இன்று அன்னை சத்தியவாணி முத்துவின் பிறந்தநாள். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லை. மாலை இல்லை, மாலையிட சிலையும் இல்லை. திராவிட ஊடகங்கள் எதுவும் அவரை நினைவுகூரவுமில்லை. வரலாற்றின் அடுக்குகளில் மறைக்கப்பட்ட சத்தியவாணி நம்மைப் பார்த்து என்ன நினைப்பார்? வரலாறு எப்போதும் ஆண் மையமானது; ஐயமில்லை. அரசியலும் அவ்வாறேதான்.

பிப்ரவரி 15, 1923 அன்று சென்னை ஜார்ஜ் டவுனில் பிறந்த சத்தியவாணி, எதற்கும் யாருக்கும் அஞ்சாதவராக வளையவந்ததை வரலாறு பதிவு செய்துள்ளது. பெண், அதிலும் ஒடுக்கப்பட்ட தலித் பெண் ஒருவர் எந்தப் பின்புலமும் இன்றி, தமிழக அரசியலில் இந்த நிலையை எட்டியது உண்மையில் இமாலய சாதனையே!

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற இடத்தைப் பிடிக்க சத்தியவாணி பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல.

இன்றைய சூழலில் நினைத்துப் பார்த்தாலும் தலித் பெண் ஒருவர் அமர முடியாத உயரத்தை தன் கடும் உழைப்பாலும், போராட்ட குணத்தாலும் பெற்றவர் சத்தியவாணி. தெருத்தெருவாக வண்டிகட்டிக்கொண்டு சென்று திராவிடக் கருத்தாக்கத்தை த மிழ்நாடெங்கும் விதைத்தவர் அவர். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பெரும் புரட்சியாக 1974ம் ஆண்டிலேயே ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி ஒடுக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார்.

இன்றைய அரசியல் சூழலில் தலித் பெண் அரசியல்வாதிகள் என்ன நிலைப்பாடுடன் இருக்கிறார்கள்; அவர்களை பல்வேறு கட்சிகள் எப்படி கைப்பாவைகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எங்கே இருந்தாலும் அவர்களின் குரலுக்கான வெளி இன்றுவரை கிடைக்காமல் போனது சோகமே.

தன் அரசியல் நிலைப்பட்டால் சொல்லொணா துன்பத்துக்கு ஆளானவர் சத்தியவாணி. கட்சியிலிருந்து நீக்கம், புதிய கட்சி தொடக்கம், அதை நடத்த முடியாமல் முட்டுக்கட்டைகள், எழுதிய நூல் முடக்கம், சொத்து முடக்கம், தனிப்பட்ட வாழ்க்கையில் சீரழிவு என எல்லாவற்றையும் தாங்கி, தாண்டித்தான் அவரது அரசியல் வாழ்க்கை வளர்ந்தது. அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் அவ்வாறான ஒரு பெண் தலைவரைக்கூட நம்மால் உருவாக்க முடியவில்லை என்பது கூட்டாக நம் சமூகத்துக்குத் தோல்வி. நம் பெண் பிள்ளைகளை அரசியல்படுத்த நாம் தவறிவிட்டோம் என்பதற்கு சாட்சி இன்று காணும் பல்வேறு சிக்கல்கள்.

சவலைகளாக நம் வீட்டுப் பிள்ளைகளை வளர்த்திருக்கிறோம். இன்றைய இளம் சமுதாயம் டிக் டாக் வீடியோக்களுக்குத் தரும் ஆர்வத்தை அரசியலில் காட்டத் தொடங்கினால் நன்றாக இருக்கும்! எத்தனை வீடுகளில் வெளிப்படையாக ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களிடம், குறிப்பாக சிறுமிகளிடம் அரசியல் பேசுகிறார்கள்? சீரியலை அரை மணி நேரம் ஒத்திவைத்துவிட்டு அரசியல் உரையாடல்களை, செய்திகளை நுணுக்கமாக உற்றுநோக்கி, அது குறித்து விவாதங்களை வீடுகளில் உருவாக்க முயற்சி செய்திருக்கிறோமா?

அரசியல் பழகுவோம். இப்போது இல்லையெனில், இனி எப்போது?