அறுவை சிகிச்சைக்கு முன்பு, “இடது மார்பகத்தை வெட்டி எடுத்துவிடுவோம். அது தொடர்பாக இருக்கும் நிணநீர் நாளங்கள், அது உற்பத்தியாகும் இடம், அதன் சுரப்பிகள் அனைத்தையும் வெட்டி எடுத்து, இருபுறமும் இழுத்து வைத்துத் தைத்துவிடுவோம். உயிர் காப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை இது. அதன் விளைவாக ஏற்படும் சின்ன விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். இடது மார்புக்கூட்டின் மேல் ஒரு மெல்லியத் தோல் மட்டும்தான் ஒட்டிக்கொண்டிருக்கும். கவனமாக மற்றவர்கள் இடித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நரம்பு இல்லாததால் வலி வேறு தெரியாது. பெக்டோரளிஸ் மைனர் தசையை வெட்டியதால் நீங்கள் இடது கையைத் தூக்க முடியாது. அதனைத் தூக்க இன்னொரு கையின் துணை வேண்டும். அதனால் வீட்டுக்குப் போனதும் கையைத் தூக்கி எக்சர்சைஸ் செய்யுங்க. அப்பதான் இடப் பக்கத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமா உணர்வு வரும். கையையும் இயல்பாகத் தூக்க முடியும்” என்றார் டாக்டர் கார்த்திகேஷ் .

குளிக்கும்போது இடது கையைத் தூக்கிப் பார்த்தேன், முடியவில்லை. ஆபரேஷன் முடிந்து ஆறு நாட்களுக்குப் பின், டாக்டர் வந்து தையல் பிரிக்கும்போது வலிக்கும் என்று சொல்லிக்கொண்டே பிரித்தார். எனக்கோ வலியே இல்லை. மார்பகம் இருந்த பகுதியைப் பார்த்தேன். அதுவரை இல்லாத கலக்கம் எட்டிப் பார்த்தது. உடைந்துவிடக் கூடாது என்ற எண்ணம் வந்ததும், ‘ஒரு பக்க மார்பகம்தான் இல்லை, உயிர் இருக்கிறதே’ என்று எனக்கு நானே நம்பிக்கையளித்துக் கொண்டேன். அக்குளைப் பார்த்தேன், ஓர் அங்குல ஆழம் இருந்தது. மீண்டும் கலக்கமாக இருந்தது. மீண்டும் என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.

டாக்டர் கார்த்திகேஷ் அறுவை சிகிச்சைக்குப் பின் 6 வேதிசிகிச்சை (கீமோதெரபி) கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இப்போது வேதிசிகிச்சை முடிந்து கதிர் சிகிச்சை (Radiotherapy) புற்றுநோயின் தன்மையைப் பொறுத்து கொடுக்கப்படுகிறது. எனக்கு வேதிசிகிச்சை மட்டும்தான் அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் டையரியை மறக்காமல் எழுதினேன். தினமும் காலை, மாலை இருவேளை நடந்தேன். படித்தேன். கட்டுரைகள் எழுதினேன்.

எனக்கு கவுன்சிலிங் கொடுக்க ஒரு மருத்துவரை அனுப்பினார்கள். அவர் நான் இருந்த நிலைமையையும், சூழலையும் பார்த்துவிட்டு, ‘நீங்க நாலு பேருக்கு கவுன்சிலிங் கொடுப்பீங்க போலிருக்கு. நான் வர்றேன்’ என்று கிளம்பிவிட்டார். பொதுவாகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரொம்பவும் மனம் தளர்ந்து, சோர்வாக, பிடிப்பில்லாமல், வேதனையுடன் இருப்பார்கள். அதனால்தான் இந்த கவுன்சிலிங் ஏற்பாடு.

கீமோதெரபி

வேதிசிகிச்சை என்றால் மூன்று மருந்துகளைச் சேர்த்துக் கொடுப்பார்கள். 21 நாட்களுக்கு ஒரு முறை வேதிசிகிச்சை கொடுக்கப்படும்.

கீமோதெரபி மருந்துகள் புற்றுநோய் செல்களை அழிக்கவே கொடுக்கப்படும். அவை வெவ்வேறு வழிகளில் செயல்படும். பல்வேறு வகையான கீமோ மருந்துகள் உள்ளன. இருப்பினும், அனைத்து கீமோ மருந்துகளும் புற்றுநோய் போன்று வேகமாக வளரும் செல்களைக் கொல்லும். அப்போது நம் உடலில் புதிதாக உருவாகும் செல்களையும் கொன்றுவிடும். இதில் வெவ்வேறு மருந்துகள் புற்றுநோய் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களைக் குறிவைக்கின்றன. வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எல்லாருக்கும் ஒரே வகையான கீமோதெரபி மருந்துகள் கொடுக்கப்படுவது இல்லை. அவரவருக்கு ஏற்படும் புற்றுநோய் வகை, நிலை குறித்தே கொடுக்கப்படுகின்றன. அதனால்தான் புற்றுநோயாளிகளுக்கு வேதிசிகிச்சையின் போது நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

ரத்த செல்களில், ரத்தச் சிவப்பணுக்களின் வாழ்நாள் 120 நாட்கள். வெள்ளையணுக்களின் வாழ்நாள் 7-14 நாட்கள். வேதிசிகிச்சை மருந்துகள் புதிதாக உருவாகும் அனைத்து செல்களையும் கொன்றுவிடும். எனவே வேதிசிகிச்சை எடுத்து முடித்ததும், அந்தப் புற்றுநோயாளியின் ரத்தம் குறைவாக இருக்கும். அதாவது அவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவும், ரத்த செல்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். அதனால் புற்றுநோயாளி நன்கு சாப்பிட வேண்டும். ஆனால், சாப்பிட முடியாது. உணவுப் பாதை புண்ணாக இருக்கும். காரம், புளிப்பு, மசாலா எதுவும் சாப்பிட முடியாது. தலைமுடி, நகங்கள் யாவும் இறந்த செல்கள், எனவே, இவையும் புதுப்பிக்க முடியாமல் முடி முழுவதும் கொட்டிவிடும். நகம் நிறம் மாறி கழன்று விழும்.

முதல் வேதிசிகிச்சை

காயம் ஆறி இருந்தால் மட்டுமே வேதிசிகிச்சை தரப்படும். அதனை எப்படிக் கொடுப்பார்கள் என்று நோயாளிக்குச் சொல்லப்படும். 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மருந்தைப் போட்டுக்கொண்டால், பிரச்னைகள் குறைவாக இருக்கும். ரத்தம் குறையாது. முடி கொட்டாது என்று சொன்னார்கள்.

என் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதால், 6 ஆயிரம் ரூபாய் மருந்தை மட்டும் எடுத்துக்கொள்ளச் சொன்னார் டாக்டர் நளினி. முதல் வேதிசிகிச்சை தொடங்கப்பட்டது.

நர்ஸ் வந்தார், “ஒரு ஊசி போடுவோம். உடலெல்லாம் ஒரு நிமிடம் சூடாகும். பற்றி எரிவது போல் இருக்கும். பயப்பட வேண்டாம்” என்றார். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஊசி போட வேண்டும்.

அறுவை சிகிச்சை எந்தப் பாக்கம் செய்யப்பட்டதோ அந்தப் பக்கம் ஊசி போடவோ ரத்தம் எடுக்கவோ கூடாது. வேதிசிகிச்சை தொடங்கியதும் உடல் முழுவதும் தாங்க முடியாத அளவுக்கு உஷ்ணம் அதிகரித்தது. பின் குறைந்தது.

“வாந்தி வந்தால்,சொல்லுங்கள், இந்த மாத்திரை சாப்பிடுங்கள்” என்றார் நர்ஸ். முன்பே டாக்டர் வேதிசிகிச்சையின் போது வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். தாக்குப் பிடித்துக்கொள்ளுங்கள், மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பாட்டில்கள் மூலம் மருந்துகள் செலுத்தப்பட்டன. வேதிசிகிச்சை 6 மணிநேரம் நீடிக்கும் என்பதால், இதன் ஊடேயும் புத்தக வாசிப்பு தொடர்ந்தது. வயிற்றைப் புரட்டியது. உடலுக்குள் செல்லும் மருத்து நிறுத்தப்பட்டது. வாந்தி எடுத்தேன். வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. ஆறு மணி நேரம் இந்த நரக வேதனை தொடர்ந்தது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கான வலுவான கீமோதெரபி மருந்துகளில் ஒன்றாக டாக்ஸோரூபிசின் (Doxorubicin) என்கிற மருந்து கருதப்படுகிறது. இது புற்றுநோய் செல்களை அவற்றின் வாழ்க்கை சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் கொல்லும். மேலும் இது மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமல்ல, பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. டாக்ஸோரூபிசின் தெளிவான, பிரகாசமான கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதால், ‘சிவப்பு பிசாசு’ என்றும் அழைக்கப்படுகிறது, எனக்கு இதுவும் வேறு இரண்டு மருந்துகளும்தாம் கொடுக்கப்பட்டன.

இந்த மருந்து கொடுக்கப்பட்ட 2 நாட்களுக்குச் சிறுநீர் சிவப்பு நிறமாக இருக்கும். இது தற்காலிகமானது. கடுமையான குமட்டல், வாந்தி, முடி உதிர்தல் போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். டாக்ஸோரூபிசின் சிகிச்சைக்கு முன், பின் மருத்துவர் இதயத்தைக் கண்காணிப்பார். நோயாளிகள் பொதுவாக ஒவ்வொரு 21 முதல் 28 நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுழற்சியில் ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், அவரவர் தன்மை, நோயின் நிலை பொறுத்து வேறுபடலாம்.

டாக்ஸோரூபிசினின் பக்க விளைவுகள்

* குமட்டல், வாந்தி கடுமையானதாக இருக்கலாம்.

* முடி உதிர்தல் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வளரலாம்.

* வயிற்றுப்போக்கு

* வீங்கிய வாய், வாய் புண்கள்.

* பசியின்மை

* மூச்சுத் திணறல்

* சோர்வு, தீவிர சோர்வு

* குறைந்த பிளேட்லெட்டுகள்

* ரத்தத்தில் குறைந்த வெள்ளை ரத்த அணுக்கள். இது தொற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.

(இன்னும் பகிர்வேன்)

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.