பெண் உணர்வுகள் பிரச்னைகள் சார்ந்து பல மொழிகளிலும் திரைப்படங்கள், வலைத்தொடர்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படம் ’கேர்ள் பிரண்ட்.’ காரணம், இதில் இருக்கும் யதார்த்தம். அம்மாவும் உடன் பிறந்தவர்களும் இல்லாத, அப்பாவிடம் வளரும்  ‘அடக்கமான’ ஒரு பெண் பூமாதேவி. வெறும் முன்கோபமும் தன்னைப் பற்றி மட்டுமே முன் நிறுத்திச் சிந்திக்கும், எல்லா இடங்களிலும் தனது ஆளுமையைச் செலுத்தும் விக்ரம். ஒரு பலவீனமான தருணத்தில் விக்ரமிடம் உருவான மோசமான உறவிலில் பூமாதேவி சிக்கித் தடுமாறி வெளிவரும் கதை. வலிந்த திணிப்புகள் அற்று இயல்பாகச் சொல்ல முயற்சிக்கிறது.

முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கச் செல்லும் பூமாதேவி வகுப்பில் பேராசிரியர் மாணவர்களைப் பார்த்து இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் கேட்க, எழுத்துத் துறையில் குறிப்பாகக் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதுவத்தில் ஆர்வம் இருப்பதாகவும் அதற்காக இதைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறும் போது அவளின் தெளிவான சிந்தனை வெளிப்படுகிறது. பின்னர் அவள் ’செய்ய வேண்டிய விஷயங்கள்’ பட்டியலின்  மூலம் அவள் தன் நிலைப்பாட்டில் எவ்வளவு ஒருமுகமாக இருக்கிறாள் என்பதும் வெளிப்படுகிறது.

விக்ரம் எல்லா இடங்களிலும் நிதானம் இன்றி அடிதடியில் இறங்கும் தன்னை ஒரு வீரனாக, சாகசக்காரனாக முன்னிறுத்திக் கொள்ளும் ஆள். அது போன்ற சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ள நேரிடுகிறது. பின்னர் ஹாய், ஹலோ என்கிற இரண்டொரு சந்திப்பிலேயே அவளையும் அறியாமல் அவன் வயப்படுகிறாள். அவனது செயல்கள், பேச்சு எல்லாம் ’டோண்ட் ஒர்ரி பேபி, நான் இருக்கேன். நான் பார்த்துக்கறேன்’ என்று சொல்லியே அவளைக் கட்டிப்போடுகிறான். ஸ்வீட் டாக்ஸிக். அவள் உருகிப் போகிறாள். ஒரு கட்டத்தில் தன் அனுமதி, விருப்பம் எல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை அவனுக்கு என்று தோன்றும் நிமிடம் பிரச்னை தொடங்குகிறது.

பூமா பிரச்னையை  மிகுந்த முதிர்ச்சியுடனும் பொறுமையுடனும் கையாள முயற்சிக்கிறாள். விக்ரம் ஒரு விடலைப் பையனைப் போல் அழுகை, மிரட்டல் என்று முதிர்ச்சியற்று பிரச்னையை மோசமாகுகிறான்.

இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய காட்சிகள் என்று சொல்ல முடியாதபடி படம் நெடுக அழுத்தமான காட்சிகள்.

பூமா விக்ரமின் அம்மாவைச் சந்திக்கும் காட்சி. அவர் வந்ததில் இருந்து பரபரப்புடன் இருப்பதும், அவர் முன்னால் வராமல் அடுக்களையிலேயே நிற்பதும், அதற்கு அவன் கொடுக்கும் விளக்கம் எல்லாவற்றையும்விட, அவன் ’கவலைப்படாதே! அவர்கள் அந்தக் காலம். நான் உன்னை அடிக்க மாட்டேன்’ என்று இயல்பாகச் சொல்லும்போது ஒரு நிமிடம் அவள் கண்ணாடியில் தன்னை அவன் அம்மாவின் பிரதிபலிப்பாகப் பார்க்கும் இடம் கிளாஸ்.

பூமாவின் தோழி, ‘யோசிச்சு பாரு, அவன் உன்னைப் பார்த்துக்கல. நீதான் அவனைப் பார்த்துக்கிற’ என்று அவளின் செய்ய வேண்டிய விஷயங்கள் முன் நின்று  பார்க்கும் காட்சி.

பூமா துப்பட்டாவைக் கையாளும் விதம். பூமாவின் அப்பா அதிகாலையில் பூமாவைச் சந்திக்க வரும் நேரம் அவள் அறையில் விக்ரம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி, சண்டை போட்டுக் கோபமாகப் பேராசிரியரைப் பார்க்க செல்லும் இடத்தில்கூட,   ஓடிச் சென்று அறையில் இருக்கும் துப்பட்டாவைச் சுற்றிக்கொள்ளும் இடம். அவள் நம்பிக்கையுடன்  அப்பா தன்னைப் புரிந்து கொள்வார் என்று நினைக்கும் போது மிக மோசமான வார்த்தைகளை உதிர்க்கிறார் அப்பா.

விக்ரமின் மிரட்டலுக்குப் பயந்து தனது பேராசிரியரைத் துணைக்கு அழைக்கும்போது, உடன் வரும் அவர், ‘அவளிடம் நீ யாரையோ பார்த்துப் பயப்படுகிறாய். யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அதற்காக நீ இப்படி ஒளிய ஆரம்பித்தால் முடிவில் நீ காணாமல் போய்விடுவாய்’ என்கிறார்.

“நீ என்கூட எத்தனை தடவ படுத்தேன்னு ஊரைக் கூட்டிச் சொல்வேன்” என்று விக்ரம் சொல்லும்போது,  கழுத்தைச் சுற்றி இருக்கும் துப்பட்டாவை வீசி எறிந்துவிட்டு, விழா அரங்கில் மைக் முன் நின்று, “நீயும் நானும் சேர்ந்துதானே படுத்தோம். அப்புறம் மயிறு உனக்கில்லாத வெக்கம் எனக்கெதுக்கு? நானே சொல்லிட்டேன் இப்ப என்னடா பண்ணுவ?” என்று கேட்கும் இடம் அட்டகாசம்.

படைப்பாளர்

ரமா கவிதா

தீவிர வாசிப்பாளர். கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதிவருகிறார். ஓவியத்திலும் நாட்டம் உண்டு. எதையும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்.