வாணியின் கணவர்
மூன்று உண்மைக் கதைகளையும் பார்த்தோம். முதல் கதையில் வாணியின் கணவர் செய்த பிழை என்ன? வேலைக்குச் செல்லாத, வேறேதுவும் பொருளாதார பலம் இல்லாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்போது, அவளுக்கும் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் முழு பொருளாதாரப் பாதுகாப்பைக் கொடுப்பது தனது முக்கியமான அடிப்படைக் கடமை என்ற பொறுப்புணர்வு இருந்திருக்க வேண்டுமா இல்லையா?
சரி, எல்லோரும் மனிதர்கள்தான். ஏதோ ஒரு சூழலில், சற்று அதீதமான குருட்டு நம்பிக்கையில், அதிகம் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதித்துவிடலாம் என்ற ஒரு தவறான நம்பிக்கையில் அகலக்கால் வைத்துவிட்டு விழிபிதுங்கி நிற்போம்தான். மாத சம்பளத்தைச் சார்ந்திருக்காமல் இப்படி சுயமாய் தொழில் செய்யும்போது தங்கள் குடும்பப் பாதுகாப்புக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைத்துக்கொள்வது மிக அவசியம். சரி, அதையும் செய்யவில்லை, அவர் தன் மனைவியிடம் பொறுமையாய் உட்கார்ந்து பேசியிருக்கலாமில்லையா? என்ன செய்வது இந்த இக்கட்டான சூழலிலிருந்து மீள்வதற்கு என்று அவர் ஆலோசனை கேட்டிருந்தால், அவளே இந்த வீட்டை விற்றுக் கடனை அடைத்துவிடலாம் என்று சொல்லியிருப்பாள். குடித்து, நாசமாகி, இன்னொரு மூன்றாவது நபர் அவர்களது உறவுக்குள் வந்த பிறகு அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது இல்லையா?
பொதுவாகவே திருமணத்தை மீறிய உறவுகளில் பெண்கள் நுழைவது ஆறுதல் தேடுதலில்தான் தொடங்குகிறது. நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் தன் கணவன் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளால் பெரும் பொருளாதாரப் பிரச்னைகளை சந்தித்து அவமானப்படும்போதும் குடி, போதை பழக்கங்களுக்கு அவன் உள்ளாகி தன்நிலையில்லாதபோதும், சுயதிருப்தியற்ற நிலையில் ஆண்கள் தங்கள் மனைவியை அசிங்கமான வார்த்தைகளால் பேசியும் அவமானப்படுத்தும் செயல்களில் இறங்கும்போதுதான் அவள் இன்னொரு உறவை நாடுகிறாள்.
பிறந்த வீட்டு உறவுகள் பலமாக அமைந்திருக்கும் பெ ண்கள் அவர்களிடம் அடைக்கலம் தேடுவார்கள். அப்படி அமையாதவர்களோ அல்லது தங்கள் பிரச்னைகளை அங்கே வெளிக்காட்டிக்கொண்டால் அது தங்களுக்குத்தான் அவமானம் என்று நினைக்கும் பெண்களோ ஒரு நம்பிக்கையான துணையிடம் ஆறுதல் தேடுவார்கள். அந்தத் துணை ஆணாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக அது அடுத்தக்கட்டமான காதல், காமம் என்ற படிகளை நோக்கி செல்லத்தான் செய்யும். சிலர் தங்களது பிரச்னைகள் முடிந்தவுடன் அந்த உறவிலிருந்தும் வெளியே வந்துவிடுவார்கள். பலருக்கும் அப்படி நேராது. வாணிக்கு நிகழ்ந்ததுபோல், ஒரு கட்டத்தில் அவர்களது அடிப்படைப் பிரச்னை என்னவோ, ஆரம்பப் புள்ளியென்னவோ அது மாறிவிடும், மறைந்துவிடும். ஆனால், அந்தப் பிரச்னைக்கான குறுகிய காலத் தற்காலிகத் தீர்வாகத் தாங்கள் தேடிப்போன அந்தப் புதிய உறவு அப்படியே நிலைத்துவிடும். அந்த உறவு கணவருக்குத் தெரிய வரும்போது, அது ஏன் ஏற்பட்டது, அதற்குத் தான் எந்த விதத்தில் காரணம் என்பதையெல்லாம் மறந்துவிட்டு, பழி முழுவதையும் அந்தப் பெண்மேல் சுமத்தி தான் தப்பித்துக்கொள்வான். அதனால் அங்கு ஏற்படும் ரணங்கள் ஆறாத வடுக்களாய் நிலைத்துவிடும்.
வாணியின் கணவர் நிதானமாய் அந்தப் பணப் பிரச்சினையைக் கையாண்டிருந்தால், தனக்கேற்பட்ட பொருளாதார வீழ்ச்சி தங்கள் பாலுறவு வாழ்க்கையில் எந்த பங்கமும் ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொண்டிருந்தால், எப்படி அவள் தடம் மாறிப்போயிருப்பாள்? விரிசல் விழாமல் ஒரு உறவை சரியாகப் பாதுகாத்துக் கொள்ள ஓரிரு வருடங்கள்கூட முயற்சி செய்வதில்லை . கால முதலீடும், கவன முதலீடும் செய்வதில்லை . ஆனால், அது கை மீறிப்போன பிறகு காலம் முழுவதும் அழுது கொண்டிருக்கத் தயாராயிருக்கிறார்கள். நம் சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் இந்த மனநிலையை, நாம் மனநலக்கோளாறு அல்லது பிறழ்வு என்று சொல்வதைத்தவிர வேறெப்படி அழைக்கமுடியும்?
பத்மாவின் கணவர்
அந்தப் பிரச்னைகளுக்கு முன் பத்மாவின் கணவர் நிதானமானவராகத்தான் இருந்தார். அது போன்ற கணவன் வாய்க்கப்பட்ட பெண்கள், செலவுக்கென்று கணவன் கொடுக்கும் பணத்தில் தங்களால் முடிந்த அளவு கொஞ்சம் சேமிக்கலாம். கணவனது தொழில் ஒருபுறமிருந்தாலும், தாங்களும் வீட்டிலிருந்தபடியே ஏதாவது வேலை செய்து இரண்டாவது வருமானத்திற்கு வழி செய்யலாம். ஒருவேளை படித்த பெண்களாயிருந்தால், அல்லது திருமணத்திற்கு முன்பு வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்களாயிருந்தால், இக்கட்டான பொருளாதார சூழல் வரும்போது மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கலாம்.
அதுவரை அப்படிப்பட்ட எண்ணமே இல்லாத ஒருத்தியைக்கூட இவ்வாறு தடம் புரளச் செய்வது யார்? “அவன் அப்படி கேட்டா, நீ அப்படி செஞ்சுருவியா…? உடனே இன்னொருத்தனைத் தேடிப்போயிருவியா?” என எகத்தாளமாக சில பெண்களே கேள்வி கேட்பார்கள். “உன் கணவர் அப்படி சந்தேகப்பட்டு சித்திரவதை செய்யும்போது நீ என்ன செய்கிறாய் என்று பார்ப்போம்…” என்று கூறி நகர்ந்துவிடுங்கள். குறிப்பாக சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அப்பாவிப் பெண்களிடம் இப்படி கால்மேல் கால் போட்டுக்கொண்டு தாங்கள் ஏதோ எல்லாம் அறிந்தவர்கள்போலக் கேள்வி கேட்கும்போது கோபமாய் வரும். கூனிக் குறுகி பாவமாய் தலை குனிந்து உட்கார்ந்திருக்கும் அந்தப் பெ ண்களைப் பார்க்கும்போது பரிதாபமாகயிருக்கும். இத்தகைய ஒரு சார்பான கேள்விகள், ஒரு பிரச்னையை முழுமையாக அதன் எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராயாமல் எழுப்பப்படும் கேள்விகள் எவ்வளவு மடத்தனமானவை தெரியுமா? இத்தகைய மனமுதிர்ச்சியற்றக் கேள்விகளை யாரிடமும் கேட்காதீர்கள். உங்கள் வாழ்க்கையில் அத்தகைய பிரச்னையான தருணங்கள் வரவில்லை என்றாலும் உங்களுக்கு அந்த சூழலில் இருப்பவர்களின் வலி புரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு ஒரு புரிதலுள்ள கணவரும், குடும்பமும் வாய்த்திருக்கிறது என்பதால் நீங்கள் தடம் மாறிப்போகும் சூழல் ஒருவேளை ஏற்படாமலிருந்திருக்கலாம். ஆனால், உங்களுக்கு நேர்மாறான ஒரு நிலையில் வாழும் பெண்ணுக்கு, அடிப்படைக் கல்வி அறிவு கூட இல்லாத ஒரு பெண்ணுக்கு, சிறிதும் மனோபலமற்ற ஒருத்திக்கு அது எப்படி சாத்தியமாகும்…?
மேலே குறிப்பிட்டது போல், உங்கள் கணவராலும் பிரச்னை , வேறு போக்கிடமும் இல்லை எனும்போது தயவுசெய்து ஒரு தனிநபர் உதவியை நாடுவதை விட, பெண்களுக்கென்றிருக்கும் சேவை மையங்களை நாடுங்கள். இலவச குடும்ப நல ஆலோசனை கொடுப்பது முதற்கொண்டு, உங்கள் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும்வரை , தேவைப்பட்டால் நீங்கள் தங்கிக்கொள்வதற்கான வசதிகூட செய்துதருகிறார்கள். திருமணத்தை மீறிய உறவுகளில் பெண்களின் பிரச்னைகளுக்குத் தற்காலிகத் தீர்வாக வரும் ஆண்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால், பெரும்பாலும் அவர்கள் சிறிது காலத்திலேயே வேறொரு பெ ண்ணைத் திருமணம் செய்து கொள்வதைத்தான் விரும்புவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களே உங்களை மணமுடிக்க நினைத்தாலும் அவர்கள் குடும்பமும், சுற்றமும் அதை அனுமதிக்காது. “இப்பத்தான் உனக்கு உன் குடும்பம் கன்ணுக்குத் தெரியுதா? எங்கூட படுக்கும்போது தெரியாதா…?” என்றெல்லாம் ஒரு திருமணமாகாத பெண்ணைப்போல் நீங்கள் நியாயம் கேட்கமுடியாது.
இப்போதெல்லாம் திருமணமாகாத பெண்களேகூட அப்படியெல்லாம் கே ட்க முடியாது. ஏனென்றால், இருவரும் மனமுவந்து செய்யும் ஒரு செயலுக்கு அந்த ஆணை மட்டும் குற்றம் சாட்டமுடியாது. “அவன் கூட உனக்குக் கல்யாணம் ஆகலேன்னு உனக்குத் தெரியும்லமா? அப்புறம் ஏன் அவன்கூட எல்லாம் செஞ்ச …?” என்று அந்தப் பெண்ணைத்தான் கேள்வி கேட்பார்கள்.
பெ ண்களுக்குத் திருமணமான பிறகு அவர்கள் இவ்வாறு மணமாகாத ஒரு ஆணுடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும்போது கண்டிப்பாக அது ஒரு நீண்ட கால உறவாகத்தொடர சாத்தியமில்லை என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களது உணர்வுகளை அந்த ஆணிடம் எந்தளவிற்கு முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு மனத்துன்பமும் அவமானமும் அடைவீர்கள். உடலுறவில் ஈடுபடும்போது கண்டிப்பாக அந்த ஆண் உங்களுடன் காலம் முழுவதும் வருவேன் என்று கதை சொல்லத்தான் செய்வான். உன்னுடனான காமம் மட்டும்தான் என் தேவை , அது முடிந்ததும் நான் உன்னைக் கழற்றி விட்டுவிடுவேன் என்று அவன் சொல்லப்போவதில்லை … அப்படிச் சொன்னால் பெரும்பாலான பெண்கள் அதற்கு உடன்படமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆண்கள் அப்படிச் சொல்லாவிட்டாலும் பெண்கள் ஒன்றும் அதைப் புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு முட்டாள்கள் இல்லை . வெளிப்படையாக அவன் அப்படி ஒப்புக்கொள்ளாவிட்டலும், அப்படித்தான் அவனது மன ஓட்டமிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இணைவதற்கு முன்பே இந்த உறவு விரைவில் பிரியக்கூடியது, தற்காலிகமானதுதான் என்பதை உணர்ந்த, அப்படி நிகழும்போது அதை எதிர்கொள்ளக்கூடிய ஏற்றுகொள்ளக்கூடிய மனப்பக்குவம் உங்களிடம் இல்லை என நீங்கள் உணர்ந்தால், அப்போதே அதிலிருந்து வெளியே வந்துவிடுங்கள். தயவு செய்து அந்த ஆணுடன் கலவியில் ஈடுபடாதீர்கள். காமம் என்பது திருமண உறவில் எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு குடும்பம் என்ற அமைப்பிலிருக்கும் பாதுகாப்பும் மிக முக்கியம். நீங்கள் அப்படியொரு பாதுகாப்பு வட்டத்திலுமிருந்து கொண்டு, திருமணத்தை மீறிய உறவிலும் ஒரு ஆணின் ஆறுதலையும், கலவி இன்பத்தையும் பெற்றுக்கொண்டு அதில் ஈடுபடும் அந்த ஆண் மட்டும் தனக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்று நினைப்பது சுயநலம்.
சில ஆண்களும் இவ்வாறான சுயநலத்தன்மையுடன் செயல்படுகிறார்கள்தான். நான் இல்லையென்று சொல்லவில்லை. தனக்கென்று மனைவி,குழந்தைகள், குடும்பம் என அனைத்தையும் வைத்துக்கொண்டு, தன் மனைவி மீது ஏதாவது ஒரு குறை சொல்லி திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் ஆண்கள் அந்தப் பெண், தான் திருமணம் செ ய்துகொண்டு வாழப்போகிறேன் என்று சொல்லும்போது அதை அனுமதிப்பதில்லை . அவள் காலம் முழுவதும் இந்த திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டிருக்கும் ஆணைச் சுட்டிக்காட்டி ‘இவன்தான் என் கணவன்’ என்று சொல்லிக்கொள்ளக்கூட முடியாமல், வாழ்க்கைச் சூழலிலும் சரி, மனதளவிலும் சரி நிம்மதியற்ற, பாதுகாப்பற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறாள். குறிப்பாகத் தங்களுக்கென்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாமல் அந்த ஏக்கத்துடனேயே அவள் வாழ்ந்து மடிகிறாள். இது எவ்வளவு கொடூரமான, சுயநலமிக்க ஒரு ஆதிக்க உணர்வு. இதை ஆண், பெண் இருவருமே செய்யாமலிருப்பதுதான் நல்லது.
பாலியல் இன்பம், புரிந்து கொள்ளல், கணவனின் நடத்தை , பொருளாதாரம், அவனது மனப் பிறழ்வுத்தன்மை… இப்படி ஏகப்பட்டக் காரணங்கள் ஒன்று சேர்ந்து, அவள் எவ்வளவு முயன்றும், விட்டுக்கொடுத்தும் அந்த சூழலை மாற்ற முடியாமல் போகும் நிலையில் வேறு வழியேயில்லையென்றால் சட்டப்படி அந்தக் கணவனை விவாகரத்து செய்துவிட்டு அவள் அந்த நச்சுறவிலிருந்து (Toxic Relationship) வெளியே வந்துவிடுவதுதான் சரி. உன்னை விவாகரத்து செய்யவும் விடமாட்டேன், உன்னுடன் ஒழுங்காகவும் வாழமாட்டேன் என்று குடும்பநல நீதிமன்ற வளாகங்களிலேயே பெண்களைத் துரத்தி துரத்தி அடிப்பவர்களையும் நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு நபரிடம் மாட்டிக்கொண்டிருந்தீர்கள் என்றால், காவல்துறை அல்லது பெண்களுக்கான பாதுகாப்பு மையங்கள் அல்லது சமூக சேவை நிறுவனங்களின் உதவியை நாடுங்கள். சில சமயம், பெண்கள் அவ்வாறு மோசமாக நடந்து கொண்டு அதனால், ஆண்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை நேரிடலாம், அச்சமயங்களில் ஆண்களும் காவல்துறை அல்லது சமூக சேவை மையங்களை நாடுவதுதான் சிறந்தது. ஒரு பாதுகாப்பு அமைப்பின் (support system) துணையும், உதவியுமில்லாமல் நீங்களாகவே இப்படிப்பட்ட சிக்கலான உறவுகளைத் தனியாகக் கையாள முயலாதீர்கள்.
அப்படிப் போராடி சட்டப்படி அந்த உறவிலிருந்து வெளியே வந்த பிறகு, நமக்கும் ஒரு ஆண் துணை தேவை என்ற கட்டாயத்தினடிப்படையில், ஒரு நபரைப் பற்றிஅலசி ஆராயாமல் அடுத்த உறவில் இறங்கிவிடாதீர்கள். அதுவும் உங்களுக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் இப்படியே நீங்கள் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க முடியாது. சமுதாய நிர்பந்தங்களுக்காக எல்லாம் ஒரு முடிவெடுக்காமல், உண்மையிலேயே உங்கள் மீது காதலும், அக்கறையும் கொண்டிருக்கும் ஒரு உறவு வாய்த்தால் மட்டும் மறுமணம் செய்துகொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட நச்சுறவிலிருந்து வெளியே வரும் பெண்களுக்கு திருமணமாகாத துணைவர்கள் அமைந்து, அவர்கள் நல்ல புரிந்து கொள்ளுதலோடு கடைசிவரை வாழ்க்கையை நகர்த்திச் சென்ற சம்பவங்களும் இருக்கின்றன. ஆனால், அவை மிக அரிது. பெரும்பாலும் அந்தப்பெண்கள் மிகுந்த மனோதிடமும், கட்டுப்பாடும் உடையவர்களாக இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகிறது. ‘திருமணம் என்ற உறவுக்குள் வராமல் நெருக்கமான ஒரு வாழ்வியல் முறையை எந்த ஆணுடனும் அமைத்துக் கொள்ளமாட்டேன்’ என்று அவர்கள் திடமாயிருக்கிறார்கள். ஒருவேளை அப்படி ஒரு துணை வாய்த்தால் நல்லது, இல்லாவிட்டால் மிக நல்லது, நான் என் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வேன் என்ற மனநிலையை நான் அத்தகையப் பெண்களிடம் கண்டிருக்கிறேன். அவர்கள் தன்னை நம்பித்தான் இன்னொரு ஆணை மணமுடித்துக் கொள்கிறார்களேயன்றி அவனை நம்பிபயோ, அவனைச் சார்ந்தோ அல்ல.
வாணி மேற்சொன்ன இத்தகைய மனப்போக்குகளை உடையவளாக இருந்திருந்தால், அல்லது அவற்றை வளர்த்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக அந்தத் திருமணத்தை மீறிய உறவில் நுழையாமலிருந்திருக்க முடியும். வாணியின் கணவரும் நான் குறிப்பிட்டுள்ளபடி பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் நடந்திருந்தால் அந்தத் தேவையற்ற பிரச்னையைத் தடுத்திருந்திருக்க முடியும். பத்மாவின் விஷயத்திலிருந்த பெரும்பாலான காரணங்களை நாம் அந்த அத்தியாயத்திலேயே பார்த்துவிட்டோம். அவளது கணவர்போல் தன் மனைவியை இன்னொருவருடன் உறவுகொள்ள அனுமதிக்கும் ஆண்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே தாழ்வு மனப்பான்மை , பொசசிவ்னெஸ் , தன் துணை மீது அதீத உரிமை கொண்டாடுதல், அவள் உறவு வைத்திருக்கும் நபர் மேல் வன்மம், ஆத்திரம், பொறாமை , கோபம், தன்மீதான சுய கழிவிரக்கம் (Self pity) எல்லாம் ஏற்படத்தான் செய்யும். அந்த உணர்ச்சிகளைப் பகிரங்கமாக தங்கள் மனைவி மீது வெளிக்காட்டாமல் தங்கள் மனதுக்குள்ளேயே அடக்கி வைக்க முயலுவார்கள். அந்த அசாதாரணமான உணர்வடக்குதல்களும், பொங்கி வரும் சுய கழிவிரக்கமும்தான், மற்றவர்கள் மீது கோபமாகவும், ஆபாச வார்த்தை களாகவும் இறைக்கப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் பொருளாதாரப் பாதுகாப்புக்காவும், சமூக நிர்பந்தங்களுக்காகவும் மனைவியை ச் சார்ந்திருப்பதால்தான், அவளது திருமணத்தை மீறிய உறவைக் கண்டும் காணாமல் சகித்துக்கொள்கிறார்கள். அனுமதிக்கவும் செய்கிறார்கள். ஆனாலும், கடைசிவரை அவர்களால் அப்படியிருக்க முடிவதில்லை . போகப்போக தங்களைப் பற்றிய தாழ்வுமனப்பான்மையும் அடுத்தவர்கள் பேசும் அவமரியாதையான வார்த்தைகளும் மிகுந்த அவமான உணர்வையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்கின்றன. தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளும் செயல்களை செய்யத்தொடங்கி, பிறகு தங்கள் மனைவியையும் காயப்படுத்தத் தொடங்குகிறார்கள்.
தங்களைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் சாதாரணமானதொரு வாழ்க்கை வாழும்போது, தாங்கள் இச்சமூகத்தின் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருப்பதால் இவர்களே தங்களை வினோதமாகப் பார்க்கத் தொடங்குகின்றனர். பெரும்பாலும் இவர்கள் ஒரு சமூக விரோதச் செயலைச் செய்வதுபோல் பிறரால் பார்க்கப்படுகிறார்கள். அதனால்தான் இத்தகைய வெளியுறவில் ஈடுபட்டிருப்பவர்கள் அடிக்கடி தங்களிடம் பணம் இருக்கிறது, உங்களை விட நாங்கள் வசதியாயிருக்கிறோம் என்று பறை சாற்றிக்கொள்கிறார்கள். சமூகம் இவர்கள்மேல் காட்டும் அந்த எதிர்ப்புணர்வை இவர்களும் பிரதிபலிக்கத் தொடங்கி ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க அச்சமூகத்துக்கே எதிரானவர்களாக மாறிவிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒரு மனப்போக்கு. பத்மாவின் கணவரைப்போல் இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே இவற்றைப்பற்றி யோசித்து இந்த விபரீத முயற்சியைத் தவிர்க்கவேண்டும். உங்கள் மனைவிக்கு இன்னொருவர் துணையாகயிருப்பது எளிது, நல்லது என்று நினைக்காமல், நீங்கள் உங்கள் மனைவிக்கு ஒரு சிறந்தத் துணையாக முயற்சி செய்யுங்கள். பொருளாதாரத் தேவைகளுக்கு முற்றிலும் உங்கள் மனைவியின் சொத்துகளை சார்ந்திருக்காமல், ஏதாவது ஒரு வேலையிலோ அல்லது தொழிலலிலோ ஈடுபடுங்கள்.
இதுபோன்ற வெளிப்படையான உறவுகளில் ஈடுபடுவோர் தங்கள் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஒருவர் மீது மற்றவருக்கு முற்றிலும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுவதால், தங்களது கடை சி நாள்களில் பரஸ்பரம் முகத்தில்கூட விழிக்க முடியாமல் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சுயமரியாதையும் இன்றி தன் துணையிடமிருந்து கிடைக்கும் மரியாதையும் கிடைக்காமல் போகும்போது அவர்களது குழந்தைகளும் தங்கள் பெற்றோரை உதாசீனப்படுத்தத் துவங்குகிறார்கள். இச்சமூகமும் அப்படித்தான் அவர்களை மரியாதையின்றி நடத்தத் தொடங்குகிறது. கௌரவமாய் அவர்களது வாழ்க்கை முடிவதில்லை.
பார்கவியின் கணவர்
பார்கவியின் கதையைக் கேட்ட சிலர் அவளது கணவருக்கிருந்த மனநிலை வேறு நாடுகளில் இருப்பவர்களுக்கு எல்லாம் இல்லையா, வேறு ஊர்களிலெல்லாம் இப்படி இல்லையா..? இங்கு மட்டும்தானா…? என்று கேட்டார்கள். “ஆம். தற்போதைய இந்தக் காலகட்டத்தில், இங்கிருக்குமளவுக்கு வேறெங்குமில்லை” என்று வெட்கத்துடனும் வருத்தத்துடனும்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்களை மனித ஜென்மங்களாகவே மதிக்காத பல பின்தங்கிய நாடுகளைப் பற்றி நான் குறிப்பிடவில்லை . அவற்றைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதீர்கள். சம உரிமை, கலாச்சாரம் என்றெல்லாம் பேசும் நாடுகளிலும் ஊர்களிலும்கூட விவாகரத்துக்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. உறவுகளிலும் திருமணங்களிலும் பிரிவுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால், தன் மனைவியை உதாசீனப்படுத்தி,(Taken for granted Attitude) தன் துணைமேல் அடிப்படை அக்கறைகூட (Basic courtesy) காட்டாத காரணத்தால் பிரிவுகள் ஏற்படுவது இங்குதான் அதிகம்.
ஆண் என்ற தனது அகந்தையை மீறி அவளைத் திருமணம் செய்துகொண்டதினாலேயே அவளுக்குத் தான் வாழ்க்கை கொடுத்துவிட்டோம் என்ற உயர்வு மனப்பான்மையைத் தூக்கியெறிந்து விட்டு, காதலுடன் அவளை நடத்தியிருந்தாரென்றால் பார்கவி கண்டிப்பாக வேறெந்த உறவையும் நாடியிருக்கமாட்டாள். தங்கள் மனைவிக்கு ஏதோ எல்லா விஷயங்களையும் கற்றுக்கொடுக்கும் ஒரு ஆசானாக செயல்படவே திருமணம் செய்து கொள்கிறோம் என்ற எண்ணத்திலிருந்து ஆண்கள் கட்டாயம் வெளியே வந்துதானாக வேண்டும். இருவரும் இணையானவர்கள் என்று நினைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பரஸ்பரம் அனைத்தையும்பகிர்ந்துகொண்டு, கற்றும் பெற்றும் கொள்ளத்தான் திருமணமேயொழிய, ஒருவர் அதிகாரம் செலுத்தி இன்னொருவர் அடங்கிப்போவதற்கல்ல.
சில விஷயங்கள் கணவருக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம், வேறு சிலவற்றில் உங்கள் மனைவிக்கு உங்களை விடத் திறமை அதிகமாயிருக்கலாம். அதை சரியாக இனம் கண்டு யாருக்கு எதில் திறன் அதிகமோ அதை செயல்படுத்த விடுங்கள். கலவியில் சில சமயம் உங்கள் மனைவி ஆதிக்கம் செலுத்த விரும்பினால் அதை அனுமதியுங்கள். அதில் உங்களுக்கும் மகிழ்ச்சிதான் கிடைக்குமேயன்றி எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை . இத்தகைய மனோபாவங்கள் இல்லாமல் இறுக்கமான, ஆதிக்க மனப்பான்மையோடு இருந்ததாலும் எதற்கெடுத்தாலும் ‘தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிடுவேன்’ என்று எச்சரிக்கும் வகுப்பாசிரியரைப் போல், உன் வீட்டில் சொல்லிவிடுவேன்’ என்று மிரட்டியதும் அவளது சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்தன… அதில் வெறுப்படைந்திருக்கும்போது, அவனது சகோதரனிடமிருந்து மரியாதையும், சமத்துவமும் கிடைத்ததே அவளை அவனுடனான உறவுக்குத் தள்ளிவிட்டன.
தற்போதைய காலகட்டத்தில் ஏன் இவ்வாறான காரணங்களால் மிக அதிகமான பிரிவுகள் ஏற்படுகின்றன? காரணம், நாம் ஒரு இரண்டுங்கெட்டான் மனநிலையில் வாழ்வதுதான். இரண்டுங்கெட்டான் கூட இல்லை , அதையும் கடந்து நான்கும்கெட்டான், ஐந்தும்கெட்டான் மனநிலைகளுக்குள் சிக்கிச்சுழன்று கொண்டிருக்கிறார்கள் நம் இளைய சமூகத்தினர். நமது கலாச்சாரம் என்று சொல்லப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுவதா, மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதா, இல்லை புதிதாக நாமே ஒரு எதார்த்த நடை முறை வழிமுறையைக் கண்டுபிடிப்போமா என்றெல்லாம் யோசித்து மூச்சுத் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
நெருக்கமான உறவு என்பது பாலுறவு மற்றும் காமத்தை மட்டும் சார்ந்திருந்தால், உடல் ரீதியிலான பிரச்னைகள் மட்டும் காரணமாய் அமைந்திருந்தால் அவர்களுக்கு ஒரு பாலியல் மருத்துவரால் வழிகாட்ட முடியும். மனம் தொடர்பானதாக மட்டுமிருந்தால் ஒரு மனநல நிபுணர் வழிகாட்ட முடியும். ஆழ்மன எண்ணங்கள் தொடர்பானதாக மட்டுமிருந்தால் ஒரு ஆன்மீக ஆய்வாளர் வழிகாட்ட முடியும். ஆனால், கணவன் மனைவி உறவுகளில் சிக்கல்கள் என்பதே இவையெல்லாம் சேர்ந்து போட்டுத் தாக்கும்போதுதான் ஏற்படுகின்றன. அவ்வாறிருக்கும்போது, அந்தப் பிரச்னையின் முழுமைத் தன்மையை ஆராயாமல், அதில் ஒரு சிறிய துணுக்குக்கு மட்டும் தீர்வு தரும் ஒரு நபரால் எப்படி அந்த உறவை முழுமையாகச் சரிசெய்ய முடியும்? முதலில், எப்படி அவரால் அவற்றைச் சரியாக இனங்காண முடியும்? எடுத்துக்காட்டாக அந்தக் கணவனுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அந்த உடல் பிரச்னையை சரி செய்வதற்கு முன்பே, அவன் மனதளவில் பாதிக்கப்படத் தொடங்குகிறான். அது அவனது உழைக்கும் திறனை பாதிக்கிறது. குடும்ப நிம்மதி போகத் தொடங்குகிறது. இந்த மன அழுத்தத்தால் அவன் உடலில் மன – உடல் சார்ந்த நோய்கள் (Psychosomatic disorders) ஏற்படுகின்றன. இந்த நிலையில் அவனது உண்மையான பிரச்னை எதுவென்று சொல்வீர்கள்?
அல்லது, அவனுக்கிருக்கும் இந்த அனைத்துப் பிரச்னைகளிலும் பெரிய பிரச்னை, தீவிரமான பிரச்னை எதுவென்று சொல்வீர்கள்? ஒரு சங்கிலித் தொடர் போல் தொடர்ந்து ஒன்றின் காரணமாக இன்னொன்று எனப் பிரச்னைகள் அவனுக்குக் கைகோத்துக் கொண்டு வரும்போது எதனால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று அவனுக்கேத் தெரியாது. அவனுக்கே தெரியாதபோது அவன் மனைவிக்கு எப்படித் தெரியும்? அவனே தெளிவாக எதையும் சொல்லாமலிருக்கும்போது ஒரு மருத்துவரால் எப்படி அவனுக்கு முறையாக, சரியான சிகிச்சையளிக்க முடியும்? இதுதான் இன்றைய நமது சமுதாயத்தில் பெரும்பாலும் எல்லாக் குடும்பங்களிலுமிருக்கும் மிகச் சிக்கலானப் பிரச்னை .
ஏழை, பணக்காரர், நடுத்தரக் குடும்பங்கள், பிரபலமாயிருப்பவர்கள், பிரபலமாகாதவர்கள், சமூகத்தில் அதிகாரம் மிக்க இடத்திலிருப்பவர்கள், அப்படியில்லாதவர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் குடும்பப் பிரச்னைகள் எல்லோரது வீடுகளிலும் கும்மியடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சிலர் அவற்றை வெளியே காட்டிக் கொள்ளாமல் நடிக்கிறார்கள், பலர் அப்பட்டமாகக் காட்டிக் கொள்கிறார்கள், அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால், நாம் ஒவ்வொருவரும் ஏதோ நமக்கு மட்டும்தான் இப்பிரச்னைகளிருக்கின்றன என்றும், மற்றவர்களெல்லாம் ஏதோ மகிழ்ச்சியாக வலம் வருவதாகவும் நினைத்துக் கொள்கிறோம். அவர்கள் வெளியே காட்டிக் கொள்ளும் சில நொடி மகிழ்ச்சிப் பதிவுகளை , கற்பனை பிம்பங்களை நிஜமென்று நம்பி, அவற்றோடு நம் சூழலையும் உறவுகளையும் ஒப்பிட்டு நம் வாழ்க்கையை இன்னும் சிதைத்துக் கொள்கிறோமே ஒழிய, உறவுச் சிக்கல்களை சரிசெய்வதற்கான எந்த முயற்சியும் எடுப்பதில்லை .
ஒவ்வொரு குடும்பத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்துபவர்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாதிப்பை ஏற்படுத்தும் சுயநலவாதிகள் அப்போதைக்கு அதிகாரத்துடனும், தன்நிறைவுடனும் வலம் வரலாமே ஒழிய, அந்த நிலை தலைகீழாக மாறும் நேரம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்போது அவர்கள் நிலை குலைந்துபோக நேரிடும் என்பதைப் புரிந்து செயல்பட்டு, தங்களை மாற்றிக்கொள்வது நல்லது. ஒவ்வொரு குடும்பத்திலும் அக்குடும்ப உறுப்பினர்களில் யாரவது ஒருவருக்குத் தெளிவிருந்தாலே , மனக்கட்டுப்பாடு இருந்தாலே, இந்த உறவுப் பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கரையேறிவிடலாம்.
இந்த இடத்தில் நமது கல்வித்திட்டத்தையும் சாடத்தான் வேண்டியிருக்கிறது. பணம் சம்பாதிக்க உதவும் விஷயங்களை ஒரு குழந்தைக்குக் கற்றுத்தர எடுக்கும் முயற்சியில் ஒரு சதவீதமாவது அவன் குடும்பம் நடத்துவதற்குக் கற்றுத்தருகிறோமா என்றால் இல்லை. பல பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மிக ஆவலாய் எதிர்பார்க்கும் இனப்பெருக்க உறுப்பு பாடப்பகுதியை நடத்துவதே இல்லை . அல்லது ஏனோதானோவென்று ஆசிரியர்கள் அப்பாடத்தை வாசித்து முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். மாணவர்களின் முழு வருகைப்பதிவு அன்றிருக்கும், ஆனால் பாடம்தான் நடத்தப்பட்டிருக்காது.
நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எனது பள்ளியில் ஒருநாள் பாலியல் கல்வி சிறப்பு வகுப்பு நடந்தது. வெளியிலிருந்து ஒரு கன்னியாஸ்திரி வந்து அந்த வகுப்பை நடத்திக்கொண்டிருந்தார். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு பாலுறவு விஷயங்களைப் பற்றிய அடிப்படை அறிவியல், உடலியல் விஷயங்களைப் பேசத் தொடங்கி, மதியமும் இதைப்பற்றித் தொடர்ந்து பேசுவோம் என்று சொல்லி உணவு இடைவேளைக்கு எங்களை அனுப்பி வைத்தார். அந்த வகுப்பில் பேசப்பட்ட விஷயங்களைக் கேட்டறிந்த சில ஆசிரியைகள், என்னவோ நடக்கக் கூடாத விஷயம் தங்கள் பள்ளியில் நடந்து விட்டதைப்போல் பதறினர். அந்த கன்னியாஸ்திரியிடம் இதைப்பற்றி நேரடியாகப் பேசவும் முடியாது. என்ன செய்வது என்று கைகளைப் பிசைந்த அவர்கள் மதியம் வகுப்பு தொடங்கும்போது பின்னால் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து கொண்டார்கள். ஏதோ பலான படத்தைத் தணிக்கை செய்யும் அதிகாரிகளைப்போல் அவர்கள் முகம் அவ்வளவு தீவிரமாயிருந்தது. அவர்களின் நோக்கம் புரிந்ததால், அவர்களது அந்தத் தோரணையில் இயல்பாகவும் வசதியாகவும் உணர முடியாததால் பாவம் அந்த கன்னியாஸ்திரியால், இயல்பாக எங்களுடன் பேசமுடியவில்லை. மாணவிகளுக்கும் சந்தேகம் கேட்க பயம்… ஆசிரியர்கள் கூடவே இருப்பதால்... அப்படியே தப்பித்தவறி ஒன்றிரண்டு பெண்கள் எழுந்து கேள்வி கேட்டாலும், “உஸ்…உஸ்…” என்று பாம்பைப் போல் சீறி அவர்களை சந்தேகம் கேட்கக்கூடாதென்று கண்டித்தார்கள். ஏதோ கடனே என்று அந்த கன்னியாஸ்திரி வகுப்பை முடித்துக்கொண்டு கிளம்பினார். இந்த லட்சணத்திலிருந்தால், திருமண வயது வந்த உடனேயே கல்யாணம் செய்துகொண்டு போகும் மாணவிகள் என்ன குப்பை கொட்டுவார்கள்?
என் வகுப்பில் படித்த மாணவிகளுக்கே பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் கல்லூரி இளங்கலை முடிந்ததும்… என அந்த சிறு வயதிலேயே மணம் முடித்து வைக்கப்பட்டது. பெரும்பாலும், அவர்களைவிட பத்து, பதினைந்து வயது மூத்த உறவினர்களுடன்... எப்படி குடும்பம் நடத்தியிருப்பார்கள்? அடுத்த வருடமே சிலருக்குக் கையில் குழந்தை. அவர்களது கணவர்களுக்கு வயதாகிவிட்டதாம். இன்னும் நாள்களைக் கடத்தக் கூடாதாம். தேனிலவுக்குக்கூடச் சென்று வராமல், ஒரு குழந்தையே இன்னொரு குழந்தையைச் சுமந்து கொண்டு நிற்கும். இந்த அடிப்படை விஷயங்கள் எதுவுமே தெரியாததால்தான் பல இளம் பெண்களுக்கு தனது காதலனுக்கு பாலுறவுத் திறனிருக்கிறதா என்பதைக்கூட கணிக்கத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு அவதிப்படுகிறார்கள். இந்தக் காரணத்தினால், திருமணமான மிகச் சில மாதங்களிலேயே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.
மேற்கத்திய நாடுகளில் ஆராய்ச்சிப் படிப்புகளில் Interdisciplinary research முறையில் இரண்டு, மூன்று பிரிவுகளை இணைத்து ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகம். இம்முறையை அங்கு பெருமளவில் வரவேற்று முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஏனென்றால், எந்த ஒரு பிரச்னைக்குமான முழுமையானத் தீர்வு பல துறைகள் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது, பலதுறை நிபுணர்களின் பங்களிப்பும் அங்கு அவசியமாகிறது. குறிப்பாகக் குடும்பப் பிரச்னைகளில்… அதனால் இரண்டு மூன்று துறைகளைச் சேர்த்து ஒரு நபர் ஆராய்ச்சி செய்யும்போது அங்கு வெவ்வேறு துறை சார்ந்தவர்களின் பங்களிப்பும் வழிகாட்டுதலும் கிடைக்கிறது. மருத்துவம், மனோநலம், ஆன்மீகம், வேதியியல், தொடர்புத் திறன் (Communication skills) இப்படிப் பலத் துறைகள் சார்ந்த விஷயங்களின் அடிப்படையில் பிரச்னைகள் ஆராயப்படும்போது அவற்றுக்கானத் தீர்வுகளைக் கண்டறிவதும் சுலபமாகிறது.
ஆனால், நம் ஊரில் Interdisciplinary, multi-disciplinary research ன் மதிப்பை யாரும் உணர்வது இல்லை . சொல்லப்போனால் அது என்னவோ தரம் குறைந்த ஆராய்ச்சி முறை என்பது போன்று ஆராய்ச்சிப்படிப்பை முடித்த பலருமே நினைக்கிறார்கள். எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இது? அப்படி ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடும் போது, சம்பந்தப்பட்ட அந்த இரண்டு, மூன்று துறைகளிலுமே நிபுணர்களாக இருப்பவர்கள் வழிகாட்டிகளாக அந்தக் குழுவில் நியமிக்கப்படவேண்டும். அப்படிச் செய்யும்போது மேற்கத்திய நாடுகளில் அந்நிபுணர்கள் நடந்து கொள்ளும் இணக்கமான முறையுடன் இங்கு செயல்படுவதில்லை . அவன் வந்தால் எனக்காகாது, இவள் வந்தால் நான் வரமாட்டே ன் என்று அடிப்படை நாகரீகமற்ற ஆதிக்க அகங்காரச் சண்டையில் (Ego fights) வழிகாட்டிகள் ஈடுபடுகிறார்கள். இதில் மாணவர்களின் தலைதான் உருள்கிறது. இவர்களின் சண்டையைத் தீர்ப்பதிலேயே ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் மாணவர்களின் சக்தி முழுவதும் வீணாவதால், ஏதாவது ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தங்களுக்குள்ளேயே முணுமுணுத்து மனம் குமுறிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, இதற்கான தீர்வு குறித்து எந்தத் தளத்திலும் யாரும் பேச முற்படுவதில்லை . தாங்கள் பட்டம் பெற்றதும், அந்தக் குமுறல்களையும் காற்றோடு பறக்க விட்டுவிட்டுத் தங்கள் வேலையைப் பார்க்கப்போய்விடுகிறார்கள். பிறகு எங்கிருந்து கிடைக்கும் உறவு சிக்கல்களுக்கான முழுமையான தீர்வு?
திருமணத்தை மீறிய உறவுகள் பாலுறவு பிரச்னைகளுக்கு, உறவுச்சிக்கல்களுக்கு எந்த விதத்திலும் தீர்வாகாது. தனிப்பட்ட அந்த ஆண், பெண் இருவரின் முயற்சிகளும் அந்த திருமண பந்தத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான உணர்வியல் முதலீடும் திறமையான உறவியல் வழிகாட்டி நிபுணர்களும் சிறந்த கல்வி முறையும் மட்டுமே இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வுகளாக அமையும்.
பேசுவோம்…
படைப்பு:
செலின் ராய்
காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர். விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கி, தமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. 53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார். இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.