‘துப்பட்டா போடுங்கள் டோலி’ ரகப் பதிவுகளையும், மீம்களையும், கிண்டல் செய்தும், சிரித்தும் கடந்துவிடுகிறோம். துப்பட்டாவுக்கு பின் இருக்கும் தன் உடல் மீது பெண்ணுக்கு இருக்கும் கோபமும், குற்றவுணர்வும் எத்தனை பேருக்கு தெரியும் தோழர்களே ?
பெரும்பாலான பெண்களுக்கு தன் உடல் மீது எந்த பெருமித உணர்வும் இல்லை. மாறாக கோபமும், ஆதங்கமும், குற்றவுணர்வும், ஆத்திரமும் தான் இருக்கிறது. குறிப்பாக மார்பகங்கள் மீது. சின்ன வயதில் உடலைப் பற்றி பெரிய கவலைகள் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரியும் சிறுமிக்கு, வயதுக்கு வந்தவுடன், குடும்பத்தாரும், சுற்றத்தாரும் ஆயிரம் அறிவுரைகள் சொல்வார்கள். முன்ன மாதிரி பப்பரக்கா-ன்னு இருக்காதே. தாவணியை ஒழுங்காப் போட்டு, இடுப்புல சொருகு’
சுடிதாருக்கு ஷாலை, ரெண்டு பக்கமும் பின் பண்ணிப் போடு’ நைட்டியை தூங்கறப்ப மட்டும் போடு’ என்றெல்லாம் கட்டளைகள் வரும். So called
ஒழுக்கத்தை’ உடையில் கட்டிக் காக்கிறார்களாம். (எது தேவையோ அதைச் செய்வதில்லை – அவள் உடலைப் பற்றி அறிவியல்ரீதியாக ஒன்றும் சொல்லித் தருவதில்லை, அவளுக்கு நம்பிக்கை அளிப்பதில்லை.)
ஒன்றும் புரியாமல் விழிக்கும் அந்தக் குழந்தையை, வளரும் மார்பு வெகுவாக தொந்தரவு செய்கிறது. ஏனென்றால், உடை பற்றிய அனைத்து கட்டுப்பாடுகளும், பெரும்பாலும் மார்பகங்களை குறிவைத்து தான் இருக்கும். ஏதோ மார்பகங்கள் வளர்வதே அவள் தவறு மாதிரி சமுதாயம் பேசும். படிக்கும் போதும், விளையாடும் போது, வேறு வேலைகள் செய்யும் போதும், லேசாக உடை விலகினால் கூட கிடைக்கும் திட்டுக்களும், விமர்சனங்களும் சொல்லில் அடங்காதவை. தன் கட்டுப்பாட்டில் இல்லாத இயல்பான உடல் வளர்ச்சியும், அதனால் தடைபடும் சுதந்திரமும் பெண் குழந்தைகளுக்கு தன் உடல் மீதே கோபத்தை ஏற்படுத்துகிறது. குற்றவுணர்வு கொள்ளச் செய்கிறது. (அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில ஆண்களின், பாலியல் அத்துமீறல்கள் வேறு.)
வயதுக்கு வருவதற்கு முன்பு, நிமிர்ந்து, இயல்பாக நடந்து கொண்டிருந்த அந்தக் குழந்தை, வயதுக்கு வந்த பிறகு, கூன் போட்டு நடப்பதைப் பார்க்கலாம். ஷால் இல்லாமல் சுடிதார் போடுவதற்கோ, குர்தா போடுவதற்கோ, டி-ஷர்ட், ஷர்ட் போடுவதற்கோ அவ்வளவு தயங்கும். Stole ஸ்டோல் எனப்படும் சிறு துண்டையாவது கழுத்தைச் சுற்றி போட்டுக் கொண்டால் தான் பாதுகாப்பாக, வசதியாக உணரும்.அப்படியெல்லாம் இல்லை, பெண்கள் வெகு சுதந்திரமாக உடையணிகிறார்கள்’ என்று யாரும் சொம்பைத் தூக்கிக் கொண்டு வரவேண்டாம். நான் பேசுவது பெரும்பான்மை பெண்களைப் பற்றி. இந்தக் கோபமும், குற்றவுணர்வும், சில பெண்களுக்கு தன் உடல் மீதான புரிதலுக்குப் பிறகு விலகும். சிலருக்கு கல்யாணத்திற்குப் பிறகு மறையும். பலருக்கு வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது. அவரவர் சூழலைப் பொருத்து இது அமைகிறது...
நீங்கள் அடுத்த முறை, துப்பட்டா இல்லாமல், ஸ்டோல் அணியாமல் வரும் பெண்ணை எதிர்கொண்டால், விமர்சனம் செய்யும் முன்பு, ஒரு நிமிடம் நிதானியுங்கள். அவள் தன் உடல் மீதான கோபத்தையும், குற்றவுணர்வையும் போராடி கடந்து வந்திருக்கிறாள் என்று புரிந்து கொள்ளுங்கள். கனிவுடன்
ஹலோ’ சொல்லுங்கள் தோழர் ! உங்கள் புரிதலுக்கு மனதில் நன்றி சொல்வார்கள் !
//எனது மகளை பள்ளியில் சில ஆசிரியைகள் ஜீன்ஸ், ஷர்ட் போடக்கூடாது. லாங் டாப் போட்டால் கட்டாயம் துப்பட்டா போடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ‘அம்மா எனக்கு அவ்ளோ அசிங்கமா தெரியுதா?’ என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகியிருந்தாள். // என்று தோழியொருவர் எழுதியிருந்தார். அதை படித்த போது சுருக்கென்று வலித்தது.
“இது எனக்கு அசிங்கமாயிருக்கா?" இந்தக் கேள்வியை பெரும்பாலான பெண்கள் சர்வசாதாரணமாகக் கேட்பார்கள். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கேட்டிருக்கிறேன். துப்பட்டா இல்லாத சுடிதாரும், குர்தாவும், டாப்ஸும், டீஷர்ட்டும் போடும் போது, அம்மாவிடமோ, பக்கத்து வீட்டு அக்காவிடமோ, தோழிகளிடமோ, (கல்யாணத்திற்குப் பிறகு) இணையரிடமோ
, “இந்த ட்ரெஸ் அசிங்கமாத் தெரியுதா?’ என்று இயல்பாக பெண்கள் கேட்பார்கள்.
அதன் உள்ளர்த்தம், `என் மார்பகங்கள் துருத்திக் கொண்டு அசிங்கமாகத் தெரிகிறதா?’ என்பது தான். அப்படித் தெரியக் கூடாது என்று லூசாக உடையணிவது, தன் உடல் அளவைவிட பெரிதான உடையைப் போடுவது, மேலே கோட்(jacket) அணிவது, எதற்கும் மனம் ஒப்பவில்லையென்றால் துப்பட்டாவோ, ஸ்டோலோ போட்டு மறைத்துக் கொள்வது… என்று தவியாய் தவிப்பார்கள்.
உடைக்குள் மார்பகங்கள் மறைந்துதான் இருக்கும், ஆனாலும் அவை துருத்திக் கொண்டு தெரிவது, பொதுப்புத்தியால் ஏற்றுக் கொள்ளப்படாத விசயம். இதற்கும், பெரும்பான்மை பெண்கள் பிராவுக்கு மேல் கேமிசோல், சிம்மீஸ் எனப்படும் ஆண்கள் அணியும் பனியன் போன்ற ஓர் உள்ளாடையும் அணிந்திருப்பார்கள். உடல் வெளியே தெரியாது. ஆனாலும், மார்பக வடிவத்தை ஏதோ ஒரு வகையில் அசிங்கமானதாக ஆணாதிக்க சமுதாயம் மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது. இது பெண்களின் மூளையிலும் ஆழப்பதிந்திருக்கிறது.
அடுத்த தலைமுறை வளரிளம் குழந்தைகளுக்கும் இது தொடர்வது மிகப்பெரிய வேதனை. வேண்டாம் செல்லம், உனக்கு இந்தக் குற்றவுணர்வு.
மார்பகம் அசிங்கமல்ல. உனது உடலின் இயற்கையான அங்கம். அது பிற்காலத்தில் உன் இணையருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், உனக்கு குழந்தை பிறக்கும் போது அதற்கு பாலூட்டுவதற்கும் உன் உடலில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
உனக்கு பிடித்தமான உடையை அணிந்து தன்னம்பிக்கையுடன், கம்பீரமாக, நிமிர்ந்து நடைபோடு. உன் உடலை, உடையை விமர்சித்து யாராவது குறைகூறினால், மோசமாகப் பேசினால், அது அவர்கள் அறியாமையைக் காட்டுகிறது என்று புரிந்து கொள் கண்ணம்மா. இது என்னுடல், இதில் எந்த அசிங்கமும் இல்லை என்று திருப்பிச் சொல், அறிவியலைப் பேசு. திருப்பிப் பேச முடியாத இடத்தில் குறைந்த பட்சம் நீ வேதனைப்படாதே, குற்றவுணர்வு கொள்ளாதே, இதில் உன் தவறு ஏதுமில்லை.
உனது ஆளுமை பேராற்றல் மிக்கது, அதை வெளிப்படுத்துவதற்கான ஆயுதம் தான் உடல். அந்த உடலைப் பற்றி எந்த குற்றவுணர்வும் வேண்டாம் ! அது உன்னை முடக்கிவிடும் செல்லம்.
சொல்லிக் கொடுப்போம் நம் பெண் குழந்தைகளுக்கு.
கட்டுரையாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.