ஸ்விஃப்டிஸ் என்பது இசைக் கலைஞர் டெய்லர் ஸ்விப்டின் தீவிர ரசிகர்கள் தங்களை அடையாளப்படுத்தும் சொல். அவரைத் தீவிரமாக வெறுப்பவர்களுக்கு செல்லப்பெயர் ஏதும் இல்லை.

டெய்லர் ஸ்விப்டுக்கு ஆதரவாகவோ எதிராகவோ நிலைப்பாடு எடுக்காதவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். இவர்கள் யாருக்கும் எந்தப் புதுத்தகவலும் இல்லாத ஆவணப்படம்தான் மிஸ் அமெரிக்கானா. யார்ரா அந்தப் பொண்ணு? எனக் கேட்கும் அளவுக்கு அவரை அறியாதோருக்கு நல்லறிமுகம் எனலாம்.

நல்ல விதமாக மட்டுமே காட்சிப்படுத்துவோம் என முடிவு செய்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மிஸ் அமெரிக்கானா. ஸ்விஃப்டிஸ் மனம் புண்படாமல் இருக்க டெயலர் ஸ்விப்டிடம் கெட்டதாக எதுவுமே இல்லை என்று வேண்டுமானால் அடைப்புக் குறிக்குள் டிஸ்கிளைமர் போட்டுக் கொள்ளலாம். சமூக வலைத்தளங்களிலும் சரி, நிஜ வாழ்விலும் சரி, டெய்லருக்கு ஆதரவாக இந்தப் படை அணிவகுக்கும் பின்னணியில் சுவாரஸ்யமான கதை ஒன்றுள்ளது. அறிந்துகொள்ளவேண்டிய கதை.

பதிநான்கு வயதில் தன் பெற்றோரைத் தன்னுடைய பாப் ஸ்டார் கனவைப் பின்தொடர சம்மதிக்க வைத்து மூட்டை முடிச்சுடன் தன் ஊரிலிருந்து நாஷ்வில்லேவுக்கு இடம்பெயரவைத்தார் டெய்லர். கன்ட்ரி மியூசிக் எனப்படும் உள்ளூர் இசைப் பாடல்களைப் பாடும் பெண்ணாக 2005ஆம் ஆண்டில் பிக் ரெக்கார்ட் மெஷின் உடன் முதல் பெரிய ஆல்பம் கையெழுத்தானது. டீன் ஏஜ் தாண்டாத பெண், விளிம்பு நிலை மக்களின் சமத்துவ உரிமையைப் பற்றியா பாடுவார்? காதல், காதல் தோல்வி, பாய் ஃபிரன்ட் போன்றவைதாம் கருப்பொருள்.

இப்பாடல்கள், இளைஞர்களைக் கவர்ந்திழுத்தன. அவர் வயது கூடும்போதும் தன் தனிப்பட்ட சிக்கல்களையே பாடுபொருள் ஆக்கினார். வாழ்வில் அவர் கற்றதையும் பெற்றதையும் பாடினார், பாடுகிறார். அவருடனே வளர்ந்த தலைமுறைக்கு அது பிடித்துப்போனது. ஹாலிவுட்டில், ஃபிரண்ட்ஸ், கிரேஸ் அனாடமி போன்ற பல தொடர்கள் இப்படி ஒரு தலைமுறை ரசிகர்களுடன் இணைந்து பத்துப் பதினைந்து வருடங்கள் பயணம் செய்யும் வகையில் இருக்கும். தங்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக டெய்லரின் பாடல்களையும் உணர்ந்தனர் ரசிகர்கள்.

மெல்ல மெல்லப் பிரபலமாகி பாப் இசை உலகில் அங்கீகாரம் பெற்றார். தொட்டதெல்லாம் பொன்னாக்கும் நட்சத்திரம் ஆனார் டெய்லர். விரும்பாவிட்டாலும் சர்ச்சையின் நாயகி ஆனார். 2009ஆம் ஆண்டு எம்டிவி விருது விழாவில் தொடங்குகிறது அந்த சர்ச்சை. முதன்முதலாகப் பெரிய விருது ஒன்றைக் கையில் வாங்கிய உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி சொல்ல ஆரம்பித்தார். விருது கொடுக்க வந்த பிரபல பாப் பாடகரான கன்யே வெஸ்ட் பாதியில் டெய்லரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கினார். நீ வாங்கின விருதுக்காக சந்தோஷம்தான், இருந்தாலும் பியான்சேக்குக் குடுத்திருக்கலாம், அவங்க பாட்டு ரொம்ப அற்புதமாக இருந்தது என்ற தன் கருத்தைப் பதிவு செய்தார்.

கறுப்பினத்தைச் சேர்ந்தோர் முறையாக அங்கீகாரம் பெறவில்லை என்கிற அவருடைய ஆதங்கம் நியாயமானதே. இருபது வயது தாண்டாத இளம்பெண், தன் வாழ்வின் மிக முக்கியமான தருணம் ஒன்றில் பேசுவதை இடைமறித்து அதைச் சொல்லியிருக்கவேண்டாம். சொல்லிவிட்டார். எதிர்ப்பு எழுந்த பின்னர் வருத்தம் தெரிவித்தார். நான் விருது வாங்கியதாலும், அதை கன்யே கொடுத்ததாலும் உற்சாகமாக இருந்தேன். அதன் பின்னர் அந்த உற்சாகம் போய்விட்டது எனச் சுருக்கமாக ஆனால் மெச்சூரிட்டியுடன் டெய்லர் அளித்த பதிலுடன் அந்த நிகழ்வு முடிவுக்கு வந்திருக்கலாம்.

அப்படி நடக்காமல் போனது. அடுத்தாண்டு வந்த தன்னுடைய ஆல்பத்தில் வழக்கம்போல தன்னுடைய அனுபவங்களையே பாட்டாக்கியிருந்தார். அவர் ஒன்றும் வைத்துக்கொண்டு வஞ்சனை செய்யவில்லை. கட்டுப்பெட்டியான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து முற்போக்கு விஷயங்களை அப்போதுதான் கற்றுக் கொண்டு வளரும் பெண்ணிடம் பாட வேறேதும் இல்லை. மேடையில் தோன்றும்போது தன் உடல் பற்றிய அதீத கவலைகளும், அதன் காரணமாக உணவு உண்ணாமலும் இருந்ததைப் பற்றி மிஸ் அமெரிக்கானா ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார். தன்னை, தன் குறைகளை, தன் உடலை நேசிக்கப் படிப்படியாக கற்றுக்கொண்டார் டெய்லர்.

மன அழுத்தம், தனிமை, குழப்பம், அவமானம், அன்பு, ரசிகர்கள் என தனக்குத் தெரிந்ததையே பாடல்களாக எழுதினார். இன்னசன்ட் என்ற பாடலில் நீ இன்னும் அப்பாவிதான், பரவாயில்லை, காத்திரு, வாழ்க்கை கடினமானது, முப்பதுக்கும் பிறகும் பாடம் கற்று வளர்கிறோம் என எழுதியிருந்தார் டெய்லர். இது மறைமுகமாக கன்யேவைத் தாக்குவதாக செய்திகள் பரவின. தான் கேட்ட மன்னிப்பைத் திரும்ப வாங்கி, உன்னை புகழ்பெற வைத்ததே நான்தான் எனப் பாடல் வெளியிட்டார் கன்யே.

கன்யே செய்தது மறைமுகத் தாக்குதல் எல்லாம் கிடையாது. டெய்லரின் உருவத்தைப் போன்ற சிலை நிர்வாணமாக வீடியோவில் இருக்க டெய்லரின் பெயரும் பாட்டில் இருக்க,  B***h என விளித்து டெய்லர் என்னோடு படுக்கையைப் பகிர்ந்துகொள்வதிலும் ஆர்வமாக இருக்கலாம் என்றிருந்தன வரிகள். எதிர்ப்பு எழுந்ததும் டெய்லரின் அனுமதி பெற்றே இதை எழுதினேன் என்றார். டெய்லர் இதை மறுத்தபோதும் யாரும் நம்பத் தயாராக இல்லை. இணையத்தில் ட்ரோல் செய்யப்படும் கலாசாரத்தின் முதல் பலியாடு டெய்லர் ஸ்விப்ட்தான் என்கிறார்கள்.

பாம்பைப் போல விஷ குணம் கொண்டவர் எனச் சொல்லி பாம்பு எமோஜியுடன் அவரை விரட்டியது வெறுப்பாளர் கூட்டம். வெளியே தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தவர் ரெபுடேஷன் ஆல்பத்துடன் வந்து நான் பாம்புதான் என்று அந்த அடையாளத்தை பெருமையாக ஏற்றுக்கொண்டார். இறங்கி அடித்துப் பொளக்கும் வரிகள். சமூகத்தில் பெண் என்ற ஒற்றைக் காரணத்துக்காக இலக்காகும் பெண்களின் ஆதர்சமாகிப் போனார். ஆதரவு பெருகி ஆல்பம் தாறுமாறு ஹிட் ஆனது.

டெய்லர் தனக்கெதிரான வெறுப்புப் பேச்சுகளுக்கு பதில் தராமல் அமைதி காப்பதால் ரசிகர் படை அவருக்குப் பதிலாகக் களத்தில் நின்றது. துறை சார்ந்த நண்பர்கள் சிலரும் அவருக்காகப் பேசினார்கள். இது வெறுப்பாளர்களை இன்னும் வெறுப்பேற்றியது. கன்யே அனுமதி கேட்டதை நிரூபிக்கும் ஆடியோவும், அது வெட்டி ஒட்டப்பட்ட பொய் வீடியோ எனச் சொல்லும் மற்றொரு ஆடியோவும், இடையில் பல்வேறு நேர்காணல்கள், இன்ஸ்ட்டா பதிவுகள், வெறுப்பு ட்ரோல்கள் என பத்தாண்டுகள் இந்த விவகாரம் நீண்டு இன்னும்கூடத் தொடர்கிறது.

அபாரமான இசைத் திறனோ, அற்புதமான குரலோ கிடையாது. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் நாம் பார்க்கும் கொக்கு மாதிரி நீண்ட நெடிய கால்களுடன் உயரமாகவும், வளைந்த கூன் விழுந்த முதுகுடனும் இருக்கிறார் டெய்லர் ஸ்விப்ட். பொதுச்சமூகம் அங்கீகரிக்கும்படியான கவர்ச்சியான உடல்வாகு இருப்பதாகச் சொல்லமுடியாது. கதை சொல்லும் திறன்தான் அவர் பலம். ஆனால் அவருடைய தலைமுறை தாண்டி இன்றைய ஜென் ஆல்பா தலைமுறையிலும் பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க இளைஞர்களை ரசிகர்களாகப் பெற அது மட்டுமே போதாது.

டெய்லர் ஸ்விட்டின் வெற்றிக்குக் காரணம் ரசிகர்களுக்கு அவருடன் இருக்கும் பிணைப்பு. தேவையின்றி வார்த்தைகளை விடாத நற்குணம். போதை, குடி என்று வாழ்வில் வழிமாறாமல் இருப்பவர். இசையைத் தாண்டி பேஷன், வியாபாரம் என வேறு எந்தத் துறைக்கும் போகாமல் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துபவர் டெய்லர். தனக்குத் தெரிந்த ஒன்றை அதே நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நீண்ட காலம் தொடர்ந்து செய்யும் கன்சிஸ்டன்ஸி அவரை அத்துறையில் விற்பன்னர் ஆக்குகிறது.

திறமை இல்லாததால் விக்டிம் ஆக நடித்து கவனம் ஈர்க்கிறார் என்பதே அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. திறமை இல்லாமல் ஒருவர் இத்தனை ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது சாத்தியமே இல்லை. வேறெந்த இசைக்கலைஞரும் இவரளவுக்குத் தொடர்ந்து அதிக விற்பனையாகும் பாடல்களை வெளியிட்டதில்லை. எந்த நாடகத்தனமும் இன்றி புத்திசாலித்தனமாகத் தன் திறமையை வியாபாரம் செய்யும் வெற்றிகரமாக பெண்ணாக அவரை ஏற்க மறுப்பவர்களுக்கு தொடர்ந்து சாதனை படைக்கும் வசூலின் மூலம் பதிலளிக்கிறார். ஈராஸ் டூர் உலகத்திலேயே அதிகம் வசூல் செய்த இசை நிகழ்ச்சி. பல நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த டூர் உதவியது என்றால் சும்மாவா.

பாடலின் உரிமை பாடுபவருக்கே என நினைத்தவர் அதைத் தன் ரெக்கார்ட் கம்பெனி மறுத்தபோது தன்னுடைய பழைய பாடல்களையே புதிதாகப் பாடி புது ஆல்பமாக வெளியிட்டார். ரசிகர்களும் மீண்டும் அவற்றை வாங்கி டெயலருக்குத் தம் ஆதரவைத் தெரிவித்தனர். தன் பாடல்களைத் தனித்தனியாக வெளியிட்டு லாபம் பார்க்கிறார். ரசிர்களுக்கு சர்ப்பரைஸாக இலவசமாகக் கொடுக்கவும் செய்கிறார். அதுவும் நல்ல பிஸ்னஸ் உத்திதான். மற்ற பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்யமாட்டார். தன் புகழ் தனக்கு மட்டுமே வருமானமாக வருவதை உறுதிசெய்துகொள்வார்.

என்ன செய்தாலும் ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்பது மாதிரி ஒற்றை வழிப் பயணம் அல்ல அது. அவருடைய நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் நலனையும் தன் நலனாகவே பாவிப்பார். கொடுத்த காசுக்கு திருப்தியடைகிறார்களா என்பது மிகவும் முக்கியம். ரசிகர்களுக்காக இவரும் எந்த எல்லைக்கும் செல்கிறார். கொட்டும் மழையிலும் பனியிலும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் எனில் தானும் நனைந்து கொண்டே கச்சேரியை நடத்துவார். மூக்கில் வழியும் சளியை நடனமாடிக் கொண்டே துடைத்து சட்டையில் பூசிக் கொள்ளும் வீடியோ எல்லாம் இருக்கிறது.

புரட்சிப் பெண் அடையாளம் பற்றியும் ஆவணப்படத்தில் வருகிறது. ஆப்பிள் நிறுவனம் பாடகர்களுக்குப் பாடலின் வருமானத்தில் பங்கு தரமுடியாது எனச் சொன்னபோது தனக்காகவும் சக பாடகர்களுக்காவும் குரலெழுப்பியதே அவருடைய முதல் துணிச்சலான முடிவு. அவ்வளவு பெரிய நிறுவனத்தை எதிர்த்து நின்று என் பாடல்கள் இனி ஆப்பிளில் இருக்காது என்றார். யாருக்கும் பணியாத ஆப்பிள் தன் முடிவில் பின்வாங்கியது. பால் புதுமையினர், பெண்களின் சம்பள உரிமை, சம உரிமைக்காக அரசியலும் பேசினார். அவர் ஆதரித்த வேட்பாளர் வெற்றி பெறவில்லை எனினும் அவருடைய இன்ஸ்ட்டா பதிவுக்குப் பிறகு நிறையபேர் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

டிரம்பை எதிர்த்துப் பேசினால் ஆட்சிக்கு வந்த பிறகு பழி வாங்கக்கூடும் எனத் தொழிலதிபர்கள் அஞ்சிய நிலையிலும் மீண்டும் ஒரு முறை தன் அரசியல் நிலைப்பாட்டைத் துணிச்சலாக வெளிப்படுத்தினார். கமலா ஹாரிஸுக்கே தனது ஓட்டு எனச் சொல்லி நீங்களும் யோசித்து வாக்களியுங்கள் என்றார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் நிதி கமலாவுக்குக் கிடைத்தாலும் இந்த முறையும் டெய்லர் ஆதரவு, அமெரிக்கத் தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுவல்ல விஷயம். தனக்கு இசையைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்வதோடு சமூகம் பற்றிப் பொறுப்புணர்வுடன் கற்றுக் கொள்வதும், அதைப் பற்றிச் சிந்தித்து முடிவெடுத்து சொந்தமாக ஒரு கருத்தினை ஏற்படுத்திக் கொள்வதும் அதில் உறுதியாக இருப்பதுமென டெய்லர் மிளிர்கிறார். அந்த வெளிப்படைத்தன்மையும் உண்மையும் அவர் மீது மரியாதை ஏற்படுத்துகின்றன.

அவரைப் பற்றிப் பலருக்குத் தெரிந்த கதைகளையே பேசும் மிஸ் அமெரிக்கானா ஆவணப்படம் ஒருவேளை டெய்லரின் மற்றொரு மார்கெட்டிங் உத்தியா அல்லது நிஜமாகவே அவர் வாழ்வு அவ்வளவுதானோ என்பதை பார்வையாளர்கள்தாம் முடிவு செய்யவேண்டும். குறைவாகத் தெரிந்த விஷயங்களை வைத்துப் பார்த்தாலும், பின்பற்றத்தக்க தகுதியுள்ள நபராக டெய்லர் ஸ்விப்ட் இருக்கிறார்.

படைப்பாளர்

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.

பின் இணைப்புகள்

மிஸ் அமெரிக்கானா ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.

டிரைலர்

References

டெய்லருக்கும் கன்யே வெஸ்ட்டுக்கும் இடையே உள்ள சண்டையின் டைம்லைன் –

https://people.com/music/kanye-west-famous-inside-his-and-taylor-swifts-relationship-history

ஈட்டிங் டிஸ்ஆர்டர் –

https://variety.com/2020/music/news/taylor-swift-eating-disorder-netflix-documentary-miss-americana-1203478047

நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்திய டெய்லரின் பாட்டுக்கச்சேரிகள்.

https://news.northeastern.edu/2023/08/11/taylor-swift-economy-impact

அதிக வசூல் செய்த மியூசிக் டூர்களின் பட்டியல்

https://en.wikipedia.org/wiki/List_of_highest-grossing_concert_tours