(‘தாலிபான்களும் நானும்’ என்கிற புத்தகத்தில், சுஷ்மிதா பந்தோபாத்யாய் ஓர் ஆப்கானிய நபரைத் திருமணம் செய்து காபூலுக்குச் சென்றபோது தனது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பதை விவரிக்கிறார்.)

தாலிபான்கள் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள். நான் ஏற்கெனவே பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றேன், ஆனால் பிடிபட்டேன். பின்னர் ஒரு மாதம் கழித்து அங்கிருந்து மீண்டும் தப்பித்தேன். இரண்டாவது முறை நான் தப்பிச் செல்வதற்கு முன்பு காகோலி என்னைப் பார்க்க வந்தாள். அவளைப் பார்க்கும்போது ஓர் ஆண் ஒரே படுக்கையை இரண்டு மனைவிகளுடன் அடிக்கடி பகிர்வதை நினைவூட்டியது. என் உடல் மன உளைச்சலில் நிலைமாறியது. அவர்களின் தாம்பத்திய வாழ்க்கைதான் எத்தனை திருப்பங்கள் நிறைந்திருக்கிறது. இந்தச் சிந்தனை என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்தது. இது ஒரு பெண்ணுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அவமானம். அந்த இரவின் இரண்டாவது பலியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனை என்னை ஒரு கலகக்காரியாக மாற்றியது.

பாராட்டுகளைப் பெற முயற்சிப்பதில் எனக்கு நானே மீண்டும் மீண்டும் ஆபத்தைத் தேடிச் சென்றிருக்கிறேன். வீட்டில் உள்ளவர்களுக்கு என் சமையல் பிடிக்கும் என்பதால், என் மைத்துனர்கள் அடிக்கடி விருந்தினர்களை அழைத்து வந்து அவர்களுக்காகச் சமைக்க என்னைக் கட்டாயப்படுத்துவார்கள். நான் மறுத்தால் என்னை அடிப்பார்கள்.

பெண்களைச் சித்திரவதைச் செய்வது என்பது இந்தச் சமூகத்தைப் பொருத்தவரை எந்த ஆணுக்கும் பெரும் வீரச் செயல். என் கணவர் வீட்டில் ஒரு கணம்கூட அமைதியான சிந்தனைக்கு இடமில்லை. ஆப்கானிஸ்தானில் எந்தப் பெண்ணுக்கும் சிந்திக்கவோ கூர்ந்து ஆராயவோ இடமில்லை. சாப்பிடுவீர்கள், அரட்டையடிப்பீர்கள், இருட்டியதும் விளக்குகளுடன் உங்கள் அறைகளுக்குச் சென்றுவிடுவீர்கள். மரபுகள், அடிப்படைவாதம், அறியாமை, கல்வியின்மை ஆகியவற்றின் உறையும் நிழலை எதிர்த்துப் போராடுங்கள். இது வறுமை மற்றும் வேலையின்மைக்கு எதிரான போராட்டம். இங்கே எப்படிப் புதிய சிந்தனைகளின் விதைகள் முளைக்கும்? எப்படி ஒருவர் வித்தியாசமாக சிந்திக்கக் கற்றுக்கொள்ள முடியும்?

தனியுரிமை என்பது நவீன நாகரிகத்தின் மிகப்பெரிய கொடைகளில் ஒன்று. ஆனால், ஆப்கானிஸ்தானில் எந்த வீடும் அதை வழங்கவில்லை. மூச்சுத் திணறும் இந்த வாழ்க்கை ஒவ்வொரு நாளும் நகர மறுத்து ஒரே இடத்தில் நிற்கிறது.

தனியுரிமை இல்லை, ஆனால் தனிமை உள்ளது. வேடிக்கை இல்லையா? ஆறு ஆண்டுகளில் காபூலின் மாலை நேரம் ஒரு முறைகூட எனக்கு வசந்தகாலக் காற்றைக் கொண்டு வந்ததில்லை. இங்கு நான் ஒருபோதும் ரொமான்டிக்காக உணர்ந்ததில்லை. சகித்துக்கொள்ள முடியாதவை மட்டுமே அனுபவித்திருக்கிறேன். குறிப்பாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரை தினமும் மாலையில் பனிப்பொழிவு நிகழும். எல்லா இடத்திலும் இருள். யாருடைய இதயத்திலும் ஒரு பாடல் இல்லை. யாருடைய சிந்தனையிலும் அன்பின் வார்த்தைகூட இல்லை. நான் விரும்பியதெல்லாம் கொல்கத்தாவில் உள்ள எனது அறைக்குச் சென்று தாகூரின் பாடல்களுடன் பாட வேண்டும் அல்லது, நஸ்ருலின் அல்லது ஜிபானந்த தாஸின் கவிதைகளைப் படிக்க வேண்டும்.

அவர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்திருந்தால், காஜி நஸ்ருல் அல்லது ஜிபானந்த தாஸ் கவிஞர்களாக ஆகியிருப்பார்களா என்ன? உங்களுக்குக்கே தெரியும், அவர்களால் ஒரு கடிதம்கூட எழுத முடியாது. ஆண்களாகிய அவர்களால் கூச்சலிட முடிந்தது எல்லாம், “எனக்கு உணவு கொண்டு வா. துணிகளைத் துவைத்து வை. விளக்கேற்றி வை. குழந்தை பெற்றுக் கொடு. விழுகின்ற பனியைச் சுத்தம் செய். இரவில் உன் உடலை ஒப்படைத்துவிடு” என்பது மட்டுமே.

ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் பாலியல் வாழ்க்கை எனக்கு வெறுப்பாகத் தோன்றியது; அது எனக்குக் குமட்டியது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அதுகூட கவர்ச்சிகரமான ஒன்றாகிவிட்டது. இந்த நாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான உறவில் ஒருவித வக்கிரம் இருக்கலாம், அல்லது அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இந்த வக்கிரத்தில்தான் அனைவரின் இன்பமும் இருக்கிறது. ஒருவேளை இதுவே அவர்களின் ஒரே பொழுதுபோக்கு வடிவமாகவும் இருக்கலாம். இங்கு வாழ்க்கை என்பது போரும் வறண்ட பாலைவனங்களுமே தவிர வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு வேளை பாலியல் வக்கிரம் மட்டுமே அவர்களுக்குச் சோலையாக இருக்கலாம். நான் இங்கே உடலுறவின் கடுமை மீது அலட்சியமாக இருக்க முயற்சிக்கிறேன். ஒரு பெங்காலியாக எனது நம்பிக்கை, மதிப்புகள், விருப்பு, வெறுப்புகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறேன். இது ஜான்பாஸால் (கணவர்) மட்டுமே சாத்தியமானது.

சில நேரம் ஆச்சரியப்படுகிறேன். தாலிபான்கள் என்னை மிகவும் சித்திரவதைக்கு உட்படுத்தியது, நான் அரை பிணமாகும் வரை அவர்கள் என்னை அடித்த விதம், என் ஆடைகளைக் கிழித்தது, இவை அனைத்தும் நான் மக்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சை அளித்ததற்கா? என்னைத் தண்டிக்க வேண்டும் என்கிற ஆசை, மக்கள் மத்தியில் கலக விதைகளை விதைத்ததில் இருந்தே தோன்றியதா? வேறு எந்தத் தூண்டுதலும் இல்லையா? ஆனாலும் வேறு காரணங்கள் இருப்பதாக உணர்கிறேன். தாலிபான்களைப் பொறுத்தவரை நான் ஒரு காஃபிர். ஓர் இந்து. வேறு மதத்தைச் சேர்ந்தவள். ஒரு பெங்காலி. ஒரு பெண். மேலும் காஃபிரைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று திருக்குர்ஆன் பலமுறை எச்சரித்துள்ளது.

தாலிபான்களால் மனிதாபிமானமற்ற அளவுக்குத் துன்புறுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு நான் தப்பித்தேன். முதல் முறையாக பாகிஸ்தானில் என்னைச் சிறைபிடித்து ஓர் அறையில் அடைத்து வைத்தனர். என் மைத்துனர்கள் 24 மணி நேரமும் காவலுக்கு நின்றார்கள். நான் இரண்டாவது முறை தப்பிக்கும்போது, நான் இரவு முழுவதும் சுடுகாடுகள், அகழிகளைக் கடந்து ஓடினேன். அதிகாலையில் நான் ரயிலில் ஏறும் நேரம் தாலிபான்கள் என்னை மீண்டும் சிறைபிடித்தார்கள். பின்னர் அது தொடர்பான ஒரு விசாரணை நடந்தது. அதில் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

என்னைப் போன்ற பெண்களுக்கு மரணத்தையே திருக்குர்ஆன் விதிக்கிறது. என்னை விபச்சாரி என்று பொய்யாகக் குற்றம் சாட்டினார்கள். ஏனெனில் அவர்களின் அதிகாரத்தை மீறி இரண்டு முறை தப்பிக்கும் துணிவு எனக்கு இருந்தது.

22 ஜூலை 1995. அன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அவர்களிடம் பிடிபட்டேன். என் சுதந்திரத்திற்காக நான் தப்பிக்க எடுத்த இரண்டாவது முயற்சியும் பலனின்றி போனது. இந்த வழக்கு விசாரணை எனது கணவரின் அண்ணன் மகன் ரபீக் வீட்டில் நடந்தது. தாலிபான் அமைப்பைச் சேர்ந்த பதினைந்து பேரும், எனது கணவரின் சொந்தங்கள் சிலரும் வந்திருந்தனர். அந்நாளின் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

‘நான் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்.’ ஜான்பாஸின் சொந்தங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். ஜான்பாஸ் திரும்பும் வரை காத்திருக்குமாறு அவர்கள் தாலிபான்களிடம் கெஞ்சினார்கள். தாலிபான்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.

“ஒரு காஃபிரால் எங்கள் தேசத்திற்குத் தீங்கு ஏற்படுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. இது எங்கள் பெண்களைப் பற்றி தவறான கருத்தை உருவாக்கும். உலகமே எங்கள் மீது குற்றம்சாட்டி விரலைக் காட்டும். நாங்கள் இஸ்லாத்தை அவமதித்து விட்டோம் என்று அவர்கள் கூறுவார்கள். ஒரு பெண் வழிதவறிச் செல்லும்போது, முதலில் அவளை அடக்கிவைக்க முயற்சி செய்யுங்கள் என்று குரான் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அவள் ஒழுக்கமாக இருக்க மறுத்தால், அவளைக் கொன்றுவிடு. இல்லையெனில் அது பாவம். இந்த வழிதவறிய செயலை ஏற்றுக்கொள்பவர்கள் பாவிகளாகி நரகத்திற்குச் செல்வார்கள். எனவே, அவள் சாக வேண்டும், இல்லையெனில் இஸ்லாத்தின் புனிதக் கோட்பாடுகளை மீறியதற்காக நாங்கள் குற்றவாளிகளாகி விடுவோம்” என்று தாலிபான்கள் கூறினார்கள்

எனவே ஜூலை 22ஆம் தேதி காலை பதினொரு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் பன்னிரண்டு நொடிகளில் நான் சுடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மரண தண்டனையை நிறைவேற்ற இதுவே சரியான நேரம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனக்கான கடைசி இரவில், எனது கடைசி உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ரஃபீக்கின் மனைவியும் மருமகளும் எனக்காக அழுது கொண்டிருந்தனர். கீழே விருந்தினர் அறையில் தாலிபான்களும் என் மாமியாரும் இருந்தனர். திரானை சாச்சா, மாமாயி சாச்சா, அப்துல்லா, பிஸ்மில்லா என அனைவரும் வந்திருந்தனர். இரவு உணவுக்குப் பிறகு, சித்திக் என்னிடம் கூறினார், குடும்பத்தில் யாருமே சரியாக சாப்பிடவில்லை என்று.

(சுஷ்மிதா பந்தோபாத்யாய் எழுதிய ‘தலிபான்களும் நானும்’ என்கிற நூலில் இருந்து இந்தப் பகுதி பதிப்பகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது.)

படைப்பாளர்:

ஜி.ஏ. கௌதம்

காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலை படிப்பை நிறைவு செய்தவர். மரகத நாணயம் உட்பட பல திரைப்படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணிபுரிந்தவர். அதைத் தொடர்ந்து திரைப்படங்களில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார். சமீபத்திய படத்தொகுப்பாக சித்தார்த் நடித்த’டக்கர்’ திரைப்படம் வெளியானது. இவர் படத்தொகுப்பு செய்த ‘ஸ்வீட் பிரியாணி’ கோவா, கேரளா, மும்பை உள்பட இந்தியாவில் உள்ள முக்கியமான குறும்பட விழாக்களில் வென்றதுடன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சினிமா தவிர்த்து எழுத்து, ஒளிப்படம், ஓவியத்திலும் ஆர்வமுள்ளவர். இவரது சிறுகதை, கவிதை, கட்டுரைகள் ஆனந்த விகடன், குங்குமம், உயிர்மை, அயல் சினிமா, வையம் போன்ற இதழ்களிலும் சொல்வனம், நுட்பம், வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.