கேள்வி:
10 மாத குழந்தை சாப்பாடு சாப்பிடாமல் நிறைய பிஸ்கட் கேக்குது கொடுக்கலாமா?

பதில்:
குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்துப் பழக்குவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அடுமனை (பேக்கரி) தயாரிப்புகள் பெரும்பாலும் மைதா மாவால் செய்யப்படுபவை. கோதுமை பிரட், சிறுதானிய பிஸ்கட்கள் போன்றவைகளும் மைதா மாவுடன் சிறிதளவு கோதுமை அல்லது சிறுதானிய மாவு கலந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது ராகி பிஸ்கட் என்றால் முழுவதும் ராகி மாவு இல்லை.
மைதா மாவின் தீமைகள் பலப்பல. இதில் நார்ச்சத்து அறவே இல்லை. கோதுமையை அதிதீவிரமாக பதப்படுத்தி, அனைத்து நார்ச்சத்துக்களையும் B வகை வைட்டமின்களையும் நீக்கி மைதா தயாரிக்கப்படுகிறது. இதில் வெள்ளையான கலருக்காக லாரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. இவை உட் சென்றவுடன் ஒரு ஜெல் மாதிரி உருமாறி இரைப்பையில் உள்ள அமிலம், செரிமான சுரப்புகள் அனைத்தையும் உறிஞ்சி வயிற்றை அடைத்து விடுகிறது.
நாம் சாப்பிடும் உணவு வயிற்றில் கடையப்பட்டு, பாதி செரிமானம் அடைந்து நான்கு மணி நேரத்தில் சிறுகுடலை அடைய வேண்டும். அப்போதுதான் அங்கு அடுத்த செரிமானம் நடைபெறும். இரைப்பை காலியானதும் மறுபடி பசி ஏற்படும். இது இயற்கையான சுழற்சி. பிஸ்கட் சாப்பிட்டால் இரைப்பை விரிவடைந்து சிறு குடலுக்கு போவது மிகவும் தாமதமாகும். அதனால்தான் நான், பரோட்டா போன்றவை சாப்பிட்டால் வயிற்றில் ஒரு மந்தமான உணர்வும், பசியின்மையும் ஏற்படுகிறது. மைதா மலச்சிக்கலையும் ஏற்படுத்தும். இதனால் தான் இவற்றை தவிர்க்க வேண்டும். வெள்ளை நச்சுகளில் மைதா முதலிடம் வகிக்கிறது.
பிஸ்கட்டில் உப்பு சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வகையை பொருத்து மாவு எடையில் 9- 63 சதவீதம் கொழுப்பு சேர்க்கப்படுகிறது. பேக்கிங் சோடா என்பது சோடியம் பை கார்பனேட் மட்டும், பேக்கிங் பவுடர் என்பது சோடியம் பைகார்பனேட், சோடியம் கார்பனேட் மற்றும் ஒருவகை அமிலம் சேர்ந்த கலவை. பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரில் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு வாயுதான் ரொட்டி மாவை மிருதுவாக பொங்க வைக்கிறது.
பேக்கரி தயாரிப்புகளில் பேக்கிங் சோடா கட்டாயம் சேர்க்கப்படுகிறது. சில தயாரிப்புகளில் பேக்கிங் பவுடரும் உண்டு. கலருக்காக சில நிறமிகள் (Cooking Colours) வாசனைக்காக சில வேதிப்பொருள்கள் (உ-ம்) ஏலக்காய் வாசனை, மாம்பழ வாசனை, இனிப்பு சுவைக்காக சில வேதிப்பொருள்கள் இப்படி பற்பல சேர்க்கப்படுகின்றன. கிரீம் பிஸ்கட்களில் வேதிப்பொருள்கள் மிக அதிகம். ஏலக்காய் வாசனைக்காக நிஜமான ஏலக்காயோ, மாம்பழ சுவைக்காக நிஜமான மாம்பழ சாறோ சேர்ப்பது இல்லை. பேக்கரி பொருள்களில் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க சில பாதுகாப்பு பொருள்கள் (Preservative) சேர்க்கப்படுகின்றன.
பிஸ்கட்டில் சேர்க்கப்படும் சர்க்கரை அல்லது இனிப்பு பொருளால், சுவையும் மொறுமொறுப்பும் கிடைக்கிறது. சர்க்கரையால் தான் பிஸ்கட் அல்லது ரொட்டிக்கு ஒரு பிரவுன் நிறமும் கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இனிப்பு சேரும்போது மாவு ஒரு ஜெல் போல் (Gelatinisation) மாறுகிறது.
7-8 மாதத்தில் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்போது குழந்தைக்கு எதையாவது கடிக்க வேண்டும் என்று தோன்றும். இது New Found Interest போல தான். கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்துக் கடிக்கும். இந்த வயதில் கையில் பிஸ்கட்டைக் கொடுத்து தாய்மார்கள் பழக்குகிறார்கள். அதன் கரகரப்பு, இனிப்புச் சுவை, வாயில் கரையும் மிருதுவான தன்மை, கடிக்கும்போது கிடைக்கும் ஒரு மகிழ்ச்சியான அனுபவம் (Pleasant Experience) இவை எல்லாம் சேர்ந்து குழந்தையை எளிதில் பிஸ்கட்டுக்கு அடிமைப்படுத்தி விடும். பிஸ்கட் ருசி கண்ட குழந்தை அதையே தான் கேட்கும், இட்லி, தோசை சாப்பிட விருப்பப்படாது. செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், வயிறு மந்தம் ஏற்படக்கூடும். இட்லி, தோசை, கிச்சடி போன்றவற்றிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள், பிஸ்கட்டில் குழந்தைக்கு கிடைப்பதில்லை. இனிப்பு, உப்பு, எண்ணெய் ஆகிய மூன்றும் சேரும்போது அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற ஒரு அடிமைத்தனத்தை (Addiction) ஏற்படுத்துகிறது.
பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்:
- எடை அதிகரிக்கும்
- நீண்ட கால பாதிப்பாக இதய நோய், சர்க்கரை நோய் ஏற்படலாம்.
- பசியின்மை, வயிறு நிரம்பிய உணர்வு
- பல் சொத்தை, பல் சிதைவு
- ஈறுகள் அழற்சி
பிஸ்கட் புராணம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
பிஸ்கட் குழந்தைகளுக்கு தரக்கூடாது.
***
கேள்வி:
எனது 4 வயது குழந்தைக்கு இடது கை பழக்கம் உள்ளது – எப்படி மாற்றுவது?

பதில்:
என்ன செய்யலாம் என்று மட்டுமே நீங்கள் கேட்க முடியும். ஏனெனில் இடது கைப் பழக்கத்தை மாற்ற முடியாது. மாற்றவும் முயற்சி செய்யக் கூடாது. அப்படி செய்தால் அது குழந்தையின் மனநலத்தை பாதிக்கும். கற்றல் திறனைக் கூட குறைத்து விடும்.
உலக அளவில் 10% மக்கள் இடது கை பழக்கம் உள்ளவர்கள். உங்கள் குழந்தை இந்த 10%-ல் ஒன்று என்று மகிழ்ச்சி அடையுங்கள். நெதர்லாந்து நாட்டில் 13- 14% இடது கை பழக்கம் உள்ளவர்கள். இந்தியாவில் இது 5.2% .
பெரும்பாலானவர்களுக்கு இடது பக்க மூளை ஒரு கட்டுப்பாட்டு மையமாக இருக்கும். அங்கு தான் பேச்சு, மொழிக்கான மையமும் இருக்கிறது. இடது பக்கம் ஆதிக்கம் செலுத்தும் போது வலதுகைப் பழக்கம்தான் இருக்கும். சிலருக்கு இயற்கை மாற்றங்களால் அல்லது இயற்கை தேர்வுகளால் (Natural Selection) வலது பக்க மூளை கட்டுப்பாட்டு மையமாகி விடுகிறது. எனவே இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
மரபு வழியாகவும் இது ஏற்படலாம். இரண்டு பெற்றோரும் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் என்றால் குழந்தையும் அப்படியே இருப்பதற்கு 25% வாய்ப்பு உள்ளது. அம்மாவுக்கு மட்டும் இடது கைப் பழக்கம் என்றால் 22% வாய்ப்பு, அப்பாவுக்கு மட்டும் இடது கை பழக்கம் என்றால் இது 17% . எனவே இது தாயிடமிருந்து பெறப்படும் சொத்து. ஆண் குழந்தைகளிடம் அதிகமாக இடது கைப் பழக்கம் காணப்படுகிறது. சிம்பன்சி எனப்படும் வாலில்லாக் குரங்குகளிடம் 50% இடது கைப் பழக்கம் இருக்கிறதாம்.
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இரண்டு கைகளையும் கிட்டத்தட்ட சமமாக பயன்படுத்தக்கூடியவர்களாக (Ambidextrious) இருப்பார்கள். அதாவது அவர்களால் இரண்டு கைகளாலும் எழுத முடியும். இது ஆரம்ப காலத்தில் பெற்றோர் கட்டாயப்படுத்துவதால் கூட இருக்கலாம். வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் இடது கையாலும் எழுத பழகுவது மிகவும் கடினம். ஆனால் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கையால் எழுத, மற்ற வேலைகளை செய்ய எளிதில் கற்றுக் கொள்கிறார்கள்.
சிறுவயதில் இடது கைப் பழக்கத்தை மாற்ற முயற்சிப்பதால் உடல் மற்றும் மன அளவில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் அளவில் பாதிப்புகள் சில ஏற்பட்டாலும், அதன் தாக்கம் குறைவுதான். எழுதுவது, படம் வரைவது, கைகளால் பொருட்களை கையாளுவது போன்ற திறன்களில் வளர்ச்சி தாமதமாகவும், குறைவாகவும் ஏற்படும். இரண்டு கைகளையும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தாமதமாகும் பாதிக்கும். குழந்தை வளர்ந்த பிறகு குழுவுடன் இணைந்து விளையாடுவது, செயல்படுவது ஆகியவை வெகுவாக குறையும்.
பழக்கத்தை கட்டாயப்படுத்தி மாற்றும்போது ஏற்படும் மன அளவிலான பாதிப்புகள் பல பல
- மன அழுத்தம்
- கோபம்
- நான் மட்டும் ஏன் இப்படி என்ற இயலாமை
- ஞாபகம் மறதி- முக்கியமாக படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்வது, எழுதுவது (Recall)
- கவனக்குறைவு
- கல்வி கற்பதில் குறைபாடு
- கற்றல் திறன் குறைதல்/ கையெழுத்து பிரச்சனை
- மொழி பேச்சு முதலியவற்றில் குறைபாடுகள்
- திக்கு வாய்
- தூக்கப் பிரச்சனைகள்
- அதிக சோர்வு
- பொதுவாக வலது/ இடது புரிதலில் பிரச்சனை
- நகம் கடிப்பது
- படுக்கையில் சிறுநீர் கழித்தல்
சமூக ரீதியான பாதிப்புகள்
- தன்னம்பிக்கை குறைதல். ஒத்த வயது உள்ளவருடன் நட்பாக இருப்பதில் தயக்கம்
- நண்பர்கள் குறைவு
- கிண்டல்/ ஏளனம் செய்யப்படுவார்கள்
- சமூகத்தில் இருந்து விலகி தனியாக இருப்பார்கள்
நாட்பட்ட பாதிப்புகள்
- மன அழுத்தம் (stress)
- மனச்சோர்வு (Depression)
- எதிர்மறை எண்ணங்கள் -நான் ஏன் மாற வேண்டும் என்ற எண்ணத்திற்கு எண்ணத்தின் வெளிப்பாடு
- சக மனிதர்களுடன் அனுசரித்து வாழும் திறன் குறைவு
இடது கையாளரான குழந்தை வலது கைப் பழக்கத்துக்கு மாற அதிக நேரம் பயிற்சியும் முயற்சியும் தேவை. இரண்டு பக்கத்து மூளையும் அதிகமாக தூண்டப்படுவதும் தேவையில்லை.
கார் ஸ்டியரிரிங், லிப்ட் பட்டன்கள், பக்கவாட்டு பிடிமானங்கள், கத்தரிக்கோல் முதலிய பலவும் வலது கையாளர்களுக்கானதுதான். எனவே சமூகத்தில் பழகப் பழக இடது கையாளர்கள் இரண்டு கைகளையும் பழக்கிக்கொள்ள மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். குழந்தையை எதற்கு மாற்ற முயற்சிக்க வேண்டும்?
இடது கையாளர்கள் மிகவும் ஸ்மார்ட்டானவர்கள், கற்பனை திறன் உள்ளவர்கள், அவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியும் (Multifasting) என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றுக்கு இப்போது வரை அறிவியல் ஆதாரம் இல்லை.
ஐசக் நியூட்டன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், டாவின்ஸி போன்றோர் இடது கையாளர்கள். இவ்வளவு ஏன்? சமீபத்தில் மறைந்த உயர்ந்த மனமுடைய தொழிலதிபர் ரத்தன் டாட்டாவும் இடது கையாளர்! இவர்களைப் போல உங்கள் குழந்தையும் புகழ் பெறட்டுமே!
குழந்தையைப் பராமரிப்பதில் இயற்கையானவை, பழக்கப்பட்டவை (Nature VS Nurture) என்று இரண்டு வகை உண்டு. இதில் நீங்கள் Nature – ஐ தேர்ந்தெடுங்கள் மாற்ற முயற்சி செய்ய வேண்டாம். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13 உலக இடது கையாளர் தினத்தை பெருமையோடு கொண்டாடுங்கள்!
தொடரும்…
நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளை, strong@herstories.xyz என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு, ‘குழந்தை வளர்ப்பு 2.0’ என தலைப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பலாம். அன்புடன் வரவேற்கிறோம்.
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.