அது ஓர் இந்தியக் குடிமைப் பணி தேர்வுக்குப் பாடம் நடத்தும் வகுப்பறை. அறை எங்கும் குளிரூட்டப்பட்டு இடது பக்கம் பெண்களும் வலது பக்கம் ஆண்களும் அமர்ந்திருந்தனர். தோராயமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

ஒரு திட்டம் பற்றி ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். ‘புறணி என்றாலே பெண்களுக்கு என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்தத் திட்டம் பெண்கள் புறணி பேசுவதை அடிப்படையாகக்கொண்டது’ என்று அவர் கூறினார். (அவர் பெண்களை மையப்படுத்தி கூறவில்லை. அவர் அப்படிப்பட்ட ஆளுமில்லை.) அந்தத் திட்டத்தை விளக்கினார். எனக்கு ஆச்சரியமளித்த விஷயம் என்றால், அங்கிருந்த பெண்களும் சிரித்ததுதான்.

பெண்களுக்கு ரகசியம் காக்கத் தெரியாது என்ற ரீதியில் அமைந்தது அந்தப் பேச்சின் போக்கு. ஆனால், யோசித்துப் பாருங்கள். புறணி என்பது ஒருவரைப் பற்றிப் பேசுவது. ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவது. பேசுவது மனிதர்கள் இயல்பு. ஆணோ பெண்ணோ பேசுவதின் மூலம்தான் செய்திகளைப் பகிர்கிறார்கள். புறணி ஒரு வகை தகவல் தொடர்பு பரிமாற்றம்.

பெண்கள் மட்டும் புறணி பேசுவதும், ரகசியம் காக்கத் தெரியாதவர்கள் என்று பேசுவதும் one kind of sexism. இப்படிப் பல ஜோக்குகள் பெண்களைப் பற்றிக் கூறுவார்கள். அவற்றை எல்லாம் பெண்களும் இயல்பு போல் சிரித்துக் கொண்டு கடப்பார்கள். பெண்களுக்கு மட்டும் வாய் இருப்பது போலவும் ஆண்கள் டெலிபதி மூலம் தகவல் பரிமாற்றம் செய்வதும் போல் இருக்கிறது. உண்மையிலே செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

என்னுடைய உறவினர் ஒருவர் விளையாட்டாக என்னிடம், “நீயெல்லாம் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கற… எப்படியும் அடுப்பும் கரண்டியும்தான்..” என்று கூறினார்.

சமைப்பதும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதும் அவ்வளவு எளிதான செயல் இல்லையே. இந்த மாதிரி ஜோக்குகள் சமைப்பதையும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதையும் தரக்குறைவாகப் பார்க்கச் செய்கிறது.

இந்த மாதிரி விளையாட்டான ஜோக்குகளில் செக்ஸிசம் மறைந்திருக்கிறது. எது தவறோ அதை அந்த இடத்திலேயே சரிசெய்யுங்கள்.

You have to stand up and raise your voice if its wrong. இல்லை என்றால் இந்த மாதிரி பேச்சுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

படைப்பாளர்:

மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.