சமீபமாக வலைத்தளங்கள், செயலிகள் என இணைய உலகத்தில் படுவேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் குடும்ப நாவல் எழுத்துகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முதல் வகை யதார்த்தமான குடும்ப உறவு கதைகள், இரண்டாவது வகை அறிவியல், வரலாறு, திரில்லர் என வித்தியாசமான ஜெனரில் எழுதப்படும் கதைகள். மூன்றாவது வகை செக்குமாட்டுக் கதைகள் மற்றும் செக்குமாட்டு எழுத்தாளர்கள். இதுதான் கொஞ்சம் பிரச்னைக்குரிய வகை.
முதல் இரண்டு வகை என்னவென்று உங்களுக்கே ஓரளவு புரிந்திருக்கும். ஆனால், இந்த மூன்றாவது வகையான செக்குமாட்டுக் கதைகள் மற்றும் செக்குமாட்டு எழுத்தாளர்களைக் குறித்துக் கொஞ்சம் விவரமாக விம் போட்டு விளக்குவோம்.
செக்குமாட்டுக் கதைகள் என்றால் ஏற்கெனவே எழுதித் தேய் என்று தேய்க்கப்பட்ட கதைக்கருக்களை வைத்து மீண்டும் மீண்டும் எழுதுவது. அதில் மாற்றுச் சிந்தனையும் இருக்காது. புதிதாக எந்தக் கருத்தும் இருக்காது.
உதாரணத்திற்கு இருக்கவே இருக்கிறதே! குடும்ப நாவல்களின் ஆபத்பாந்தவனான ஆன்ட்டி ஹீரோக்கள்.
ஒரு வகையில் பார்த்தால் இந்த ஆன்ட்டி ஹீரோ நாவல்களே ரமணி அம்மாவால் நம்மூருக்கு இறக்குமதி செய்யப்பட்டதுதான். அதே ரமணி அம்மாவின் எழுத்தைச் சமகாலக் குடும்ப நாவலாசிரியர்கள் பட்டி டிங்கரிங் பார்த்து இன்றைய நடைமுறைக்கு ஏற்றார் போல மாற்றி எழுதி வருகிறார்கள்.
மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னோடது இல்லங்கிற மாதிரி எழுத்தாளர்கள் அவர்கள்தாம். ஆனால் கான்ஸப்ட் அவர்களுடையது இல்லை.
அடுத்தது செக்குமாட்டு எழுத்தாளர்கள். இந்த வகை எழுத்தாளர்களின் கதைகளில் இரண்டு நாவல்களை வாசித்தால் போதும். அடுத்த கதை எப்படி இருக்கும் என்பதை நாமே யூகித்துவிடலாம். கதை மாறாது. ஆனால், நாயகன் நாயகியின் பெயர், வேலை, படிப்பு மற்றும் குடும்பப் பின்னணி மட்டும் மாற்றப்பட்டிருக்கும்.
உதாரணத்திற்கு ஒரே வடையைத் திரும்பத் திரும்பச் சூடு செய்து தருவது பல நேரம் முதல் வடையே அதாவது முதல் கதையே சுட்டதாகத்தான் இருக்கும். வேறு மாதிரி சுட்டது. இப்படிச் சுட்டது சூடு செய்ததைத்தான் ‘டெம்ப்ளேட்கள்’ என்று சொல்வோம். அப்படியான சில டெம்ப்ளேட்கள்,
- முதல் அத்தியாயமே திருமணம். ஆனால், கல்யாணம் செய்யப் போகும் இருவருக்கும் அறிமுகமே இருக்காது.
- பிடிக்கவே பிடிக்காத இருவர் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்வது.
- சில காரணங்களுக்காக ஒப்பந்தத் திருமணம் முடிப்பது. அண்ணன், அப்பா என்று உறவுமுறையில் யாரோ செய்த தவறுக்காக அந்த வீட்டுப் பெண்ணைப் பழிவாங்க நாயகன் அவளைத் திருமணம் செய்து ஏமாற்றுவது அல்லது கட்டாயப்படுத்தி மணப்பது.
- தந்தை வாங்கிய கடனுக்கு ஈடாக நாயகன் மகளை உடல் உறவுக்கு அழைப்பது. பின்னாளில் அவள் கருத்தரித்ததும் மனம் திருந்தி அவளையே மணம் புரிந்துகொள்வது.
- யாரென்றே தெரியாத ஒருவனால் நாயகி கருத்தரிப்பது, குழந்தை பெற்று தனியாக வளர்ப்பது, அதில் குழந்தையின் தந்தை பில்லியனராக இருப்பது. அது தெரியாமலே இருவரும் சந்தித்துக் கொள்வது.
- நாயகி ஏதாவது பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டால் அவளைக் காப்பாற்ற அப்பீலே இல்லாமல் நாயகன் ஆஜராகிவிடுவது.
- விவாகரத்து செய்த தம்பதி மீண்டும் இணைவது.
- குழந்தைத்தனமான நாயகி, சிடுமூஞ்சி நாயகன்.
- முரட்டுத்தனமான நாயகன், அப்பாவி நாயகி. கதையின் முடிவில் இரட்டைக் குழந்தைகள்.
இது போன்று இங்கே நிறைய வேடிக்கையான டெம்ப்ளேட்கள் உலவுகின்றன. மேற்குறிப்பிட்ட பட்டியல்களும்கூட மில்ஸ் அன் பூன் கதைகளிலிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டவைதான். The unwanted wife, love this stranger, marriage meltdown, recipe for revenge, blackmail.
இந்த டெம்ப்ளேட்களைப் பெண்கள் அதிகம் ரசிப்பதன் பின்னிருக்கும் உளவியல் என்பது வேறொன்றும் இல்லை. கதையின் முதல் பாதியில் நாயகிக்கு எத்தனை கஷ்டங்கள் நேர்ந்தாலும் இறுதியில் நாயகனின் அளப்பரிய காதலினால் நாயகியின் வாழ்க்கை அமோகமாக இருப்பது போல முடிப்பது. ஆனால் அதுவே வித்தியாசமான கதைகள் என்றால் முடிவுகளைக் கணிக்க முடியாது. அதுவும் சந்தோஷமான முடிவுகள் இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
குடும்ப நாவல் வாசிக்கும் பெண்கள் எல்லாரும் குடும்பப் பிரச்னைகள் மற்றும் வீட்டு வேலைகளிலிருந்து தப்பிக்கும் உபயமாகத்தான் கிடைக்கும் நேரத்தில் இங்கே வாசிக்க வருகிறார்கள். அப்படி வருபவர்கள் அழுத்தமான கதைகளை வாசித்து, தங்கள் மனநிலையைக் கெடுத்துக் கொள்ள விரும்புவார்களா?
ஆதலால் டெம்ப்ளேட் கதைகளுக்கே அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். அதேபோல வாசகர்களின் விருப்பத்திற்காக மட்டும் இங்குள்ள எழுத்தாளர்கள் டெம்ப்ளேட்கள் எழுதுவது இல்லை. இயல்பில் டெம்ப்ளேட்களை எழுதுவது மிகச் சுலபம். அதுவும் இல்லாமல் இணைய வாசிப்பு பிரபலமான பிறகு வாசகர்கள் தினமொரு பதிவு எதிர்பார்க்கிறார்கள். அடுத்தடுத்த பதிவுகளை விரைவாக வாசகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பக் கொடுக்க வேண்டுமென்றால் டெம்ப்ளேட் கதைகளை எழுதுவதுதான் வசதி.
சரி. சுலபமாக எழுதுவது மற்றும் மனஅழுத்தம் இல்லாமல் வாசிப்பது என்பதை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, இந்த டெம்ப்ளேட் கதைகளில் இருக்கும் பிரச்னையைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோம்.
பெண்கள் எழுதும் இந்த எல்லா டெம்ப்ளேட் கதைகளுக்குமே பொதுவான விஷயம் ஒன்று இருக்கிறது. நாயகன் முதலாளியாக இருந்தால், நாயகி அவனிடம் வேலை செய்பவளாக இருப்பாள். நாயகன் கடன் வழங்குபவனாக இருந்தால், நாயகி கடனாளியாக இருப்பாள். தப்பித் தவறி நாயகி பணம் படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவளாகக் காட்டினாலும் அவளுடைய சொத்தெல்லாம் கடனில் மூழ்கிப் போயிருக்கும் அல்லது ஏதாவது வியாபாரத்தில் நஷ்டமாகி இருக்கும். வழக்கப்படி நாயகி நாயகனிடம் கையேந்தி நிற்பாள்.
ஆண் மேலே, பெண் எப்போதும் கீழே என்கிற ஆதிக்க அடிமை மனநிலைதான் இது. பெண்களை இரண்டாம் பாலினமாகச் சித்தரிப்பது. இதெல்லாம் வெளிநாடு, உள்நாடு என எல்லா நாடுகளிலும் உள்ள ரொமன்ஸ் நாவல்களிலும் எழுதப் படாத விதி.
சரி. ரொமான்ஸ் என்பது என்ன? காதல்தானே. அது ஏன் காதல் கதைகளில் ஆண் என்பவன் எப்போதும் மேலானவனாக இருக்க வேண்டும்? அது ஏன் பெண்கள் உயரதிகாரியாகவோ அல்லது தொழிலதிபராகவோ இருக்கக் கூடாதா? பணக்காரப் பெண்களுக்குக் காதல் மலராதா அல்லது அத்தகைய பெண்களை ஆண்கள் விரும்ப மாட்டார்களா?
இவை எல்லாம் நான் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே எனக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள்தாம். ஆனால், யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது. புத்தகமாக வாசிக்கும் காலத்தில் எழுத்தாளர்களைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால், இணைய எழுத்தில் வாசகர்கள் நினைத்தால் இது போன்ற கேள்விகளை எழுத்தாளர்களிடம் எழுப்பலாம். ஆனால், கேட்பதில்லை. கேட்கவும் மாட்டார்கள்.
ஏனெனில் இந்த வகை கதைகளைத்தானே அவர்கள் ரசிக்கிறார்கள். ஆதிக்கமும் அடக்குமுறைகளும் இல்லாத காதலை உப்புச் சப்பிலாத பண்டமாகப் பாவிக்கிறார்கள். காலம் காலமாக அடக்கு முறையிலேயே வாழ்ந்த பெண்களின் மனநிலையோ அல்லது குடும்ப அமைப்பில் இருக்கும் அடக்குமுறைகளின் பிரதிபலிப்பாக இக்கதைகளைப் பார்க்கின்றனரா?
ஆனால், இந்தக் கதைகள் எதுவும் பெண்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் தருவதில்லை. அது இன்னும் சிக்கலில்தான் கொண்டுவிடுகிறது. உளவியல்ரீதியாக மாயை உலகத்தில் அவர்களைத் தள்ளுகிறது.
இந்த டெம்ப்ளேட் நாவல்களில் இருக்கும் மற்றொரு மிகப் பெரிய பிரச்னை என்றால் தாலி, கற்பு போன்ற பெண்ணடிமைத்தனக் கருவிகளைப் புனிதப்படுத்துதல். ஏன்? மில்ஸ் அன் பூன் நாவல்களிலும்கூட நாயகி ‘வர்ஜின்’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிற காட்சிகள் உண்டு. இதில் நம்மூர் கதைகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.
அவள் நெருப்பு மாதிரி என்கிற நாயகியின் கற்பிற்கு உவமைகள் வழங்குபவர்கள் நாயகனுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை வெகு சாதாரணமாகக் கடத்திச் செல்கிறார்கள். அது ஏதோ ஆண்மையின் சின்னமாகவே குடும்ப நாவல் எழுத்தாளர்கள் பெருமையுடன் பதிவு செய்கிறார்கள்.
இந்தக் கற்பைகூடப் போனால் போகிறது என்று விட்டுவிடலாம். ஆனால், குடும்ப நாவலாசிரியர்கள் தாலியை வைத்து சில காட்சிகள் எழுதுகிறார்களே? சத்தியமாக அது மாதிரியான பிற்போக்குத்தனமான காட்சிகள் இருக்கவே முடியாது.
உதாரணத்திற்கு இங்குள்ள கதை ஒன்றின் சின்ன சாம்பிள் வசனத்தைக் கீழே இணைக்கிறேன்.
“உங்க வீட்டுப் பையன் முறையில்லாம தாலி கட்டி இருந்தாலும் நான் முறையோட எல்லாத்தையும் கொண்டு வந்துட்டேன்… என் புள்ள பேர்ல இருக்குற சொத்து பத்திரம் வரைக்கும் கொண்டு வந்து வச்சுட்டேன்… அவ இங்க உட்கார்ந்து திங்குற சோறுகூட என் சம்பாத்தியத்தில திங்கறதாதான் இருக்கணும்… மனசுக்குப் பிடிக்காம கழுத்துல வாங்கின தாலிதான்… ஆனா கலாச்சாரத்துக்குக் கட்டுப்பட்டு மனசைக் கல்லாக்கிட்டு இந்த வாழ்க்கைக்குத் தயாராகிட்டா என் புள்ள… உங்க வளர்ப்பு தப்பா போயிருக்கலாம்… ஆனால் என் வளர்ப்பில தப்பு இல்லைன்னு என்னைத் தலை நிமிர்ந்து நிக்க வச்சிட்டா என் மவ… காலம் முழுக்க அவ உக்காந்து சாப்பிடுற அளவுக்கு அத்தினியும் கொண்டு வந்து வச்சுட்டேன்… இன்னும் தேவைன்னாலும் குடுக்கிறேன்… ஆனா என் மவ கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீர் வரக் கூடாது… அப்படி வந்துச்சு நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்…”
இந்த வசனம் வெறும் புத்தகம் வாசிக்கும் பெண்களின் மனநிலை மட்டும் இல்லை. பெண்கள் பார்க்கும் சீரியல்கள் அனைத்திலும் இது போன்ற ரசனைகளே வெளிப்படுகின்றன.
சமீபமாகத் தமிழ் தொலைக்காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கும் அத்தனை சீரியல்களிலும் இந்தப் பணக்கார நாயகன் பாவப்பட்ட நாயகி கான்ஸப்ட்தான். இது எல்லாவற்றிற்கும் பின்னணியிலும் ஒரு பெரிய வியாபாரமும் அதற்கான ஆதாயமும் இருக்கிறது.
சரி. இந்த வசனத்திற்கு வருவோம். இது இரண்டு நாள்கள் முன்பு நான் ஃபேஸ்புக்கில் எதேச்சையாகப் படித்ததுதான். ஒரு கதையின் விளம்பரத்திற்காக ஓர் எழுத்தாளர் பகிர்ந்திருந்தது. இந்த வசனத்தில் குறிப்பிட்டது போல நாயகியின் விருப்பத்தைக் கேட்காமல் அல்லது மதிக்காமல் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாயகன் தாலி கட்டிவிடுவதெல்லாம் இங்கே அடிக்கடி எழுதப்படும் டெம்ப்ளேட் காட்சிகளில் ஒன்று.
சரி. மேலே பகிர்ந்துள்ள வசனத்தில் உள்ள ‘கலாச்சாரத்திற்குக் கட்டுப்பட்டு’ என்கிற வாக்கியத்திற்கு வருவோம். நாயகன் அந்தப் பெண்ணின் கருத்தைக்கூடக் கேட்காமல் தாலி கட்டிவிட்டான். பதிலுக்கு நாயகி என்ன செய்ய வேண்டும்? போடா நீயாச்சு உன் தாலியாச்சுனு கழற்றி வீச வேண்டாமா?
ஆனால், குடும்ப நாவல் உலகத்தில் அதெல்லாம் நடக்காது. நம் நாயகிதான் கலாச்சாரத்திற்குக் கட்டுப்பட்ட ஆளாயிற்றே. ஆதலால் அவள் தாலியைக் கழற்றி எல்லாம் வீச மாட்டாள். அதிகபட்சம் நான்கு நாள்கள் அந்த நாயகனுடன் கோபமாக இருப்பாள்.
சமீபமாக இங்கே பிரபலமாக இருக்கும் ஓர் எழுத்தாளரின் நாவலில் தம்பியை மணக்க மணமேடை ஏறும் நாயகியின் கழுத்தில் அண்ணன் திடீரென்று தாலி கட்டுவது போன்ற காட்சியைப் படித்தேன். இதைப் பிற்போக்குத்தனம் என்பதா அல்லது முட்டாள்தனம் என்பதா? படித்ததும் எனக்கு அப்படியொரு கோபம் மூண்டது.
நாய்களின் கழுத்தில் கட்டப்படும் காலருக்கும் இந்தத் தாலிக்கும் என்ன பெரிய வித்தியாசம்? தாலியைக் கட்டிவிட்டால் அந்தப் பெண் ஆணுக்குச் சொந்தமாகிவிடுவாளா?
இது என்னுடையது என்பது போல இவள் என்னவள் என்று உரிமையாக்கிக் கொள்வது போலத்தான் இந்தக் காட்சிகள் எல்லாம் உள்ளன.
நான் தெரியாமல்தான் கேட்கிறேன். தாலி கட்டிய நாயகன் இடத்தில் பொருளாதார நிலையில் கீழ் நிலையில் இருப்பவனோ அல்லது வயதான மனிதன் இருந்தால் இந்த நாயகிகள் என்ன செய்வார்கள்? ஸோ கால்ட் கலாச்சாரத்திற்குக் கட்டுப்பட்டு அப்படியே அவனைக் கணவனாக ஏற்று வாழ்வார்களா?
இந்தக் கதையைப் படித்துக் கொண்டாடும் வாசகர்களுக்கு இது போன்ற கேள்வி எல்லாம் எழாதா? ஒருவேளை நான் சொன்னது போல நாயகன் இடத்தில் வேறு நபர் இருந்தாலும் இப்படிதான் இந்தக் காட்சியைப் பார்ப்பார்களா?
அதேபோல நாயகியைப் பிரச்னையிலிருந்து காப்பாற்ற நாயகன் தாலி கட்டுவது போன்றுகூட சில எழுத்தாளர்கள் எழுதிப் படித்திருக்கிறேன். அதை எல்லாம் படிக்கும் போதே கோபம் மூளும்.
ஒருவேளை தாலி கட்டி, காப்பாற்றும் அந்த உத்தமவான் ஆபத்தில் வேறு ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டுமென்றால் என்ன செய்வான்? அதுவே வயதான பெண்மணியைக் காப்பாற்றவோ அல்லது தங்கை முறையில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்றவோ நேர்ந்தால் என்ன செய்வார்கள்? அது ஏன் நாயகியைக் காப்பாற்ற மட்டும் அவர்களுக்குத் தாலிதான் கிடைக்கிறதா?
ஆணை எஜமானனாகக் காட்டுவது, கற்பு என்பதை ஒரு பெண்ணுக்கு மட்டும் உரித்தானதாகத் தொடர்புப்படுத்தி எழுதுவது, ஒரு பொருளைப் போல நாயகியை உடைமையாக்கிக் கொள்ளத் தாலியை உபயோகிப்பது என்பதெல்லாம் ஏதோ ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல்களின் காட்சிகள் இல்லை. தற்காலக் குடும்ப நாவல்களில் வரும் காட்சிகள்தாம் இவை எல்லாம்.
இது போன்ற பிற்போக்குத்தனமான கதைகளை எழுதுவதும் அதனை வாசகர்கள் கேள்வி கேட்காமல் கொண்டாடுவதும் வெறும் பொழுது போக்கு வாசிப்பு என்று ஒதுக்கிவிட முடியாது.
ஏனெனில் இந்தக் குடும்ப நாவல் உலகம் மிகப் பெரிய வாசிப்புப் பட்டாளத்தை உள்ளடக்கியது. ரமணிசந்திரன் நாவல்கள் குழு என்கிற ஒரு ஃபேஸ்புக் குழு ரொம்ப வருடங்களாக இங்கே இயங்கி வருகிறது. இந்தக் குழுவின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேல்.
தமிழ் புத்தக வாசிப்புகளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையைக் கொண்ட ஃபேஸ்புக் குழுக்கள் நான் பார்த்த வரை வேறு எதுவும் இல்லை. அதுவும் இல்லாமல் வெறும் ரமணிசந்திரன் வாசகர்களை வைத்து மட்டும் இக்குழு இயங்கவில்லை.
பல்வேறு தளங்களில் எழுதும் குடும்ப நாவல் எழுத்தாளர்கள் இக்குழுக்களில் இயங்கி வருகிறார்கள். தங்களுடைய நாவல்களின் இணையத்தளச் சுட்டிகளைத் தொடர்ந்து இக்குழுவில் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றை எல்லாம் வாசித்து நிறைய வாசகர்கள் கருத்திடுகிறார்கள்.
மேலும் வாசகர்கள் பலரும் தாங்கள் படித்து மறந்து போன கதைகளைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்து, அக்கதைகளைப் பற்றிக் கேட்பது மற்றும் தாங்கள் படித்துப் பிடித்த நாவல்களுக்கு விமர்சனம் எழுதுவது என இக்குழுவில் ஒரு நாளைக்கு ஐம்பதிற்கும் அதிகமான பதிவுகள் வந்துகுவிகின்றன. அதில் மூன்றில் ஒரு பங்கு ஆன்ட்டி ஹீரோ கதைகளைப் பற்றியதாக இருக்கிறது.
இன்று காலையில்கூட ஒரு பதிவைப் பார்த்தேன். ‘ஆன்ட்டி ஹீரோ நாவல்களை உருகி உருகி வாசிப்பவரா நீங்களா? உங்களுக்காகத்தான் இந்த நாவல்’ என்று ஒரு கதை சுட்டியுடன் பகிரப்பட்ட பதிவு. இது ஓர் உதாரணம். இது போல நிறைய உதாரணங்கள். பல பதிவுகள்.
இப்போது பிரச்னை இந்தச் செக்குமாட்டுக் கதைகளும் அதனுடன் இலவச இணைப்பாக வரும் பிற்போக்குத்தனங்கள் மட்டும் இல்லை. இந்த வகை நாவல்களுக்குக் கிடைக்கும் ஆதரவினால் இங்குள்ள முதல் இரண்டு வகை எழுத்துகள் ஏற்படுத்துகிற பாதிப்பு.
என்னதான் குடும்ப நாவல் எழுத்து என்று சொல்லப்பட்டாலும் இங்கும் அறிவியல், திரில்லர், அரசியல் என எல்லா வகை ஜெனர்களையும் சிறப்பாக எழுதும் பெண் நாவலாசிரியர்கள் உண்டு. ஆனால் அவர்களின் எழுத்து இங்கே பெரிதாக அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. அடையாளப்படுத்தப்படுவதும் இல்லை.
இந்தச் செக்கு மாட்டுக் கதைகள்தாம் குடும்ப நாவல் எழுத்தாகப் பார்க்கப்படுகின்றன. அதிகமாக விற்பனையாகின்றன. பதிப்பகத்தினரின் ஆதரவும்கூட அவர்களின் கதைகளுக்குத்தான் இருக்கிறது.
இதனால்தான் இலக்கியவாதிகளும் குடும்ப நாவல் என்றாலே குப்பை என்று ஒதுக்குகிறார்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் தாக்கிப் பேசுகிறார்கள். ஆனால், அது முழுக்க முழுக்க உண்மையும் இல்லை. வித்தியாசமான கற்பனைகளும் நிறையப் புதுமையான எழுத்துகளும் இந்தக் குப்பைக்குள் புதைந்துகிடக்கின்றன.
எப்படி மில்ஸ் அன் பூனில் எழுத்தாளர்கள் பெயர் முன்னிறுத்தப்படுவதில்லையோ அதேபோல இது போன்ற கதைக்களங்களுக்கும் தனிப்பட்ட எழுத்தாளர் அடையாளங்கள் எல்லாம் இல்லை.
ஒட்டுமொத்தமாக அது குடும்ப நாவல் எழுத்தாகவே பாவிக்கப்படுகிறது. துப்பறியும் நாவல், அறிவியல் களங்களை எல்லாம் பெண்கள் என்னதான் சிறப்பாக முயன்று எழுதினாலும் அவை புத்தகமாக வெளியாகும் போது குடும்ப நாவல்கள் என்கிற வகைமைக்குள்தான் வரும்.
நான் உள்பட இங்கு வித்தியாசமாக எழுதும் பல பெண் நாவலாசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை இது. அங்கீகாரத்திற்காக ஏங்கும் நிலை.
(தொடரும்)
படைப்பாளர்:
மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.
பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.
I really enjoyed reading this 😊
Thank you 😊
Really true. I had all these questions when I was in school itself. But we brought up my sons away from all these stupid culture
உண்மைதான். அடுத்த சந்ததிகளாவது இது போன்ற பிற்போக்குதனங்களை விட்டு வெளியே வர வேண்டும்
Ippo ella writers um inda madiri stories dan eludhitu irukamga pa naa niraiya stories padika start pannuvaen 2nd update padikumbode kadupa irukum ore story line dan anti hero kovathula thali kattuvan avan nallavan illa nu terimji inda ponnumga thali sentiment vechi avan kuda padatha paadu paduvamga keta oru naal nallavan ah maruvan nu idellam padikumbode sema kadupa irukum pa, pratilipi la poi parumga pa anti hero stories ku avlo per padikiramga adum comments ellam padicha ithu dan ivamga virumbi padichitu irukamga nu thonuthu, aduvum romance irunda sollave vendam pa enaku avlo kadupa irukum naa niraiya thittitu comment pannuvaen responce irukathu pa
Ungala mathri quality readers irunthale ithelam maarum