2023ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்றவர் யூன் ஃபாஸ்ஸ (Jon Fosse). யூனை மர்வெ எம்ரெ (Merve Emre) கண்ட நேர்காணல், நவம்பர் 13, 2022 அன்று ‘தி நியூ யார்க்கர்’ இதழில் வெளியானது. அப்பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
வடக்கு கடலிலிருந்து (North Sea) தூரமாய் அமைந்திருக்கும் வெஸ்ட்லாண்ட் (Vestland) மலை வழியாகச் செல்கிறது நார்வெயின் இரண்டாவது பெரிய நுழைக்கழியான(fjord*) ஹர்டெஞ்சர் (Hardanger fjord). அதன் அருகில் சூரிய கதிரால் வெள்ளியென துலங்கும் கடற்கரையில் அமைந்துள்ளது ஸ்திரண்டேபம் (Strandebarm) கிராமம். தற்காலத்தில் அதிகமாக வாசிக்கப்படும் நாடக எழுத்தாளரும் கட்டுரையாளரும் நாவலாசிரியருமான யூன் ஃபாஸ்ஸெயின் நிறுவனம் அமைந்துள்ள அவ்வூரிலே தான் அவர் 1959-ல் பிறந்தார். அந்நிறுவனத்தார் அங்குள்ள சாம்பல் நிற கூடத்தில் அமர்ந்து துறைமுகத்தையும் அதன் பின்னே கருநிற பாறை முகட்டிலிருந்து விழும் அருவியையும் ரசிப்பார்கள். நிறுவனத்தின் அருகிலிருக்கும் இரு வெண்மைநிற வீடுகளில் ஒன்று அவர் பிறந்த, அவர் தாய் இன்றும் வசிக்கும் வீடு; மற்றது அவரின் தாத்தா பாட்டிக்கு உரியது.
ஆகஸ்ட் மாதத்தில் ஃபாஸ்ஸெயின் நிறுவனம் மொழிப்பெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கான பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேல் தளத்தில் ஹர்டெஞ்சர் ஃபிடில் (Hardanger fiddle) இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கீழ்த் தளத்தில் ஃபாஸ்ஸயின் கூற்றுகள் தைக்கப்பட்ட விரிப்புகள், கைக்குட்டைகள் மற்றும் இரவு உடைகளை வடிவமைத்த கைவினைக் கலைஞர் ஒசே லிஜோன்ஸின் (Åse Ljones) கண்காட்சி நடைபெற்றது. ஃபாஸ்ஸயின் நிறுவன உறுப்பினர் ஒருவர் ஒரு விரிப்பைத் தூக்கிப் பிடித்து ஃபாஸ்ஸயின் ஆறு மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரை அதில் எழுதி உள்ளதை மொழிபெயர்க்குமாறு வேண்டினார். ஒருவர் ஒன்றைக் கூற மற்றவர் அதை சரி செய்ய அங்குப் போட்டிக் காற்று வீசிற்று.
“நான் வடக்கு நோர்வேயின் கிராமப்புறங்களிலிருந்து வந்த வித்தியாசமான மனிதன்”, ஃபாஸ்ஸ என்னிடம் கூறியிருந்தார். கம்யூனிசமும் அரசிலி கோட்பாடும் (anarchist) கலந்த ஒரு ஹிப்பியாகவும் கிராமப்புறங்களில் பிடில் வாசிக்கவும் புத்தகம் படிக்கவும் விரும்புகிற ஒருவனாகவும் அவர் வளர்ந்தார். பெர்கென் (Bergen) பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியம் (comparative literature) பயின்ற அவர் மேற்கு பகுதியின் கிராமப்புறங்களுக்கான எழுத்து நடையான நியூனாஸ்க் (Nynorsk) மொழியில் எழுதத் துவங்கினார். அவரின் முதல் நாவல் ‘ரெட் பிளாக்’ (Red, Black)1983இல் பதிப்பிக்கப்பட்டது. அடுத்த மூன்று தசாப்தங்களில் ‘மெலங்கலி 1,’ ‘மெலங்கலி 2,’ ‘மார்னிங் அண்ட் ஈவினிங்,’ ‘அலிஸ் அட் தி பயர்’ மற்றும் ‘ட்ரைலஜி’யும் (Melancholy I and Melancholy II, Morning and Evening, Aliss at the Fire and Trilogy) வெளிவந்தன. வெற்றிகரமான, பரபரப்பான நாடக ஆசிரியராக விளங்கிய காலத்திற்குப் பின் அவர் 2012ல் கத்தோலிக்கத்திற்கு மாறினார், குடிப் பழக்கத்தைக் கைவிட்டார், மறுமணம் செய்து கொண்டார். பிறகு ‘மெதுவான உரைநடை’ (slow prose) என அவரால் குறிப்பிடப்படும் நடையில் எழுதப்பட்ட ‘செப்டலஜி’ (Septology) என்ற ஏழு தொகுதி நாவலை எழுதத் துவங்கினார். (இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு டேமியன் சேரல்ஸால் (Damion Searls) மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட, மனைவி அலஸின்(Ales) மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் ஓவியர் அஸ்லயே (Asle) ‘செப்டலஜி’ யின் கதை சொல்லி. கிறிஸ்துமஸிற்கு ஒரு நாள் முந்தைய இரவில் அஸ்ல அவரின் நண்பரும் ஓவியருமான அஸ்ல (ஆம் அதே பெயர்) என்பவர், பெர்கெனின் நடைபாதையில் சுயநினைவை இழந்து மது விஷத்தால் மரணித்ததைக் காண்கிறார். அவர்கள் இருவரின் நினைவுகளும் இரட்டித்துப் பெருகி எங்கும் வியாபித்து ஒரே நேரத்தில் பல இடங்களில் பரவுகின்ற உணர்வாகி (consciousness) பின் ஒற்றைக் குரலாக மங்குகிறது.
தனது தயக்கத்தினாலும் விலக்கத்தினாலும் இருப்பை அதிகமாக உணர்த்தும் ஒரு எழுத்தாளருடன் ஒன்றுவது போன்றது ஃபாஸ்ஸயின் நாடகங்களையும் நாவல்களையும் வாசிப்பது. ஆண், பெண், தாய், குழந்தை போன்ற பொதுப் பெயர்களைக் கொண்ட அவரது நாடக கதாபாத்திரங்கள், நமது ஆதிகால உறவுகளின் தீவிரத்தைப் பற்றிக் கொள்கின்றன, மேலும் அவை இருண்ட மற்றும் நகைச்சுவையானவை. நான் வாசித்த நாவல்களில் ‘செப்டலஜி’ என்னைத் தெய்வீகத்தின் உண்மையை நம்பச் செய்தது, ஃபாஸ்ஸயால் தீவிரமாக வாசிக்கப்பட்ட பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையியல்வாதி மெய்ஸ்டர் எக்ஹார்ட் (Meister Eckhart)அதை இவ்வாறு விவரிக்கிறார்: “இருட்டில் தான் ஒருவர் ஒளியைக் காண்கிறார், எனவே நாம் துக்கத்தில் இருக்கும் போது ஒளியானது நம் எல்லோரின் மிக அருகிலேயே உள்ளது”. வேறு எந்த எழுத்தாளருடனும் அவரை ஒப்பிடுவது சரியாக இல்லை.
பெர்னார்டின் (Bernhard) எழுத்து மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது; பெக்கெட்டுடையது (Beckett) மிகவும் கட்டுப்படுத்தக் கூடியதாக உள்ளது; இப்செனை(Ibsen) ‘எனக்குத் தெரிந்து மிகவும் அழிவை நல்கும் எழுத்தாளர் அவர்’ என்கிறார் ஃபாஸ்ஸ. “என் எழுத்துக்களில் ஒரு விதமான நல்லிணக்கம்(reconciliation) – இது சரியான ஆங்கில பதமா தெரியவில்லை- இருப்பதாக உணர்கிறேன். இல்லையென்றால் கத்தோலிக்க அல்லது கிறிஸ்தவ வார்த்தையான அமைதியை உபயோகிக்கலாம்.”
ஹர்டெஞ்சர் நுழைக்கழியிலான உல்லாசப் பயணத்தில் ஃபாஸ்ஸ கலந்துகொள்ளவில்லை எனினும் நார்வெயின் பண்பாட்டு அமைச்சகம் பேர்கெனில் (Bergen) முந்தைய இரவில் ஏற்பாடு செய்திருந்த இராவிருந்தில் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் நார்வே அயலக அமைச்சர் “எங்கே ஒருவரால் பேச இயலாதோ அங்கே அவர் கண்டிப்பாக மௌனமாக இருத்தல் வேண்டும்” என்ற லுட்வக் விட்கன்ஸ்டனின்(Ludwig Wittgenstein) கருத்தைக் குறிப்பிட்டார். இராவுணவில் உரையாடிய பின்பு நாங்கள் மீண்டும் இலக்கிய வீட்டில்(literature house) சந்தித்தோம், ஃபாஸ்ஸயின் அறையில் கறுப்பு வெள்ளை சித்திரத்திலிருந்த ஃபாஸ்ஸயினுடைய முகம் கருணையோடு எங்களை நோக்கிக்கொண்டிருந்தது. அந்தச் சித்திரத்திலிருந்ததை விடவும் அதிகமாக நீண்ட சாம்பல் நிறக் குதிரை வால் சிகை, கருநிற மேலங்கி, கருநிறச் சப்பாத்து, பையில் சிமிழ்(snuffbox) என்ற அஸ்லக்கான(Asle) அவருடைய வருணனையை ஒத்திருந்தார் ஃபாஸ்ஸ. அந்நேரத்தில் உரையாடுவதை அசவுகரியமாய் உணர்ந்தாலும் பேச்சில் தன்னம்பிக்கையுடன் இருந்தார். அடிக்கடி எங்கள் உரையாடலில் அவர் எழுத்து உண்டாக்குகிற அதே ஆர்வத்தையும், அந்த எழுத்தின் பின்னால் இருப்பவரின் பால் எழுகிற பாதுகாவலையும் உணர்ந்தேன். அது புதினப் படைப்புகளில் அவர் விவரிக்கும் மாயத்தின் பால் எழுகிற சந்தேகத்தையும் நம்பிக்கையும் போன்றது. கருணையான மனிதர் என்பதையும் தாண்டி, அருள், காதல், பொறாமை, அமைதி, மரணத்திற்கு அருகில் சென்ற அவரின் அனுபவம், மொழிபெயர்ப்பின் மீதான காதல் என எதைப் பற்றியும் பேசுவதற்குத் தயாராக இருந்த தன்மையே என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்களின் உரையாடல் தெளிவிற்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் பெரும்பாலும் நேர்காணல்கள் கொடுப்பதில்லை.
மின்னஞ்சல் மூலமான பேட்டிகளையே விரும்புவேன். ஆங்கிலத்திலும் கூட பேசுவதைக் காட்டிலும் எழுதுவதே சுலபமானதாக இருக்கிறது.
உரையாட இயலாததாலே எழுதுவதாகக் கூறும் பல எழுத்தாளர்களை நான் நேர்காணல் செய்துள்ளேன்.
ஆம், நான் கூட அவ்வாறுதான். அயலகத் துறையைச் சேர்ந்த ஒருவர் நம்மால் கூற இயலாதவற்றை மௌனத்தின் வழியே கடத்த வேண்டும் என்ற விட்கன்ஸ்டைனின் கூற்றைக் குறிப்பிட்டார். உங்களுக்கும் தெரிந்த ஜாக் டெரிடாவின்(Jacques Derrida) “உங்களால் கூற இயலாதவற்றை நீங்கள் எழுத வேண்டும்” என்ற கூற்றே எனக்கு நெருக்கமானது.
உங்கள் துவக்கக் காலக் கட்டுரையான ‘அன் ஏஞ்சல் வாக்ஸ் துரூ தி ஸ்டேஜ்’ இல் (‘An Angel Walks Through the Stage’) டெரிடா (Derrida) வியாபித்திருந்தார். உங்கள் நாடகங்கள் மற்றும் நாவல்களில், குறிப்பாகப் பேச்சு மற்றும் அமைதி குறித்தான நாடகங்களில், அவரின் எண்ணங்களைக் காண இயலும்.
1979இல் நான் டெரிடாவை படிக்கத் துவங்கினேன். குறைந்தபட்சம் நார்வெயின் பல்கலைக்கழகங்களில், இல்லை பல்கலைக்கழகத்தின் ஆன்மா மார்கிஸத்தின் பால் ஈர்க்கப்பட்டிருந்தது. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்களிடையே வலிமையான ஒரு தீவிர மாவோ கட்சி இருந்தது. நான் சமூகவியல் கற்கத் தொடங்கினேன். அதன் எண்ண வழிமுறைகள், நேர்மறை கணக்கிடும் முறைகள் எல்லாமும் முட்டாள் தனமாகத் தோன்றியதால் நான் தத்துவவியலுக்குத் தாவினேன். அந்த ஆண்டுகளில் மார்க்ஸிலிருந்து பிந்தைய காலப் பிரஞ்சு கட்டமைப்பாளர்கள் (French post-structuralists) வரை மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.நோர்வெயின் கிராமப்புறத்தில் முதல் முறையாக டெரிடாவின் ‘ஆப் க்ராமடோலஜி’யின் (‘Of Grammatology’) டச்சு மொழிபெயர்ப்பைப் படித்தது நினைவிருக்கிறது.
‘ஆப் க்ராமர்டோலஜி’ எப்படியோ என்மேல் ஆதிக்கம் செலுத்தியது. நீங்கள் மார்ட்டின் ஹெய்டிகரின் (Martin Heidegger) ‘செயின் உட் ஸிய்ட்'(‘Sein und Zeit’) வாசித்திருப்பீர்கள். ஹெய்டிகரை வாசிப்பது கடினமாக இருந்த போதிலும் உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருந்தது.டெரிடா அப்படியே ஹெய்டிகரை எதிர்ப்பதாக நான் உணர்ந்தேன். ஹெய்டிகரின் முக்கிய கேள்வி: இருப்பிலிருக்கும் எல்லாவற்றிற்கும் பொதுவானது எது? டெரிடாவின் முக்கிய கேள்வி அதற்கு எதிரானது: இருப்பிலிருக்கும் எல்லாவற்றையும் வித்தியாசமாக்குவது எது? எழுதுவது தனித்துவமானதாக நான் எண்ணுகிறேன். அது பேசுவது போல் அல்ல. அது வித்தியாசப்பட்டது, மிகவும் வித்தியாசப் பட்டது. அது நிச்சயமாக எனக்கும் டெரிடாவின் கருத்துக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியது.
அதன்பின் நான் ஒப்பீட்டு இலக்கியம் கற்கத் துவங்கினேன். அப்போது நான் என் முதல் நாவல் மற்றும் பல இலக்கிய விஷயங்களை எழுதியிருந்தேன். நாவல் கோட்பாடு என் முதன்மைப் பாடம். இந்தக் கோட்பாடுகள் எப்போதும் கதை சொல்லியையே அடிப்படை கருத்துப் படிமமாகக் கொண்டுள்ளன: கதைசொல்லி, ஆள், கதாபாத்திரம், அவர்களின் பார்வையின் கோணங்களிலிருக்கும் தொடர்பு. இவை முக்கியமானவையாக இருப்பினும் வாய் வழி மரபில் இருப்பது போன்று புதினக் கோட்பாட்டின் அடிப்படை கருத்துரு கதைசொல்லியாக இருக்கவேண்டியது கட்டாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. அது எழுத்தாளருக்கு உரியது. எழுத்தின் உள்வாங்கிக் கொள்ளப்பட்ட ஓர் உருவமாக, எழுதப்பட்டதன் ஒரு பகுதியாக நான் எழுத்தாளரைக் கொள்கிறேன். நான் எனக்கே உரிய சிறிய கதை சொல்லி கோட்பாட்டை அல்லது எழுத்தாளரை முதன்மையாகக் கொண்டு ஒரு புதினம் எழுத விரும்பினேன்.
அதுவும் இசைப்பதிலிருந்தே வந்தது. பன்னிரு அல்லது பதின்மூன்று வயதாக இருந்தபோது நான் எழுதிய என் முதல் எழுத்து, பாடல் வரிகளே. சில கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதினேன். பள்ளிக்காக அன்றி எனக்காக நானே எழுதுவதை அந்தரங்கமானதாக உணர்ந்தேன்.நான் வாசம் செய்ய விரும்பிய ஓர் இடத்தைக் கண்டுகொண்டேன்.
அந்த இடத்தைப் பற்றிக் கூறுங்களேன்.
அது ஒரு பாதுகாப்பான இடம். என்னுடைய பன்னிரு வயதில் நான் கண்டுகொண்ட இடம். எனக்கு இப்பொழுது அறுபத்து இரண்டு வயதாகிறது, அந்த இடம் – அது நான் இல்லை, ஆனால் அது எப்படியோ என்னுள் இருக்கிறது. அது ஒரு நபராக என்னிலிருந்து வேறுபட்டது. பொதுவாக என்னை நான் யூன் என்ற ஆள் என்று கூறுவேன். மேலும் எனக்குப் பணிக்குரிய பெயரும் இருக்கிறது. அது யூன் ஃபாஸ்ஸ. ஆனால் எழுத்தாளருக்குப் பெயர் இல்லை.
அந்த இடம் கேட்பதற்கும் இயக்கத்திற்குமானது, தங்குவதற்கு மிகவும் பாதுகாப்பானது. ஆனால் அது பயமுறுத்தக் கூடியது, ஏனென்றால் அறியாததில் (unknown) நுழைவதற்கான என்னுடைய வழி அது. என்னுடைய மனத்தின் எல்லைகளை அடைந்த பின்பு நான் அதைக் கடக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் எளிதில் உடையக் கூடிய உணர்வுடையவராய் இருந்தால், எல்லையைக் கடப்பதென்பது பயமுறுத்தக்கூடியது. நான் சில வருடங்கள் அவ்வாறுதான் இருந்தேன். என் விஷயங்களை எழுதுவதற்கு எனக்குத் தைரியம் வரவில்லை ஏனென்றால் எல்லையைக் கடப்பதற்கு எனக்குப் பயமாக இருந்தது. நன்றாக எழுதும் பொழுதுகளில் ஏற்கனவே எழுதப்பட்டதையே நான் எழுதுவதாகத் தெளிவான தனித்துவமான ஓர் உணர்வு ஏற்படும். அது இங்குதான் எங்கேயோ உள்ளது. அது மறைவதற்குள் நான் எழுதியாக வேண்டும்.
சிலநேரங்களில் என்னால் அதை உடனடியாகச் செய்ய இயலும். உதாரணமாக ‘மர்னிங் அண்ட் ஈவினிங்கில்’ (‘morning and evening’) பெரும்பாலும் எதையும் மாற்றாமலே இரண்டு பகுதிகளை எழுதிவிட்டேன். அல்லது எனது முதல் நாடகம் ‘சம்மொன் இஸ் கோயிங் டு கம்’ஐ (‘Someone Is Going to Come’) எதையும் மாற்றாமலே ஒரேயடியாக எழுதி முடித்தேன். ஆனால் ‘செப்டலஜி’ போன்ற நீண்ட நாவல்களில் நான் நிறைய மாற்றி இருக்கிறேன். அங்கு இருப்பதாக நான் உணர்கின்ற சொற்களை நான் தேடவேண்டும். அதைக் கண்டு பிடிக்க நான் முயலவேண்டும்.
என்னால் நன்றாக எழுத இயலும் ஒவ்வொரு வேளையும் நான் அனுபவிக்கிற ஒரு புதிய இடம், ஒரு புதிய பிரபஞ்சம்- அது கவர்ச்சிகரமானது. மேலும் ஒரு நாள் என்னால் எழுத முடியாமல் போகலாம் அந்நாளிற்கு நான் தயாராகவே உள்ளேன். அது பரவாயில்லை. அது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு விதமான கொடை என்றே நினைக்கிறேன். யாரொருவர் அல்லது எது ஒன்று அதைத் தருகிறது என்பது எனக்குத் தெரியாது.
நுழைக்கழியிலிருக்கும் போது, நான் அந்த அறியாததை (unknown), இருண்மையை, அசைவற்ற நீரைக் குறித்துச் சிந்தித்தேன். நீங்கள் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியைப் படகில் நீரின் நடுவே கழித்திருக்கிறீர்கள். அவ்விடத்தில் இருந்தது நீங்கள் பணி செய்யும் மனநிலையைக் காட்சிப்படுத்திக் கொள்ள அல்லது உணர்ந்துகொள்ள எனக்கு உதவியது.
நான் வளர்ந்த போது, எனக்கும் இங்கிருக்கும் பிற குழந்தைகட்கும் சுதந்திரமாக வளரும் காலம் இருந்தது. ஏழு எட்டு வயதிலேயே தனியாகப் படகில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தோம். வசந்தகால அல்லது முன்பனிக்கால மத்தியானங்களிலும் இரவுகளிலும் என் தந்தையுடன் படகில் மீன் பிடிக்கச் சென்றதே என் சிறு பிராயத்தின் இனிய நினைவுகள். இருள் சூழும் நேரத்தில் படகில் இருக்கும் அனுபவம், இந்த நிலப்பரப்பு, இந்தக் கடற்கரை இவையே உலக வரைபடங்களை விரும்பாத எனக்கு வண்ணமயமாகவும் ஓசைமயமாகவும் காட்சியளிக்கிறது. தெளிவாகவோ இலக்கியமாகவோ கருதி நான் எதையும் எழுதுவதில்லை. அது ஒரு கேட்கும் செயல்பாடு. நான் ஏதோ ஒன்றைக் கேட்கிறேன்.
நீங்கள் எதைக் கேட்கிறீர்கள்?
நான் எதை எழுதுகிறேனோ அதைக் கேட்கிறேன். ஆனால் பார்ப்பதில்லை. உருவகம் செய்வதில்லை.அது எங்கிருந்து வருகிறது, என்பது எனக்குத் தெரியாது. நிச்சயமாக, அது என்னுடையதே. அது என் மொழியே. நான் எனக்குத் தெரிந்த ஒன்றை உருவமாகக் கொள்கிறேன்.
நீங்கள் எழுதும் உரையின் தர்க்கம் (logic) என்னால் வடிவம் (form) என்று அழைக்கப்படுவதை உருவாக்குகிறது. உள்ளடக்கத்திற்கு உரிய அந்த வடிவத்தைப் புதிதாக ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த வடிவம் மிகப் பெருமளவில் நான் பிரபஞ்சம் எற்றழைப்பதுடன் தொடர்புடையது. நான் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குகிறேன். ‘செப்டலஜி’யை ஒரு பிரபஞ்சமாகக் கூறலாம். ‘ட்ரைலஜி’ (‘Trilogy’) மற்றுமொரு பிரபஞ்சம்.
ஆனால் உங்கள் பிரபஞ்சங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவை ஒரு தர்க்கத்தை (logic) ஒரு வடிவத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. பெரும்பாலும் அவை கதாபாத்திரங்களைப் பகிர்ந்துகொள்கின்றன அல்லது கதாபாத்திரங்களின் பெயர்களை. அது ‘செப்டலாஜி’யின் கதைசொல்லி அஸ்ல விவரிப்பதைப் போல் அவன் ‘உள்முகமான காட்சி’-யிலிருந்து (innermost picture) வெளிவருகின்றன. அவை முழுமையான ஒரு வாழும் உயிரினம் போல் இருக்கின்றன.
அது அதன் மற்றொரு புறம். அவை தனித்துவமான ஒரு பிரபஞ்சமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. ‘ட்ரைலஜி’யின் மூன்று பாகங்களும் தனித் தனியான பிரபஞ்சங்களாக நான் நினைக்கிறேன். அதே நேரத்தில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதுவே அந்த மூன்று நெடுங்கதைகளை ஒன்றாக்கி நாவலாக்கியது. ‘ட்ரைலஜி’யும், ‘செப்டலஜி’யும் தொடர்புள்ளவை. என் கதைகளில் ஒரே பெயரையும் ஒரே மாதிரியான இடத்தையும் திரும்பத் திரும்ப உபயோகப்படுத்துகிறேன். ஒரே கலைப் பண்புக் கூறுகளே (motifs) மீண்டும் வருகின்றன. நிறைய மனிதர்கள் நீரில் மூழ்குகிறார்கள் அல்லது சன்னல்கள் வழியே வெளியே ஒரு கடலையோ நுழைக்கழியையோ பார்க்கிறார்கள். இது ஓர் ஓவியர் மற்றுமொரு மரத்தை வரைவதைப் போன்றது, இதற்கு முன்பே வரையப்பட்டதுதான், ஆனால் அவர், அவர் வழியில் வரைகிறார். ஒரு நல்ல ஓவியர் ஒரே கலைப் பண்புக் கூறை திரும்பத் திரும்ப பயன்படுத்தியே புதிய ஓவியங்களைப் படைக்கிறார். நானும் அதைப் போன்ற ஒன்றைச் செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
மதமும் இலக்கியமும் எவ்வாறு உங்களுக்கு ஒருசேர வருகின்றன?
அறியாததற்குள் (unknown) பிரவேசித்தது எனக்குள் ஒரு மத மாறுதலை ஏற்படுத்தியது. நான் ஓர் இறை மறுப்பாளர், ஆனால் நான் எழுதும் போது என்ன நிகழ்கிறது, எது அதை நிகழ்த்துகிறது என்பதை என்னால் விவரிக்க இயலவில்லை. எங்கிருந்து அது வருகிறது? என்பதற்கு என்னிடம் பதிலில்லை. உங்களால் மூளையை அறிவியல் வழியில் விவரிக்க இயலும், ஆனால் அதன் ஒளியையோ ஆன்மாவையோ கைக்கொள்ள முடியாது. அது வேறு. இலக்கியம் தன்னளவிலேயே இலக்கியக் கோட்பாடுகளை விட அதிகம் தெரிந்து வைத்திருக்கிறது.
“ஏனெனில் தாமாகவே இருக்கும் இறைவன் வெகு தொலைவில் இல்லாமையாகவும் வெகு அருகில் இருப்பாகவும் இரண்டுமாகவும் விளங்குகிறார்,” என உங்கள் கதாபாத்திரம் அஸ்லயும் இதைப் போல நினைக்கிறார்.
‘செப்டலஜி’ என் சுயசரிதையாக இல்லாவிட்டாலும் கூட அதனுள் என்னுடன் ஒத்துப் போகும் எண்ணங்களும் பண்புகளும் இருந்தன உதாரணமாகச் சாம்பல் நிறத் தலை முடியுடன் அஸ்லயின் தோற்றம். பிரதானக் கதாபாத்திரத்திற்கு என் தோற்றத்தைக் கொடுத்து ஒரு சுயசரிதை புனைவு எழுத முடிவெடுத்து அந்த வகையுடன் விளையாடி என் வழியில் அதைப் புனைவாக எழுதினேன். ஆனால் கட்டுரை வடிவிலான பகுதி என் எண்ணங்களே. கடவுள் வெகு அருகில் இருப்பதால் உங்களால் அனுபவிக்க முடியாது, வெகு தொலைவில் இருப்பதால் உங்களால் நினைத்துக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்தை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனாலும் மகிழ்ச்சியான சிலர் கடவுள் என்பதை அனுபவித்து உள்ளனர்.
அஸ்லயினுடைய மத உணர்வு ஒரு கொள்கையாகவோ கோட்பாடாகவோ இல்லை. கடவுளுக்கும் ஆலயத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் உள்ள உறவை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நீங்கள் உண்மையான நம்பிக்கையாளராக இருந்தால், கொள்கைகளிலும் நிறுவனப்படுத்துதலிலும் நம்பிக்கை கொள்ள மாட்டீர்கள். கடவுள் உங்களின் உண்மையாக இருக்கும் பொழுது உங்கள் நம்பிக்கை மற்றோர் நிலையில் இருக்கும். இவ்வாறு சொல்வதால் கொள்கைகளும் நிறுவனப்படுத்துதலும் தேவை இல்லை என்பதல்ல. விசுவாசத்தின் மர்மம் இரண்டாயிரம் ஆண்டுள் நீடித்திருப்பதற்கு ஆலயங்கள் நிறுவனப்படுத்தப்பட்டதும் காரணம். உங்களுக்கு ஒருவிதமான பொதுக் கொள்கை தேவைப்படுகிறது. அதற்காகக் கொள்கைகள் மத அடிப்படையில் சரி என்று ஆகிவிடாது.
பொருளாதார வலிமையையே வலிமையாக எண்ணும் நாம் வாழும் இந்த உலகில் அது பெரும் வலிமையாக உள்ளது. அவர்களே அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மறுபுறத்தில் சில படைகள் இருக்கின்றன, அதில் ஆலயமும் ஒன்று. ஆலயங்கள் இருப்பதற்கு -கத்தோலிக்கம் மிகவும் வலிமையான ஒன்று- கத்தோலிக்கத்தை ஏதோ வழியில் திணிக்க வேண்டியிருக்கிறது. நான் பார்த்த அளவில் முதலாளித்துவத்துக்கு எதிரான இறையியலில் (anti-capitalist theology) ஆலயம் மிகவும் முக்கியமான ஒன்று. இலக்கியமும் கலையும் மற்றொரு நிறுவனங்கள். ஆனால் அவை ஆலயத்தின் அளவிற்கு வலிமையானதாக இல்லை.
கருணை (Grace) என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன?
இந்தக் கருத்தைப் பற்றி நான் நிறையச் சிந்திப்பேன்.
எனக்கு இது மிகவும் முக்கியமானது.
எனக்கும் கூட. அது ஒரு முக்கியமான கருத்து. என்னால் எழுத இயலுவதைச் சிலவேளைகளில் நான் கொடையாக ஒரு விதக் கருணையாகப் பார்க்கிறேன். ஒரு வழியில் நான் இதற்குத் தகுந்தவனில்லை. நீங்கள் என்னுடன் இங்கு அமர்ந்திருப்பதற்குக்கூட தகுதியானவனாக என்னை நான் உணரவில்லை. என் நாடகங்களைத் தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் காட்சிப்படுத்துதல், நடிகர்கள் வரிகளைப் படித்தல் எனப் பல வேலைகளைச் செய்கிறார்கள். நான் பலரைப் பல செயல்களுக்கு உட்படுத்துகிறேன், அதற்கு நான் தகுதியானவனில்லை. அது என் தகுதிக்கும் மேலானது.
எழுதுவதும் அதை நன்றாகச் செய்ய இயல்வதும் ஒரு கருணையே. மேலும் நான் வாழ்வையே ஒரு கருணையாகத் தான் கருதுகிறேன். இந்த வாழ்வை விட்டுப் போகிறவர்களை என்னால் முழுவதுமாக புரிந்துகொள்ள முடிகிறது. இது பல வழிகளில் மோசமான ஓர் இடம். மரணம் உங்களுக்குக் கருணையாகத் தோன்றலாம். எப்பொழுதும் இங்கேயே இருப்பது மோசமானதாக இருந்திருக்க வேண்டும்.
அது வேதனையை உள்ளடக்கியது.
கிறிஸ்தவ வரிகளில் சொல்வதானால் வீழ்ந்துவிட்ட இந்த உலகத்தில் வாழ்க்கை ஒரு வகையில் கொடை மற்றும் கருணை. அதுவே பின்பு குழப்பமானதாக ஆகிறது. ஒரு விதத்தில் எல்லாமே எனக்கு முரண்பாட்டில் முடிகிறது. சில வேளைகளில் நான் எவ்வாறு ஒற்றை ஆளாக இருக்கிறேன் என்பதே புரியாத அளவிற்கு முழுவதுமாக முரண்பாடானவனாக இருக்கிறேன்.
குழந்தைப் பருவம் குறித்து அழகாக எழுதுவீர்கள். உங்கள் குழந்தைப் பருவம் முரண்பாடுகள் அற்றதா? குழந்தைமையானதா?
எனக்கு இது அடிப்படையானதாக இருப்பதால் இது குறித்து பேசியாக வேண்டும், ஏழு வயதில் ஒரு விபத்தால் நான் மரணத்தின் வாயிலுக்குச் சென்றேன் (தூரமாக கை காட்டுகிறார்). பின்பு அங்கிருந்து நான் இங்கு அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன் – நான் என்னை அப்படித்தான் பார்த்தேன். எல்லாமே அமைதியாக இருந்தது, குடியிருப்பில் இருந்த வீடுகளை கடைசியாகப் பார்ப்பதாகவே மருத்துவமனை செல்லும் வழியில் உணர்ந்தேன். ஒளித் துகளாலான மேகம் போல் எல்லாமே மினுமினுப்பாகவும், அமைதியாகவும் மகிழ்ச்சி நிலையிலும் இருந்தது. இதுவே குழந்தைப் பருவத்திலிருந்த மிக முக்கிய அனுபவம். நல்ல வழியிலும், தீய வழியிலும் என்னை ஒரு மனிதனாக உருவாக்கிய அது என்னை ஒருவகை கலைஞராக்கியது.
நான் உங்கள் எல்லா நாவல்களையும் வாசித்த பின்பு உங்கள் எல்லா நாடகங்களையும் வாசித்தேன். பெரும்பாலும் உங்கள் நாடகங்கள் அழுத்தப்பட்ட வலிமிகுந்த பாலியல் பொறாமைகளை (sexual jealousy) காட்சி படுத்துவது எனக்கு வியப்புக்குரியதாய் இருந்தது. அது உங்கள் நாவல்களில் மட்டுப்படுத்தப் பட்டிருந்தது அல்லது பெரும்பாலும் பின்புலத்திலிருந்து.
பொறாமை நாடகத்திற்குச் சிறந்த கரு. பழங்காலத்திலிருந்தே அவ்வாறு தான். இருவரை மேடையேற்றி மூன்றாவது நபரை நுழைய விடுங்கள் உங்களுக்கு ஒரு நாடகம் கிடைத்துவிடும். இருவரை வைத்தும் நாடகங்களைப் படைக்க இயலும், அதை ‘மதர் அண்ட் சைல்ட்’ (mother and child) போல என்னுடைய சில நாடகங்களில் செய்திருக்கிறேன்.
அது எனக்கு வலிமிகுந்த வாசிப்பனுபவமாக இருந்தது.
ஆம், சிறிதளவு டென்னீஸி வில்லியம்சை (Tennessee Williams) போன்றது. பொறாமைக்குள் பிரவேசிப்பது மிகவும் எளிதாக இருந்ததால் நாடகங்கள் எழுதுவது அயற்சியாக இருந்தது. நாடக மொழியில் சொல்வதானால் மேல் மட்டத்தில் பாலியல் பொறாமை இருந்தால் அங்கு மரணம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
காதற் கடவுளும்(Eros) மரணத் தேவனும்(Thanatos) இணைத்தே இருப்பர்.
அவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவர்கள். நல்ல படைப்பிற்கு நீங்கள் இருவரையும் நிர்வகித்தாக வேண்டும். உங்கள் படைப்பு வெறும் காதற் பொறாமையாக அல்லது வேறு ஏதோவாக மட்டுமே இருந்தால் அது வேலைக்கு ஆகாது.
உங்கள் நாடகம் ‘சம் ஒன் இஸ் கோயிங் டு கம்’மில் (Someone’s Going to Come) அவ்வளவு தீவிரமாக இடைவிடாது அதன் இரு கதாபாத்திரங்களான ஆணும் பெண்ணும் அவர்கள் மட்டுமே தனித்திருக்க விரும்பியது என்னை அமைதி இழக்கச் செய்தது.
அவர்கள் அந்த உரிமைப்படுதலை (belonging) பகிர்ந்து கொண்டார்கள். அது அவர்கள் வழி. அவர்கள் இந்த உலகத்திலிருந்து விலக விரும்பினார்கள் ஏனெனில் இந்த உலகம் இருப்பதற்குக் கடினமானது. எப்படியாவது அதிலிருந்து தப்பிவிட முடியுமென்று அவர்கள் எண்ணினார்கள்.
ஆனால் உங்களால் உலகத்திலிருந்து தப்பிக்க இயலாது.
அதுதான் அதன் முக்கிய புள்ளி. அவர்கள் அவர்களுக்கென ஓர் உலகத்தைப் படைத்த உடனே வேறொருவர் வரப்போகிறார். வேறொருவர் வருவார். மேலும் நிச்சயமாக உலகம் நுழையும். முற்றிலுமாக அவர்கள் இருவர் மட்டுமே இருப்பது சாத்தியமற்றதைப் பற்றியது அது. நம்மில் பலருக்கு அது ஒரு கனவாய் இருக்கலாம். அதைக் காதலின் ஒரு பகுதியாக எண்ணுகிறேன், முழுமையின் ஒரு பகுதியாக. மேலும் காதல் சாத்தியமான ஒன்றாகவே நான் எண்ணுகிறேன். ஆனால் அவர்கள் உணர்ந்துகொள்ள முயன்ற வழியில் அல்ல. நான் எழுதிய எல்லாவற்றிலும் இருப்பது போல அந்த நாடகம் பலவற்றைக் குறித்தது பேசினாலும் அது ஒன்றித் தனித்திருத்தலில் சாத்தியமற்றதைப் பற்றியது.
உங்கள் நாடகங்களில் எனக்கு விருப்பமானதாகக் கொள்ளத்தக்க ‘ட்ரீம் ஆப் ஆட்டமில்’ (‘Dream of Autumn’) நீங்கள் ஓர் அழகான வாக்கியம் வைத்திருப்பீர்கள். கடற்கரையில் அமர்ந்து ஓர் ஆணும் பெண்ணும் அவனின் கல்யாணத்தால் தடுக்கப்பட்ட அவர்கள் காதலைப் புதுப்பிப்பர். “குழந்தைகளைத் தந்தையிடமிருந்து பிரித்துவைப்பதைப் போன்ற காதல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்பது போன்ற ஒரு வாக்கியத்தை அவன் கூறுவான்.
அது ஒரு முட்டாள்தனமான கருத்து இல்லை.
நானும் அப்படி நினைக்கவில்லை.ஆனால் வீழ்ச்சியடைந்த இந்த உலகில் நம்பக்கூடிய அளவிற்கு மதிப்பு வாய்ந்த காதல் எது?
இந்த இரண்டு நாடகங்களுமே காதலைப் பற்றி ஏதோ ஒன்றைச் சொல்வதாக நான் எண்ணுகிறேன். இரண்டு நாடகங்களுக்கும் காதலைப் பற்றி ஏதோ ஒன்று தெரியும். அதனால் எனக்குப் பதில் தெரியும் என்பதல்ல. ஆனால் நான் எழுதியது ஒரு வகையில் உண்மையென நான் நினைக்கிறேன். இதுதான் உண்மை என்பதும் இல்லை. வெறும் கற்பனை என்பதும் இல்லை.
அந்த வழியில்தான் அறிவார்ந்த ஒரு பதிலை என்னால் உங்களுக்கு அளிக்க இயலும். அது என் எழுத்தில் இருக்கிறது. ஒரு நபராக உங்களுக்குத் தெரிந்ததை விட உங்கள் எழுத்து அதிகம் தெரிந்து வைத்திருக்கும். அது அறிவார்ந்தது. அது பெரியது. அதை உயர்ந்த இலக்கியத்தின் கொடையாகவே நான் எண்ணுகிறேன். காதல் தனித்துவமானது அதே சமயம் பிரபஞ்சம் முழுமைக்குமானது என்பதே நான் காதலைப் பார்க்கும் ஒரு வழிமுறை. அது மனிதர்களுக்குமானது. ஏதோ ஒன்று மனிதனுக்குத் தனித்துவமாகவும் உலகளாவியும் இருக்கிறது. ஆனால் காதலின் தனித்துவத்தை உண்மையான இலக்கியமாக மாற்றுவது மதிப்பு மிக்க ஒன்றைப் படைக்கத் தேவையாகிறது.
உங்களின் கட்டுரை ஒன்றில் அந்தரங்கத்திற்கும் ( Private) தனிப்பட்ட விஷயம் (Personal) என்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிடுவீர்கள். காதல் முக்கோணம் அல்லது காதலுக்கும் மரணத்திற்கும் உள்ள தொடர்பு எனச் சில தனிப்பட்ட விஷயங்கள் உலகம் முழுவதும் உள்ளது. அந்த அனுபவங்களுடன் தொடர்புடைய பெயர்கள் மாறலாம் ஆனால் அவை அடிப்படையில் ஒரே வடிவமுடைய அனுபவங்களே.
ஆம். நானும் அதை உண்மை என்றே நினைக்கிறேன். நான் என் கதாபாத்திரங்களை நபர்களாகப் பார்ப்பதில்லை, மாறாக அவர்களை ஒரு குரலாக உணர்கிறேன். ஓர் ஒலி இருக்கிறது, இன்னும் ஓர் ஒலி இருக்கிறது, பின்பு இரண்டும் ஒன்றோடொன்று நெருங்குகிறது. அவைகளுக்கிடையில் ஓர் உறவு இருக்கிறது, பின்பு இந்த உறவு புதிய ஒலியாகிறது.நான் நன்றாக எழுதும் பொழுது அந்த ஒலிகள் ஒன்றாகி என்னால் பாடல் என்று அழைக்கப்படுபவையாக அல்லது ஓர் இசை கோவையாக ஆகின்றன.
என் நாடகங்கள் அதிக அளவில் மக்களைச் சென்றடைந்ததற்கு இந்த என் வார்த்தைகளையும் தாளங்களையும் ஒலிகளுடன் சிறிது மாற்றம் செய்வதன் மூலம் மீண்டும் வேறு வழியில் உருவாக்க முடியும் என்பதே காரணம் என்று நினைக்கிறேன். அது ஒரு வகையான பாடலை உருவாக்குகிறது. ஒரு பாடலைப் பல மொழிகளில் பாட இயலும், நிச்சயமாக ஒரு கதைப் பாடலாகவோ (ballad) இசை நாடகமாகவோ (opera) அல்லது வேறு எதுவாகவோ கூட பாட முடியும். அது நன்றாக இருக்கும் பொழுது வேறெதும் பொருட்டல்ல. புதினத்தை விட நாடகங்களுக்கே இது அதிகமாகப் பொருந்தும்.
இந்த உலகத்தில் வாழும் யாராலும் வரித்துக் கொள்ளக் கூடிய நிலைகளாகவே உங்கள் பாத்திரங்கள் எனக்குப் படுகின்றன.
அது சரியே. ஏனென்றால், ஓர் உண்மையான நாடகத்தை உருவாக்க, எதுவாயினும் நடிகர் அதைத் தன் குணமாகக் கொள்ள வேண்டும். ஓர் இயக்குநரும் அவ்வாறே கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. என் எழுத்துக்களில் நான் செய்வது அதுவல்ல. நான் நாடகங்களுக்குச் சரியானவன் இல்லை என்று ஓர் எழுத்தாளனாக என்னால் உறுதியாகக் கூற முடியும். அந்த வகையில் அது எனக்கான கலை வடிவம் அல்ல. அதனாலேயே என் நாடகங்கள் பிரசுரமாவது எனக்கு முக்கியம்.
பேச்சுக்கும் சிந்தனைகளுக்கும் உள்ள தொடர்பு நன்கு திட்டமிடப்பட்ட, வேண்டிய இடத்தில் நிறுத்தற் குறியிடப்பட்ட ஓர் இசை மாற்றமாக (musical alternation) இருப்பதால் நாடகங்களுக்கும் நாவல்களுக்கும் உள்ள உறவு சிலவேளைகளில் ஒரு தாளம் போல இருக்கிறது.
அது உண்மை தான். தாளத்தைக் குறித்ததே எல்லாம், ஓவியத்திலும் கூட. பகுதிகளிலோ இல்லை அவற்றிற்கு இடையே உள்ள உறவுகளிலோ ஒரு தாளம் இருக்கிறது. தாளம் என இலகுவாகக் கூறி விடலாம். அது எது என்பதும், என்ன செய்கிறது என்பதுமே சொல்வதற்கு மிக மிகக் கடினமானவை. கருணை, அன்பு, தாளம் என எல்லாக் கருத்துக்களும் உபயோகிக்க எளிதானது ஆனால், உண்மை வடிவில் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை. ஆனால் அவற்றின் இருப்பு வெளிப்படையானது. தாளம் இருக்கும் போது உங்களுக்குத் தெரியும். அன்பு இருக்கும் போது நீங்கள் அதை உணர்வீர்கள். எனக்குக் கடவுளும்கூட. கடவுள் எல்லா நேரத்திலும் வியாபித்திருக்கிறார் என்பது எனக்குத் தெளிவு. நான் அதை அப்படி உணராவிட்டாலும் கூட.
மதியம் மெதுவான உரைநடை (slow prose) பற்றி உங்கள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இடையே ஒரு விவாதம் நடைபெற்றது. குறிப்பாகச் சிலர் நான் உள்பட மெதுவாக என்று சொல்லப்பட அதில் எதுவுமில்லை என்று கூறுகிறோம். பின்பு ஏன் அந்தப் பெயர்?
நான் நாடகத்திற்குப் பதினைந்து வருடங்களாக எழுதினேன். ‘மார்னிங் அண்ட் ஈவினிங்’இன் (‘Morning and Evening’) முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் இடையே நான் இரண்டு சிறிய இடைவேளைகளை எடுத்துக் கொண்டேன். இந்த நீண்ட காலத்தில் கடைசியில் தான் நான் ‘அலிஸ் அட் தி பயர்’ (‘Aliss at the Fire’) எழுதினேன். ஆனால் பெரும்பாலும் நான் எழுதியது நாடகங்கள், நாடகங்கள், நாடகங்கள். நான் எழுதிய உரைநடைகூட அதன் அடர்த்தியால் சிறிது நாடகம் போலாகி விட்டது. ‘அலிஸ் அட் தி பையர்,’ ‘எ சம்மர் டே’ (‘A Summer Day’) என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. அது ‘நான் உன்னை வேனிற்கால நாளுடன் ஒப்பிடட்டுமா?’ (Shall I compare thee to a summer’s day?) என்ற ஷேஸ்பியரின் பிரபலமான சொனெட்டிலிருந்து (sonnet) எடுக்கப்பெற்ற மேற்கோள்.
என் வாழ்வின் ஒரு கட்டத்தில் நான் தரகிற்காக எழுத வேண்டி இருந்தது. அது மிக மிகக் கடினமாக இருந்தது. ‘தீஸ் ஐஸ்’ (‘These eyes’) என்ற நாடகமே நான் எழுதிய கடைசி நாடகம். அது பரவாயில்லை என்கிற அளவில் இருந்தது, போதுமானதாக இல்லை. கவிதைகளும் உரைநடைகளும் திரும்ப விரும்பினேன்; நாடகத்திற்கு எழுதுவதை நிறுத்த விரும்பினேன். “சரி. நான் முடித்துக் கொள்கிறேன். இத்துடன் எல்லாம் முடிந்தது” என்று கூறிக் கொண்டேன்.
அதே வேளையில் நான் அதிகமாகப் பயணப்பட்டேன், மிக அதிகமாகக் குடித்தேன். நான் குடிப்பதை நிறுத்த வேண்டியிருந்தது. அதை நிறுத்துவதற்கு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப் படவேண்டியிருந்தது. நான் கத்தோலிக்கத்துக்கு மாறினேன். என் மனைவியையும் அந்த நேரத்தில்தான் சந்தித்தேன்.
மிகப்பெரும் அளவில் என் வாழ்க்கையை மாற்றிக்கொண்டேன். வாசிப்பதை நிறுத்தினேன். இப்பொழுதெல்லாம் அரிதாகவே பேட்டிகள் கொடுக்கிறேன். தொண்ணூறு சதமான விஷயங்களுக்கு ‘இல்லை’ என்பதையே பதிலாகக் கூறுகிறேன். சில நிகழ்வுகளில் நான் பங்கெடுக்க வேண்டியிருக்கிறது. இங்கும் அங்கும் பரிசுகள் கொடுக்கப்படும்போது அங்கு போக வேண்டுமென்று நினைக்கிறேன்.
ஆம், நீங்கள் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க விரும்புவதில்லை என்பதை என்னால் கூற முடியும்.
ஆனால் நான் ஓர் ஓய்வற்ற நபர், எனவே நான் தொடர்ந்து பயணங்கள் செய்கிறேன். எங்களுக்கு ஆஸ்திரியாவில் ஓர் இடம் இருக்கிறது, ஓஸ்லோவில் ஒன்று, நார்வெயின் மேற்குப் பகுதிகளில் இரண்டு இடங்கள். எனவே நான் எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் கொண்டிருக்கும் இந்த தனிப்பட்ட இடங்களுக்கிடையே பயணப் பட்டுக்கொண்டே இருக்கிறேன். அரிதாகவே நான் வேறு இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வேன். அல்லது நான் என் குடும்பத்துடன் பயணப்படுவேன், ஆனால் அது வேறு. நான் எங்கோ தனித்து குப்பியுடன் இல்லை. எழும்போதே நான் எங்கிருக்கிறேன்? கழிவறை எங்கிருக்கிறது? என்ற கேள்வியுடன் எழுவது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
நீங்கள் முன்பு எழுதியதுடன் இப்போது தொடர்ச்சி இருக்கிறதா? அல்லது ஓர் இடைவெளி ஏற்பட்டிருக்கிறதா? (Rupture)
ஓ! ஆம், என் எழுத்தில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. நான் பேசும் இந்த விஷயங்கள் புறவயமானவை. எழுத்து என்பது வேறு. என்னுள் இருக்கும் எழுத்தாளன் எப்பொழுதும் நிலையானவன். அவன் குடிமயக்கம் இல்லாதவனா இல்லையா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவன் முன்பிருந்ததைப் போலவே இருக்கிறான்.
நாம் ஸ்லோ ப்ரோஸை பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாடகத்திற்கு அதிகச் செயல் தேவையில்லை என்று நினைத்தேன். ஆனால் உண்மையை மேடையிலிருந்து பார்வையாளனுக்குக் கடத்தும் வேலையைச் செய்வதற்கு ஒரு வலுவான தீவிரத் தன்மையும் குவிதலும் (concentration) தேவைப்படுகிறது. ஆனால் அத்தகைய செறிவாக எழுதுவதற்கு நிறைய நேரம் எடுப்பதில்லை; மாறாக நிறைய வலிமையும், நீங்களுமே தேவை. என்னால் மிக வேகமாக எழுதமுடியும். அவ்வாறு எழுதுவதையே என்னுள் இருக்கும் பித்து நிலை என்பேன்.
அதன் பிறகு என் எழுத்து, வாழ்வு எல்லாவற்றையும் மெதுவாக்க விரும்பினேன். அவ்வாறுதான் நான் தொடங்கினேன். உரைநடை எழுதி நீண்ட நெடிய வாக்கியங்களுடன் அதை மெதுவாக்க விரும்பினேன். ‘செப்டலஜி’ மிகவும் நீண்டது. நான் அதை முடிக்கும்போது குறைந்தது ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் இருந்தன. பிறகு கட்டுரை வடிவிலான சில பகுதிகளை நான் வெட்ட (cut) வேண்டியிருந்தது. ‘செப்டலஜி’யில் இருந்து நீக்கப்பட்ட நூறு அல்லது அதற்கு மேற்பட்ட இறையியல் கட்டுரைகள் என்னிடம் உள்ளன.
நீங்கள் அவை அஸ்லயின் இளம் மனைவியான அலிஸின் பாற்பட்டவை என்று கூறினீர்கள்.
ஆம், பெரும்பாலானவை. சில அஸ்ல உடனான உரையாடலில் இருந்தது, ஆனால் அவளிடம் நீண்ட விரிவுரைகள் இருந்தன. இப்பொழுதோ அலிஸின் எண்ணங்களைப் பற்றி எதுவும் நீங்கள் வாசிக்கப்போவதில்லை.
அதைத் தவிர்த்தது சரியா? தவறா? என்று இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த இளம் பெண் இவ்வளவு அறிவுப்பூர்வமாக இருக்க வாய்ப்பில்லை, இதில் யதார்த்தம் இருக்க வேண்டுமென்று என் ஆசிரியர் (editor) செஸிலி கூறினார்.
அவற்றைத் தனியாக வெளியிடுவதைப் பற்றி ஆலோசிக்கிறீர்களா?
ஒரு நாள் நான் அது குறித்து முடிவெடுப்பேன். அவள் நிறைய விவேகமுள்ள விஷயங்களைப் பேசினாள் என்பது எனக்கு உறுதி. மேலும் ‘செப்டலஜி’ அந்த வழியில் யதார்த்த நாவல் இல்லை, எனவே அது தவறாக இருந்திருக்காது. அவளுக்கு அதைக் கூறுவதற்கும், அறிந்திருப்பதற்கும் சாத்தியம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். நீங்கள் இளம் வயதில் மிகவும் அறிவாளியாக இருக்க முடியும். ஒருவேளை அது தவறாகவும் இருக்கலாம், எல்லாமும் ஒருவருக்குத் தெரிந்திருப்பதில்லையே? நான் இப்பொழுதும் அதைக் குறித்து உறுதியற்ற நிலையிலே இருக்கிறேன்.
நாவல்களுக்கு இடையில் இப்போது நீங்கள் மொழிபெயர்ப்பிலும் ஈடுபடுவதாக நான் கேள்விப்பட்டேன்.இன்னும் நிறைய நாவலாசிரியர்கள் மொழிபெயர்ப்பாளர்களாகவும் பணியாற்ற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
நான் மொழிபெயர்ப்பதை விரும்புகிறேன். அது ஒருவகையில் வாசிப்பதைப் போன்றது ஆனால் மிக ஆழமாக… அது ஆழமான வாசிப்பு முறை.
என் சிறு பிராயத்தில் அலவ் ஹேக்யின் (Olav Hauge) மொழிபெயர்ப்பை வாசித்திருக்கிறேன். அவை ‘மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருந்தன. ஹேகின் மொழிபெயர்ப்பே ஆஸ்திரேலியக் கவிஞர் கியார்க் ட்ராக்ளின் (Georg Trakl) கவிதைகளுடன் நான் காதலில் விழக்காரணம். பின்பு நான் ட்ராக்ளின் தொகுக்கப்பட்ட கவிதைகளை ஜெர்மன் மொழியில் வாங்கினேன், அப்போது எனக்கு ஜெர்மன் மொழி வாசிக்கத் தெரியாவிட்டாலும் நான் அவற்றை வாசித்தேன். தனக்குத் தானே திரும்பத் திரும்பச் சொல்வதில் அவரும் என்னைப் போல இருப்பதால் அது அவ்வளவு கடினமாக இல்லை. ஒரு வகையில் அவரின் எல்லாக் கவிதைகளும் ஒரே கவிதையே என்று என்னை விட உங்களால் கூறிவிட முடியும். நான் அவரின் சில கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன், சிலவற்றை என் ஒன்றிரண்டு கவிதைத் தொகுப்புகளில் சேர்த்திருந்தேன்.
நான் முதல் முறை ட்ராக்கிளை வாசிக்கும் பொழுது என் பதின்பருவத்திலிருந்தேன், இரண்டோ மூன்றோ வருடங்களுக்கு முன்பு அவரின் ‘செபாஸ்டியன் இம் ட்ரையும்’ (‘Sebastian im Traum’) தொகுப்பை மொழிபெயர்த்தேன். ஐம்பது வருடங்களோ அதற்கும் மேலாகவோ அது என்னுடன் இருந்தது. பின்பு இந்த வருடம் நான் ‘தி இலஜீஸை’ (‘The Elegies’) மொழிபெயர்த்தேன்.
நீங்கள் கஃப்காவினுடைய ‘தி ட்ரயல்’ஐயும் (Kafka’s ‘The Trial’) மொழிபெயர்த்துள்ளீர்கள்.
ஆம், அதற்கு நிறைய நல்ல விமர்சனங்கள் கிட்டியது எனக்கு மகிழ்ச்சியே. ஜெர்மானியரான என் பதிப்பாளர் என் மொழிபெயர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு புள்ளியையும் சரி பார்த்தார். நீங்கள் இதை நம்பலாம். ஸ்கேண்டிநெவியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட மிகவும் நம்பகமான மொழிபெயர்ப்பாக நான் அதை எண்ணுகிறேன். நான் ஒரு நாவலை மொழிபெயர்த்தது அதுவே முதல் முறை. ‘செப்டலஜி’க்கு பின்பு வேறு எதாவது செய்ய ஓர் இடைவெளி தேவை என்று உணர்ந்தேன். எனக்கு விருப்பமான ‘தி ட்ரயல்’ நாவலை மொழிபெயர்ப்பதை முயன்று பார்க்க முடிவெடுத்தேன்.
நான் நிறைய நாடகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன், குறிப்பாக மூன்று குருக்களின் கிரீக் ட்ராஜெடிஸ் (Greek tragedies by the three masters) : ஸ்கலஸ், யூரிபிடிஸ் மற்றும் சோபிகிளிஸ் (Aeschylus, Euripides, and Sophocles). அது ஒரு குரலை, பழமையான குரலைக் கேட்கும் செயல்பாடு. ஸ்கலஸ், யூரிபிடிஸ் மற்றும் சோபிகிளிஸ் தனித்துவமான குரல்களைக் கொண்டிருந்தனர். இப்பொழுது என் மொழியில் எழுதுவதைப் போலவே அந்தக் குரல்களைக் கேட்டு எழுதுவது எனக்கு வெகு இலகுவாக இருந்தது. நான் அதை விரும்பி செய்தேன்.
இப்பொழுது நீங்கள் ஜெரால்டு மெர்னைன் உடைய ‘தி ப்ளைன்ஸ்’ஐ (Gerald Murnane’s ‘The Plains’)மொழிபெயர்க்கிறீர்கள்.
நான் எப்படி மெர்னைனை வாசித்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் இதற்கு முன்பு நார்வெஜியன் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டதில்லை. எங்கோ அவரை படித்தபொழுது அவர் சுவாரசியமான எழுத்தாளராக எனக்குத் தோன்றினார், மேலும் ‘தி ப்ளைன்ஸ்’அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட மற்றும் பிரபலமான நாவல். அது ஸ்வீடிஷ் மொழியிலும் டானிஷ் மொழியிலும் பிரசுரமாகி இருக்கிறது. ஜெர்மனி மற்றும் ஆங்கிலத்தில் இலக்கியத்தை வாசிக்க முடியுமென்றாலும் ஸ்கேண்டிநெவியன் மொழியில் வாசிப்பதே பிடித்திருக்கிறது. எனவே நான் அதை ஸ்வீடிஷ் மொழியில் படித்தேன், எனக்கு அது பிடித்திருந்தது. நான் அதை மொழிபெயர்க்க முயன்று பார்க்க முடிவெடுத்தேன்.
நீங்கள் மெர்னைனை மொழிபெயர்ப்பது எனக்கு நரம்புகள் மேல் பகுதியிலும் சிம்பதெடிக் நரம்புகள் (sympathetic strings) கீழும் அமைந்திருக்கும் ஹர்டெஞ்சர் ஃபிடிலை (Hardanger fiddle) நினைவு படுத்துகிறது. நீங்களும் மெர்னைனும் ஒரு குறிப்பிட்ட உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொள்வது போலுள்ளது.
அது ஒரு நல்ல காட்சி. உண்மையாகவே உங்களுடன் உரையாடும் எழுதப்பட்ட ஒரு குரலைச் சந்திப்பது மிகவும் அபூர்வம். அது ஒரு புதிய நட்பைப் போன்றது. அது அடிக்கடி நடைபெறுவதல்ல.
‘தி பிளைன்ஸ்’ என்பதை நியூனாஸ்க்(Nynorsk) மொழியில் எவ்வாறு மொழிபெயர்ப்பீர்கள்?
‘ஸ்லேட்டி’ (‘Slettene’) அதுவே மிகச் சரியானது. ஜெர்மன் மொழியில் அது ‘டை எபீன்’ (‘Die Ebenen’). நான் வசிக்கும் ஆஸ்திரியா பகுதியில் ஒரு பெரிய சமவெளி இருந்தது, அது பனோனியன் சமவெளி(Pannonian Plain) என்று அழைக்கப்பட்டது. அது ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பைப் போன்றது.
மெர்னைன் தனித்துவமான குரலையும் பார்வையையும் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். ‘தி பிளைன்ஸ்’ போன்ற ஒன்றை நான் வாசித்ததில்லை, ஆனால் அது என் எழுத்தை ஒத்திருந்தது. ஒரு நெருக்கத்தையும் விலகலையும் நான் உணர்ந்தேன். நாங்கள் வேறு வழிகளில் எழுதினாலும் அதற்குப் பின்னால் ஒத்த பார்வை இருப்பதாக என்னால் கூற இயலும்.
ஒருவேளை ஒத்த ஒழுக்கம் அல்லது மன குவிப்பு(concentration).
எல்லாமே சுருக்கமாகவும் சரியாகவும் இருக்க வேண்டுமென்பது மனம் குவிந்து எழுதும் பொழுது என் வழி. ஒரு காற்புள்ளி தவறாக இருந்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பக்கம் 4-ல் ஒன்றை மாற்றினால் வேறு பகுதியில் வேறு ஒன்றை மாற்ற வேண்டி இருக்கும். அப்படி எத்தனை தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அவை விழிப்பு (conscious) நிலையிலானது அல்ல. அவ்வாறு ஒரு பிரபஞ்சத்தில் நீங்கள் நுழையும் பொழுது ஒரு விதத்தில் உண்மையான உலகத்திலிருந்து பிரிந்து விடுகிறீர்கள். நீங்கள் உங்களுக்கான இந்தப் பிரபஞ்சத்தை ஏற்படுத்தும் பொழுது அது உங்களுடையதாக இருப்பதில்லை.
அதன் வடிவத்தில் தனிநபரைச் சுட்டாத தர்க்கம் (impersonal logic) உள்ளது.
இதைப் போல அல்லது அதைப் போலச் சரியாகச் செய்ய வேண்டிய அனுபவம் எழுத்தாளனாக எனக்குத் தேவை. ஒரு வாசகராக நீங்கள் இதை தர்க்கமாகப் பார்ப்பீர்கள்.
தேவையில்லாமல் எழுதுவதை நான் ஒன்றுமில்லாதது என்று கூறுவேன். தேவையே அதன் சக்தி (Force). ஆயிரக்கணக்கான விதிகளை நாவல் எழுதும் போது பின்பற்ற வேண்டுமென்று நான் நினைக்கின்றேன். பெரும்பாலானவை இதற்கு இல்லை, அதற்கு ஆம் சொல்வதாகும். இந்த விதிகள் எல்லாவற்றையும் பின்பற்றுவதற்கும் அவற்றிற்குச் செவிசாய்ப்பதற்கும் ஒரு நபராக எனக்குள்ளதைக் காட்டிலும் அதிகமான நினைவாற்றலும் மன வலிமையும் தேவை.
அந்தத் திறன்களில் நாவல் அல்லது கலைப் படைப்பின் பகுதி அதன் முழுமையுடன் கொண்டுள்ள உறவை ஒழுங்குபடுத்தும் வல்லமை அல்லது புரிந்துகொள்ளும் தன்மையும் அதில் அடங்கும்.
ஆம், எல்லாமே முழுமை அடைதலைப் பற்றியதே, முழுமை அடையும் உணர்வைப் பற்றியது. அந்த முழுமையே எழுதுவதின் ஆன்மா. செய்தியானது மௌன மொழியின் முழுமையிலிருந்து வருகிறது. முழுமையே மௌனத்தில் குடிகொள்வதுடன் மௌனத்தை வலியுறுத்தும். இந்த முழுமையை ஏற்படுத்த எல்லாப் பகுதியும் அதற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். அமைதி முழுமையை ஏற்படுத்துவதில் பங்காற்றுவதாக நான் நினைக்கிறேன். இதை ஒரு மனிதன் ஒருபோதும் விழிப்பு நிலையில் (consciously) அடைய முடியாது.
எனவேதான் எதையும் முன்கூட்டி அறிவதையோ திட்டமிடுவதையோ, நான் விரும்புவதில்லை. நான் முயலுகிறேன் அவ்வளவே. ஒன்று, ஐந்து, பத்து எனப் பக்கங்களை நான் எழுதும் பொழுது எல்லாமே ஒரு வகையில் இங்கேயே இருக்கிறது. கூட்டியோ குறைத்தோ அது அப்பொழுது வரையறுக்கப்படுகிறது.
நீங்கள் மரணத்தைப் பற்றி அடிக்கடி சிந்திப்பீர்களா?
இல்லை. நீங்கள் அதன் அருகில் செல்லச் செல்ல, வயது ஆக ஆக அதைப் பற்றிச் சிந்திப்பது குறைவதாக நான் நினைக்கிறேன்.
சிசுரோ(Cicero) தான் தத்துவம் இறப்பதை கற்றுக் கொள்ளும் ஒரு வழி என்று கூறியதாக நினைக்கிறேன். இலக்கியம் கூட மரணத்தைக் கற்றுக்கொள்ளும் வழி என நான் எண்ணுகிறேன். அது எவ்வளவுக்கு வாழ்வைப் பற்றியதோ அவ்வளவுக்கு மரணத்தையும் பற்றியது. உயர்ந்த இலக்கியம் அல்லது கலையுடன் இது தொடர்புடையதாக நான் கணிக்கிறேன். நீங்கள் படைக்கும் பொழுது கலை உயிருடன் இருக்கிறது, பின்பு அதை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய ஒரு வாசகர் இருக்கிறார். ஆனால் ஒரு பொருளாக அது இறந்துவிடுகிறது ♦
(Fjord-செங்குத்தான மலைகளுக்கிடையில் காணப்படும் நீண்ட ஒடுக்கமான கடல்)
மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணலுக்கான சுட்டி.
படைப்பாளர்:
அலீனா நாதன்
வாசிப்பின் மீது கொண்ட பேரார்வமே இவரை எழுதத்தூண்டியது. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படித்திருந்தாலும், தற்போது வங்கி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். கடல், காப்பி, வான் கோவின் ஓவியங்கள், மார்டினா கோலே, பவுலோ கோயலோவின் எழுத்து, இளையராஜாவின் இசை போன்றவை மிகவும் பிடித்தவை.
Nice. Well written