நவிகா சாகர் பரிக்ரமா II இருவர் குழு உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட லெப்டினன்ட் கமாண்டர் ரூபா அழகிரிசாமிக்கும் லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கே வுக்கும் 2026ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சொர்யா சக்ரா விருது அறிவித்தது இந்திய அரசு.

துணிச்சலான செயல்களுக்கான மூன்றாவது இந்திய விருது இது. இந்தியக் கப்பற்படையைச் சேர்ந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறை.கனவிலும் சிந்தித்திருக்காத ஆபத்துகளையும் நல்லனுபவங்களையும் உள்ளடக்கியது தமிழ்ப் பெண் லெப்டினன்ட் கமான்டர் ரூபா மேற்கொண்ட கடல்வழி உலகச்சுற்றுப் பயணம்.

சுமார் 8 மாதங்கள். 25,621 கடல் மைல்கள். கிலோ மீட்டர் கணக்கென்றால் தோராயமாக 50000. அதுவும் பாய்மரப் படகில்.

நான்கு சமுத்திரங்கள் வழியாகவும் 238 நாள்கள் பயணம் செய்து மூன்று முக்கியமான முனைகளைச் சுற்றிக் கொண்டு சென்றுள்ளார். உள்நாட்டுத் தயாரிப்பில் உருவான ஐஎன்எஸ் தாரிணி பாய்மரப்படகில் பயணம் செய்து இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ரூபாவின் அனுபவங்களை ஹெர்ஸ்டோரிஸ் நூலாக வெளியிடுகிறது. எழுத்தாளர் கோகிலா இந்நூலை எழுதியுள்ளார். லெப்டினன்ட் கமாண்டர் ரூபா அழகிரிசாமி தன் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பிய ஓர் ஆண்டு நிறைவு நாளில் இந்த அறிவிப்பினை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது ஹெர்ஸ்டோரிஸ். விரைவில் புத்தகம் வெளியாகும்.

எழுத்தாளர் கோகிலா