என் அம்மா கனகுமணி, அங்குவிலாஸ் நிறுவன முகவராக இருந்த செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். என் தாத்தா பெரிய தோட்ட துரவுகளுடனும், அங்குவிலாஸ் புகையிலை முகவராகவும் இருந்ததால் அவர்களுக்கு வசதிக்குக் குறைவில்லை. என் அம்மாவுடன் பிறந்தது ஓர் அண்ணன் மட்டுமே. அவர் ஆசிரியர்.

என் தந்தை ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அவர்கள் குடும்பத்திற்குச் சேர்த்து ஒரு தோட்டம் இருந்தது. அதில் சோளம் ,பருத்தி போன்றவற்றை மட்டுமே பயிரிட முடியும். என் தந்தை ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். என் அம்மாவின் பதினேழு வயதில் அவருடைய காதல் திருமணம் நடைபெற்றது.

அப்பொழுதும் என் தாயாருக்கு இவர்கள் நிறைய நகை கொடுத்திருக்கிறார்கள்.  மூன்று கொத்து சங்கிலி, நீலக்கல் அட்டிகை, ஜிமிக்கி, தலையில் நிலா/ நட்சத்திர பரையத்து, நெற்றிச்சுட்டி, நெளிவு மோதிரங்கள், கை நிறைய வளையல்கள் இத்யாதிகள். 1965 ஆம் ஆண்டு நடந்த ஆடம்பரத் திருமணம்.

எங்கள் தந்தை கடையில் வேலை செய்து கொண்டு வந்த வருமானம் போதாது. பொருளாதாரச் சிக்கல் உருவானது. எனவே எங்கள் தாத்தா (அம்மாவின் அப்பா) ஒரு கடையை வாங்கி, அதில் பொருட்களை நிரப்பி எங்கள் தந்தைக்கு அந்தக் கடையை வழங்கியிருக்கிறார். அதற்குத் தேவையான பொருட்கள் வாரம் ஒரு முறை ஏர்வாடியில் இருந்து மாட்டு வண்டி நிறைய வரும். அது தவிர தேவையான பொருட்கள் மட்டுமே என் தந்தை கொள்முதல் செய்யச் செல்வார். என் தாத்தா வீட்டின் அமோக ஆதரவு காரணமாகவே கடை வியாபாரம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  

வரிசையாக ஈராண்டு இடைவெளியில் நாங்கள் ஆறு குழந்தைகள் பிறந்தோம்.. படிப்புச் செலவு ஒன்றும் பிரமாதம் இல்லை. மளிகைக் கடையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதால் என் தாயாரும் தொழிலில் பங்கெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு உழைப்புதான்.

எங்கள் கடையின்  திண்ணையின் உயரத்தை என்னால் தொட முடியாது. கடை இரண்டு அறைகளைக் கொண்டது. முதல் அறையில் பாதி இடத்தில் அரிசி மூட்டைகள் பிரித்த நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் அரிசியின் விலை குறிக்கப்பட்டிருக்கும். இன்னோர் பாதி இடத்திற்குள் ஒரு ட வடிவ குழி இருக்கும். அதன் ஆழம் இடுப்பு உயரம் இருக்கும். அதற்குள் இறங்கி நின்றுதான் வணிகம் செய்வார்கள். அதற்குள்ளாகவே அங்கும் இங்கும் நடந்து கொண்டு பொருட்களை எளிதாக எடுத்து விடலாம். அதன் மேல் தராசு தொங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு முறை உள்ளே போகும்போதும் வரும்போதும் தம்  பிடித்து ஏற வேண்டும்;  இறங்க வேண்டும்.

முதல் திண்ணை ஓரத்தில் கண்ணாடிச் சட்டம் பொருத்திய பெட்டிகளில் அரிசி முறுக்கு, கடலை மாவு முறுக்கு, பொரிகடலை வைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னால்தான் என் தந்தை நின்று கொண்டிருப்பார். அவரது இடப்பக்கம்,‘மிளகுப் பெட்டி’ என்று சொல்லும் பல அறைகளைக் கொண்ட மசாலா பொருட்கள் இருக்கும். அது கிடைமட்டமாக தரையில் இருக்கும். சுமார் 20 அறைகள் இருக்கும். மூடி கிடையாது. சமையலறைக்குத் தேவையான மசாலாப் பொருட்கள் ஒவ்வொரு பகுதியிலும் கொட்டி வைக்கப்பட்டிருக்கும்.

என் தந்தை ஐந்து மணி அளவில்  கடையைத் திறந்துவிட்டு , கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்று விடுவார். அப்போது என் தாயார்தான் கடையைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.  நாங்கள் காலையில் கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்தால் என் அம்மா கடையிலிருந்து கருப்பட்டியும் காபித்தூளும்  எடுத்துத் தருவார். காபி பானையில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஊற்றி இரண்டையும் உள்ளே போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி நாங்களே குடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நாங்கள் சவரி முத்து மாமா தோட்டத்திற்கு குளிக்க சென்று விடுவோம்.

அப்போதெல்லாம் வீடுகளில் காலை உணவு பெரும்பாலும் பழைய கஞ்சிதான்.ஆனால் நாங்கள் கடை வைத்திருந்ததால் என் தந்தை மளிகை பொருட்கள் வாங்கச் செல்லும் நாட்கள் தவிர மீதி நாட்களில் என் தாயார் சிறுபயிறு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை போன்றவற்றை அவித்துத் தருவார்.  முடியாத நாட்களில் பொரிகடலையும் முறுக்கும் கருப்பட்டி காப்பியும் காலை உணவாக இருக்கும். எதுவும் இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது கணபதி ஹோட்டல்.

எங்கள் அம்மா காலையில் கடையில் இருக்கும் நாட்களில் எங்களுக்குத் தலை கட்டி விடுவதுதான் பெரிய பிரச்னை. மூவருக்கும் தலை கட்ட வேண்டும். எங்கள் அம்மா வணிகத்தையும் கவனித்துக் கொண்டு எங்களுக்குத் தலை சீவிவிடுவார்.

கடையில் கூட்டம் அதிகமாக இருந்தால், எங்கள் அம்மா கையில் இருக்கும் சீப்பு கத்தி போல் தோன்றும். பொம்மையின் தலையைச் சுழற்றுவது போல் மிக வேகமாகப் பின்னி ரெட்டை ஜடை போட்டு… இப்போது நினைத்தாலும் தலை வலிக்கிறது.

ஒரு வழியாக நாங்கள் பள்ளிக்குப் புறப்பட்டு விடுவோம். என் தந்தை வந்த பிறகு என் அம்மா சமையல் செய்யப் போய்விடுவார். சமையல் செய்யும்போது எங்கள் அத்தை என் அம்மாவுக்கு உதவுவார். சமையல் முடிந்ததும் எங்கள் அம்மா மீண்டும் கடைக்கு வந்துவிட வேண்டும்.

எது எப்படிப் போனாலும் என் தந்தைக்கு மதியம் சாப்பிட்டது முதல் நான்கு மணி வரை தூங்கியாக வேண்டும். நான்கு மணிக்குப் பிறகு மீண்டும் எங்கள் அப்பா கடைக்கு வந்துவிடுவார். இரவு 10 மணி வரை கடை திறந்திருக்கும்.

இப்போது என் அம்மாவின் ஓய்வு நேரம். அது எப்படி இருக்குமெனப் பாருங்கள். அப்போது, எங்கள் அம்மாவும் அத்தையும் சேர்ந்து வெங்காயம், பூண்டு போன்றவற்றின் அதிகப்படியான தோல்களை நீக்க புடைத்துச் சுத்தம் செய்வார்கள்.

கடையின் உள் அறையில்தான் பொருட்கள் மொத்தமாக இருக்கும். மூடை மூடையாக வற்றல், சீனி, புளி, கருப்பட்டி, கடலைப் பயறு வகைகள், பிண்ணாக்கு வகைகள், எண்ணெய் டின்கள் என நிரம்பி வழியும். அங்கு சிதறிக் கிடக்கும் பொருட்களை அடுக்கி வைப்பார்கள். நாள்தோறும்  இருவேளை அவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும்.

திருமண வீடுகளுக்குக் குடும்பத்துடன் சேர்ந்து செல்ல இயலாது. வெளியூர் பயணங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏனெனில் கடை திறந்தே ஆக வேண்டும். கடையை நம்பி அத்தனை பேர் வருவார்கள். இப்போது போல் அப்பொழுது மொத்தமாகப் பொருள் வாங்குவதில்லை. அன்றாடம் கடைக்குச் செல்வது என்பது வழக்கமான செயல்பாடுகளுள் ஒன்று. நிறைய பேருக்கு வார இறுதியில் சம்பளம் கிடைக்கும். சிலருக்கு மாதம் ஒரு முறை ஊதியம். அவர்கள் கடையில் பற்று வைத்துதான் பொருள் வாங்குவார்கள். இப்படிக் கடன் வைத்துப் பொருள் வாங்குபவர்கள் நாம் திடீரென கடையை அடைத்து விட்டால் எங்கே செல்வார்கள்? அதனால் கடையை அடைக்க முடியாது.

கடைக்குப் பல சமூகத்தைச் சார்ந்தவர்கள் வருவார்கள். அதனால், பலருடன் சுமுகமாகவும் நட்புறவுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இன்றும் எந்த இடத்தில் பார்த்தாலும் யாராவது ஒருவர் ‘தாயி நீ விக்டர் மகள்தானே?’ என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு மக்களிடம் என் தந்தையின் பழக்க வழக்கம் இருந்தது.

என் தாயார் கொஞ்சம் கண்டிப்பானவர். என் தாயார் கடையில் இருக்கும் சமயத்தில் கடன் வாங்க வருபவர்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனால் என் தந்தை இருக்கும் நேரத்தில் யாருக்கும் எந்தக் கவலையும் இருக்காது. என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். அதுவும் கலகலப்பாகப் பேசிச் சிரித்துக்கொண்டே கொடுப்பார் பாருங்கள்! மறுநாள் கடை நோட்டைப் பார்த்ததும் என் தாயார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எது வெடித்தாலும் என் தந்தை கடைசி வரை கடன் கொடுப்பதை நிறுத்தவில்லை. அது அவரது இயல்பாகவே இருந்தது.

பொங்கல் வேளையில் கேட்கவே வேண்டாம். எங்கள் கடையின் வடக்கு புறம் உள்ள வீட்டின் தலைவாசல், ஓடையைப் பார்த்து இருக்கும்… எனவே அந்தச் சுவரின் பரப்பு நீளமாக இருக்கும். அந்தப் பகுதி முழுவதும் லாரி லாரியாக வரும், கரும்புக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எங்கள் கடைக்கு எதிரில் இருந்த ராஜாமணி மாமா கடையில் அச்சு வெல்லம் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டிருக்கும். கடைக்கு வெளியே மஞ்சள் குலைகள், கிழங்கு வகைகள் எனப் பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த இடமே ஒரு சந்தை போல் இருக்கும்.

நாங்கள் அச்சு வெல்லத்தை ஒவ்வொரு கிலோவாக நிறுத்து நிறுத்து பேப்பரில் செய்யப்பட்ட கவரில் போட்டு மடக்கிச் சணலால் கட்டி வைப்போம். பொங்கலுக்கு முன்பு, நாங்கள் இரவு பகலாக நேரம் கிடைக்கும் வேலைகளில் செய்தித்தாள்களில் கவர் செய்வோம். மற்ற நாட்களிலும் செய்வோம் என்றாலும் பொங்கல்  நாட்களில் மிகவும் கூடுதலாகச் செய்ய வேண்டும்.

இந்தக் கால இடைவெளியில், ஓர் அக்கா, சிறுமியாக இருக்கும் போது, குளத்தில் தவறி விழுந்து இறந்து ஆறாத வலியை ஏற்படுத்திச் சென்று விட்டாள். என் அம்மாவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு, இருமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு தங்கை போலியோவால் பாதிக்கப்பட்டாள். மருத்துவச் செலவு, என் தாயார் மருத்துவமனையில் இருக்க வேண்டிய தேவை. என் அம்மாவுக்கு முன்பைப் போல் உழைக்க முடியவில்லை. எப்படியோ எங்களை வளர்த்து ஆளாக்கி, நல்ல நிலைக்குக் கொண்டு வந்தார்.

வீட்டு வேலைகளில் எங்கள் அத்தையின் உதவி பெருமளவு இருந்ததால் என் அம்மாவால் எங்கள் தந்தையுடன் இணைந்து கடையைச் சிறப்பாக நடத்த முடிந்தது. எங்கள் அத்தை மட்டும் எங்களுடன் இல்லை என்றால் எங்கள் பாடுதான் திண்டாட்டம். பத்து விரலால் உழைத்தால்தான் ஐந்து விரல்களால் சாப்பிடலாம் என்று சொல்வார்கள். கடின உழைப்பு, நேர்மை, பொருட்களின் தரம், நம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் குடும்ப விவரம் தெரிந்திருத்தல், அவர்களோடு இணைந்து பழகுதல் போன்றவை ஒரு வணிக வெற்றியின் தாரக மந்திரம். எல்லாத் தொழில்களும் கொண்டாட்டமும் திண்டாட்டமும் நிறைந்ததே. அது என் அம்மாவிற்கும் பொருந்தும் கடையின் பெயர் கலையரசி (இறந்து போன என் அக்காவின் பெயர்) ஸ்டோர்ஸ். வழக்கில் விக்டர் கடை. அப்பாவைவிடக் கூடுதல் நேரம் உழைத்த அம்மாவின் பெயர்? எங்கள் நினைவுகளில் மட்டுமே!

நாங்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம் என்றால் அதன் அடிநாதம், என் அன்னையின் முடிவெடுக்கும் திறன் மட்டுமே. சரியான நேரத்தில் தேவையானவற்றைப் படிக்க வைத்து அனைவர் வாழ்விலும் ஒளியேற்றியது என் அன்னைதான் என்றால் அது மிகையாகாது.

அவரைக் கடைசி வரை நாங்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டோம்… அவருக்கும் பிரஷர் இருந்தது. காலை வரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். கிறிஸ்துமஸ் அன்று மதியம் சாப்பிட்டார். மாலையில் பிரஷர் அதிகமாகி கீழே விழுந்தவர் எழவில்லை. நாகர்கோவில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். சிகிச்சைப் பலனின்றி அன்று இரவே அவர் இறந்து விட்டார். அவருக்கு மிக மிகச் சிறப்பான இறுதிப்பயணம் அமைந்தது என்பது பெரும் ஆறுதல்.

*

படைப்பாளர்:

வி. வாசுகி. 21 வயதில் திருமணம். 5 ஆண்டுகள் கழித்து, தான் பயின்ற பள்ளியிலேயே பணிக்குச் சேர்ந்து 7 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறார். அதன்பின்  22 ஆண்டுகளாக அருகாமையில் இருக்கும் ஊரில் பணிபுரிகிறார். சிறுவயது முதல், வாசிக்கும் வழக்கம் கொண்டவர். கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தொன்மை மீது ஆர்வம் உடையவர்.