா பார்க்கவேயில்லை.

வெளிச்சம் குறைவான அறைக்குள் ஃபர்ஹாவுடன் நாமும் வெளியில் நடப்பவற்றை அரைகுறையாகப் பார்க்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தில் அதிகப்படியான வன்முறையோ ரத்தம் தெறிக்கும் காட்சிகளோ இல்லை. எனினும் நிலைமையின் தீவிரத்தை நாம் உணரமுடியும். ஃபர்ஹாவுடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நாமும் காத்திருக்கிறோம். இரவு பகல்களைக் கடந்து நீளும் அந்தக் காத்திருப்பு முடிந்து அங்கிருந்து ஃபர்ஹா தப்பிவிடுவதோடு படத்தின் கதை முடிகிறது. நிஜத்தில் ஃபர்ஹாவைப் போல பல லட்சம் அகதிகளின் வாழ்க்கைக் கதை அங்கிருந்து தொடங்கி இன்றும் அலைக்கழிக்கப்படுகிறது.

ஃபர்ஹா

பாலஸ்தீன மக்களின் வரலாறு, யூதர்களின் கதையைப் போல போதுமான அளவுக்குச் சொல்லப்படவில்லை. யூத ஆதிக்கம் நிறைந்த ஹாலிவுட்டில் பாலஸ்தீனக் கதைகள் குறைவாக இருப்பதில் வியக்க ஏதுமில்லை.

மற்ற திரைத்துறைகளில் வரும் படங்கள் தயாரிப்பதில் தொடங்கி கவனம் பெறுவது வரை இடர்களை எதிர்கொள்கின்றன. ஃபர்ஹா படத்தின் இயக்குநர் டரின் ஸலம், பாலஸ்தீன வேர்களைக் கொண்டவர். ஜோர்டனில் வசிக்கிறார். இதற்கு முன்பு விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியுள்ளார். ஃபர்ஹா அவருடைய முதல் திரைப்படம்.

டரின் ஸலம்

இந்தக் கதையைத் திரைப்படமாக்கினால் அவருக்கு எதிர்காலமே இருக்காது என சொல்லப்பட்டது. தயாரிப்பதற்கு ஆள் கிடைப்பதும் எளிதல்ல. ஸ்வீடன் நாட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஜோர்டன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலருக்கும் இக்கதையுடன் உள்ளார்ந்த தொடர்பு இருக்கிறது. படமாக்கப்பட்ட போது பல காட்சிகளை இவர்கள் கண்ணீருடனே எடுத்துள்ளனர்.

தங்கள் கதையைச் சொல்வதற்கான உரிமைகூட மறுக்கப்படுகிறதே என்கிற வலியில் வரும் கண்ணீர் அது. நாஜிகள் யூதர்களுக்குச் செய்த கொடுமைகள் பற்றி எத்தனையோ படங்கள், தொடர்கள் இருக்கின்றன. வரலாற்றைப் பதிவு செய்வது அதை மீண்டும் செய்யாமல் இருக்கப் பாடம் கற்பதற்குத்தானே? சொல்லப்போனால் ஜெர்மனி நாட்டில் இதெல்லாம் நிஜமாகவே பாடங்களாக இருக்கின்றன. அங்கே பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள் தங்கள் முன்னோர்கள் யூதர்களுக்கு இழைத்த தவறுகளைப் படித்துத் தெரிந்துகொள்கிறார்கள். வாரம் தவறாமல் இப்போதும் ஆவணப்படமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் செய்கிறார்கள். இவ்வளவு முதிர்ச்சியுடன் தன் தவறுகளை ஒரு நாடு கையாள முடியுமா என வியக்கும் அளவுக்கு நாடு முழுக்க அருங்காட்சியகங்களும் நினைவு சின்னங்களும் நிறைந்துள்ளன. இந்தியாவில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எந்த நாடாக இருந்தாலும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பது பெண்களுக்குத்தான்.

உலகம் முழுக்க அகதிகளாக இருப்போரில் கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி பெண்களும் குழந்தைகளும். முகாம்களில் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பது முதல் கழிப்பறை வசதி வரை பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள். பாலியல் அத்துமீறல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும் பணம் சம்பாதிக்கும் பொறுப்பும் சேர்ந்து இரட்டைச் சுமையைத் தாங்குகிறார்கள். உள்நாட்டுக் கலவரமானாலும் சரி, நாடுகளுக்கிடையேயான போர்களானாலும் சரி முடிவெடுக்கும் இடத்தில் பெரும்பாலும் ஆண்களே இருக்கிறார்கள். இவர்களால் பாதிக்கப்படுவதெனவோ பெண்களே. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் தங்கியிருப்போர் பேரன் பேத்திகளே எடுத்துவிட்டார்கள். இன்னும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுக்கிறது இந்திய அரசு. பல தீர்ப்புகள் வந்த பிறகும் அவர்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்து அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தில் கூட இவர்களைச் சேர்க்கவில்லை.

இதற்கெல்லாம் எந்த இந்துவின் மனமும் புண்படுவதாகத் தெரியவில்லை. இப்படித் தேவைக்கேற்ப மனம் புண்படும் வழக்கத்தை யூதர்களிடம் அதிகம் காணமுடியும். தங்களுக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினாலும் அது உண்மையாகவே இருந்தாலும் யூதவெறுப்பாளர்கள் என முத்திரை குத்திவிடுவார்கள். ஹாலோகாஸ்ட் வரலாற்றினால் யூதர்களின் மீது விமர்சனம் வைக்கப் பொதுவாக அனைவருக்கும் தயக்கம் உள்ளது. அதை மீறிப் பேசுபவர்கள் யூதவெறுப்பாளர்களாகி கொஞ்சம் அசந்தால் நாஜி பட்டமும் சேர்ந்தே கிடைக்கும்.

ஃபர்ஹா திரைப்படம் பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றதும் படத்தைத் தடை செய்யவேண்டும் என யூதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இத்தனைக்கும் படத்தில் அரசியல் குறைவாகவே உள்ளது. பின்னணியை நாம் தேடித் தெரிந்துகொள்ளும் வகையிலும் எந்த அகதியுடனும் பொருந்தும் வகையிலும் கதை இருக்கிறது. ஆனால், ஜாஃபாவில் படத்தைத் திரையிட்டால் அல் சரயா திரையரங்குக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்துவதாக யூதர்கள் மிரட்டினர். எதிர்ப்புகளை மீறி ஃபர்ஹா, உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ஏசியா பசிபிக் ஸ்கிரீன் அவார்ட்ஸின் சிறந்த இளையோர் படத்துக்கான விருதை வென்றது. ஜோர்டான் சார்பில் ஆஸ்கர் விருதுக்காக அந்த ஆண்டு இப்படமே அனுப்பிவைக்கப்பட்டது. பரிந்துரைப் பட்டியலில் இருந்து நீக்கியே தீரவேண்டும் என யூதர்கள் ஒற்றைக் காலில் நின்றார்கள்.

ஒவ்வொரு அங்கீகாரத்தின் போதும் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. நெட்பிளிக்ஸில் படம் வெளியான போதும் அப்படியே. அதிகாரமும், அமெரிக்க ஆதரவும் இருக்கும் இஸ்ரேல், இன்றைக்கு காஸாவில் செய்யும் கொடுமைகள் ஆவணப்படங்களாக வரும்போதும் எதிர்ப்பைச் சமாளித்தே மக்கள் பார்வைக்குக் கொண்டுவரவேண்டியுள்ளது. பாலஸ்தீன் கலெக்ஷன் என்று சுமார் இருபது திரைப்படங்கள், ஆவணப்படங்களை அண்மையில் நெட்பிளிக்ஸ் வாங்கியிருந்தது. அவற்றை நெட்பிளிக்ஸில் இருந்து நீக்க யூதர்கள் தொடர்ந்து முயற்சி செய்தனர். பார்வையாளர்கள் அவற்றைப் பார்த்து வரவேற்பளித்து லாபம் கிடைத்தாலும், நெட்பிளிக்ஸ் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் கைவிட்டது. 2024ஆம் ஆண்டு அக்டோபரில் அவை அனைத்தும் நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டன.

ஃபர்ஹா திரைப்படமும் அப்படி ஒருநாள் நீக்கப்படலாம். ஆனால், லட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளின் நினைவில் இருந்து வரலாற்றை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. வீடுகளை விட்டு வெளியேறிய பின்னும் கையில் அந்த வீட்டின் சாவிக்கொத்தை இறுக்கிப்பிடித்திருக்கிறார்கள். சாவிக்கொத்தும் அதன் கதையும் பல தலைமுறைகள் கடந்தும் பயணம் செய்கின்றன. அவற்றைக் கேட்கும் அளவுக்கு அறிவு முதிர்ந்த சமூகம் ஒருநாள் உருவாகட்டும்.

படைப்பாளர்

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.

பின் இணைப்புகள்

டிரைலர்

நெட்பிளிக்ஸில் வருவதற்கு எதிர்ப்பு –

https://www.theguardian.com/world/2022/nov/30/farha-israel-condemns-new-netflix-film-for-showing-palestinian

நக்பா – https://imeu.org/article/quick-facts-the-palestinian-nakba

ஆன் பிராங்க் – https://www.annefrank.org/en/anne-frank/who-was-anne-frank

பெண் அகதிகள் –

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் –

https://timesofindia.indiatimes.com/city/chennai/three-generations-later-sri-lankan-tamils-still-in-search-of-identity/articleshow/116475168.cms

நெட்பிளிக்ஸில் இருந்து எடுக்கப்பட்ட பாலஸ்தீன் உள்ளடக்கப் படங்கள்

https://progressive.org/latest/netflix-removes-palestinian-stories-from-its-library-badawi-20241113