நேர்காணல் : நிவேதிதா லூயிஸ்
எழுத்து வடிவம்: இரா. கோகிலா
எச்சரிக்கை – இசிபி என்பது பெண் உடலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வலிமையான ஹார்மோன்களைக் கொண்ட மாத்திரை. அவசரகாலத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த உகந்தது. அடிக்கடி பயன்படுத்துவது உடல் நலனுக்குக் கேடானது.
‘மார்னிங் ஆஃப்டர் பில்’ எனப்படும் இசிபி (ECP – Emergency Contraceptive Pill) எனப்படும் கருத்தடை மாத்திரைகள் பற்றி ஹெர்ஸ்டோரீஸ் இணைநிறுவனர் நிவேதிதா லூயிஸ், செயற்பாட்டாளர் அர்ச்சனா சேகருடன் நிகழ்த்திய உரையாடலின் கட்டுரை வடிவம் இது. கோவிட் பெருந்தொற்று முடக்கத்தின் போது இந்த மாத்திரைகள் கிடைக்காமல் பலர் அல்லலுற்றனர். அப்போது அர்சனா இந்த மாத்திரைகள் தன்னிடம் இருப்பதாகவும் வேண்டுவோர் பெற்றுக் கொள்ளாலாம் என்று ட்விட்டரில் செய்த பதிவு வைரலாகி, பல விவாதங்களைக் கிளப்பியது. வெளிப்படையாகப் பேசுவதில்லை என்பதாலேயே இல்லவே இல்லை என்று கருதப்படும் ஆக்டிவ் செக்ஸ் லைஃப் அதில் ஒன்று. இந்தக் கலந்துரையாடலில் இசிபி மாத்திரைகள், சட்டம் என்ன சொல்கிறது, சமுதாயம் என்ன சொல்கிறது என்பது பேசப்பட்டுள்ளது.
நிவேதிதா : செயற்பாட்டாளர், ஆய்வாளர், எழுத்தாளர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல தோழி. இந்தச் சமூகம் பேசத் தயங்கும், பேச மறுக்கும் விஷயங்களைப் பேசுபவராக, புறந்தள்ள முடியாத ஆளுமையாக இருக்கும் அர்ச்சனா இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.
உங்களைப் பற்றி முதலில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
அர்ச்சனா : சென்னையில் பிறந்து வளர்ந்த சென்னைப் பெண். வெளியிடங்களில் வசித்திருக்கிறேன். என்றாலும் சென்னைதான் என் களம். நிறைய செயற்பாட்டாளர்கள், கலெக்டிவ்ஸ் உடன் சேர்ந்து வேலை பார்த்திருக்கிறேன். உங்களைச் சந்தித்ததுகூட சென்னைக் கலைத் திருவிழா நிகழ்வில்தான். சுற்றுச்சூழல், மனநலம், உடல் நலம், பெண்ணியம் சார்ந்து பல வேலைகளைச் செய்திருக்கிறேன். இந்தியன் எக்ஸ்பிரஸில் பத்தி எழுதுகிறேன். ஜென்டாங்கிள் என்கிற பெயரில் பாலினச் சமத்துவம் பற்றி எழுதுகிறேன். 20 வயதில் இருந்து பெண்ணியம் பற்றிய கருத்துகளில் ஆர்வம் ஏற்பட்டு படித்து, பேசி, மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு செயலாற்றிவருகிறேன்.
நிவேதிதா : இசிபி அவசரகால கருத்தடை மாத்திரை என்றால் என்ன? எதற்கு எப்படி எடுத்துக்கொள்ளலாம்?
அர்ச்சனா: நான் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து இசிபி மாத்திரைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தெளிவான தகவல்கள் எதுவும் தெரியாது. நான் படித்தது பெண்கள் கல்லூரி. அங்கு அந்தத் தகவல் உண்மையிலேயே தேவைப்பட்டது. ஆனால், கிடைக்கவில்லை. இந்த இடைவெளியை நான் உணர்ந்த போது இதை விநியோகிக்கும் வேலையை நாமே செய்தால் என்ன என்று தோன்றியது. அப்படி ஆரம்பித்ததுதான் இது. நான்கு வருடங்களுக்கும் மேலாக இமெயில் மூலம் என்னைத் தொடர்ப்பு கொள்பவர்களுக்கு மாத்திரைகள் கொடுத்தோ அல்லது எங்கே கிடைக்கும், எப்படி வாங்கலாம் எனும் தகவலைப் பகிர்ந்தோ உதவுகிறேன். நான் தனியாக இதைச் செய்யவில்லை. என்னைப் போல பல பெண்கள் ஒன்றாக இணைந்து செய்கிறோம். இது அவசியமான ஒன்று என என்னைப் போலவே அவர்களும் நினைப்பதால்தான் இணைந்து உதவுகிறோம்.
பெருந்தொற்றுக் கால முடக்கத்தில் இரண்டு கிலோ மீட்டர்தான் பயணிக்க முடியும் என்கிற நிலையில் பலர் இந்த மாத்திரை கிடைக்காமல் சிரமப்பட்டனர். எங்களிடம் இருக்கிறது என்பதை அதனால்தான் ட்விட்டரில் பதிந்தேன். அது வைராலாகிவிட்டது.
இந்தியாவைப் பொறுத்தளவில் இது பொதுவெளியில் பேசக் கூடாத விஷயம். ஆனால், புள்ளி விவரங்களின் படி இந்த வகை மாத்திரைகள் உட்கொள்வதில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. ஆனாலும்கூட கருக்கலைப்பு, அபார்ஷன், டெர்மினேஷன் என்பதும் கருவுறுதலைத் தடுக்கும் ப்ரெவென்ஷன் இசிபி மாத்திரைகள் என்பதும் வெவ்வேறு எனும் புரிதல் அதிகம் இல்லை.
இசிபி – அவசர கால கருத்தடை மாத்திரை என்பது வலிமையான ஹார்மோன் மாத்திரை. மனிதரால் உருவாக்கப்பட்ட சிந்தடிக் ஹார்மோன் இது. ஓவரிகள் உருவாக்கும் லெவோனோஜெஸ்டிரால் என்கிற ஹார்மோனின் செயற்கை வடிவம். இதை உட்கொள்வதால் கருமுட்டை வெளிவருவது தடை செய்யப்படும் அல்லது தாமதமாகும். உடலுறவு கொண்ட 72 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை உட்கொண்டால் கர்ப்பம் ஆகாமல் தவிர்க்கும் வாய்ப்பு அதிகம். கரு உருவாகி கருக்கலைப்பு வரை செல்லாமல் உருவாகும் முன்பே தடுக்கும் வழிதான் இசிபி மாத்திரைகள்.
நிவேதிதா : இந்த மாத்திரைகள் கரு உருவாகாமல் தடுக்கும் என்பது எந்த அளவுக்கு நிச்சயம்?
அர்ச்சனா : இந்த மாத்திரை என்றில்லை. காண்டம் உள்ளிட்ட மற்ற எந்த கருத்தடை சாதனங்களுமே 100 சதவீதம் நிச்சயமாக கரு உருவாகாமல் தடுக்கும் என்று சொல்ல முடியாது. உடலுறவு கொண்டபின் எவ்வளவு விரைவில் எடுத்துக்கொள்கிறோமோ அந்தளவுக்குப் பலனும் சிறப்பாக இருக்கும். ஏற்கெனவே கரு உருவாகி இருந்தால் இந்த மாத்திரையால் எந்தப் பலனும் இல்லை. உருவான கர்ப்பத்தை இது கலைத்துவிடும் என நம்புவது ஜுரத்துக்கு ஜெலுசில் சாப்பிடுவது போல. ஆய்வுகளின்படி 95 சதவீதம் இது கரு உருவாவதைத் தடுப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிவேதிதா : இசிபி விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? பெரும்பாலும் அரசு கருத்தடை என்பதை குடும்பக் கட்டுப்பாடுடன் இணைத்தே பேசுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அர்ச்சனா : எந்த அரசின் கொள்கையும் பெண்ணியம் சார்ந்து யோசித்து எழுதப்பட்டது இல்லை. இந்தியாவில் இசிபியின் வரலாற்றைப் பார்த்தால் மக்கள் தொகைக் கட்டுப்படுத்துதல், குடும்பக் கட்டுப்பாடு எனும் வகைப்பாட்டின் கீழ்தான் வருகிறது. அரசாங்கம் குடும்பக்கட்டுப்பாடு என்கிற அளவில் இருந்து பெண்கள் நலன் என்பதாக இதை யோசிக்கத் தொடங்க வேண்டும். உடலுறவு என்பது குழந்தைக்காக என்றில்லாமல் மகிழ்ச்சிக்காகவும் என்று யோசிக்கவும் புரிந்துகொள்ளவும் வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கான வாய்ப்பை இசிபி கொடுக்கிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வையும் உரையாடலையும் தவிர்க்கவே இசிபி பற்றி வெளிப்படையாகப் பேசாமல் தவிர்க்கிறார்களோ என்கிற சந்தேகமும் எழுகிறது.
நிவேதிதா : செக்ஸுவலி ஆக்டிவாக இருப்பது தனிநபரின் தேர்வு என்று இதைப் பார்க்க வேண்டும்.
அர்ச்சனா : ஆமாம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், இரண்டாம் நிலை மையங்கள், மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் இசிபி மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். ஆஷா ஒர்க்கர்ஸ் வீடு தேடி வந்துகூட இந்த மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். ஆனால், இதை யாருக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது விவாதத்துக்கு உரியது. யார் இதைச் சாப்பிடலாம், எந்தச் சமூகத்தில் இதைக் கொடுக்கலாம் என்பதை அவர்கள் முன்முடிவுடன் அணுகுவதைப் பார்க்கையில் டிஸ்கிரிமினேஷன் பிரச்னையாகவும் இது இருக்கிறது.
நிவேதிதா : ஆஷா ஒர்கர்ஸ்க்கு நம் சமூகத்தில் பெரிய ரோல் இருக்கிறது. வீடு தேடிவந்து பெண்களின் உடல் நலனுக்கான உதவிகளைச் செய்கிறார்கள். செக்ஸுவலி ஆக்டிவ் பெண்கள் இருக்கிறார்கள் என்பதைச் சமூகத்தில் அங்கீகரிக்கிறார்களா, இல்லையா? ஆஷா ஒர்க்கர்ஸ் இதைக் கொடுப்பது திருமணமான பெண்களுக்கு மட்டும்தான் என்பது கருத்தரித்தலைத் தடுக்க மட்டும் தருவதாக இருக்கிறது. அப்படிதான் இருக்கிறதா?
செக்ஸுவல் ஆக்டிவிட்டி பற்றி இங்கு நாம் பேசுவதே இல்லை. உடலுறவு பற்றி ட்ராக் செய்வதும் குழந்தை இருக்கிறதா இல்லையா அல்லது பெற்றுக்கொள்ள விருப்பமா இல்லையா என்கிற விதத்தில்தான். உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில் ஆஷா ஒர்க்கர்ஸ் அதிகளவில் வேலை செய்கிறார்கள். ஆனால், இசிபி என்று வரும்போது இன்னொரு குழந்தை வேண்டாம் என்பவர்களுக்கு மட்டுமே என்பதாக யோசிக்கிறார்கள். அதுவும் ஏற்கெனவே குழந்தை பெற்று இன்னொன்று வேண்டாம் என்றால்தான். குழந்தையே வேண்டாம் என்று பெரும்பாலும் யாரும் சொல்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் திருமணமான பெண்களுக்கு மட்டுமே இந்த மாத்திரை கிடைக்கிறது.
நம் சமூகத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது பெரிய சாதனை போலப் பார்க்கப்படுகிறது. எனவே பெண்களுமேகூட ஒரு குழந்தை பெற்ற பிறகே இசிபி பயன்படுத்துகிறார்கள். நான் ஏற்கெனவே சாதித்துவிட்டேன். இன்னொரு முறை சாதனை செய்ய விருப்பம் இல்லை என்பதுபோல. குழந்தை பெற்றவர்களிடம் இசிபி மாத்திரை பயன்படுத்துவது பற்றிய கூச்சம் அல்லது அவமான உணர்வு இல்லை. ஆனால், முதல் குழந்தையே வேண்டாம் என்று சொல்லக் கூச்சம் வருகிறது. உடல்நலம் மற்றும் பொருளாதாரக் காரணங்களினால் மூன்றாவது வேண்டாம் என்று சொல்ல வராத தயக்கம் முதல் கருவை வேண்டாம் எனச் சொல்லும்போது வந்துவிடுகிறது.
இசிபி கேட்பவர் திருமணமாகதவராக இருந்தால் அதில் சங்கடங்கள் உண்டாகிறது. அடித்தட்டில் உள்ள எத்தனை பெண்கள் திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்கிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும். கணக்கே எடுக்காமல் இல்லவே இல்லை என்று கண்ணை மூடிக்கொள்ளக் கூடாது.
நிவேதிதா : தமிழகத்தைப் பொறுத்தளவில் திருமணத்திற்கு முன்பான உடலுறவு என்பது கிடையாது. அதுவும் கிராமத்தில் இல்லவே இல்லை என்று நம்பும் சமூகம். தமிழ்ப் பெண்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது என்று கூறி பார்க்கவே மறுக்கிறோம். இல்லையா?
அர்ச்சனா : நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு நடிகை திருமணத்துக்கு முன்பான உறவில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனப் பேசினார். அவர் வீட்டின் முன் துடைப்பக்கட்டை, செருப்போடு கூடிவிட்டார்கள். தமிழகம் முழுக்க வழக்கு வேறு தொடுத்தார்க்ள. இது நடந்து இன்றைக்குப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்றைக்கும் யாராவது ஒரு புகழ்பெற்ற நபர் அப்படி வெளிப்படையாகக் கருத்துச் சொல்லும் சூழ்நிலை உள்ளதா? அந்தப் புகழ்வீச்சு இல்லாததுதான் நான் பேசுவதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன். நான் பேசமல் இருந்தால்தான் தவறு என்று தோன்றுகிறது.
நிவேதிதா : விருப்பமில்லாது உருவாகிவிட்ட கருவை வேண்டாம் என முடிவு செய்யும் சூழல் திருமணமான பெண்களுக்கு இன்று இருக்கிறதா?
அர்ச்சனா : (சில விநாடிகள் யோசிக்கிறார்) எனக்குக் குழந்தையே வேண்டாம் எனச் சொல்லக்கூடிய சூழல் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பிரிவிலிஜ்ட் சமூகத்தில் மட்டுமே இருக்கிறது. திருமணமாகி ஒரு வருடத்தில் குழந்தை பிறக்காமல் போனால் கொடுமைப்படுத்தும் வீடுகள் இன்றும் உள்ளன. விவாகரத்து, அதிக வரதட்சனை, அடுத்த கல்யாணம் என்று தொல்லை நடக்கிறது. குழந்தை வேண்டாம் என்று திருமணமான பெண் சொல்ல முடியாது. ஆனால், ஒரு குழந்தைக்குப் பிறகு அடுத்தது வேண்டாம் என்று முடிவு செய்யும் சூழல் பெருப்பாலும் இருக்கிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களுமே போதும் என்று சொல்கிறார்கள். 35 லிருந்து 55 வயது வரை ஆண்கள் மாத்திரை வாங்க வருகிறார்கள். எல்லாமே தங்கள் இணையர்களுக்காக வாங்குகிறார்கள்.
நிவேதிதா : நீங்கள் சொல்லும் எண்கள் சுவாரசியமானதாக இருக்கிறதே…
அர்ச்சனா : இந்த மாத்திரைகளைக் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்து அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு இணையாக வேடிக்கையான சுவாரசியமான தகவல்களையும் அறிய முடிகிறது. திங்கள்கிழமை என்றால் எட்டிலிருந்து பத்து மாத்திரைக்கு ரெக்வெஸ்ட் வந்துவிடும். வீக் எண்ட் ஸ்பெஷல் போல. 18லிருந்து 52 அல்லது 55 வயது வரை மாத்திரை கேட்கிறார்கள். இளம் வயதினர் ஆக்வேர்டாக கேட்பார்கள். மத்திம வயதினர் பயத்துடன் கேட்பார்கள். முப்பதுக்குமேல் வயதுள்ள ஆணோ பெண்ணோ என்னால முடியாது அதனால மாத்திரை வேணும் என்னும்படி தயக்கம் இன்றிக் கேட்பார்கள். காரில் வந்து கணவன், மனைவி, பின் சீட்டில் குழந்தைகள் எனக் குடும்பத்துடன் வந்து வாங்கிப் போனார்கள். இரண்டு முறை இப்படி நடந்தது.
பொருளைக் கொடுப்பதால் வியாபாரம் மாதிரி இருக்கும் எனப் பலர் நினைக்கிறார்கள். அப்படி இருப்பதில்லை. பெண்கள் தனியாக வந்தால் உட்கார்ந்து நிறைய பேசுவார்கள். கேள்வி கேட்பார்கள். நான் கேட்காமலேயே நிறைய பகிர்ந்துகொள்வார்கள். குடும்பக் கஷ்டம் கதைகளை அன்றி உடலுறவு சம்பந்தமான விஷயங்களைப் பேசுவார்கள். அப்போதுதான் அறிமுகமான ஒரு நபரிடம் மாத்திரைக்காக காண்டம் ஃபெயிலியர் நடந்தது என்று சொல்லி ஏற்கெனவே ஒரு பார்டரைக் க்ராஸ் செய்துவிட்டார்கள். எனவே என்னிடம் எதைச் சொன்னாலும் நான் ஜட்ஜ் செய்ய மாட்டேன் என்று நம்பி வெளிப்படையாகப் பேசுவார்கள். கேள்விகள், குழப்பங்கள் அனைத்தையும் சொல்வார்கள். சமயங்களில் நண்பர்களிடம் பகிராத விஷயங்களைக்கூட என்னிடம் பகிர்ந்தவர்கள் உண்டு. அதையெல்லாம் கேட்கும்போது பெண்கள் பேசவும் சந்தேகங்களைக் களையவும் ஒரு தேடுதல் இருக்கிறது. தயக்கங்களை உடைத்து அதிகம் பேச நிறைய தளங்களை உருவாக்குவது அவசியம் என்று புரிகிறது.
நிவேதிதா : பெண்ணுரிமை சார்ந்த பிரச்னை என்று இதைப் பேசினாலே இது நகரம் சார்ந்த எலிட் வுமன் பிரச்னை, கிரமத்தில் இப்படி நடப்பதில்லை. அவர்களுக்கு உதவாது என்று நினைக்கிறார்கள். அப்படியா?
அர்ச்சனா : இது எல்லாப் பெண்களுக்குமான பிரச்னை. அவசரத் தேவையின் எண்ணிக்கையில் மாறுபாடு இருக்கலாம். எடுத்ததுமே இது எலிட் பிரச்னை என்று முடிவு செய்யக் கூடாது. அந்த வாதம் தப்பு. தமிழ் பெண்கள் ப்ராகெட்டில் இருந்து அர்பன் கும்பலைத் தூக்கிவிட்டார்கள். கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கிராமப் பெண்களிடம் இருக்கிறது. அவர்களைப் பாதுகாப்பது ஆண்கள் கடமை என அந்த உரையாடல் கிராமங்களில் நுழைவதைத் தடுக்கிறார்கள். பெண்ணிய வட்டத்தில்கூட தயக்கம் இருக்கிறது. இதைப் பேச மறுப்பதாலும் நெக்லெக்ட் செய்வதாலும் நாம் பெண்களின் செக்சுவல் ஆக்டிவிட்டி மட்டும் பேசப்படாமல் இல்லை.
ட்விட்டர் போஸ்ட்டுக்கு முன்பாக இமெயில் ரெக்வெஸ்ட் வரும். அதைச் சந்தேகப்பட்டதோ கேள்வி கேட்டதோ இல்லை. ஏனெனில் எங்கு தேடியும் கிடைக்காமல் வேறு வழியே இல்லாமல் பதில் வருமா, வராதா என்றுகூடத் தெரியாமல் ஈமெயில் மூலம் தொடர்புகொள்பவர்கள் அவர்கள். பெரும்பாலும் இளைஞர்களிடம் இருந்துதான் வரும். எனக்கு வெள்ளி இரவு ஒரு இமெயில் வந்தது.
ஆங்கிலம் தெரியாத நபர் என்பது அவர் மெயில் பார்த்து புரிகிறது. தனக்கும் தன் காதலிக்கும் இடையில் நடந்த உடலுறவைப் பற்றித் தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அந்த உடலுறவு ஆக்ஸிடென்டல் என்று குறிப்பிட்டிருந்தார். பொள்ளாச்சி அருகில் இருந்தார் அவர். கோவிட் நேர ஞாயிறு லாக்டவுன் நேரம். நான் சனிக்கிழமை காலையில்தான் அதைப் பார்த்து பதில் அனுப்பினேன். அன்று அவருக்கு கொடுக்க முடியாமல் போனால் சண்டேவும் முடியாது. 72 மணி நேரத்துக்கு மேல் பலனில்லை. என் போன் நம்பர் கொடுத்து பேசச் சொன்னேன். ஆனால், அதை அவர் பார்ப்பாரா, நேரத்தில் அவருக்கு மாத்திரையைக் கொடுக்க முடியுமா என்றெல்லாம் கவலையாக இருந்தது. அன்றே என் மெயிலைப் பார்த்துவிட்டு, காலை சுமார் 10 மணிக்கு வாட்ஸ்அப் செய்தார். தன் ஊரில் இன்டர்நெட் சரியாக வேலை செய்யாது எனவே டவுனுக்கு வந்தேன் என்றார். நான் அந்தப் பதிலைப் பார்க்க இரண்டு மணி நேரம் ஆனது. பார்த்ததும் போன் செய்தேன். பதறி அடித்து போனை எடுத்தவர் என்னால் இங்கே பேச முடியாது. அரை மணி நேரம் கொடுங்கள். வீட்டில் இருந்து வெளியே சென்று கால் பண்றேன் என்றார். மெயிலில் வயது குறிப்பிட்டிருந்தார். மிக இளம் வயது. எனில் அந்தப் பெண்ணும் இளையவர். அவரிடம் தகவல்களை விசாரித்தேன். கோயம்புத்தூர் அருகில் இருக்கும் நண்பர்களை வைத்து ஏற்பாடு செய்ய முயன்றேன். “தவறுதலாக நடந்துவிட்டது. பிரச்னை ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது” எனக் கவலையுடன் பேசினார். நான் எவ்வளவோ முயன்றும் என்னால் நேரத்துக்கு மாத்திரையைக் கொண்டு சேர்க்க முடியவில்லை. திங்கள் அன்று வாட்ஸ்அப்பில் விசாரித்தபோது பதிலில்லை. அதனால் நான் மேலும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டேன். ஆனால், இந்த நிகழ்வு இன்னும் மனதில் இருக்கிறது.
இதுவே ஓர் ஆதாரம்தான். பொள்ளாச்சி மட்டும் இல்லை. ஒரே ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் பேசவில்லை. எல்லா இடத்தில் இருந்தும் தொடர்ப்பு கொள்கிறார்கள். மதுரை, ஈரோடு என எல்லா இடத்திலும் இந்தப் பிரச்னை இருக்கிறது.
கிராமங்களில் இல்லவே இல்லை என்று தள்ளிவிட முடியாது. கிராமத்தில் இருந்து சின்ன வயசுப் பையன் ஒருவன் எனக்கு மேசேஜ் அனுப்பி கேட்கிறார் எனில் நாம் அக்நாலெட்ஜ் செய்யவேண்டியது அவசியம். இளைஞர்களுக்கு செக்ஸ் பற்றிய ஆர்வம், உடல் பற்றிய ஆர்வம், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கம் எல்லா இடங்களிலும் கிராமம் நகரம் வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இதைப் பற்றி பேசமாட்டோம் ஆனால், எல்லாப் பெருமையும் கொண்டு போய் பெண்ணின் வெஜினாவில்தான் வைத்திருப்போம்.
எங்கே எப்படிச் சந்தித்தார்கள் என்று தெரியாது. ஆனால், கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரும் என்பதுபோல கர்ப்பத்தை எவ்வளவு நாள் மறைக்க முடியும். அதைப் பற்றி யோசிக்கும் போது ஆணவக் கொலைகள் நடக்கும் இடங்களில் தவறாக நடந்த ஒரு விஷயம் பெரிய பிரச்னை ஆகாமல் இருக்க இந்த இசிபி உதவும்.
இப்போது நான் அடுத்த கட்டமாக ஒவ்வாெரு மாவட்டத்திலும் இருக்கும் நண்பர்களிடம் சில மாத்திரைகளைக் கொடுத்து வைப்பது பற்றித் திட்டமிடுகிறேன். மதுரை அருகில் இருந்து கால் வந்தால் மதுரையில் இருப்பவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தகவல் கொடுத்து உதவ நினைக்கிறேன். இப்போதைக்கு கோயம்புத்தூர், விழுப்புரத்தில் இதைச் செயல்படுத்தி இருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டமாகச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
நிவேதிதா : இந்த மாத்திரைக்குத் தடை இல்லை என்றாலும்கூட இதை வாங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது?
அர்ச்சனா : வெளிப்படையான தடை கிடையாது. இதைச் சொல்ல ஷேடோ பேன், ப்ளாங்கெட் பேன் என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். சட்டவிரோதமும் கிடையாது. அரசு சார்ந்த எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தெளிவு இல்லை என்பது முதல் காரணம். கர்ப்பத்தைத் தடுக்கும் இந்த மாத்திரையைக் கர்ப்பத்தைக் கலைக்கும் மாத்திரை என நினைக்கிறார்கள் பலர். கர்ப்பம் கலைக்கும் மாத்திரையை எப்படி என் கடையில் விற்பேன் எனத் தயங்குகிறார்கள். அடுத்த காரணம் இது இருக்கிறதா, இல்லையா எனத் தெரியாமல் மக்களும் கேட்கத் தயங்குகிறார்கள். நமது ஏரியா மெடிக்கல் கடைகள் பெரும்பாலும் நம் குடும்ப நண்பர்களைப் போல நம்மைப் பற்றி மொத்த வரலாறும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். இதனாலும் கேட்கத் தயக்கம் இருக்கிறது. தூரத்தில் உள்ள மற்ற கடைகளில் வாங்குவதும் நடைமுறையில் சாத்தியம் இல்லை. எல்லாக் கடையிலும் இருக்கும் என்றால் எங்கோ ஒரு கடையில் நிறுத்தி வாங்கிவிடலாம். ஒவ்வாெரு கடையாக ஏறி இறங்கி இருக்கிறதா என விசாரிப்பதில்லை. இதனால் அடுத்த மாதம் மாதவிடாய் வரும் வரை பதற்றமாகவே காலம் கழிக்கிறார்கள். கேட்கவில்லை என்றால் கடைக்காரர்கள் டிமாண்ட் இல்லை என்று ஸ்டாக் வைப்பதும் இல்லை. மூன்றாவது காரணம் இது சட்ட விரோதமா என்கிற குழப்பம் ஃபார்மசிக்களில் இருக்கிறது. இசிபியில் இருக்கும் ஹார்மோன் அளவு 1.5 எம்ஜி அளவுக்கு மேல் இருந்தால் மருத்துவரிடம் இருந்து பிரிஸ்க்ரிப்ஷன் வேண்டும் என்கிறார்கள். இது உண்மையா, இதைக் கண்காணிப்பது யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. எனவேதான் டைரக்டர் ஆஃப் ட்ரக் கன்ட்ரோல் போர்ட் எழுத்துப்பூர்வ அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்கிறோம். இது சட்ட விரோதம் இல்லை. தடை செய்யப்பட்டதில்லை. டிமாண்ட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மற்ற எல்லா அத்தியாவசிய மாத்திரைகள் போல இதையும் ஸ்டாக் வைக்க வேண்டும் என்கிற அறிக்கை அனுப்ப கோரிக்கையை வைக்கிறோம்.
நிவேதிதா : நீங்கள் இதற்காக க்ளாரிஃபிகேஷன் வாங்கி கொடுத்தீர்கள் இல்லையா?
அர்ச்சனா : சில வழக்கறிஞர்கள் எனக்கு உதவினார்கள். இந்தக் கோரிக்கையை ட்ராஃப்டாக எழுதி மெயில் அனுப்பி இருந்தேன். இரவு 9 மணிக்கு நான் அனுப்பிய அந்த மெயிலுக்கு மறுநாள் காலை 9.45க்கு எனக்கு போன் செய்துவிட்டார் எங்கள் ஏரியா ட்ரக் இன்ஸ்பெக்டர். நான் நேரம் கழித்து உறங்கியதால் அவர் போன் காலை எடுக்கவில்லை. இரண்டு மணி நேரம் முயன்று பின் எங்கள் தெருவில் இருக்கும் மெடிக்கல் கடை அண்ணனிடம் விசாரித்து என் வீட்டுக்கே வந்துவிட்டார். அரசைக் குறை சொல்வதைப் போல வேகமாக அவர்கள் செயல்படும் விதத்தையும் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். காலை முதல் வேலையாக எல்லா ஃபார்மசிக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் தகவல் அனுப்பிவிட்டு, எல்லா ஏரியா ட்ரக் இன்பெக்டர்களுக்கும் தெரிவித்துவிட்டு, எங்கள் ஏரியாவுக்கு ஒரு ட்ரக் இன்ஸ்பெக்டரை அனுப்பி நேரில் எனக்கும் தகவல் சொன்னார்கள். இதே நேரத்தில் ரியா குப்தா என்கிற மெடிக்கல் காலேஜ் மாணவியும் இதைப் பற்றிப் பேசி அவரும் வழக்கறிஞர் மூலம் ட்ராஃப்ட் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆங்காங்கே தனித்தனியாக வேலை செய்யாமல் ஒன்றாகச் செய்யலாம் எனக் கலந்து பேசி 8 நபர்கள் இணைந்த வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம். ஏனெனில் அவர் நேரில் வந்து சொன்னதில் இருந்து நான் புரிந்து கொண்டது நடவடிக்கை எடுத்துவிட்டோம். இதற்கு மேலே இதைப் புகாராகக் கொண்டு செல்ல வேண்டாம் என்பதைத்தான். சென்னையில் ஸ்டாக் வைப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், மற்ற இடங்களில் நாம் வற்புறுத்த முடியாது என்றார். அவர் வந்து சென்றதும் டைரக்டருக்கு ட்ரக் இன்ஸ்பெக்டர் வந்ததையும் அவர் கொடுத்த பதில்கள், எடுத்த நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதை மெயிலாக அனுப்பினேன். இதில் தொடர் நடவடிக்கைகள் தேவைப்படுவதால் நாங்கள் குழுவாக இணைந்து செயல்படுகிறாேம்.
நிவேதிதா : காசு போட்டு பட்டனைத் தட்டினால் ஆணுறை வருகிறது. ஆனால், பெண்ணுக்கான மாத்திரை அப்படி இல்லை. திரும்பவும் ஏஜென்சிகள் பெண்ணுடலில் ஆதிக்கம் செலுத்தும் என்பதையே இது காட்டுகிறது. ஏன் இந்த மாத்திரை எளிதாகக் கிடைக்கும்படி இல்லை?
அர்ச்சனா : ஆணுறை குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதும் ஒரு காரணம். இளைஞர்கள் குடும்பக்கட்டுப்பாடு எனும் காரணத்துக்காக ஆணுறையைப் பயன்படுத்துவதில்லை. எச்.ஐ.வி., எஸ்.டி.டி. போன்ற பால்வினை நோய்கள் தடுக்கும் நோக்கிலேயே ஆணுறை பயன்படுத்தப்படுகிறது. பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள விழிப்புணர்வும் ஆணுறையின் அதிகப் பயன்பாட்டுக்குக் காரணம். லாக்டவுனில் ஆணுறைகள் அதிக விற்பனை என்று ஒரு செய்திகூடப் பார்த்தேன். செக்ஸை எக்ஸ்ப்ளோர் செய்யும் இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவதில்லை. ஆணுறை உடலுறவின் மகிழ்வைக் குறைக்கும் என்றொரு நம்பிக்கையும் இருக்கிறது. பாலியல் நோய்கள் வந்தாலும் பரவாயில்லை, கருத்தரித்தாலும் பரவாயில்லை எனப் பிடிவாதமாக ஆணுறை பயன்படுத்தாதவர்களும் இருக்கிறார்கள். காம்ப்ளிகேட்டர் க்ரே ஏரியா இது.
ஒருமுறை பதினெட்டு வயதுப் பெண் மெசேஜ் செய்து மாத்திரை கேட்டார். நான் உடனே வந்து வாங்கிக்கொள்ளச் சொன்னேன். அவர் வரவில்லை. மறுநாள் நான் அவருக்கு மெசேஜ் செய்து வேறு எங்காவது கிடைத்ததா என விசாரித்தால், நான்கு நாள் கழித்துதான் என் பாய் பிரண்டைச் சந்திக்கிறேன். அப்போது வாங்கிக் கொள்கிறேன் என்றார். அதிர்ச்சியாக இருந்தது. ஆண் நண்பருக்கு பிறந்தநாள் வருவதால் கொண்டாடிவிட்டு மாத்திரை போடுவது அவர் திட்டம். நண்பனுக்கு ஆணுறை உபயோகிக்க விருப்பமில்லை. எனவே நான் மாத்திரை சாப்பிடுவேன் என்றார். வலுவான ஹார்மோன் மாத்திரையை உட்கொண்டால் பக்கவிளைவுகள் உண்டாகும். என் உடல் என் உரிமை என்றாலும்கூட இந்த மாத்திரை பற்றிய முழுப்புரிதலுடன் அந்த முடிவு எடுக்கப்படுகிறதா அல்லது ஆண் நண்பனைத் திருப்திப்படுத்த எடுக்கப்படுகிறதா என்பது விவாதத்துக்கு உரியது.
ஒரு இளவயது ஆண் என்னிடம் 4 மாத்திரை கேட்டார். எத்தனை பெண் தோழிகள் உனக்கு என்றேன். ஒரு கேர்ள் ஃப்ரண்ட்தான் என்றார். இதைச் சாப்பிட்டால் மாதவிடாய் சுற்றை மாற்றிவிடும். ஒரு சுற்றில் ஒருமுறைதான் இது உபயோகப்படும். ஒவ்வொருமுறை உடலுறவு முடிந்தவுடன் போடும் மாத்திரை அல்ல. பக்கவிளைவுகள் உண்டு. இதெல்லாம் தெரியுமா என்றால் தெரியாது. இதைப் போட்டால் கரு உண்டாகாது என்பது மட்டும் தெரியும் என்றார்.
மாத்திரை இருக்கிறது என்பதால் ஆணுறை அணிய மாட்டேன் எனச் சொல்லும் ஆண்களும் இருக்கிறார்கள். பெண்ணின் உடல் நிலை பற்றி அக்கறை அந்த ஆணுக்கு அக்கறை இல்லை. இந்த எல்லா உரையாடலையும் வெளிப்படையாகப் பேச இசிபி பற்றிய வெளிப்படையான பேச்சும் உதவும்.
எனவே அரசு, வாய்மொழி உத்தரவாக இல்லாமல் எழுத்துப்பூர்வமாக ஒவ்வொரு ஃபார்மசிக்கும் அனுப்ப வேண்டும். விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். எங்கெல்லாம் இல்லையோ அங்கே மக்கள் கேள்வி கேட்க வேண்டும். ட்ரக் கன்ட்ரோல் டைரக்டர் உதவுவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். நகர்ப்புறம் இல்லாத ஊர்களில் எல்லாக் கடைகளிலும் இல்லாவிட்டாலும் சில கடைகளில் மட்டுமாவது எல்லா நேரத்திலும் ஸ்டாக் வைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை தன்னார்வலர்கள்தாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவ வேண்டும்.
நிவேதிதா : கலாச்சாரக் காவலர்கள் – இசிபி. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அர்ச்சனா : துப்பட்டா போடச் சொல்வது, யார் யாரிடம் பேசுகிறார்கள் எனக் கண்காணிப்பது என்று எல்லா இடத்திலும் மாரல் போலீசிங் இருக்கிறது. கார் பார்க்கிங்கில் வைத்து ட்ரக் டீலிங்கா என என் அம்மா என்னைக் கிண்டல் செய்வதுண்டு. அப்படி எல்லா வீடுகளிலும் சதாரணமாகப் பேசிக்கொள்ள முடியாது. நிறைய பேர் வீட்டில் பேசி உதை வாங்கும் போதுதான் மாரல் போலீசிங் செய்பவர்கள் உள்ளே நுழைவார்கள். தற்போது அந்த அளவுக்கு இசிபி பற்றிய உரையாடல் நிகழவில்லை.
நிவேதிதா : மருத்துவ முறையிலான கருக்கலைப்பு என்பது திருமணமான பெண்கள், இளவயது பெண்கள் என அனைவருக்குமே எளிதில்லை என்பதுதான் இங்குள்ள சூழல். இந்நிலையில் தேவையற்ற கர்ப்பத்தைக் கலைக்க இசிபி ஒரு தீர்வாகுமா?
அர்ச்சனா : இசிபி மாத்திரை எடுத்துக் கொண்டாலும் கூட கரு உண்டாகிவிடுவதுண்டு. இசிபியோ அல்லது கருக்கலைப்போ, இரண்டுமே பேசக்கூடாத விஷயங்கள்தாம் இங்கு. இந்தியா அதிக கட்டுப்பாடுகள் கொண்ட நாடு. கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டாலும் ஏகப்பட்ட விதிகள் உண்டு. ஜட்ஜ்மெண்ட்கள், சங்கடங்கள், மேனிபுலேஷன் அனைத்தையும் தாண்டித்தான் கருக்கலைப்பு சாத்தியம். குடும்பம், மருத்துவர், சமூகம் என அனைவரும் வெளிப்படையாக இதில் பங்கேற்கின்றனர். உன் குடும்பப் படத்தைப் பார்த்து குழந்தை உனக்கு வேணாமா சொல்லு, சாமிகிட்ட எப்படி உனக்குக் குடுத்த வரத்தை வேணாம்னு சொல்லுவ என்றெல்லாம் மகப்பேறு மருத்துவர்களே கேட்கிறார்கள். முடியாது என மறுக்காமல் விதவிதமாகப் பேசி கருக்கலைப்பு வேண்டாம் என்று சொல்ல வைத்துவிடுவாரகள்.
நான் ஒரு பெண்ணையும் பையனையும் அழைத்துக் கொண்டு கைனக்காலஜிஸ்ட்டைச் சந்திக்கச் சென்றேன். உனக்கு அந்தப் பையனை பிடிக்கும்தானே என்று கேட்டு கல்யாணம் செய்து வைக்க முயன்றார். குழந்தை வந்துவிட்டது, கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே என்று பேசினார். மத நம்பிக்கை, சமூக நம்பிக்கைகளை வெளியே வைத்து, தன் வேலையைச் செய்யாமல் என் மகளை இப்படி விடுவேனா என்று எமோஷனலாகப் பேசுகிறார்கள். அதனால்தான் சில ஜோடிகள் என்னைத் துணைக்கு அழைத்துச் செல்கிறார்கள். மேடம் அவங்க உங்க மகள் இல்ல மேடம், பண்ணுங்க மேடம் என்று என்னால் சொல்ல முடியும். இளம் வயதுப் பெண் தனியாகக் கருக்கலைப்புக்குச் சென்றால் அப்படிச் சொல்ல முடியாது.
எனக்கு 10 கைனிக் தெரியும் இப்போது. என்னைத் தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு உதவுகிறேன். நான் காலேஜ் படிக்கும் போது எனக்குத் தெரிந்த பெண் எங்கோ ஒரு கிளினிக்கில் அபார்ஷன் செய்து கொண்டு வரும்போது வழியில் பேவ்மெண்ட்டில் அதிக ரத்தப்போக்கால் மயங்கி விழுந்துவிட்டார். மாத்திரலை அல்ல. டி அண்ட் சி வழிமுறை. கூட யாரும் இல்லாமல் இப்படி ஆனது. எனக்குக் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்தால் உதவ வேண்டியது மருத்துவரின் கடமை. கடவுள் இருக்கிறாரா, அந்தப் பெண் மகளா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லாதது. அந்தப் புரிதல் வந்தால்தான் இந்த இல்லீகல் ராக்கெட் நிற்கும்.
கடந்த சில வாரங்களில் அபார்ஷன் கிட் கொடுப்பதன் அவசியம் பற்றிப் புரிந்துகொண்டேன். அந்த கிட்டில் இரண்டு மாத்திரைகள் இருக்கின்றன. அதில் மைஃபிரிஸ்டோன் மற்றும் மிசோபிரோஸடோல் (mifepristone and misoprostol hormones) ஹார்மோன்கள் இருக்கின்றன. இந்த மாத்திரை மருத்துவர் பிரிஸ்க்ரிப்ஷன் உடன் உட்கொள்ளும் ஷெட்யூல் எச் மாத்திரை. அந்த மருந்துச் சீட்டை பார்மசியில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். மறுமுறை அதையே பயன்படுத்தக் கூடாது என்பதற்காக. மகப்பேறு மருத்துவமனையுடன் இருக்கும் பார்மசியில் மட்டும் இருக்கும். ஒரு விண்ணப்பத்தை நிரப்பினால் மட்டுமே இந்த மாத்திரையை வாங்க முடியும். பெயர், முகவரி எல்லாம் கொடுத்து இதை வாங்க அனைவரும் தயங்குகிறார்கள். வேண்டாம் என நினைக்கும் குழந்தையின் அப்பா பெயரை நிரப்ப வேண்டும். இதனால்தான் பாதுகாப்பான வழியில் கருக்கலைப்பு செய்யாமல் பலர் சட்டவிரோத வழிகளை நாடுகிறார்கள். இந்த மாத்திரை சாப்பிட்டு ரத்தப்போக்கு நிகழ்ந்து கரு கலைந்தாலும்கூட ஒரு வாரத்துக்குப் பின் மருத்துவமனை வந்து ஸ்கேன் செய்து எதுவும் மிச்சம் மீதி இல்லாமல் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும்.
சட்டவிரோதமாக இந்த மாத்திரையை அதிக விலை கொடுத்து வாங்குபவர் எப்படித் தன் ஆரோக்கியத்தை உறுதி செய்வார்? இப்படி ஸ்கேன் செய்ய வேண்டும் என்கிற தகவல்கூட அவருக்குத் தெரிந்திருக்காது. வெளிப்படையாகப் பேச ஆரம்பிப்பதே அனைத்தையும் சட்டப்பூர்வமாக அணுகுவதற்கான வழி.
நிவேதிதா : இசிபி விஷயத்தில் அரசு செய்ய வேண்டியது என்ன? பெண்களிடம் வரவேண்டிய விழிப்புணர்வு என்ன? குடும்பங்களின் பங்கு என்ன?
அர்ச்சனா : இசிபி மாத்திரைகள் சட்டப்பூர்வமானது என்பதைப் பல வழிகளில் தெளிவுபடுத்துவதும், இருப்பை உறுதி செய்வதும் அவசியம். மகப்பேறு மருத்துவர்களுக்கு உடலுறவு பற்றிய சட்டங்கள், உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது அரசின் கடமை.
பெண்கள் தங்கள் உடலைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அதிக கேள்விகளைக் கேட்க வேண்டும். அதற்கான நபர்களைத் தேடிக் கண்டடைய வேண்டும். சரியான கேள்விகள், சரியான நபரிடம் என்பது முக்கியம். தனக்குக் கிடைக்கும் தவறான தகவல்களைப் பரப்பாமல் சரியான தகவல்களைப் பலருக்கும் பகிர வேண்டும். என்னைப் போல உதவும் நபர்கள், நெட்வொர்க்குகள் தொடர்பு கிடைத்தால் அதை மற்றவருக்கும் சொல்லி உதவுங்கள். இசிபி இருப்பதால் ஆணுறை பயன்பாட்டைத் தவிர்க்காதீர்கள். நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த மாத்திரை. அடுத்தவரை உங்கள் உடல்நிலையைப் பாழாக்க விடாதீர்கள். நீங்களே உங்கள் உடலைப் பாழாக்கிக்கொள்ளாதீர்கள்.
இசிபி மட்டுமின்றி உடலுறவு, பாலியல் அத்துமீறல் என எதையும் குடும்பங்கள் பேசுவதில்லை. சென்ற தலைமுறை பேசவில்லை என்றாலும் இந்தத் தலைமுறையில் இருப்பவர்கள் நட்புடன் பேசும் குடும்பமாக இருந்தாலும் தானே முன்னெடுத்து இது சம்பந்தமான உரையாடலை குடும்பங்களில் நிகழ்த்தலாம்.
நிவேதிதா : உடலுறவு உரிமைகள் பற்றிப் பேசும்போது அரசு என்ன செய்ய வேண்டும்? குடும்பம் எப்படி ஆதரவாக இருக்க வேண்டும்?
அர்ச்சனா : இதுதான் முதல்முறை தமிழில் இவ்வளவு பேசியது. லோக்கல் மொழியில் அதிகம் பேச வேண்டியது அவசியம். அப்படிப் பேசினால்தான் எல்லாருக்குமானது என்று புரியும். இன்ஸ்டாவில் பேசுகிறோம். டிக்டாக்டில் பேசினோமோ? எல்லா இடத்திலும் பேச வேண்டும். அதைச் செய்தால் கவர்மெண்ட் பார்க்கும். அரசு தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்றே அமைதியாக இருக்கிறது. ஆனால், நாம் பேசினால் அதற்கான நடவடிக்கையை எடுக்க அரசு முனையும் என்றே நினைக்கிறேன்.
குடும்பத்தைப் பொறுத்தவரை மை ஹானர் ஈஸ் நாட் இன் மை வெஜினா என்று போர்ட் பிடித்து காலை எழுந்தவுடன் நின்று காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். (சிரிக்கிறார்) ஒரு நாளில் பல வருடப் பிரச்னையை மாற்ற முடியாது. அதிகம் பேசுவது அதை நோக்கிச் செல்லும்.
நிவேதிதா : இந்த இளம்வயதில் இவ்வளவு தெளிவோடும் அறிவோடும் பலர் பேசத் தயங்கும் விஷயங்களைத் தைரியமாக பேசினீர்கள். கருத்துகளை எடுத்து வைத்தீர்கள். வேறெங்கும் கிடைக்காத அவசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி.
அர்ச்சனா : என்னை பேச அனுமதித்தற்கு நன்றி.
Feeling wowed at your efforts kiddos to you
Thank you so much!