விசாரணையின்போது, வழக்கின் போக்கில் இந்த வீடியோ முக்கியமான ஆவணமாக மாறக்கூடும். இதை சமூக ஊடகங்களில் பகிர்வதற்குமுன், அது காவல்துறையிடம்/பொறுப்பான விசாரணை அதிகாரியிடம் முறைப்படி அளிக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்டதா என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்தவில்லை.
வழக்கை விசாரித்து வரும் தஞ்சை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ரவளி, “ஜுவனைல் ஜஸ்டிஸ் சட்டப்படி, குற்றத்துக்கு ஆளான பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும், எந்தக் குற்றமாயினும், அவரது புகைப்படத்தை யாரும் வெளியிடக்கூடாது, அவரது பெயர், ஊர் உள்ளிட்ட தகவல்களை வெளியிடக்கூடாது. அது குற்றம்”, என தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
இரு மதப் பிரிவினரிடையே மோதலை உருவாக்குவதற்காகவே இவ்வாறு சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வெளியிடப்படப்பட்டிருப்பது பொறுப்பற்றதனத்தைக் காட்டுகிறது. வழக்கு விசாரணையின் போதே இவ்வாறு பாதிக்கப்பட்டவரின் படங்கள், வீடியோக்கள் வெளியிடப்படுவது, அது மரண வாக்குமூலமாகவே இருந்தாலும்கூட, வழக்கின் போக்கை மாற்றக்கூடியது. ‘மீடியா டிரையல்’ என்பதைக் காரணம் காட்டி குற்றவாளி தப்பிக்கவும் இது ஏதுவாக அமைந்துவிடுகிறது. சட்டப்படி இது குற்றம்/குற்றமல்ல என்பது வாதத்துக்குரியது எனினும், அடிப்படை அறத்துக்கு எதிரானது, இரு மதத்தினரிடையே வன்மத்தை ஊதிப்பெருக்கும் விஷமத்தனமானது.
‘மைனர்’ குழந்தைகளின் படங்களை, வீடியோக்களை வெளியிடுவதில் நாம் இன்னும் கவனமாக இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. ஐநாவின் யுனிசெஃப் அமைப்பு, மைனர்களின் புகைப்படங்கள், மற்றும் இன்ன பிற தகவல்களை வெளியிடுவதில் கவனம் கொள்ளவேண்டும் எனச் சொல்கிறது. குழந்தைகளின் பெற்றோரின் அனுமதி பெற்றே எந்த ஊடகமும் அவர்களது படங்களைப் பதிவிடலாம் எனக் குறிப்பிடுகிறது.
நம்மில் எத்தனை பேர் சமூக ஊடகங்களில் நம் குழந்தைகளின் படங்களை, தெரிந்தவர்களின் குழந்தைகள் படங்களை, அவர்களின் அனுமதி பெற்றுப் பகிர்கிறோம்? ‘மைனர்’ என்பதால் அவர்களுக்கு தனக்கான தேர்வை செய்துகொள்ள உரிமை இல்லை என்றாலும், குறைந்தபட்ச ‘அறமும்’, ‘கவனமும்’ எடுத்துக் கொள்வதில் தவறில்லையே? இதில் குழந்தைகளை டிவி ஷோக்களில் நடிக்கவைத்து, பெயரும் புகழும் சம்பாதிக்கும் பெற்றோர் வேறு ரகம்.
ஏதோ ஒரு குற்றத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, இளம் சிறுமிகளுக்கு சட்டம் தரும் பாதுகாப்பை நாம் சமூகமாக ஏன் தரத் தவறுகிறோம்? பாதிக்கப்படுபவரின் அடையாளத்தின் மீது சமூகத்துக்கு ஒருவித ‘ஆவல்’ ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை சமூகம் அறிந்துகொள்வதன் மூலம், பாதிக்கப்பட்டவரும், ஒருவேளை அவர் இறந்துபோனால் அவரது குடும்பமும் அடையும் மன உளைச்சலை எப்போதாவது நாம் உணர்ந்திருக்கிறோமா?
சமீப காலமாக சமூக வலைதளங்களில் இவ்வாறான பாதிக்கப்பட்டவர்களின் படங்களை வெளியிடுவது அதிகரித்துவருகிறது. சமூக வலைதளங்கள் மிகக் கூர்மையான ஆயுதங்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவற்றை யாருக்கு எதிராக, எதற்காக நாம் பயன்படுத்துகிறோம் என்பதில் கண்டிப்பாக கவனம் தேவை. கட்சித் தலைவர்கள், அதிலும் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இப்படிப் பொறுப்பற்ற விதத்தில் ‘மைனர்’ பெண்ணின் வீடியோக்களைப் பகிர்வது கண்டிக்கப்படவேண்டியது. அரசியல் மற்றும் சுய லாபத்துக்காக பிறரை, குறிப்பாக இறந்துபோனவர்களை ‘பயன்படுத்த’ வேண்டாமே?
They do have the right to rest with dignity. Let us be sensitive towards them.