எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் இறுதிப் படைப்பு அவரின் தன்வரலாற்று நூலான ‘காலம்’. இந்த நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது ஹெர் ஸ்டோரிஸ். நூலுக்கு எழுத்தாளரும் ஹெர் ஸ்டோரிஸ் இணை நிறுவனருமான நிவேதிதா லூயிஸ் தந்துள்ள பதிப்புரையை இங்கே வாசிக்கத் தருகிறோம்.
நூல்: காலம்
விலை: ரூ. 225
நூலை வாங்க வாட்ஸ்அப் தொடர்பு எண்கள்: 7550098666, 9600398660
“என் களப்பணிக்கு ஊக்கம் ராஜம் கிருஷ்ணன்தான். அவர்களும் வாழும் காலத்திலேயே மறக்கப்பட்டுவிட்ட ஆளுமை. எனக்குத் தெரிந்து வள்ளுவரைக் கேள்விகேட்ட, மறுதலித்த துணிச்சலான பெண்மணி. திருக்குறளில் பெண்ணடிமைத்தனம் போதிக்கும் 30 குறள்களை நீக்கிவிடவேண்டும் எனப் பேசியவர். இன்று அவரைப் பேச ஆள் இல்லை. எல்லோருக்கும் ஒரு வாரிசு வேண்டும் பாருங்கள்…
இதுபோல யாருமே சொல்வதற்கு ஆளில்லாமல் போனவர் என்றால் அது ராஜம் கிருஷ்ணன்தான். நான் அவரைப் பற்றிச் சொல்லவேண்டும். என் வாழ்க்கையின் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். அவரது ‘ரோஜா இதழ்கள்’ நாவலில் மைத்ரேயி என்ற கதாபாத்திரம் வரும். காதல் திருமணத்துக்குப் பிறகு சில காலத்திலேயே தான் தேர்ந்தெடுத்த காதல் கணவன் தகுதியானவன் இல்லை, அவனோடு வாழ்தல் தகாது என முடிவெடுக்கிறாள். விடுதி ஒன்றில் சேர்ந்து அதில் வேலை பார்த்துக்கொண்டே மேற்கொண்டு படிக்கிறாள். படித்து ஆளாகி நல்ல வேலைக்குச் சென்று வெற்றிபெறுகிறாள். அந்தக் கதை என்னை வழிநடத்தியது. என் வாழ்க்கையின் கனத்த இருள்சூழ்ந்த நேரத்தில், என் கையிலிருந்த ஒற்றை விளக்கு ராஜம் கிருஷ்ணனின் இந்தப் படைப்புதான். அந்தளவுக்கு அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் தாம்பரத்தில் இருக்கும்போது அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறேன். ரம்மியமான ஒரு வாழ்க்கையை அப்போது அவர் தன் கணவருடன் வாழ்ந்துகொண்டிருந்தார். நிறைய பயணித்தார், கூட்டங்களில் பேசிவந்தார். அந்தக் காலகட்டத்தில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன்.
அவரது ‘கரிப்பு மணிகள்’ தொலைக்காட்சித் தொடராகக்கூட வெளிவந்தது. அதைப் பற்றிப் பேசினோம். அப்போது அவரிடம் வட்டார வழக்கை எப்படிக் கற்றீர்கள் என்று கேட்டேன். அங்கேயே தங்கி, அந்த மக்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்று அறிந்து கொண்டதாகவும் அவா்களுடைய பேச்சைப் பதிவுசெய்து கொண்டுவந்து போட்டுக்கேட்டு எழுதியதாகவும் அவர் சொன்னார். அந்த கேசட்டை ஓடச் செய்தும் காட்டினார். நானும் அப்போது என் உயிர்த்தோழியாக இருந்த பாரதியும்தான் (பின்னாள்களில் திருமதி சந்துரு) அதைக் கேட்டோம். அது எனக்கு ஒரு ஊக்கமாக அமைந்தது.” – பாதை அமைத்தவர்கள், எழுத்தாளர் திலகவதி.
ராஜம் கிருஷ்ணனை படைப்பாளராக, பெண்ணியலாளராக, அரசியலாளராக, ஆளுமையாக பல பரிணாமங்களில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அடிப்படையில் களப்பணி செய்து எழுதும் எந்த ஒரு பெண் எழுத்தாளருக்கும் (நான் உள்பட) ராஜம் கிருஷ்ணனே பெரும் ஊக்கம், வழித்துணை, வழிகாட்டி, எல்லாம்…
2025 ராஜம் கிருஷ்ணனின் பிறப்பு நூற்றாண்டு. நாம் கொண்டாடவேண்டிய மாபெரும் ஆளுமை அவர். பெண்கள் வீட்டிலிருந்தே தங்கள் வாழியல் சூழலை, தன் அகத்தை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் புறத்தைத் தேடிச்சென்று எழுதியவர் ராஜம் கிருஷ்ணன். அந்த புறத்தை தன் அகமாக்கிக்கொண்டு இடதுசாரி இயக்கங்களுடன் நெருங்கிப் பணியாற்றியவர். களம் என்னவென்றே தெரியாமல் வீட்டின் வரவேற்பறைகளில் இருந்துகொண்டு, உலகப் போர்களை ஆயிரம் பக்கங்கள் வரையும் ஆண் எழுத்தாளர்கள் இன்றும் தங்களை இலக்கிய பீடங்கள் என்று ‘தன்’துதி பாடிக் கொள்கின்றனர். ஆனால், 40-50 ஆண்டுகளுக்கு முன்பே தன் ‘முள்ளும் மலர்ந்தது’ நாவலுக்காக சம்பல் கொள்ளைக்காரன் டாகு மான்சிங்கை சம்பல் பள்ளத்தாக்கில் நேரில் சந்தித்து, பேட்டிகண்டு எழுதியுள்ளார் ராஜம். இந்த அசாத்தியத் துணிவு இல்லாத ஆண்கள்தான், அவர் எழுதியதை ‘படைப்பு உள்ளே இருந்து வர வேண்டும். இயல்பாக இருக்க வேண்டும். கள ஆய்வு செய்து எழுதுவது இலக்கியமாக வாராது. அது வெறும் ரிப்போர்ட்டிங் ஆகத்தான் இருக்கும்’ என கிண்டல் கலந்து விமர்சித்தனர். அதை உடைக்கும் விதமாக களப்பணி செய்து நூல்களை எழுத, புனைவல்லாத எழுத்தையும் முன்வைக்க என்னைப் போன்றோர் முன்நிற்கிறோம்.
தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் இரண்டு ஆண்டுகளாக ராஜம் கிருஷ்ணன் எழுதிவைத்த குறிப்புகளைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வாசிக்கும்கால் பல இடங்களில் அன்னை சத்தியவாணி முத்து எழுதிய ‘எனது போராட்டம்’ நூல் நினைவுகளில் நிழலாடுகிறது. வாழ்வின் கசப்பான காலகட்டத்தில் வெளிப்படும் யாரையும் வைத்துப் பார்க்காத கடுமை அந்நூலைப் போலவே இதிலும் இழையோடுகிறது. ஆனால் இதையும் சேர்த்துத்தான் அவர் ராஜம் கிருஷ்ணன். The whole package!
‘திடீரென்று நோய்வாய்ப்பட்டார் வங்கியில் வைப்பிலிருந்த பணத்தை அவர் நம்பியவர் கையாடியதையடுத்து நிராதரவானார். படுக்கையில் நிரந்தரமானபோது அவரிடமிருந்தது – முதுமை – தனிமை – இயலாமை’ என அவரின் அப்போதைய சூழலை எழுதுகிறார் முருகபூபதி.
கணவரின் கடிகாரங்கள் சேகரிக்கும் வழக்கத்தில் நூல் தொடங்குகிறது; எப்படி அந்தக் கடிகாரங்களுக்காக வீடு அமைத்தார்கள்; அதை வாடகைக்குக் கொடுத்துவிட்டு ஊர் ஊராக நகர்ந்தார்கள் எனச் சொல்கிறார். வைகை அணைக்கு பெண் சிசுக் கொலைக்கும் தொடர்பு இருக்குமோ என்ற ஊகத்தில் அதை ஆராயப் போனதைச் சொல்கிறார். குந்தா பணியிடத்தில் கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு பயணங்களில் உடன்சென்றார்; காலுக்கு சரியான பூட்ஸ்கூட இல்லாமல் இடுப்பளவு சேற்றில் காட்டாறு தாண்டி இரவில் பயணித்தார் என அவர் விவரிக்க, நமக்கும் ஆர்வமும் பதற்றமும் தொற்றிக் கொள்கிறது. மின் துறைப் பொறியாளரான கணவரின் வேலை நேர்த்தி அவரை எப்படி நாடோடி ஆக்கியது எனச் சொல்கிறார், அதே நாடோடித் தன்மை தன்னை எப்படி செதுக்கியது என்பதையும் குறிப்பிடுகிறார்.

கோவாவுக்குச் செல்லும் ரயில் பாதையிலுள்ள தூத் சாகர் அருவியைக் கண் குளிரக் கண்டு ரசித்திருக்கிறார். வெறும் பயணங்களாக இல்லாமல், அந்தக் காலகட்டத்தில் அரசியலை இந்நூல் பேசுகிறது. கோவாவை மராட்டியத்துடன் இணைக்க நடந்த உரையாடல்கள், படேதார் மசாலா, தண்ணீர் அரசியல் என பல விஷயங்களைப் பேசுகிறார். காவிரிக் கரையில் பிறந்தவர், தாயைக் கூறுபோட்டு விற்கிறோம் என வருத்தத்துடன் நீர் அரசியலை விமர்சிக்கிறார். கடிகாரங்களுடன் வாழ்ந்தவருக்கு கைக்கடிகாரம்கூட பிடுங்கப்பட்டு மருத்துவமனைப் படுக்கையில் இருந்த காலம், எத்தனை துயரமானது என அவரின் எழுத்து நமக்குக் கடத்துகிறது; கையோடு செல்பேசியையும் அதைக் கைவிடாத நவீன தலைமுறையையும் பார்த்து நகைக்கிறார். மைசூர் மானஸ் கங்கோத்ரியில் ஒரு மாத ஃபெல்லோஷிப் கிடைக்க, அங்கே பலரும் குடித்ததை கடுமையாக விமர்சிக்கிறார். ‘மைசூர் கிங்க்ஸ் கோர்ட்டில் ஒரு விருந்து வைத்தார்கள். ஒரே குடி. பெண்களும் குடித்தார்கள். நம் தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் விஸ்கியும் கையுமாக என்னிடம் வந்து உளறினார்கள். குடிப்பது நாகரிகமா? பத்தே நாட்களில் நான் திரும்பிவிட்டேன்’ என்பவர், ரஷ்யப் பயணத்தில் அங்குள்ளவர்கள் குடித்தனர் ஆனால், ‘பெரிய அதிகாரிகள் ஏற்பாடு செய்த விருந்துகளில்கூட டேஸ்டுக்கு மட்டுமே குடித்தார்கள். விருந்தினரைக் கவுரவிக்கும் பாங்கு அது. நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்’ என ஒப்பிட்டு விமர்சிக்கிறார். அவரை ஒரேயடியாகப் பிற்போக்குவாதி என நீங்கள் புறந்தள்ளிவிட முடியாதபடி, மிகுந்த தெளிவுடன் இரண்டுக்குமான வேறுபாட்டை எழுதுகிறார். லெனின்கிராடு, செக்கோஸ்லவேக்கியா என அவர் நினைவுகள் நம்மை அவருடன் கைபற்றி அழைத்துச் செல்கின்றன.
பதின்மூன்று ஆண்டுகள் பெரிய அங்கீகாரம் ஏதுமின்றி கிருஷ்ணன் ஊர் ஊராக அலைக்கழிக்கப்பட்டதையும் அதே காலகட்டத்தில் தான் எழுதிப் பரிசுகளும் பேரும் புகழும் பெற்றதைக் குறிப்பிடுகிறார். அடுத்த வரியில், ‘என் வாழ்க்கை கத்திமேல் நடப்பதாக இருந்தது’ எனச் சொல்கிறார். அவர் பூடகமாகக் குறிப்பிட விழைவது புரிகிறது.
அவர் எழுத்தின் தொடக்க காலம் எப்படி இருந்தது என மனம் திறக்கிறார். இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. ‘கலைமகள் நாவல் போட்டிக்கு ஒரு கதை அனுப்பிவிட்டு ஓராண்டாக நான் பலனை எதிர்பார்த்துத் துடிதுடிப்போடு காத்திருந்தேன்… இந்தக் காலத்தில் என் படைப்பிலக்கிய மனம் கூடு கட்டிக் கொண்டிருக்கிறது. உதகையில் இருக்கும்போதே என் முதல் வெற்றிக் கதைக்கு அடித்தளம் இட்டுவிட்டேன். வானொலிக்கு எழுதுவேன். பல்வேறு பத்திரிகைகளுக்கு எழுதுவேன். திரும்பி வரும். ஒன்று திரும்பி வந்தால் மீண்டும் மீண்டும் அனுப்புவேன். சுதேசமித்திரன்தான் என் முதல் கதையைப் பிரசுரம் செய்தது. குமுதம் அப்போது தொடங்கி வாரம் ஒன்று வராமல் மாதம் இரண்டு என்று வந்ததாக நினைவு. அதிலும் பிரசுரமாயிற்று. என்னுடைய இலக்கு ‘கலைமகள்’தான். ஏனெனில் அந்தக் காலத்தில் கலைமகள் ஒன்றுதான் என் தந்தை பள்ளியில் இருந்து கொண்டு வருவார். கெட்டியான மஞ்சள் அட்டை போட்டிருக்கும். உ.வே.சா. அவர்களின் கட்டுரை, சுவடி தேடிப் போன சுவாரசியங்கள், வங்க நாவலின் மொழி பெயர்ப்பு, த.நா. குமாரஸ்வாமி, குழுநிலை ஆசிரியர் எழுதுவார்கள்.
குமுதம் எனக்கு எழுதினார்கள். “நீங்கள் காதலை மையமாக வைத்துக் கதை எழுதுங்கள்” என்று அறிவுரை சொன்னார்கள். நான் எப்படியானும் குமுதத்தில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. என் குறி எல்லாம் கலைமகள்தான். உதகை மார்க்கெட் அருகில் எனக்கு அத்தியந்த நண்பர்கள் இருந்தார்கள். இன்னமும் அவருடைய மக்கள் இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் பிறந்தகத்து மனிதர்கள். கிருஷ்ணன் ஆண்டில் பத்து நாட்கள் சென்னைக்கு அலுவலகம் தொடர்பாகச் செல்வார். அப்போது நவராத்திரி கொலு வரும். அவர்கள் வீட்டில்தான் கோலாகலமாகக் கழியும். என் முதல் கலைமகள் கதை அவர்கள் வீட்டைப் பற்றியதுதான். கலைமகளுக்குக் கதை அனுப்பியிருக்கிறேன். பிரசுரமானால் உமதுப் பாதி; எனக்குப் பாதி – என்றேன். பிரசுரமாகி ரூ.25 பணமும் வந்தது. உடனே அவர்கள் வீடு சென்று 12.50 ரூபாயை அவர்களிடம் கொடுத்தேன். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிப் பையில் வைத்துக் கொண்டார்’ என்று எழுதுகிறார். இதை வாசிக்கும்போதே அவரின் குதூகலம் நமக்குத் தொற்றிக் கொள்கிறது.
பெண் குரல் நாவலுக்கு 1000 ரூபாய் பரிசு வந்த கதையையும் அதே ஆவலுடன் விவரிக்கிறார். ‘இதற்கு முன் கலைமகளில் பரிசுக்கதைகள் முழு ஆயிரத்தையும் வாங்கியதில்லையாம். ‘பெண் குரல் – பெண்ணின் குரல் ஆழத்தில் இருந்து வருகிறது. அது எல்லோருக்கும் கேட்பதில்லை’ என்ற முன்னுரையுடன் துவங்கப்பட்டிருந்தது. அட்டைப்படம் பம்பாயில் இருந்து ஒரு கலைஞரால் பிரத்தியேகமாகப் போடப்பட்டது. இந்த நாவலுக்குப் போஸ்டர் அச்சடித்து விளம்பரம் செய்திருந்தார்கள். திரையில்கூட விளம்பரம் செய்தார்கள். கலைமகள் அதிகம் விற்பனையாயிற்று. பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டதாகச் சொன்னார்கள்’ என்று எழுதுகிறார். ஒரு பதிப்பாளராக, எழுத்தாளராக உண்மையில் இது எனக்கு அத்தனை மகிழ்வு தருகிறது. ரயிலடியில் ஒருவன் விற்றுக்கொண்டு போன நூலை வாங்கி பரிசு கிடைத்ததை வாசித்ததாக எழுதியிருக்கிறார். என் கட்டுரை வந்த அவள் விகடன் இதழை இதேபோல விருதுநகர் ரயில்நிலையத்தில் இணையரை நைநையென்று அரித்து நான் வாங்கியது உண்டு!
‘என் தந்தையிடம் நான் முதல் கதையை எழுதிக் கொடுத்தேன். அதை அவர் சுக்குநூறாகக் கிழித்து என் தலையில் போட்டார். “கதை எழுதறாளாம் கதை! Do you think that you can get a place in the literary world?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். அதை இன்று வரை மறக்கவில்லை. கடைசி வரை நான் பல புத்தகங்கள் எழுதிய பின்னும்கூட, என் புத்தக அலமாரியைப் பார்த்து, “இந்தப் புத்தகங்கள் உனக்குப் புரிகிறதா?” என்று அவநம்பிக்கையுடன் கேட்டவர் அவர்’ என தன் தந்தை தன் எழுத்தை எப்படி அணுகினார் என்று எழுதுகிறார். அநேகமாக எல்லா பெண் எழுத்தாளர்களும் கடந்து வந்த பாதை இதுதான்.

பாரதியின் செல்லம்மாவை இந்த சமூகம் நடத்திய விதம் கண்டு கொதித்ததால்தான் அவரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியானது எனச் சொல்கிறார். ‘…அப்பேர்ப்பட்ட மாகவிஞனின் மனைவிக்குத் தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டதே இந்தச் சமூகம் என்று நான் கொதித்தேன். பாரதியை ஆய்வு செய்து அறநூறு பக்கங்களுக்கு மேல் அவர் வரலாற்றை எழுத முனைந்ததற்கு அது ஒரு காரணம்… பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி – என்று பாரதியின் வரலாற்றுக்கு நான் தலைப்பு வைத்தேன். செல்லம்மாள் – பாரதியின் மனைவி, தலையை ஏன் மொட்டை போட்டுக் கொண்டு விதவைக் கோலம் பூண்டார்? இது என்னை மிகவும் உறுத்திற்று. சநாதன சமுதாயமே, நீ மகளிரிடத்தில் அந்த மாகவிஞனின் மனைவியைக்கூட விட்டு வைக்கவில்லையே!’ என்று வெதும்பினேன். நான் பாரதி வரலாறு எழுதத் தூண்டிய காரணமே அதுதான்’ என எழுதுகிறார்.
கணவர் கிருஷ்ணன் ஓய்வு பெற்றபிறகு வறுமையில் உழன்றதை நெக்குருகச் சொல்கிறார். ‘பதின்மூன்று வருடப் பணி சேர்த்துக் கொள்ளப்படாமல் அற்பத் தொகை ஓய்வூதியமாக வந்தது. காட்டிலும் மேட்டிலும் கம்பி இழுத்துப் பணியில் முழுமூச்சுடன் பணிபுரிந்த பின், ஓர் அற்ப ஓய்வூதியம் – 55 வயதிலேயே பெற வேண்டும் என்பது விதிதானே! நான் என் உறவினர் – திருதரன் வீட்டுப் பக்கம்தான். பிராமிசரி நோட் எழுதிக் கொடுத்து 7ரூ வட்டிக்கு ரூபாய் 7,000 கடன் வாங்கினேன். அப்போது மலேசியா பத்திரிகை ஒன்று என்னிடம் தொடர்கதை கேட்டது. ‘சோலைக்கிளி’ என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதினேன். அதில் இரண்டாயிரமோ கூடுதலாகவோ பணம் வந்தது. ஓரிரு ஆண்டுகளில் கடனை அடைத்துவிட்டேன்’ என்று எழுதுகிறார். மிகக் குறைந்த கணவரின் ஓய்வூதியத்துடன் கதை எழுதி குடும்பத் தேரை நகர்த்தியிருக்கிறார். இன்றைய எழுத்தாளர்கள் பலருக்கும் படிப்பினை அவரின் அனுபவம். முழுநேர எழுத்துப் பணி எத்தகைய ஊதியம் தரும், அதைக் கொண்டு எழுத்தாளர் ஒருவர் – குறிப்பாகப் பெண் எழுத்தாளர் எப்படி வாழ்க்கையை ஓட்ட இயலும்? ‘புத்தகம் எழுதிப் பணம் காண முடியாது என்பது என் அனுபவம். மன நிறைவு; அதில் ஈடுபடும்போது இனம்புரியா மகிழ்ச்சி’ என்று குறிப்பிடுகிறார்.
நூலாக்கம் பெறாமல் பக்கங்களாகக் கிடந்த ரங்காச்சாரி நூலை கணவர் கிருஷ்ணன் மீட்டு வந்து சொந்தப் பதிப்பகமான ‘ஸ்ரீரங்கப் பிரசுரம்’ மூலம் வெளியிட்டதைக் குறிப்பிடுகிறார். மனைவிக்குத் தன்னாலான உதவியை கிருஷ்ணன் செய்திருக்கிறார். இந்த முயற்சிக்குக் குமுதினி உதவியதைச் சொல்கிறார். பதிப்பாளராகவும் கையைச் சுட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை பதிப்பாளராக என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. எத்தனை எத்தனை பரிமாணங்கள்?
இலங்கைக்கு மார்க்சியவாதிகளுடன் சென்றபோது சந்தித்த பெண்களின் நிலையை எழுதுகிறார். பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்களில் பலர் தற்கொலை செய்துகொண்டதைக் கேள்விப்பட்டு துணுக்குறுகிறார். ஏன் என்று கேட்டால் தங்களிடம் இருந்த விலைமதிப்பற்ற கற்பு போய்விட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக அப்பெண்கள் சொல்வதைக் கேட்டு சினம் கொள்கிறார். ‘குட்டைப் பாவாடை, முடியை வெட்டிக் கொள்ளலாம் என்று வெளிக்கு நாகரிகம் காட்டும் நீங்கள், கோழைகளாக இருக்க வேண்டாமே. கற்பு விஷயம் பெண்களின் மனதில் ஊடுருவி நிற்கும்போது, கற்புக்கரசி, சீதை என்று கருத்துரைக்கும் இந்த மார்க்சீயவாதிகளைப் பற்றி என்ன சொல்ல? கூடுமானவரை அவர்கள் மனங்களை மாற்றத் தேறுதல் சொன்னேன்’ என்று எழுதுகிறார். கற்பு என்ற கருத்தாக்கம் பற்றிய அவரின் சிந்தனை தெளிவாகவே இருந்துள்ளது.
தன் இறுதி நாள்களில் பட்ட பாட்டுக்கு எல்லாம் கணவர் கிருஷ்ணனை அவருக்கு மிகவும் பிரியமான கடிகாரங்களைவிட்டு தான் பிரித்ததே காரணம் என்று நம்பியிருக்கிறார். ‘கடிகாரங்களோடு உயிரைவிட இருந்த மனிதரை வீட்டைவிட்டுத் துரத்தினாயே? உனக்கு வீடு வாசல் எதுவும் இல்லாமல் போகட்டும் என்று சபித்திருப்பார் என்று நினைக்கிறேன். வீடு வாசல் உறவு பந்தம் இல்லாமல் உன் வாழ்வு தொடரும் என்று எனக்கு விதித்திருப்பார்… உனக்கு வீடு வாசல் எதுவும் இல்லாமல் போகட்டும் என்று சபித்திருப்பார் என்று நினைக்கிறேன்’ என்று எழுதுகிறார். உறக்கமின்றி அவதிப்பட்டு அலொபதி, ஹோமியோபதி என பல மருத்துவ முறைகளை தீர்வுக்கென நாடியிருக்கிறார். ஏழரை ஆண்டுகளாக தான் சந்தித்த அவலங்களைச் சொல்கிறார்; தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமும் என்னைத் துரத்தாமலில்லை. ஆனால் அந்த முயற்சிகளில் நான் வெற்றி பெற்றிருந்தால் இதை எழுதியிருக்க மாட்டேன்’ என்று அவர் எழுதும்போது அதிர்ந்துபோகிறோம். பாரதியைத் துரத்திய வறுமை, நிர்க்கதி, பாரதியை எழுதிய ராஜம் கிருஷ்ணனையும் துரத்தியிருக்கிறது.
விவேகானந்தரிடம் சீடராகச் சேர்ந்த நிவேதிதாவை விதந்து எழுதுகிறார் ராஜம் கிருஷ்ணன். ‘சீடத்தியாக வந்த நிவேதிதாவிடம் இந்திய பெண்மணிகளை முன்னேற்ற வேண்டும், கல்வியறிவு கொடுக்க வேண்டும் என்று பணித்தார். நிவேதிதா இந்தியருக்குக் கல்வியும் பெண்களுக்கு எழுச்சியும் கொடுக்க முனைந்தாள்… தேசியவாதிகள் எல்லாமே புரட்சியில் தொடங்கியவர்கள்தாம். வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி என்று பட்டியலே போடலாம். அந்த வழியில் நிவேதிதா புரட்சிக்காரி’ என எழுதுகிறார். பாரதிக்கு நிவேதிதா ‘குருமணி’ என நெகிழ்ந்து குறிப்பிடுகிறார். சரளாதேவியை வந்தே மாதரம் பாடலை பாடத் தூண்டிவிட்டு அமைதியாக நிவேதிதா அமர்ந்திருந்ததை பாரதி பின்னாளில் குறிப்பிடுவதாகச் சொல்கிறார். இப்படிப் பெண்களைக் குறிப்பிடுபவர், மருத்துவமனையில் தனக்கு செவிலியராகப் பணியாற்றிய வண்ணக்கிளி, வண்ணமயில், எருக்கிலை அம்மாள் என எளிய பெண்களையும் எழுதிச் செல்கிறார். அவருக்கு எல்லோரும் பெண்கள். எல்லோரும் காலத்தின் பின் ஓடியவர்கள்… அவரைப் போல…
காவிரியில் கோலாட்ட ஜாத்ரா என்ற விழா நடந்ததை முதன்முதலில் இந்த நூலில் இருந்தே கேள்விப்படுகிறேன். அதில் பல்லவன் என களிமண்ணாலான ‘காளைமாட்டைச்’ செய்து ஆற்றில் கரைத்து, ஊரே கூடி உண்ணும் எனச் சொல்கிறார். சிறுமிகள் கொண்டாட்டமாக கோலாட்டம் ஆடித் திளைப்பார்கள்; இறுதிநாளில் ஆண்களும் பெண்களுமாக இரவு காவிரி ஆற்றுக்குச் சென்று ‘பல்லவன்’ கரைத்துவிட்டு, கூடி உண்பார்கள். இதற்கென பிரித்த பணத்தில் சில சமயம் மீதி வரும்போது, அதனை துணிகளாக சிறுமிகளுக்குப் பிரித்துக் கொடுப்பார்கள் என்று சொல்கிறார். இன்றும் மகாதானபுரம் அக்கிரகாரப் பகுதியில் இந்த ‘கோலாட்ட ஜோத்ரா’ விழா நடைபெறுகிறது என்ற தகவல், தோழர் துளசிதாசன் மூலம் கிடைத்தது. இப்போது ‘பசு மாடு’ (ராஜம் கிருஷ்ணன் காலத்தில் காளை மாடாக இருந்தது பின்னர் பசுவாக மாற்றம் பெற்றிருக்கக்கூடும். பல்லவன் என அவர் பெயர் குறிப்பதிலிருந்து, அது பசுவாக இருந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதலாம்) களிமண்ணால் செய்யப்பட்டு ஆற்றில் கரைக்கப்படுகிறது. ‘பெண்களுக்கு உரிய நேரம் திருமணம் நடைபெற, மழை தவறாது பெய்ய, வீடும் நாடும் செழிக்க’ இந்த விழா கொண்டாடப்படுகிறது. ‘பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும் விழா, கோலாட்டம் போட்டு அதற்கேற்ற பாடலைப் பல தெய்வங்கள் மீது புனைந்து பாடுவர். பாரம்பரிய உடை அணிந்து பெண்கள் வலம் வருவர்.
ஐப்பசி மாத அமாவாசை அன்று குயவர் பசுமாட்டுக் கன்று ஒன்றை களிமண்ணல் செய்து கொடுப்பர், அதனைப் பொது இடத்தில் வைத்து பூ போட்டு, சோறும் பருப்பும் படைக்கின்றனர்; எட்டாம் நாள் பொங்கல் அன்று மாலை அனைவரும் கூடி பசுவுக்கு பூசை செய்து கோலாட்டம் போடுவதுடன் பலகாரங்கள் செய்து பகிர்ந்து உண்டு மகிழ்வர். ஒன்பதாம் நாள் சிறு பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, மாலை போட்டு, கன்றுக்கும் பூசை செய்து அதை ஒருவர் தலையில் வைத்து வருவார். அவரைச் சுற்றி வட்டமாக சூழந்து பாட்டுப் பாடி காவிரியாற்றில் பசுவைக் கரைப்பார்கள். பிறகு எடுத்துச் சென்ற உணவுகளைப் பகிர்ந்துண்டு தொடங்கிய இடத்துக்குக்கே திரும்பி வந்து கோலாடுவர். வயதில் மூத்த பெண்கள் ஆரத்தி எடுப்பர் என்று தகவல் கிடைக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியை, சாதியினருக்கு இடையேயான ஊடாட்டத்தைத் தக்க வைத்திருக்கின்றன இவை போன்ற விழாக்கள்.


இன்றும் கோலாட்டம் பாடி ஆடும் பெண்கள் இருப்பது ஆச்சர்யமே! காவிரிக் கரையில் பாவாடை கட்டிக்கொண்டு கோலாட்டம் ஆடிய குட்டி வயது ராஜம் கிருஷ்ணனைக் கற்பனை செய்து கொள்கிறேன். அவருக்கு பிற்காலத்தில் ஆத்திகத்தின் மீதான ஈர்ப்பு குன்றாமல் போக இந்த இளம் வயது அனுபவங்கள் காரணமாக இருக்கக்கூடும்!
தேவதாசி முறை ஒழிப்பு கலையை எப்படிக் கொன்றது எனச் சொல்லும் அதே வேளை, பாரதியார் ‘இந்தப் பிழைப்பு வேண்டாம்’ எனச் சொன்னதால், சதங்கையை விட்டுவிட்டு, அண்ணாவி ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட தேவதாசியின் மகள் ஒருவரை எட்டயபுரத்தில் சந்திக்கிறார் ராஜம் கிருஷ்ணன். திருமணத்துக்குப் பிறகு அரண்மனை ஆதரவு போய்விட, பாட்டு சொல்லிக் கொடுத்து சொல்லொணாத் துயரைச் சந்தித்து இருக்கிறாள் அந்தப் பெண்ணின் தாயான தேவதாசி. இந்தச் சம்பவமே அவரின் ‘மானுடத்தின் மகரந்தங்கள்’ நாவல். இந்நாவல் ஜப்பானிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை இந்நூலில் குறிப்பிடுகிறார். 人間の花粉―ある歌姫の一生 – Human pollen -The Life of a Diva எனப் பெயரிடப்பட்ட இந்த நூலை, ஃபுமிகோ ஹோண்டா (Fumiko Honda) ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

அந்த நூலை மறுபதிப்பாக ஹெர் ஸ்டோரிஸில் நாங்கள் வெளியிட்டிருப்பதை இங்கே நினைவுகூர்கிறேன்; பெருமை கொள்கிறேன்! இதற்கு வித்திட்டு வழிகாட்டிய தோழர் வ. கீதாவுக்கு என் அன்பும் நன்றியும்.
சாகித்ய அகாதமி தற்பாலீர்ப்பு குறித்து எழுதப்பட்ட நூலுக்கு விருது தர முன்வந்தபோது அதை எதிர்த்திருக்கிறார், ராஜம் கிருஷ்ணன். ‘(ஆண் பெண்ணுக்கான) வரையறையை மீறினால் அது ஆபாசம்தான், தவிர்க்கப்படவேண்டும்’ என்று எழுதுகிறார். நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, it is part of the package… அதேபோல பெரியாரின் நாத்திகவாதம் குறித்து அவர் எழுதியுள்ள கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நட்பை மிக அழகாக எழுதுகிறார். தன் இறுதி நாள்களில் பொது மருத்துவமனையில் இருந்த ராஜாஜிக்கு திருப்பதி லட்டு வேண்டும் என்று ஆசை; அந்த ஆசையை நெரடியாக திருப்பதிக்கு ஆள் அனுப்பி லட்டு வாங்கித் தந்து நிறைவேற்றியவர் பெரியார் என்று குறிப்பிடுகிறார். இதைச் சொல்லும்போது பெரியாரை ‘மாமனிதர்’ என்கிறார், ‘ஈ.வெ.ரா. ராஜாஜிக்குப் பரம விரோதி. ஆனால் ஆப்த நண்பர்கள். ஈ.வெ.ரா. பரம நாஸ்திகர். உள்ளூர நண்பர்கள். ஈ.வெ.ரா.வுக்கு மணியம்மையை மணந்துகொள்ள ஆலோசனை கூறியவர் இராஜாஜி என்கிறார்கள். அவர் காலமானபோது தீபஸ்தம்பம் விழுந்தது என்று தேம்பித் தேம்பி அழுதார் ஈ.வெ.ரா. கொள்கை வேறு, நட்பு வேறு. மனிதநேயம் சம்பந்தப்பட்டது’ என்று எழுதுகிறார்.
‘யாரோ சமயபுரத்திலிருந்து பள்ளிக்கூடம் ரூபாய் 25,000 அனுப்பியிருக்கிறார்கள். சமயபுரம் கோவில் அம்மன் கிருபை கிடைத்திருக்கிறது’ என்று எழுதுகிறார். சட்டென பொறிதட்ட, தோழர் துளசிதாசனைத் தொடர்புகொள்கிறேன். இந்தப் பணத்தை எஸ்.ஆர்.வி. பள்ளி தந்ததா எனக் கேட்கிறேன். ஆம் என உணர்ச்சிவசப்பட்டார். “2004 அல்லது 2005இல் இது நடந்திருக்கலாம். அப்போது அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தார். பிரபஞ்சன் நிகழ்வு ஒன்றுக்கு சமயபுரம் வந்திருந்தார். அவருடன் என்.எஸ்.சி. போஸ் சாலையில் ஒரு நாள் மாலை நடந்துபோனேன். அப்படி ஒரு எழுத்தாளரை அங்கே யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மனம் வருந்தினேன். ராஜம் கிருஷ்ணன் உடல் நலிவுற்ற நிலையில் யார் ஆதரவும் இன்றி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்ததை அறிந்தேன். இந்த இரண்டு நிகழ்வுகளையும் விடுதி மாணவர்களிடம் அன்று மாலை பகிர்ந்துகொண்டேன். அடுத்த நாளே தாங்கள் வைத்திருந்த சிறு சேமிப்பை ஒன்று திரட்டி, மாணவர்கள் 10,000 ரூபாயை என்னிடம் தந்து ராஜம் கிருஷ்ணனுக்கு உதவிடக் கோரினர். பள்ளி நிர்வாகத்திடம் இதனைத் தெரிவித்து, அவர்கள் இதனுடன் கூடுதலாக சேர்த்துக் கொள்ளும்படித் தந்த 15,000 ரூபாயையும் சேர்த்து 25,000 ரூபாயை எடுத்துக்கொண்டு நானே மருத்துவமனை சென்று அவரை சந்தித்தேன்.
‘மாணவர்கள் மிட்டாய் சாப்பிட வைத்திருந்த ஐந்தையும் பத்தையும் வாங்கிக்கொண்டு வந்து எனக்குத் தந்திருக்கிறீர்களே, நீங்கள் என்ன ஆசிரியர்?’ என்று என்னிடம் கேட்டார். முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. அவரிடம் பின்னர் விளக்கிச் சொல்லியபின் ஒருவழியாக ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த நிகழ்வு எனக்கு பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது. அதன் விளைவாக ஞாநி அவர்களிடம் உரையாடினேன்; தமிழ்ச்செல்வனிடம் பேசினேன். வாழும் காலத்தில் இத்தகைய அறிஞர்களைப் போற்றும் விதமாக உருவானதுதான் ‘அறிஞர் போற்றுதும்’ விருதுகள். 17-18 ஆண்டுகளாக இவ்விருதுகளைத் தொடர்ந்து தருகிறோம். பல பிரிவுகளில் எழுதும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறோம். இந்த நிகழ்வுக்கு, விருதுக்கு வித்திட்டது ராஜம் கிருஷ்ணன்தான்” என நெகிழ்வுடன் பேசினார். அவரை அறியாமலே இந்த முக்கியமான முன்னெடுப்புக்குத் துணை செய்திருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.
கூடங்குளம் பிரச்னை, காவிரியில் கழிவுநீர் கலப்பு, டாஸ்மாக் சிக்கல்கள், ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வி, கல்விப் பரவலாக்க சிக்கல்கள், நடிகைகளுக்கு நேரும் உழைப்புச் சுரண்டல் என தான் உடல் நலிம்த இறுதிக் காலத்திலும் தன்னைச் சுற்றி நடந்தவற்றை கிரகித்து, அதனைக் கூர்மையுடன் விமர்சித்து எழுதியிருக்கிறார்.
‘ஒவ்வொரு நாவலுக்கும் எவ்வளவு கள ஆய்வைச் செய்ய இந்தக் கால்கள் நடந்திருக்கின்றன. இப்போது நினைத்தாலும் அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது. ஒன்றும் இப்போது செய்ய முடியவில்லை. என்றாலும் என் மனதுக்குள், நான் பாதுகாப்பாக இருப்பதுபோல் ஓர் உணர்வு.’ – இப்படித்தான் சொல்லி காலம் நூலைத் தொடங்குகிறார் ராஜம் கிருஷ்ணன். இந்த நூல் தொகுக்கப்பட மிக முக்கிய காரணம் தோழர் முனைவர் கி. ஜெயக்குமார். அவருக்கு நம் நன்றியை உரித்தாக்குகிறோம், மூல நூலுக்கு அணிந்துரை வழங்கிய வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களுக்கும் நன்றி.
தன் கடைசி காலத்தில் மருத்துவர் மல்லிகேசனின் இணையர் தனக்கு உணவளித்ததை மனநிறைவுடன் நன்றியுடன் சொல்கிறார்; ஒரு காலத்தில் இடதுசாரி தோழர்களுக்கு கணக்குவழக்கின்றி தன் கைகளால் சமைத்துப் பரிமாறியதையும் பேசுகிறார். காலம் வேறு வகையில் திரும்பிப் பார்க்கிறது என்னும் அவரின் கடைசி வரியுடன் நூல் நிறைவுபெறுகிறது. ஆம், அவர் சொல்வதுபோல், ‘காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது நிற்பதில்லை. காலத்துக்கு முற்றுப்புள்ளி கிடையாது. காலமே வரலாறாகிறது…’
ராஜம் கிருஷ்ணன் என்னும் வரலாற்றின் சிறு துளியை, காலத்தின் ஒரு சொட்டை உங்களுக்குப் பதிப்பித்துக் கையளிப்பதில் அகமகிழ்கிறேன். நூற்றாண்டைக் கொண்டாட ஹெர் ஸ்டோரிஸுக்குக் கிடைத்த நல்வாய்ப்புக்கு காலத்துக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
அன்புடன்,
நிவேதிதா லூயிஸ்,
07.05.25.
படைப்பாளர்

நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், இணை நிறுவனர் – ஹெர் ஸ்டோரிஸ், பெண்ணிய, சமூக வரலாற்றாளர், தொல்லியல் ஆர்வலர்.




