என் அன்பிற்குரிய லீனா,

ட்ரையரிலிருந்து எழுதிய எனது இரு கடிதங்களும் உனக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். அதிலிருந்து நான் அந்தச் சமயத்தில் அவ்வளவு நிம்மதியாக இல்லை என்பதை உணர்ந்திருக்கலாம். எல்லாமே அங்கு பெரிய அளவில் மாற்றமடைந்து விட்டது. யாரும் ஒரே மாதிரியாக மாற்றமின்றி நீடிக்கவும் முடியாது. எனக்கு முக்கியமாக பாரிஸ் செல்ல வேண்டுமென்ற மனநோய் பீடித்து, உடனே மூட்டை முடிச்சுகளோடு வான் வழியாக பிரஸ்ஸல்ஸ் திரும்பிவிட்டேன். நாங்கள் மீண்டும் சனிக்கிழமை இங்கு நலமுடன் வந்து சேர்ந்தோம். இந்தச் சூழ்நிலை மிகவும் ரம்யமாகவும் வசதியான விடுதியாகவும் ஆரோக்கியமான பகுதியாகவும் இருப்பதாக உணர்ந்து, சமையலறையுடன் கூடிய வீட்டையும் நிர்மானித்துவிட்டோம். கொஞ்சம் செலவு அதிகம்தான்.

இந்தத் தருணத்தில் பாரிஸ் மிகவும் பிரமாதமாகவும் ஆடம்பரமானதாகவும் ஆகிவிட்டது. துரதிருஷ்டவசமான ஜூன் 13-ல் தங்கள் தரப்புக்கு கிடைத்த புதிய வெற்றிகளுக்குப் பிறகு, முதலாளிகளும் உயர்தர வர்க்கமும் மிகவும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள். 14-ம் தேதி இத்தனை காலங்களாகப் பதுங்கி இருந்த குழிகளிலிருந்த அத்தனை ஆயுததாரர்களும் தவழ்ந்து வெளிவந்து தங்கள் வாகனங்களுடன் வெளியேறியதால், அழகாகவும் பிரம்மாண்டமாகவும் மிளிர்கிறது. பாரிஸ் மிகவும் அழகான நகரம். கடந்த சில நாட்களாக நீ இங்கு என் அருகில் இல்லையே, இந்த அற்புதத்தையும் அழகையும் நீயும் அனுபவிக்கலாமே என அடிக்கடி எண்ணிக்கொண்டே, உயிரோடடமான மனிதர்கள் நிறைந்த இந்த வீதிகளில் வலம் வந்தேன். நாங்கள் இங்கு நிரந்தரமாகக் குடியமர்ந்ததும் நீ அவசியம் இங்கு வந்தால் இந்த அழகின் பிரமிப்பை நீயே உணர்ந்துகொள்ளலாம்.

Jenny Marx And Jenny Von Westphalen. Karl Marx Daughter And Wife. (Photo by: Marka/Universal Images Group via Getty Images)

ஆகஸ்ட் 15 வரை நாங்கள் இங்கு விடுதிகளில் தங்க வேண்டியதுள்ளது. இது எங்கள் தகுதிக்கு மீறிய ஆடம்பரமானதாக இருப்பதால் நீண்ட காலத்திற்குத் தங்கிவிட முடியாது. பாஸ்ஸி என்ற அழகான ஊர் இருக்கிறது. பாரிஸிலிருந்து ஒரு மணிநேரப் பயணத்தில் செல்ல முடியும். அங்கு எங்களுக்கு அருமையான முழு காட்டேஜ் கொடுக்க முன்வந்தார்கள். தோட்டம், ஆறிலிருந்து பத்து அறைகள், அழகான இருக்கை விரிப்புகள் போன்ற வசதிகளுடன், நான்கு படுக்கை அறைகளுடன், அதுவும் நம்ப முடியாத

வெறும் பதினோறு டாலர் மாத வாடகையில். இந்த வசதி மிகவும் அதிகம். பாஸ்ஸி தொலைவில் இல்லையென்றால் நாங்கள் உடனடியாக அங்கே குடிபெயர வேண்டும்.

இன்னும் எங்கள் உடமைகளை எல்லாம் அங்கு அனுப்ப வேண்டுமா என நாங்கள் முடிவு செய்யவில்லை. அதனால் நான் மேலும் உன் அன்பையும் உதவியையும் நாடி மீண்டும் தொடர்பு கொள்ள நேரிடும். என் உடமைப் பெட்டி தயாரிப்பாளர் அன்சனையும் ஜோஹனையும் உன்னால் சந்திக்க முடியுமா? எவ்வளவு கனசதுர பெட்டி! அதிலும் பெட்டி எண் 4-ல் அத்தனையும் புத்தகங்கள். அந்தப் பெட்டிக்கும் அதை அனுப்பி வைக்கவும் ஒரு கன அடிக்கு கோலோனிலிருந்து பாரிஸ் அனுப்ப என்ன செலவாகும்? இந்த விபரம் கிடைத்தால் எங்களுக்குச் செலவு குறித்து திட்டமிட ஏதுவாகும். குளிர்காலம் துவங்குமுன் பெட்டிகளில் உள்ள லினன் துணிகள் எல்லாம் எடுத்து அனுப்ப வேண்டியிருக்கும். மேலும் விபரங்களை நான் விரைவில் உனக்கு தெரியப்படுத்துகிறேன். ஜோஹன் இந்த வேலையில் உனக்குப் பல வழிகளில் உதவமுடியும்.

ஆகஸ்ட் இறுதிக்குள் எங்கள் சாமான்கள் எல்லாவற்றையும் இப்பொழுது உள்ள இடத்திலிருந்து மாற்றியாக வேண்டும். ஒருவேளை ஜோஹனுடனோ அல்லது ஃபாலன்பாச்சிடமோ இவற்றை குறைந்த விலையில் மூட்டை கட்ட ஏதாவது வழி இருக்கிறதா என நீ கேட்டுப் பார்க்கலாம். இது மிகவும் தளர்ச்சியடையக்கூடிய வேலைதான். ஆனாலும் நாங்கள் எங்களை நிலைநிறுத்திக்கொள்ள இப்படி அலைந்து திரியும்போது தவிர்க்க முடியாததுமாகிவிட்டது. நான் உன்னிடம் இப்படிக் கூடுதல் சுமை கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். மேலும் நீ இந்த வேலையில் பேரம் பேசி முடித்துவிட முடியும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். அடுத்து நீ எழுதும் அன்புக் கடிதம், பெர்த்தாவுடன் இணையப் போகும் திருமணம் குறித்ததாகத்தான் இருக்கும். இந்த நாள் ஏற்கெனவே கழிந்து விட்டதா அல்லது இனிமேல்தான் வர இருக்கிறதா? என் அன்பான வாழ்த்துகளையும் அவள் வாழ்க்கையில் மேலும் வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் பெற நான் வாழ்த்துவதாகவும் தெரிவிக்கவும். என் விருப்பமெல்லாம் உங்களை மகிழ்ச்சிகரமாக வைத்திருக்கும் சக்தியை எனக்கு அளிக்க வேண்டும் என்பதுதான். அதைவிடவும் மேலாக என் அன்பான லீனா, உங்களையெல்லாம் நான் சந்திக்க விரும்புகிறேன். மிகவும் குதூகூலத்துடனும் உங்களுக்கே உரிய மகிழ்ச்சியுடனும் வாழ வைக்கவே விரும்புகிறேன். ஏற்கெனவே பல துயரங்களும் எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட ஏமாற்றங்களும் உங்கள் வாழ்க்கையின் இளமைக்காலத்தில் இருள்சூழ்ந்துவிட்டது.

நான் இன்று அரசியல் குறித்து எதுவும் எழுதப் போவதில்லை. இந்தக் கடிதத்திற்கு என்ன நேருமோ சொல்ல முடியாத சூழ்நிலை. என் அன்புக் கணவர் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், உன்னால் ஸ்டெயின் மூலமாகவோ அவர் தாயின் மூலமாகவோ நியூமார்க்கெட்டில் உள்ள வட்டிக்கடைகாரரின் முகவரியைக் கண்டுபிடித்து, விலை மதிப்பாளர் ஜங்கிடம் இத்துடன் இணைத்துள்ள கடிதத்தைச் சேர்த்துவிட முடியுமா? இந்த வேலை மிகவும் அவசரமானது. இந்தக் கடிதங்களை இலவசமாக அனுப்பும் அலுவலகம் மூலம் அனுப்ப முடியவில்லை. அந்த அலுவலகம் மிகத் தொலைவில் உள்ளது. நீயும் இந்த அலுவலகம் மூலம் கடிதங்களை அனுப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். உண்மையில் ஒரு கணக்கு நோட்டில் என் சார்பாகச் செலவு செய்வதை எழுதி வரவும். நீ கண்டிப்பாக கணக்கைப் பராமரிக்கவில்லையென்றால் நான் கடினமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

குழந்தைகள் தங்களது அகலக்கண்களைத் திறந்து இந்த அதிசயங்களையெல்லாம் சில நேரம் காண்கின்றனர். அடிக்கடி அவர்கள் அன்பு அத்தை லீனா பற்றி முணுமுணுத்து தங்கள் அன்பைத் தெரிவிக்கின்றனர். அதே போல்தான் லென்ச்சனும் எப்போதும் செய்கிறான்.

என் அன்பை உன் சகோதரிகள் ரோலண்ட், எஸ்ச்வெயிலர் இவர்களைச் சந்திக்க வாய்ப்பிருக்கும்போது தெரிவிக்கவும்.

என்றும் உன்

ஜென்னி

படைப்பாளர்:

சோ. சுத்தானந்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்கி, தொழில்முறைப் பயணமாக இந்தியா முழுவதும் சுற்றியவர். பல நிறுவனங்களை உருவாக்கியவர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். எல்.ஐ.சி. முகவர்களுக்கான லிகாய் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இவ்வமைப்பின் முதல் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டவர். அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ்காரராக இருந்து, பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டவர்.

வாழ்க்கையே ஒரு பயணமாக இருந்தாலும், தான் மேற்கொண்ட சில பயணங்கள் மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களை ‘பயணங்கள் முடிவதில்லை’ என்கிற நூலாக எழுதியிருக்கிறார் சுத்தானந்தம். இதில் அவருடைய கிராம வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, இயக்க வாழ்க்கையின் சில பகுதிகளை அறிந்துகொள்ளலாம்.