கடல்களையும் மலைகளையும் வானத்தின் வர்ண ஜாலங்களையும் இயற்கையையும் ரசித்தே பழகிய எனக்கு ‘கதவு திறந்ததும் கடல்’ என்கிற தலைப்பை வாசித்ததும் அப்படியே ஜில் என்ற சுகமான காற்று முகத்தைத் தழுவுவது போன்ற உணர்வையே அடைந்தேன். தலைப்பை வாசித்தும் அதன் அட்டைப் படத்தைப் பார்த்தும் கடல் அலையினின்று எழும் காற்று சட்டென்று என் முகத்தில் ஒருவித சுகமான உணர்வைக் கொடுத்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தேன்.
உள்ளே வாசிக்கப் புகுந்ததும் ஓர் ஒற்றைப் பெற்றோரின் தன் அனுபவங்கள் என்பதால் அதிக மனதைப் பாதிக்கக்கூடிய சோகங்கள் நிறைய இருக்கும் என்று நினைத்தே வாசிக்கத் தொடங்கினேன். ஆறு வயதிலேயே அப்பாவை இழந்தது முதல் அன்பான அப்பாவுக்கு நிகராகக் கவனித்துக் கொண்ட தன் அக்காவின் கணவர் இறப்பு, உடன் உரையாடி மகிழ்ந்த சபிதா தோழரின் இறப்பு வரை குறிப்பிட்டிருக்கும் பிருந்தா தோழரின் எழுத்து மனதைக் கனக்க வைக்கிறது.
சபிதாவின் இறப்பு பற்றி அவர் கூறியிருப்பதை வாசிக்கும் போது என் உள் மனம் மரணத்தைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருப்பதை நிறுத்த முடியவில்லை.
அப்பாவை இழந்து, கணவரைப் பிரிந்து, குழந்தை ரித்திகாவுடன் வாழும் பிருந்தா ஒற்றைப் பெற்றோராக அனைத்து சமூக சிக்கல்களைக் கடந்து வந்திருந்தாலும் அனைத்தையும் கட்டுரையாக எழுதுவதற்கும் ஒரு மன தைரியம் வேண்டும் என்றே கருதுகிறேன்.
இவரின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்குமே தன் வாழ்வில் நடக்கக்கூடிய பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது அல்லது எப்படிக் கடந்து செல்வது, வாழ்வை எப்படிக் கொண்டாட்டமாக்குவது என்பதைத் தெரிவிப்பதாகவே உள்ளது.
அப்பா இல்லை, அம்மா இல்லை, கணவர் இல்லை என்று குறைபட்டுத் தனக்குள் உள்ள தனித்தன்மையை, தன் வாழ்க்கையை வாழாமல் வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு மருந்தாகவே இருக்கும்.
‘நம் கடமை வாழும் வரை வாழ்ந்து தீர்ப்பதே, சாகும்போது புலம்பாமல் விருப்பத்துடன் சேர்த்து தொலைவதே’ என்று இவர் குறிப்பிடும் இந்த வார்த்தைகள் உச்சகட்ட சோகத்தையும் தகர்க்கக் கூடியதாகவே உணர முடிந்தது.
சொல்லாத கதை என்ற தலைப்பில் அவர் தன் தோழி, ‘பிள்ளை உன்னை ஒருநாள் அம்போ என்று விட்டுவிட்டுப் போனால் என்ன பண்ணுவ’ என்று கேட்கும் கேள்விக்கு நான், ‘என் மகளைச் சிறப்பாக வளர்ப்பது எதற்கு என்றால் அவர் அவரது பிள்ளைகளை நல்லபடியாக வளர்ப்பதற்கு’ என்று அவர் கூறும் பதில் அனைத்து பெற்றோருக்குமான பதிலாகவே உணர முடிகிறது.
நான் அவள் அடிசில் என்ற கட்டுரையில் ஔவையார் பாடலில் வரும், ‘ரொம்பக் கொடுமை என்னன்னா அன்பில்லா பெண் கையால் சாப்பிடுவது’ என்பதற்குப் பதிலாக, பிருந்தா தோழர் தன் உற்ற தோழி மாலாவிடம், ’ ‘அதைவிடக் கொடுமை அன்பில்லாதவர்களுக்கு சமைக்கிறது’ என்று கூறுவது மிகச் சிறப்பாகவும் அனுபவம் நம்மையும் மாற்றி யோசிக்க வைக்கும் என்பதை விளக்குவதாகவும் உணர வைத்தது.
9 கட்டுரைகளில் என்னை மிகவும் மகிழ்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியது இரண்டு கட்டுரைகள்.
‘கதவு திறந்ததும் கடல்’ என்ற தலைப்பில் அவர் குறிப்பிடும் ட்ரெக்கிங் அனுபவம் அனைவருமே பயணம் செல்லத் தூண்டுவதாக உள்ளது. தோழிகளுடன் அவர் சென்ற பயணத்தை விவரித்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. இன்னொன்று சபிதாவின் கட்டுரையில் அன்பானவர்களின் இழப்பை அவ்வளவாக மனம் எளிதில் ஏற்றுக் கொள்ளாது என்பது போல் அவரின் கட்டுரையை வாசித்து மரணத்தை நினைத்து என் மனம் பதைபதைக்கிறது.
தன் சோகங்களையும் சுகமாக மாற்றி உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு வாழ வழி சொல்வதாக உள்ளது கதவு திறந்தது கடல் புத்தகம்.
கூடவே கராத்தே கற்றுக்கொள்வது, புத்தகங்கள் படிப்பது, தோழிகளுடன் உரையாடுவது இவை பற்றி எல்லாம் தன் கட்டுரையில் குறிப்பிடுவது மிகச் சிறப்பாக இருந்தது.
மொத்தத்தில் தன் வாழ்க்கை அனுபவங்களையும் வாழ்க்கையை எப்படிக் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்பதையும் புத்தகமாக எழுதி, தனிமையில் சோர்ந்து போகும் உள்ளங்களுக்கு ஊக்கமூட்டும் அருமருந்தாகவே நான் பார்க்கிறேன்.
மிகுந்த அன்பும் நன்றியும் பிருந்தா சேது தோழர்.
கதவு திறந்ததும் கடல் – ஓர் ஒற்றைப் பெற்றோரின் தன் அனுபவங்கள். பிருந்தா சேது, ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடு.
படைப்பாளர்:
வலண்டினா. காநாயக்கன்பட்டியில் பிறந்து தூத்துக்குடியில் புகுந்தவர். இளம் வயது முதலே பெண்ணுரிமையில் அதிக ஈடுபாடு கொண்டவர். தற்போது குழந்தைகளுக்கான மாலை நேர வகுப்பு நடத்தி வருகிறார். சக தோழிகளுடன் இணைந்து வாசிப்பு இயக்கம் மூலம் வாசிப்பைத் தீவிரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.