சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் எப்போதும் குடும்ப நாவல் உலகத்தில் பஞ்சமே இல்லை.

ஆரம்ப அத்தியாயங்களில் சொன்னது போல இங்குள்ள சில எழுத்தாளர்களுக்கு என்று தனித்தனியாக இணையதளங்கள் உண்டு. அத்தளங்களில் நடத்தப்படும் போட்டிகள், போட்டிகளில் எழுத வந்த எழுத்தாளர்கள், அந்தத் தளங்களின் எழுத்தை மட்டும் கண்மூடித்தனமாகக் கொண்டாடும் வாசகர்கள், மீண்டும் மீண்டும் வெற்றி பெறும் டெம்ப்ளேட் கதைகள் என எல்லாவற்றிற்குப் பின்னணியிலும் ஏதாவது ஒரு  சண்டையும் சர்ச்சையும் இருந்து கொண்டே இருக்கும்.

இவர்களின் இந்தச் சண்டைகளில் சரி தவறென்று எதுவும் இல்லை. அவரவருக்குப் பிடித்ததுதான் இங்கே இலக்கியம். நீ எனக்குப் பிடித்ததைக் குறை கூறாதே என்பதே இங்குள்ள வாசகர்களுக்கான நியதி. ஒருவேளை அவர்களுக்குப் பிடித்தமான எழுத்தையோ அல்லது எழுத்தாளர்களையோ விமர்சித்துவிட்டால் விமர்சித்தவரை ஃபேஸ்புக்கில் அடித்துத் துவைத்து விடுவார்கள்.

சில நேரம் இதுவே குழுச் சண்டையாக மாறி ஒரு குழு மற்றொரு குழுவின் மீது சரமாரியாகக் கருத்து தாக்குதல்களில் இறங்கிவிடுவார்கள். இத்தனை உள்ளடி அரசியல்களுக்கு இடையிலும் இலக்கியவாதிகள் குடும்ப நாவல் எழுத்தாளர்களுக்கு எதிராக ஏதாவது கருத்துச் சொல்லிவிட்டால் போதும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும்.

‘ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ய்ய்ங்க’ என்கிற வடிவேலு பாணியில் உள்ளுக்குள்ளேயே அடித்துக் கொண்டிருக்கும் மொத்தக் கூட்டமும் ஒன்றுகூடி இலக்கியவாதிகள் பக்கம் பாய ஆரம்பித்துவிடுவார்கள்.

நான் எழுத வந்த காலத்திலிருந்து இது போன்று சில குடும்ப நாவலாசிரியர்கள் Vs இலக்கியவாதிகள் சர்ச்சைகளைப் பார்த்திருக்கிறேன். சம்பந்தமே இல்லாமல் ஒன்றிரண்டு பிரச்னைகளில் நேரடியாகத் தலையைக் கொடுத்திருக்கிறேன்.

இவர்களின் சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் இலக்கியக் கூட்டத்திற்கும் குடும்ப நாவல் உலகத்திற்குமான சம்பந்தம் என்ன?

யாதொரு சம்பந்தமும் இல்லை. 

இலக்கியவாதிகள் எழுத்து நவீன ஓவியங்கள் போல. புரிந்தது மாதிரியும் இருக்கும். புரியாதது மாதிரியும் இருக்கும். ஒரு வேளை புரியாவிட்டாலும் புரிந்தது போலக் காட்டிக் கொள்ள வேண்டும். அதுதான் தற்கால இலக்கியம்.

அதுவே குடும்ப நாவல்கள் என்றால் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் அரசியல் விளம்பர ஓவியங்கள் போல. முகங்கள் மாறும். களங்கள் மாறாது. அது ஒரு தனி உலகம். இது ஒரு தனி உலகம்.

ஆனால் சம்பந்தமே இல்லாத ஒரு கூட்டம் சம்பந்தமே இல்லாத மற்றொரு கூட்டத்தின் மீது கல்லெறிவானேன்?

அதே நேரம் குடும்ப நாவல் உலகத்தில் இருப்பவருக்கு இலக்கியவாதிகளுடன் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் இலக்கியவாதிகளுக்குக் குடும்ப நாவல் எழுத்தாளர்கள் மீது நிறையக் குற்றச்சாட்டு உண்டு.

உதாரணத்திற்கு போகன்சங்கர் 2019ஆம் வருடம் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பதிவொன்று.

‘கிண்டில் டாப் 100 வரிசை பார்த்தேன். எல்லாமே பெண் எழுத்தாளர்கள் எழுதியவை. மேலும் தமிழில் வந்த எல்லாத் திரைப்படப் பாடல்களிலும் ஒரு புத்தகம்.

இங்கே இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரே ஓர் ஆண் கூட அங்கு இல்லை. இருந்தாலும் இவர்களுக்குத்தான் இங்கு எத்தனை திமிர்

தஞ்சை பிரகாஷ் மட்டும் எப்படியோ அதில் காணப்படுகிறார். நூலின் பெயர் கள்ளம் என்பதால் இருக்கலாம்.’

அவரது ஃபேஸ்புக் பக்கங்களைத் திறந்தாலே இது போன்று குடும்ப நாவல் வெறுப்புகளும் கிண்டல்களும் நிறையக் கொட்டிக் கிடக்கும் என்றாலும் இந்தப் பதிவு கொஞ்சம் அதிக சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. அவர் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே குடும்ப நாவல் உலகத்தில் காட்டுத்தீயாகப் பரவியும்விட்டது.

அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவா வேண்டும். உங்க வீட்டு ஜாய் எங்க வீட்டு ஜாய் இல்லை. என்ஜாய்தான்.

யார் எந்தப் பக்கம் என்ன கருத்தை வீசப் போகிறார்கள் என்று              பாப் கானுடன் ஃபேஸ்புக் கணக்கர்கள் ஆர்வமாக வேடிக்கை பார்க்க உட்கார்ந்துவிட்டார்கள். வழக்கம் போலக் குடும்ப நாவல் கூட்டமும் இலக்கியவாதிகள் மீது பாய்ந்து பிறாண்டிவிட்டது.

ஆனால் நன்றாக உற்றுக் கவனித்தால் மேலே உள்ள போகன் சங்கர் பதிவு குடும்ப நாவல் உலகத்தை மட்டுமா சுட்டுகிறது. பெண் எழுத்தாளர்கள் என்று பொத்தாம் பொதுவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். அதே பதிவில் ஆண் என்று குறிப்பிடும் போது இலக்கியவாதிகள் என்ற வார்த்தையை ஒட்டிவிட்டிருக்கிறார்.

குடும்ப நாவல்களை எழுதுவது பெரும்பாலும் பெண்கள்தாம் என்றாலும் அதைத் தாண்டிப் புனைவுகள் அபுனைவுகள் என வித்தியாசமாக எழுதும் பல பெண்களும் உண்டு. பெண் இலக்கியவாதிகளும் உண்டு. ஆனால் அதை எல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

பெண் எழுத்து என்றால் குடும்ப நாவல்கள். ஆண் எழுத்து என்றால் இலக்கியம் என்று அவர்களாகப் பாகப்பிரிவினைச் செய்து கொண்டார்கள். 

இதே சர்ச்சையின் போது வேறொரு வேடிக்கையான சண்டையும் நிகழ்ந்தது. குடும்ப நாவல் எழுத்தாளர் ஷெண்பா இந்த கிண்டில் டாப் 100 பதிவை எழுதியவர் எழுத்தாளர் பா. ராகவன் அவருக்கு எதிராகப் பதிவிட்டுவிட, அந்தப் பக்கம் பா.ரா அவர்களும் திருப்பி பதிலடி கொடுத்தார். என்ன பதில் தெரியுமா?

‘மொக்கை சூழ் உலகு 

யார் இந்த அம்மாள்? பெண் எழுத்தாளர்களையும் தகவல் பிழைகளையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. இவர் சொல்லியிருக்கும் குறிப்பை நான் எழுதவில்லை. எல்லாப் புகழும் போகனுக்கே. இரண்டாவது, எழுதியதை அவர் டெலீட் செய்யவும் இல்லை. அது பாட்டுக்கு அப்படியேதான் கிடக்கிறது. ஒரு குறிப்பை எழுதும்முன் அடிப்படை சரிபார்த்தல்களைக்கூடச் செய்ய நேரமில்லாமல் எழுதிக் குவிக்கும் பெரும் படைப்பாளி போலிருக்கிறது. கிண்டிலின் டாப் நூறுகள் நூறாண்டு வாழ்க.

தகவல் அறியும் உரிமை: Bogan Sankar’

‘பெண் எழுத்தாளர்களையும் தகவல் பிழைகளையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது.’

இங்கே தவறாகப் புரிந்து கொண்டு பதிவிட்டது ஒரு தனிப்பட்ட குடும்ப நாவல் எழுத்தாளர். ஆனால் அவர் சாடுவது ஒட்டுமொத்தப் பெண் எழுத்தாளர்களை?

இங்கே அதே தகவல் பிழையைத்தானே பா. ராவும் செய்திருக்கிறார். அவரை பொறுத்த வரையில்,  ‘எழுத்தாளர்களுள் சில பெண்கள் உண்டு. ஆனால் பெண் எழுத்தாளர்களுள் எழுத்தாளர்கள் கிடையாது.’

ஆண்கள் என்ன எழுதினாலும் அவர்களுள் எல்லாருமே எழுத்தாளர்கள்.  அறிவுப்பூர்வமான எழுத்து ஆணுக்கே உரித்தானது. ஒரு வேளை பெண்கள் அறிவுப்பூர்வமாக எழுதினாலும் அதனையும் ஆண் எழுத்து என்றுதான் சுட்டுவார்.

குடும்பம், காதல் எழுதும் ஆண்களின் எழுத்தையும் அவர் பெண்ணெழுத்தாகவே பாவிப்பார்.

மகளிர் தினத்தின் போது ‘பெண்கள் வாழ்க. பெண் எழுத்தாளர்கள் வாழ்க.பெண்ணெழுத்தாளர்களும் வாழ்க’ என்கிற பா.ராவின் சர்காஸமான வாழ்த்தின் அர்த்தமும் அதுதான். 

சரி. பா.ராவை ஓரங்கட்டிவிட்டு தீவிர இலக்கியவாதியான போகன் சங்கரின் பதிவிற்கு வருவோம். ஒரு வகையில்  அவர் பதிவில் சொன்ன இரண்டு விஷயமும் உண்மைதான். 

முதலில் அமேசான் டாப் நூறுகளை ஆக்கிரமித்திருக்கும் குடும்ப நாவல்கள். இரண்டாவது தமிழ் பாடல்களும் குடும்ப நாவல் டைட்டில்களும்.

இதே டைட்டில் சர்ச்சை முந்தைய வருடப் புத்தகக் கண்காட்சியின் துவக்கத்தின் போதும் கிளப்பப்பட்டது.

‘வரவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் (ஜனரஞ்சகப்) பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் சில:

காதல்காரா…! காதலாட்டக்காரா…!

என் இதயம் துளைத்த துகிரே!

என் காதல் சுடர் நீயடா(டீ)

முள்ளோடு முத்தாட வா

விழியே விலகாதே…! விலக்காதே…!

நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா!

கடைசி நாவல் தலைப்புதான் டாப்.  கதாநாயகன் தெலுங்குக்காரரா இருப்பாரோ?!

நாவல் அட்டைகளுக்கு நன்றி: கே.என். சிவராமன்’

பதிவு உபயம் பெண் இலக்கியவாதி பெருந்தேவி. 

அந்தப் பதிவிற்குக் கீழே எழுத்தாளர் அம்பை அவர்கள் ‘கலவி செய்ய வாடா (டீ) என்று டைரக்டா தலைப்பு வைக்கலாமே?! ஏன் தயங்கறாங்க?’ என்று எள்ளி இருந்தார்.

பெருந்தேவி அவர்கள் தன்னுடைய பதிவில் இந்தச் சர்ச்சைக்குரிய தலைப்புகளை மட்டும் பகிரவில்லை. அப்போது வெளிவரவிருந்த ஐம்பது குடும்ப நாவல் அட்டைப் படங்களையும் ஒட்டுமொத்தமாகத் தன்னுடைய பதிவுடன் இணைத்துப் பகிர்ந்திருந்தார். அவற்றில் மேலே இருந்தது என்னுடைய அட்டைப் படம்தான். நாவல் பெயர் விலக்கில்லா விதிகள் அவன். அரசியல் திரில்லர் வகை. 

என்னுடைய தலைப்பை அவர் குறிப்பிட்டுக் கூறாவிட்டாலும் நானும் அந்தக் கூட்டத்தில்தானே இருக்கிறேன். இந்தக் கற்களும் என் மீது வீசப்பட்டதுதானே. இந்தக் கேலி கிண்டல்களும் என்னையும் சேர்த்துதானே.

இனி நாம் குடும்ப நாவல் எழுதக் கூடாது. நாமும் இலக்கியம் எழுத வேண்டும் என்று விபரீதமான ஓர் ஆசை உதித்தது. அந்த ஆசையின் காரணமாக நான் தேடிக் கண்டடைந்ததுதான் ஆசானின் எழுதுக நூல். பக்கத்திற்குப் பக்கம் எப்படி எழுதுவது என்று பாடம் எடுத்திருந்தார். இலக்கியவாதிகள் ஆவதற்கான வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறார். அந்த நூலிலிருந்து சில வரிகள்.

‘நீங்கள் எட்டாம் வகுப்பு பாஸாகிவிட்டீர்கள் என்றால் ஒன்பதாம் வகுப்புப் பாடம் கஷ்டமாக இருக்கும், எட்டாம் வகுப்புப் பாடம் எளிதாக இருக்கும். எட்டாம் வகுப்புப் பாடமே மேல், அதுவே பிடித்திருக்கிறது, அது எளிதாக இருக்கிறது என்று சொல்வீர்களா என்ன? ஒன்று கவனியுங்கள். ஒரு படைப்பு உங்களுக்கு எவ்வளவு தடையை அளிக்கிறதோ அந்த அளவுக்கு நீங்கள் அதனுடன் உரையாடுகிறீர்கள், அதை உள்வாங்குகிறீர்கள், அத்தகைய படைப்புக்களையே நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள்.

ஆகவே, கடைசியாகச் சொல்லவேண்டியது இது. வணிக இலக்கியம் வாசகனை நோக்கி வரும், இலக்கியத்தை நோக்கி வாசகன் செல்ல வேண்டும்.’

 இலக்கியம் படிக்க சிரமமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வாசகனுக்கு தடைகளைக் கொடுக்கிற இலக்கியம் எவ்விதத்தில் சிறந்ததாக இருக்க முடியும்?

ஒருவேளை மெத்தப் படித்த வாசகனுக்கானதுதான் இலக்கியம் என்றால் அதனால் யாருக்கு என்ன லாபம்? அலங்காரச் சொற்களின் மூலம் வாசகனைச் சுற்றலில் விடுகிற இலக்கியத்தின் கோட்பாடு எனக்கு எங்கேயோ இடித்தது.

அதுமட்டுமல்லாது ‘ஒரு நாளைக்குத் தொடர்ந்து பத்து மணி நேரம் எழுதுவேன்’ என்கிற ஆசானின் அறிவுரை நிச்சயம் பெண்களுக்கானது இல்லை.

மெத்தப் படித்தவர்களுக்கான இலக்கிய உலகம் குடும்ப நாவல் உலகத்தை மட்டமானதாகத்தான் பார்க்கும். எந்த வகையிலும் அவர்களின் நியாயங்கள் இங்குள்ளவர்களுக்குப் புரியவும் புரியாது. புரிய வைக்கவும் முடியாது.

எல்லாவற்றிற்கும் மேல் இங்கே குடும்ப நாவல் எழுதுபவர்கள் பெரும்பாலும் சாதாரணக் குடும்பத் தலைவிகள். அவர்கள் உலகம் மிகச் சிறியது.

நியாயத் தராசுகள் இல்லாத அவர்களுக்கான தனிப்பட்ட ஆசாபாசங்கள், போலியான காதல்கள், மாயையான தாபங்கள் என அந்தச் சிறிய உலகிற்குள் கிடைக்கும் சந்தோஷமே போதுமானது என்கிற எண்ணத்துடன் எழுதுகிற பெண்களுக்கு இங்குக் கிடைக்கிற ஒரே ஓர் அங்கீகாரம் வாசகர்களின் கருத்துகள்தாம். 

ஆண் இலக்கியவாதிகள் போல இங்குள்ள பெண்களால் பத்து மணி நேரமெல்லாம் எழுத முடியாது. ஏன்? சேர்ந்தார் போல இரண்டு மணி நேரம்கூட எழுதுவதும் சிரமம்தான்.

ஏனெனில் வீட்டுப் பெண்களின் நேரம் என்பது அவர்களுக்கானது இல்லை. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டும்.  இதற்கிடையில் டீ இடைவேளை, ஒவ்வொரு வேளை சமையலுக்கான பாத்திரங்களைக் கழுவி வைப்பது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது, துணிகளைக் காய வைத்து மடித்து வைப்பது என்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஏதாவதொரு வேலை வந்து கொண்டே இருக்கும். 

அப்படி ஒரு பெண் பத்து மணி நேரம் தொடர்ந்து எழுதினால் அடுத்த நாள் இருபது மணிநேரம் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.

இதற்கிடையில் கருத்தரிப்பது, குழந்தை பெறுவது, போஸ்ட் பாட்டம் டிப்ரஷன்கள்(Postpartum depression) என எழுத வந்த குறுகிய காலகட்டத்திலேயே நிறையப் பெண்கள் இந்தக் குடும்ப நாவல் உலகத்தை விட்டுக் காணாமல் போய் விடுகிறார்கள்.

 கருத்தரித்த காரணத்தால் எழுதுவதை நிறுத்திவிட்ட பெண்கள் ஒரு பக்கம் என்றால், மகனோ அல்லது மகளோ பத்தாவது பன்னிரண்டாவது படிக்கிறார்கள் என்றால்கூட எழுதுவதை நிறுத்திவிட்டு சென்றுவிடும் பெண்களும் உண்டு. யாரும் இதை எல்லாம் விருப்பப்பட்டுச் செய்வதில்லை.

‘பிள்ளைங்க படிப்பைவிட உனக்கு எழுத்து முக்கியமா’ என்கிற கேள்விகளுக்குப் பயந்துதான் எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். ஆனால் இது போன்ற கேள்விகள் ஆண் இலக்கியவாதிகளை நோக்கி வராது.

ஆனால் இத்தனைக்குப் பிறகும் இங்குள்ள நிறைய பெண்கள் எழுதுகிறார்கள். வாய்ஸ் டைப்பிங் மூலமாக அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்வதன் மூலமாக அவர்களுக்குப் பிடித்தமான உலகத்தில் சில மணிநேரம் வாழ்கிறார்கள்.

ஏன், நானும் என்னுடைய முதல் எட்டு நாவல்களையும் செல்பேசியில்தான் தட்டச்சு செய்தேன். கிடைக்கும் இடங்களிலும் நேரத்திலும் எல்லாம் எழுதி இருக்கிறேன்.

என்னதான் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு எழுதினாலும், “வேற வேலை ஒண்ணும் இல்லயா” என்கிற கேள்வி எங்களைப் போன்ற பெண்களை நோக்கி எப்போதும் வீசப்படும்.

இன்னும் நம்முடைய குடும்பங்களில் பெண்கள் எழுதுவதும் வாசிப்பதும் வெட்டி வேலைதான்.

பெண்கள் எழுதினால், ‘முதல புள்ளைங்கள பாரு… அப்புறம் எழுதுறது கிழிக்கிறது எல்லாம் செய்யலாம்’ என்பார்கள். இது போன்ற ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் இடையில்தான் எழுத வேண்டும்.

பல முறை நேரமே இல்லாமல் இரவு பத்திலிருந்து காலை ஆறு மணி வரை உறக்கத்தை எல்லாம் தொலைத்துவிட்டு நான் எழுதிய காலமெல்லாம் உண்டு. மீண்டும் வீட்டு வேலைகளுடன் அடுத்த நாளை தொடர்ந்ததும் உண்டு. இது என் அனுபவம் மட்டும் இல்லை. இங்கே எழுதும் பல பெண்களின் அனுபவமும் இப்படிதான்.

ஆனால், இன்று நிலைமையே வேறு. ஜனரஞ்சக வாசிப்பு வாசகர்கள் கருத்தையோ அல்லது பதிப்பகங்களையோ மட்டுமே நம்பி இல்லை. இணைய உலகத்தின் மூலமாக வருமானம் ஈட்டத் தொடங்கிவிட்டனர். அமேசான் கிண்டில் மூலமாக எழுத்தாளர்களே தங்கள் நூல்களை உலகம் முழுக்கவும் கொண்டு செல்கிறார்கள். பல நாடுகளில் உள்ள தமிழ் வாசகர்களைச் சுலபமாகச் சென்றடைகிறார்கள்.

என்னுடைய முதல் நாவலுக்கான அமேசான் கிண்டில் வருமானம் பத்தாயிரம். அதுவரை வெட்டி வேலை என்று வசைபாடிய வீட்டினர்கூட கப்சிப்பென்று ஆகிவிட்டார்கள். அதுமட்டுமல்லாது இங்கே டெம்ப்ளேட் நாவல்களுக்கும் ஆன்ட்டி ஹீரோ கதைகளுக்கும் வருமளவுக்கு வருமானம் எல்லா வகையான நாவல்களுக்கும் வருவதில்லை என்பதுதான் உண்மை. ஆதலால் இங்கே கதை ‘கொலைக்களமாக’ இருந்தாலும் ‘காதல் களம்’ என்று தலைப்பிட்டால்தான் வருமானம் பார்க்க முடியும். இது ஒரு வகையான குடும்ப நாவல் எழுத்தாளர்களின் வியாபார யுக்தி.

ஆனால் இதே வியாபாரம்தான் வாசிப்புலகத்தை மிக ஆபத்தான பாதைக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.  

கிண்டில் செயலிகள் நடத்தும் போட்டிகளுக்குத் தலைமை தாங்கும் எழுத்துகளைப் பார்க்கவில்லையா, பார்க்காதது போல் இருந்துவிடுகிறார்களா என்று தெரியவில்லை.

தமிழ் நூல்களில் டாப் நூறுகளில் இன்று பெரும்பாலானவை ஆன்ட்டி வெறியன், அக்கா வெறியன் போன்ற மகா மட்டமான பாலியல் கதைகள்.

இங்கே பாலியல் கதைகளைப் படிப்பதும் படிக்காததும் அவரவர் விருப்பம். ஆனால் அமேசான் தமிழ் நூல்களின் டாப் நூறாக இந்த வகை எழுத்துகள் இருப்பதை இலக்கியவாதிகள் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.   

குடும்ப நாவல்கள் சமூகத்தைச் சீரழிக்கிறது என்றால் அதை விடவும் வக்கிரமான எழுத்துகளை வெளிப்படையாக டாப் செல்லர் என்று போட்டு வியாபாரம் செய்து கொண்டிருக்கும் அமேசான், பிரதிலிபி போன்ற வியாபார முதலைகளின் இலக்கிய சேவைகளைப் பற்றிய இலக்கியவாதிகள் கருத்து கூறாமல் இருப்பதன் காரணம் என்ன?

ஒரு வேளை பிறழ்வு எழுத்தைக்கூட ஆதரிப்போம். பெண்ணெழுத்தை ஆதரிக்க மாட்டோம் என்கிற மனநிலையா? அல்லது ‘செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்து காக்கின்என் காவாக்கா’ என்பது போல இவர்களின் கிண்டல்களும் கேலிகளும் குடும்ப நாவல் பெண்களிடம் மட்டும்தான் செல்லுபடியாகும் என்பதினாலேயா?.

(தொடரும்)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.