‘காதல்’ இந்த வார்த்தை போலக் கொண்டாடப்படும் வார்த்தையும் தூற்றப்படும் வார்த்தையும் இல்லை என்றே சொல்லலாம். ஓர் ஆணும் பெண்ணும் பருவ வயதில் ஒருவர்பால் இன்னொருவர் ஈர்க்கப்பட்டு இயற்கையாக எதிர்கொள்ளும் காதல்தான் பெற்றோரின், சமூகத்தின் அழுத்தம் காரணமாகப் பல்வேறு பிரச்னைகளுக்குள் சிக்கி தற்கொலை, கொலை வரை சென்று முடிகிறது. நம் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய மனநிலை காரணமாக நடக்கும் ஆணவக் கொலைகள் மிக கொடூரமானவை. ‘இப்போது எல்லாம் காலம் மாறிடுச்சு யாருங்க சாதி பார்க்கிறார்கள்’ என்று கூறுவது மிக மேலோட்டமான கருத்து. டெக்னாலஜி வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் சாதியும் அதன் மூலமாக விஷங்களை வீரியமாக விதைத்து வளர்க்கிறது. அரசியல் காரணங்களுக்காக அந்த விஷவித்துகள் வளர்வதைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் போக்கு நிலைமையை மேலும் மோசமாக்கிகொண்டு இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் சாதிப் பெயருடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு புறம் என்றால், சாதிக்கென சங்கங்கள், அடையாளங்களுடன் பெருமை பீற்றி வருகிறது. இந்தப் பெருமை பீற்றலில் எந்தச் சாதியும் ஒன்றுக்கு இன்னொன்று சளைத்ததில்லை. இந்தச் சாதிய பெருமையைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு அந்தச் சாதியில் பிறந்த பெண்களின் கட்டாயமாக்கப்படுகிறது.
பெண் சாதியைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால், அவள் வேறு சாதி ஆணைக் காதலிப்பதோ அவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதோ பெரும் கெளரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. சாதி ஆணவக்கொலையில் அதிகளவில் கொலையாவது பெண்கள்தாம்.
தமிழ்நாடு ஓரளவு படித்து முன்னேறிய மாநிலம்தான். ஆனால், இங்கேயே ஆண்டுக்கு 120 முதல் 150 வரை காதல் கொலைகள் / ஆணவக் கொலைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி என்றால் இன்னும் சாதியைப் பெருமையாகப் பெயரில் சுமந்து திரியும் வட மாநிலங்களில் ஆண்டுக்கு எத்தனை கொலைகள் நடக்கும்? ஆணவக் கொலைகள் சாதி மாறி திருமணம் செய்வதால் நடக்கின்றன. அது ஒரு புறம் என்றால், இன்னொரு பக்கம் ஒரே சாதியைச் சேர்ந்த ஆண் பெண் காதலித்தாலும் கொலை செய்யப்படுகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் தூத்துகுடியைச் சேர்ந்த 21 வயது கார்த்திகா, அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது மாரிச்செல்வத்தைக் காதலித்து திருமணம் செய்ததற்காக அந்த இளைஞனுடன் சேர்த்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் வேறு வேறு சாதிகூட இல்லை. ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்.
சாதி ஒரு பிரச்னை என்றால், இங்கு சாதி, மதம் தவிரவும் பல்வேறு காரணங்கள் காதலிக்கவும் காதலித்தவனைத் திருமணம் செய்து கொள்ளவும் தடையாக இருக்கின்றன. ஒரு குழந்தையைக் குழந்தையாகப் பார்க்கும் மனப்பாங்கு பெரும்பான்மையான இந்தியப் பெற்றோரிடத்தில் இல்லை. அதே போல பெரும்பாலானோர் தங்கள் இன, குல விருத்தி மட்டும் தங்கள் சொத்துகளுக்கான வாரிசாகவும், தங்கள் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றவும், சமூகத்தின் கட்டாயத்துக்காகவும் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஓர் ஆணும் பெண்ணும் சுய விருப்பத்துடன் தங்கள் அன்பின், காதலின் அடையாளமாகக் குழந்தை பெற்றுக்கொண்டால், கண்டிப்பாக அந்தக் குழந்தையைக் கொலை செய்யுமளவு துணிய மாட்டார்கள்.
குழந்தைகளை வளர்க்கிறோம் எனச் சிறந்த கொத்தடிமைகளை உருவாக்குவதைத்தான் பெரும்பான்மையான பெற்றோர் எவ்வித உறுத்தலுமின்றி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் இட்டுக்கொள்ளும் பெயர்கள் அன்பு, அக்கறை, பாசம், பந்தம் என எத்தனை அழகான பெயர்கள் இருக்கோ அத்தனையும் தருகிறார்கள்.
என் பள்ளிப் பருவத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு பெண், என்னைவிட நான்கைந்து வயது சின்னப்பெண்தான். பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்பே காதலில் விழுந்தாள். டீன் ஏஜ் முடியும் முன்பே காதலில் விழுந்த அந்தப் பெண்ணிடம் காதலிக்கும் வயது இது இல்லை, காதலித்தாலும் அதைவிட உன் படிப்பு முக்கியம். அதை முடித்து வேலைக்குச் சென்று உனக்கென வருமானம் ஈட்ட தொடங்கிய பின் திருமணம் செய்து கொள் என்று பொறுமையாகப் புரிய வைக்கும் அறிவோ மனமோ அவளின் பெற்றோருக்கும் இல்லை.
வீட்டில் கெடுபிடி அதிகம், அத்துடன் அடி உதை. பதினேழு வயது பெண்ணுக்கு அப்போது காதலித்தவன் கூறிய ஆறுதலும் அன்பான வார்த்தைகளும், வயதுக்கே உரித்தான அசட்டு தைரியமும், ஹார்மோன்களின் விளையாட்டும் வீட்டைவிட்டு வெளியேற போதுமானதாக இருந்தது. வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதைத் தான் காதலின் வெற்றியாகத் தமிழ் சினிமாக்கள் பதிய வைத்திருந்த காலகட்டம் அது.
அந்தப்பெண்ணும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டாள். கணவனும் பெரிதாகப் படிக்கவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு வரையே முடித்து இருந்தான். இருவர் வீட்டிலும் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. எங்கோ சென்று கிடைத்த வேலை செய்து குடும்பம் நடத்தினர். மூன்று குழந்தைகள். கணவன் ஓடிவிட்டான். இன்று வரை பிறந்த வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. தனது இரண்டு பெண்களை ஒரு டிகிரி முடிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்து இருக்கிறாள். மகனை டிகிரி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள். வருமானம் வீட்டு வேலை, கை குழந்தைகள் குளிப்பாட்டி தருவது, ஏதோ ஒரு கடையில் பெருக்கி மாப் போடுவது என மூன்று நான்கு வேலைகள்.
42 வயதில் அந்தப் பெண் எனக்கு அக்கா போல இருக்கிறார். ‘முதல் பெண்ணுக்கு ரெண்டு பொண்ணுங்க, ஓரளவு சீர் செய்துவிட்டேன். ரெண்டாவது பொண்ணுக்கு ஒரு பையன், அவன் பிறந்த நாளுக்கு கொலுசு வாங்கித் தரணும், மகனை மேல படிக்க வைக்கிறேன்னு சொல்லி இருக்கேன். அதுக்கு இன்னும் ரெண்டு கடை வேலை செய்யணும். ஆனால் நேரம் கிடைக்க மாட்டேங்குது’ எனத் தன்னைப் பற்றி யோசிக்காமல் பேசிக் கொண்டே போகும் அந்தப் பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
பதின்ம வயதில் வந்த காதல், அதைச் சரியாகக் கையாளத் தெரியாதது அந்தப் பெண்ணின் குற்றமா? பக்கத்திலேயே தன் பெண் இப்படிக் கஷ்டப்படுவதை வசதியாக இருந்தும் 30 வருடங்களாகப் பார்க்காமல் இருக்கும் பெற்றோர்,
அவர்களிடம் சிலர் சென்று உங்க பெண் கஷ்டப்படுது, அவனும் இல்லை. வீட்டுக்குக் கூட்டி வரக் கூடாதா என்று கேட்டால், எங்க பேச்சை மீறிப் போனவளை நாங்கள் ஏன் வீட்டில் சேர்க்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
அந்தப் பெண், ‘நான் காசு, பணமா கேட்கப் போகிறேன்… என் உடம்பில் தெம்பிருக்கு, சாகும் வரை உழைப்பேன். இவ்ளோ வருசம் ஆன பின்னும் இன்னும் முகம் கொடுத்துப் பேசாததுதான் கஷ்டமா இருக்கு’ என்கிறாள்.
இந்த உலகத்தில் பெற்றோர் பாசம் போலச் சிறந்தது இல்லை என்பார்கள். ஆனால், நிஜத்தில் பெரும்பாலான பெற்றோர் பாசம் வன்மம் கலந்ததுதான். பெற்றோருக்கு அடிமையாக இருந்தால்தான் பாசம் காட்டுவார்கள். இது ஒரு காதல். என் உறவினர் பெண் ஒருவர் காதலித்தாள். வீட்டில் அதே மிரட்டல் வேறு வழியின்றி பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டாள். கணவர் வீட்டில் அவ்வளவு கொடுமைகள் எதிர்கொண்டாள். ஒரு கட்டத்தில் முடியவில்லை என்று வீட்டுக்கு வந்துவிட்டாள். தங்கள் மகள் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று புலம்பும் அவர்கள் ஒருபோதும் அவள் காதலித்தவனுடன் வாழ்ந்து இருந்தால் நன்றாக இருந்திருப்பாளோ என்றுகூட யோசிக்க மாட்டார்கள். அந்தளவு அவர்கள் அறிவை மறைத்து வைத்திருப்பது பாசம் என்றா நினைக்கிறீர்கள், இல்லை ஈகோ.
காதலிப்பது திமிர் என்று கூறும் இந்தப் பெற்றோர்தாம், காதலித்து விட்டதற்காகப் பெண்ணை ஒதுக்கி வைப்பதில் இருந்து கொலை வரை செய்கிறார்கள். இதில் அன்பு எங்கிருக்கிறது? அன்பு தனது ரத்த சம்மந்த உறவு கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்குமா? அன்பு பார்த்து, பார்த்து வளர்த்த குழந்தையை எதிரியாகப் பார்க்குமா? தன் பேச்சைக் கேட்காமல் தனக்காகத் துணையைத் தேடிக்கொண்ட பிள்ளையைக் கொலை செய்யுமா?
தனக்கென விருப்பு, வெறுப்பு எதுவும் இன்றி பெற்றோர் பேச்சுக்கு பூம் பூம் மாடு போலத் தலையாட்டினால் மட்டும்தான் பிள்ளைகள் மீது அன்பு காட்ட முடியும் என்றால், ஒரு நாயோ பூனையோ வளர்த்து தங்கள் அன்பைக் கொட்டி பூரித்துக் கொள்ளலாம். எதற்கு ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்து, அவர்களுக்குச் சிந்திக்கும் அறிவைக் கொடுத்து, பின் அவர்களாகச் சிந்தித்து சுயமாக முடிவெடுப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கொலை வரை செல்ல வேண்டும்.
உண்மையான அன்பு, உண்மையான காதல், எல்லாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் objectiveதான் பலருக்கும். அதை நிஜ வாழ்க்கையில் யாருக்கும் கொடுப்பதுமில்லை, கொண்டாடுவதுமில்லை.
படைப்பாளர்:
கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.