அவள் அவன் அவர்கள்

முன் கதைச் சுருக்கம்:

அஃதர் மதியின் விடுப்பை ரத்துசெய்து விட்டான் ஒரு முக்கிய வேலை நிமித்தமாக. அந்த நாளில் குழுவில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இனி…

நிறைய மாற்றங்கள் குழுவிற்குள். ஆனால், நான் மட்டும் அதே திலீபனிடம். திலீபனும் திறமையானவர்தான். ஆனால், மனிதமற்றவர். பிறர் உழைப்பைச் சுரண்டி தன் பெயரிடும் நியாயவாதி.

வெங்கட் வேறு குழுவிற்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். வெங்கட்டிடம் உனது திறமைகளை வெளியில் அடையாளம் காட்டும் நேரம் வந்து விட்டது என்று வேறு கூறினார். அப்படியெனில் திலீபனைப் பற்றி சரியாகத்தான் கணித்து இருக்கிறார். பிறகு ஏன் நான் பணிமாற்றம் செய்யப்படவில்லை? அட, எல்லாரையும் பணிமாற்றம் செய்துவிட்டு, நானே ராஜா நானே மந்திரி என திலீபன் மட்டும் இருக்க முடியுமா? அவரைக் குறை சொல்ல ஒரு துளி காரணம் கிடையாது. அவரது அனைத்து வேலைகளும் 100 சதவிகிதம் சரியாக இருக்கும். யார் செய்தார் என்பதுதானே யாரும் அறியாத உண்மை.

ஆனாலும் ஒரு நம்பிக்கை பிறந்தது. நிச்சயம் அவர் (அஃதர்) வெங்கட்டிற்கும் மற்றவர்களுக்கும் வாய்ப்பளித்தது போல் எனக்கும் அளிப்பார் என. பிறகென்ன கவலை? மதியமே முடிவாகிவிட்டது அன்றைய இரவு உணவு வெளியில் குழுவாக என்று. அதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.

நான் தாரணி இருவரும் வெங்கட்டின் காரில் புறப்பட்டோம். அங்கு தட்டை நிரவிக்கொண்டிருந்த என்னை, ‘மதி, நீ சாப்பிடறத நாங்க கண்ணு வெச்சிட மாட்டோம். வெளுத்து வாங்கு’ என ராகுலும் நவீனும் கிண்டல் செய்ய, ஆமா ஆமா முடிந்தால் இவர்கள் இருவரோடதையும் நீயே உண்டுவிடு என்று போகிற போக்கில் கிணடலாக ஒரு குரல். அது அஃதரேதான். ஒன்றும் பேசாது சிரித்தவாறே தலையசைத்தேன். அந்தக் குரலில் ஏதோ உள்ளது என்று உள்ளம் சொல்லியது.

பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. அவரவர் குழுவாகச் சொந்த வாகனங்களில் நண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்ப, நான் வாடகைக் காருக்காக வாயிலருகில் காத்துக்கொண்டிருந்தேன்.

சரேலென்று ஒரு கார் அருகில் வந்துநின்றது. உள்ளே அஃதர். நீ சங்கரோடு செல்லவில்லையா என்றார். இல்லை என்று தலையசைத்தேன்.

“ஏன்?” என்று ஒற்றைக் கேள்வி.

சங்கருடன் நான் செல்வதாகத்தான் திட்டம். ஏனெனில் அவர் எப்படியும் என் வழித்தடம் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால், அவர் மது அருந்தியிருந்தபடியால் அவருடன் போக எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆதலால் என் நண்பன் வருகிறான் என்று பொய் சொல்லி வாடகைக் காருக்காகக் காத்திருந்தேன். ஆனால், இதை எப்படி அஃதரிடம் சொல்வது? ஆகையால் அவரிடமும் அதே பொய்.

எந்த இடம்? மீண்டும் ஒற்றைக் கேள்வி அவரிடமிருந்து.

கூறினேன்.

“உன் நண்பரை நாளை சந்தித்துக்கொள். முதலில் வண்டியில் ஏறு. நான் அழைத்துச் செல்கிறேன்” என்றார்.

எனக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. முதலில் மறுத்தேன்.

“மதி சொன்னதைக் கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம். ஏறுவதானால் ஏறு. இல்லையெனில் பார்த்துப் போ.”

அதற்கு மேலும் மறுக்கத் தோன்றவில்லை. பின்னால் ஏறலாம் என்று போனால் அங்கே ராகுலும் துணை மேலாளர் மணியும் அமர்ந்திருந்தனர். முன்னாள் என்று சைகை காட்டினார். ஏறி அமர்ந்துவிட்டேன். அவசர அவசரமாக வாடகைக்காரை ரத்து செய்தேன் அவர் பார்த்துவிடக்கூடாதென ஒளித்து ஒளித்து. ஆனால், ராகுலுக்கும் மணிக்கும் வேறு வழித்தடம் அல்லவா! பின் எப்படி என் வழித்தடம் வழியாகச் செல்ல இயலும்? ஒன்றும் விளங்கவில்லை. அமைதியாக வேடிக்கை பார்க்கலானேன், அம்மாவிடம் கிளம்பிவிட்டேன் என அலைபேசியில் கூறிவிட்டு.

“என்ன மேடம், நண்பரோட போக முடியலைன்னு கவலைல இருக்கற மாதிரி இருக்கு?”

அட, இதென்ன சோதனை ராகுல்தான் வம்பிழுத்தான்.

அவனுடன் நானும் வம்பிற்கு நிற்கவே, சட்டென்று “ஆமாம், நல்ல நண்பன்தான் இவள் நண்பன், என்ன ஆயிற்று? ஒரு அழைப்புகூட இல்லை பாரேன்” என்று எள்ளலாஅக ஒரு குரல் எட்டிப்பார்த்தது. வேறு யார் அஃதரேதான்.

ஐயோ அம்மாவிற்கு அழைத்துச் சொன்னது போல் நண்பனுக்கும் ஓர் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்தான். ஆனால், அப்படி ஒருவன் இருந்தால்தானே? குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன் என்று ஒருவராகச் சமாளித்தேன். உடனே அவரிடமிருந்து ஒரு நக்கலான பார்வை நம்பாதது போலவே! ஒருவேளை உண்மையில் நம்பவே இல்லையோ?

பிறகு உணவு, அலுவலகம் எனப் பொதுவான பேச்சுகள். ராகுலும் மணியும் அவரவரிடத்தில் இறங்கிவிடவே இப்பொழுது நானும் அஃதரும் மட்டுமே காரில்.

மணி பதினொன்றைத் தொட்டுவிட்டது. எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. திறமையானவர்தான். அலுவலகத்தில் நல்ல மனிதர்தான். ஆனால், அவரைப் பற்றி முழுதும் தெரியாதே. ராகுலும் மணியும் இருக்கும்போது தோன்றாத எண்ணங்களும் பயங்களும் நெஞ்சைக் கவ்வின.

சரி விடு, ஒரு வாடகைக்காரில் வந்திருந்தாலும் இதே நிலைதானே. அதுபோலவே இதையும் எண்ணுவோம் என என்னை நானே சமாதானம் செய்தேன்.

ராகுலும் மணியும் சென்ற பின் தோன்றிய பயம் மறைந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, சரியாக இறங்க பத்து நிமிடங்கள் இருக்கும்போது, “சொல்லு மதி, என்ன பிரச்னை?” என்றார் அவர்.

எனக்கோ தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. விழித்தேன் திருதிருவென.

“உன்னிடம்தான்…”

எந்தப் பிரச்னையும் இல்லையே, ஏன் கேட்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை என்றேன்.

“நிஜமாகவா?”

“ஆம்.”

அவர் கேட்டார், பிறகு ஏன் நீ சங்கருடன் போகவில்லை?

இதென்ன சோதனை என்றெண்ணியவாறே, அதான் கூறினேனே நண்பன் வருகிறான் என்று என்றவாறு சமாளிக்க முயன்றேன்.

“அப்படியா நண்பர் பெயரென்ன?”

சத்தியமாக இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

அது அது என்று இழுத்து ஒரு வழியாக சதீஷ் என்றேன்.

“இதைச் சொல்ல இவ்வளவு நேரமா?”

அவரது இந்தக் கேள்விக்குப் பின்னர் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. ஏன் நான் பொய் கூறியது தெரிந்துவிட்டதோ? எப்படித் தெரிந்திருக்கும்? புரியாது ஒன்றுமே பேசாது அவர் கண்களை நோக்கினேன்.

“பொய் சொன்னது போதும். வாடகைக் காரை நீ ரத்து செய்ததைப் பார்த்துவிட்டேன். ஏன் நீ அந்தப் பக்கம் திரும்பினால் கண்ணாடியில் தெரியாதோ?”

மீண்டும் மாட்டிகொண்டேனா என்று முழிக்கையில், “இப்படியா அலைபேசியை அனைவருக்கும் காண்பிப்பது? யாருக்கும் தெரியக்கூடாது என்றால் இப்படி செய்ய வேண்டும்” என்று செய்து வேறு காண்பித்தார். அசட்டுச் சிரிப்பு சிரித்தேன். வேறு வழி.

“சரி மதி! உண்மையான காரணம் சொல்.” அவர் குரல் சற்றே கடுமையானது.

உண்மையான காரணத்தைக் கூறினேன்.

அப்படி என்றால் மது அருந்துபவர்கள் எல்லாம் கெட்டவர்களா என்றார்.

நான் அப்படிச் சொல்லவில்லை என்றேன்.

என்னுடன் நீ வந்த காரணம் நான் மது அருந்தவில்லை என்று நினைத்தா என்றார்.

ஆமாம் என்பது போல் தலையசைத்தேன்.

“நீ பார்த்தாயா நான் மது அருந்தவில்லை என்று? ஒரு வேளை நீ நான் மது அருந்தியதைக் கவனிக்கத் தவறி இருக்கலாம் என்று உனக்குத் தோன்றவில்லையா?” என்று போட்டாரே ஒரு போடு!

சத்தியாமாக ஒருமுறைகூட நான் அவ்வாறு சிந்தித்திருக்கவே இல்லைதான். மௌனமானேன்.

ஓர் இரு நிமிடங்கள் இருவருமே ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், என் மனம் கொந்தளித்தது. நானா இவரை இறக்கிவிடச் சொன்னேன்? இவராக என்னை அழைத்துவந்துவிட்டு இப்பொழுது சங்கருடன் வராமலிருந்தது தவறு என்பதுபோல் பேசுகிறாரே! சங்கரைப் பார்த்து ஒரு மாதமே இருக்கும். அதுவும் வேறு குழு என்பதால் பேசுவதும் மிகவும் குறைவே. அப்படி இருக்க மது போதையில் இருப்பவரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நான் எப்படி அவருடன் செல்ல முடியும்? உயரதிகாரி என்ற ஒரே காரணத்தினால் மனதில் கருவிக்கொண்டிருந்தேன்.

திட்டியது போதும். புன்னகையுடன் அவரது குரல். நானோ கடுங்கோபத்தில் இருந்தேன். சட்டென்று கோபம் எகிற, அஃதர் என்றேன், அலட்டாமல் என்ன என்று பார்வை வீசினார்.

“அஃதர் மது அருந்துபவரைக் கெட்டவர் என்று நான் கூறவில்லை. ஒருவர் அது நானாகவே இருந்தாலும் மது அருந்துவதும் அருந்தாததும் அவரவர் விருப்பம். அதே சமயம் மது அருந்திய ஒருவருடன் செல்வதா செல்லாமல் இருப்பதா என்பது என் விருப்பம். அது அந்த மனிதருடனான எனது தனிப்பட்ட உள்ளுணர்வின் தேர்வு. அதைச் சரியென்றும் தவறென்றும் யாரும் சொல்வதற்கில்லை” என்றேன்.

அஃதர் ஒன்றுமே பேசவில்லை. ஒரு கணம் என்னைக் கூர்ந்து நோக்கினார். பிறகு தலையசைத்தவர் தண்ணீர் எடுத்துக் கொஞ்சம் குடி என்றார். பிறகு வந்த நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன. மதி இதற்கு மேல் நீதான் வழி சொல்லவேண்டுமென்றார்.

இறங்குகையில் குட் நைட் என்று மெலிதாகச் சிரித்தார். அந்த மென்குரல் இரு நாட்கள் மீண்டும் மீண்டும் என் காதில் ஒலிக்குமென்பது அக்கணத்தில் நானே அறிந்திராத ஒன்று!

ஓஹோ! இனிதான் காதல் கண்சிமிட்டும் போலவே! காத்திருப்போம் அவள் கூறும் வரை…